
‘மக்களிடம் செல். அவர்களோடு வாழ். அவர்களிடம் கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு.
அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டமை. மிகச் சிறந்த தலைவர்கள் பணி முற்றுப்பெற்றதும், மக்களை, `நாங்களாகவேதான் முடித்தோம்’ என்று சொல்ல வைப்பார்கள்’ – இது, 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் லாவோட்சு (Lao Tzu) கொடுத்த விளக்கம். இதைவிட மக்களாட்சித் தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியாது. ‘தாவோ’ என்ற புதிய சிந்தனையை உருவாக்கியவர் லாவோட்சு.

சீன அரசர், லாவோட்சின் அறிவாற்றலை அறிந்து, அவரை நீதிபதியாக்கினார். வழக்கு ஒன்று வந்தது. ஒரு திருடன், ஒரு பணக்காரன் வீட்டில் திருடியிருந்தான். திருடனுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார் லாவோட்சு. அதோடு, பணக்காரனுக்கும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார். பணக்காரன் கோபத்தில் கொந்தளித்தான். ``என்ன அநியாயம்... உரிமையாளருக்குச் சிறைத்தண்டனையா?’’
``பொருளைப் பறிகொடுத்த உனக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கியிருக்க வேண்டும். நான் கொஞ்சம் கருணையோடு நடந்திருக்கிறேன். ஏன் தெரியுமா... இந்த நகரத்தின் ஒட்டுமொத்தச் செல்வத்தையும் நீ ஒருவனே வைத்துக்கொண்டிருக்கிறாய். அப்படியென்றால், நீ எத்தனை பேரை ஏமாற்றியிருப்பாய்... எத்தனை பேரிடம் கொள்ளையடித்திருப்பாய்... அதுமட்டுமல்ல, நீ இந்தத் திருடன் திருடுவதற்கு வாய்ப்பாக இருந்திருக்கிறாய். அதனால் நீயும் குற்றவாளியே.’’
நடந்ததைக் கேள்விப்பட்ட அரசர், அன்றைக்கே லாவோட்சை நீதிபதி பதவியிலிருந்து விடுவித்தார். ``நீங்கள் ஞானி. ஆனால், நல்ல நீதிபதி கிடையாது. நீதிபதியென்றால், சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். என் நாட்டுச் சட்டதிட்டங்களைப் பின்பற்றினால், நீங்கள் நீதிபதியாகத் தொடரலாம்’’ என்றார் அரசர்.
லாவோட்சு மறுத்துவிட்டார்.
‘மக்களிடம் செல்’ என்று லாவோட்சு சொன்ன வாசகத்தை அடிக்கடி குறிப்பிடுவார் பேரறிஞர் அண்ணா. மக்களிடம் செல்லும்போதுதான் அவர்களின் பிரச்னைகளை, துன்பங்களை, தேவைகளைப் புரிந்துகொள்ள முடியும். நம்முடைய `குன்றக்குடி மாடல் பிளான்’ வெற்றி பெற்றவுடன், அந்தத் திட்டத்தின் மாதிரியைக் கீழிருந்து மேலே எடுத்துச் சென்றார்கள். பொதுவாக, மக்களிடம் நேரில் சென்று குறைகளைக் கேட்கும்போதே அவர்களின் பாதித் துன்பங்கள் குறைந்துவிடும். அவர்களுக்குத் தேவை ஆறுதல்; அரவணைப்பு; அன்பு. இதைத் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் புரிந்துகொண்டால் கடைக்கோடி மக்களின் தேவைகள்கூட எளிதில் பூர்த்தியாகும்.
மக்களோடு வாழ்வது, ஒரு மகத்தான அனுபவம். நாம் வெள்ள நிவாரணப் பணிகளிலும், சுனாமி நிவாரணப் பணிகளிலும், கலவரக் காலங்களில் அமைதிப் பணிகளிலும் ஈடுபட்டபோது ஒன்று புரிந்தது. `நம்மைவிட மக்கள் அனுபவசாலிகள். அவர்கள் களத்திலிருந்து தேவைகளை மிகச் சரியாகச் சொல்வார்கள்.’ வெள்ளம் சூழ்ந்த நேரத்தில் அதன் வடிகால் எங்கே இருக்கிறது என்பது அவர்களுக்குத்தான் தெரியும். எங்கிருந்து மீண்டும் தண்ணீரை வரவழைக்க வேண்டும் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதுதான் நிவாரணப் பணிகளில் வெற்றி தேடித் தரும்.

`நாங்கள் வெறும் கிரியா ஊக்கிதான். நீங்கள்தான் அந்தப் பணியைச் செய்கிறீர்கள்’ என்ற உணர்வை மக்களுக்கு ஊட்டுவதுதான் சிறந்த தலைமைப்பண்பு. அப்போதுதான் சுயச் சார்புள்ள, பிறரை எதிர்பார்க்காத தன்னிறைவுச் சமூகம் உருவாகும். அடுத்த நெருக்கடி வரும்போது யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களே அதை எதிர்கொள்வார்கள்.
எது முதல்தர நல்ல நிர்வாகம்? நிர்வாகம் நடப்பதே வெளியே தெரியாமல் இருப்பது. அதற்கு அடுத்த நிலை... மக்களால் பாராட்டப்படும் நிர்வாகம். மூன்றாம் தரமோ மக்களை அச்சப்பட வைப்பது. நான்காம் தரம் மக்களை வெறுக்கச் செய்வது. மக்களிடம் சென்று, உண்மையான அக்கறையோடு செயல்படுபவர்கள் அதிகமாகும்போது யாரும் கண்காணிக்காமலேயே நிர்வாகம் சிறப்பாக நிகழும். கண்டிக்காமலேயே தூய்மை துலங்கும்.
‘யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்’ என்கிறது திருக்குறள். இது அடக்கத்தின் உச்சம். `நான்’, `எனது’ ஆகியவற்றைத் தவிர்த்துவிடுவது. தன்னைவிட எதுவுமில்லை என்றும், எல்லாம் எனக்குத்தான் என்றும் ஆணவம் ஆர்ப்பரிக்கும். `எனக்கென்று எதுவும் இல்லை’ என்று அடக்கம் எளிமைகொள்ளும். ஆணவம், நெருப்பைப்போல் கீழிருந்து மேல் நோக்கி எழும். அடக்கமோ மேலிருந்து கீழே விழும் தண்ணீரைப்போல, தாழ்ந்த நிலம் நோக்கிச் செல்லும். அடக்கம், பொதுநலத்தின் தேவாலயம். ஆணவமோ, சுயநலப் பாழ்மண்டபம்.
ஒரு நாற்காலி கிடைக்கும்வரை பம்பரமாகச் சுழன்று பணியாற்றுகிற நாம், ஒரு நாற்காலி கிடைத்துவிட்டால் அதைவிட விறைப்பாக மாறிப்போகிறோம். இந்த மனநிலையிலிருந்து எப்போது விடுபடப்போகிறோம்?
`சாக்ரடீஸைவிட அறிவாளி யாரும் இல்லை’ என்று ஒரு நண்பர் சொன்னார். ஆனால், சாக்ரடீஸ் அதை மறுத்தார். இதுதான் அடக்கத்தின் உச்சம். `நான் ஓர் இயற்பியல் மாணவன்’ என்று சொன்னார் ஐன்ஸ்டீன். தன்னை முழுமையாக காலியாக்கிக்கொண்டால் மட்டுமே கற்க முடியும். பார்க்கும் பொருள்களிலிருந்தெல்லாம் கற்றுக்கொள்ள முடிந்தவனே அறிஞன். அவனே நிலையான பங்களிப்பை சரித்திரச் சுவடுகளில் விட்டுச் செல்கிறான்.
நம் நிதியமைச்சர், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார். ஆட்சியாளன் எப்படி வரிவசூல் செய்ய வேண்டும் என்பதை அந்தப் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
குறைந்த நிலமாக இருந்தாலும், அதில் விளையும் நெல்லை முறையாக அறுவடை செய்தால், அது பல நாள்களுக்கு யானைக்கு உணவாகப் பயன்படும். ஆனால் நூறு வயல்கள் இருந்தாலும், யானையே தனியாகச் சென்று புகுந்து உண்ணுமானால், அதன் வாயில் புகுந்த நெல்லைவிட, காலில் மிதிபட்டு அழிவது அதிகமானதாக இருக்கும். `யானைப் பசி’ என்பது பசியை மட்டும் குறிப்பதல்ல, உண்ணும் அளவையும் குறிப்பதல்ல; யானை உண்பதைவிட அழிப்பதே அதிகம் என்பதைக் குறிப்பது.
யானை வயலில் புகுவதுபோலக் கடுமையான முறையில் வரி வசூலித்தால், கிடைக்கும் வரித்தொகை குறைந்துபோகும்; குடிமக்களும் அழிந்துபோவார்கள். மன்னன் வரி வசூலிப்பது அவன் சுகபோகங்களுக்காக அல்ல; நாட்டை நன்றாக ஆளுமை செய்வதற்கு.
‘மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பமல்லது தொழுதக வில்’ என்று பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றிக் கூறினான் சேரன் செங்குட்டுவன். ஆட்சிப்பொறுப்பு என்பது முள்ளாசனம். அது மக்களுக்கு நன்மை செய்வதற்காக, நம்மையே தருவது. ஓர் அபலைப் பெண்ணுக்கு அநீதி கிடைத்ததால், ஒரு நிரபராதி கொலை செய்யப்பட்டதால் தன்னையே தந்து, நீதியை நிலை நிறுத்தினான் நெடுஞ்செழியன்.
மக்களிடம் வரி வசூலிக்கும்போது கல்விக்கு வரிவிலக்கு. எதற்கு?
எல்லோரும் கல்விபெற வேண்டும் என்பதற்காக. அறங்கள் சிறக்க வேண்டும் என்பதற்காக அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு. விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக வேளாண்மைக்கு வரிவிலக்கு. சேமிப்பைப் பழக்கப்படுத்த தேசிய சேமிப்புக்கு வரிவிதிப்பில் சலுகைகள். வளர்ச்சியடையாத, பின்தங்கிய இடங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் மூலம் அந்தப் பகுதி மக்களுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தரப் பல்வேறு சலுகைகள். சுற்றுலாத் தலங்கள் வளர்ச்சியடைவதற்காக, சுற்றுலா வசதிகளுக்கு ஊக்குவிப்புத் தொகை. மாற்றுத்திறனாளிகள், தொழில்முனைவோர், மகளிர் ஆகியோர் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காகவும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வால்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி. பரதன், ராமனைத் தேடிக் காட்டுக்குப் போகிறான். அங்கே சித்திரக்கூடத்தில் அரசநீதியை பரதனுக்கு உபதேசிக்கிறான் ராமன். முதலில் நேர மேலாண்மையை அறிவுறுத்துகிறான். தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவன் தகுந்த காலத்தில் படுப்பது; உரிய காலத்தில் விழிப்பது உள்ளிட்ட நேரமேலாண்மை. அடுத்து, திட்டமிடல். ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும் என்பதை மன அடுக்குகளிலேயே வகுத்துக் கொள்வது.

ஆனால், பரதனுக்கு ராமன் முக்கியமாகக் குறிப்பிடுவது வேறு. `தனியாகச் செயல்களைச் செய்வதற்கு முடிவெடுக்கிறாயா அல்லது பலரோடு கூடிச் செயல்களைச் செய்வதற்கு முடிவெடுக்கிறாயா? தனியாக யோசித்தால், விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப உன் சிந்தனையில் முடிவெடுப்பதற்கு ஒரு தடுமாற்றம் ஏற்படலாம். பலரோடு ஆலோசித்தால், ஒருமித்த கருத்து உருவாகாது. அதுமட்டுமல்ல, அதன்பொருட்டு அரசு ரகசியம் வெளிப்படும்’ என்கிறான் ராமன். ஆக, ஒரு செயலைச் செய்வதற்கான ஆலோசனையைத் தகுதியான ஆலோசகரிடம் கலந்து பேசி முடிவெடுப்பது சிறந்தது.
நம்மைச் சுற்றி யாரை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு, ராமன் கூறும் அறிவுரை இது. `உன்னிடம் ஆயிரம் மூர்க்கர்கள் இருந்தாலும், அவர்களை விடுத்து, நன்றாகப் பரிசோதனை செய்து காரியமாற்றும் புத்திமானைச் சேர்த்துக்கொள். உன் மக்கள் கஷ்டத்தோடு முறையிட்டால், உன் மந்திரிகள் உன்னைச் செயல்படாமல் தடுக்கும்படி வைத்துக்கொள்ளக் கூடாது. நம் நாட்டில் ராணுவத் தளவாடங்கள் பற்றிய செய்திகள் ரகசியமானவை. தகவல் உரிமைக்கு அப்பாற்பட்டவை.’ இப்படி நீள்கிற ராமனின் அறிவுரையில் கவனிக்கப்பட வேண்டிய மேலும் சில அம்சங்கள்... `பொருளாதாரம், நம் நாட்டின் முதுகெலும்பு. வரவு அதிகமாகவும், செலவு குறைவாகவும் இருக்க வேண்டும். அதற்கேற்றாற்போல் உன் நிதிநிலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமிடையே வழக்கு ஏற்பட்டால், உன் நீதிமான்கள் பணக்காரர்கள் பக்கம் நிற்காமல், ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்...’ ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய ஷரத்து அது.
ராமாநுஜர் திருமலைக்குப் போனபோது, அவரை வரவேற்கத் திருமலை நம்பிகள் வந்தார். `திருமலை ஆதிசேடனின் வடிவம்’ என்று கருதியதால், ஆழ்வார்கள் எவரும் கால்வைத்து ஏறாத மலையில், தான் கால்வைத்து நடத்தல் தகாது என்று தவழ்ந்து சென்று திருமலை நம்பி எதிர்கொண்டு வரவேற்றார். ராமாநுஜரும் பாதம் படாமல், முழங்காலால் நடந்து சென்று, தன்னை வரவேற்க வந்த திருமலை நம்பியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். ``என்னை எதிர்கொண்டு வரவேற்க, தாங்கள் இவ்வளவு தூரம் வர வேண்டுமா... யாரேனும் சிறியவரை அனுப்பி வைக்கலாகாதா?’’ என்று பணிவு ததும்பக் கேட்டார் ராமாநுஜர்.
``அப்பனே… நானும் தேடிப் பார்த்தேன். என்னைவிடச் சிறியவன் எங்கும் தென்படவில்லை. எனவேதான், இந்தச் சிறியவனே வரவேண்டி நேர்ந்தது’’ என்று திருவாய் மலர்ந்தார் திருமலை நம்பி. சான்றோர்கள், அடக்கத்தின் திருவுருவமாக இருப்பவர்கள். மணிவாசகப் பெருமான் தாம் இயற்றிய திருவாசகத்தில் `நாயினும் கடையேன்’ என்று தன்னைத் தாழ்த்திக்கொள்வார்.
அடக்கம் என்பது பிழைப்புக்காகப் போடும் கூழைக் கும்பிடல்ல. அது சமூகநலன் சார்ந்த அன்பும் அச்சமின்மையும் உள்ளவர்களிடம் உருவாகும் உயரிய பண்பு.
அடக்கம் வேறு; அடிமைத்தனம் வேறு. அடக்கம் இல்லாத இடத்தில் ஆணவமிருக்கும். இரும்பிலிருந்து பிறக்கும் துரு இரும்பையே அரித்துவிடுவதைப்போல, இதயத்தில் உருவாகும் ஆணவம், நல்ல பண்புகளை அழித்துவிடும். பள்ளத்தில் விழுந்து கிடப்பவன், ஒருபோதும் ஆணவப்படுவதில்லை. பேரும் புகழும், பதவியும் பணமும் பெருகப் பெருக நம்முள் `தான்’ என்ற அகந்தை பெருகும். `நம் சொல்லுக்கு உலகமே தலையசைக்க வேண்டும்’ என்ற ஆசை ஏற்படும். ஆணவத்தின் உச்சத்தில் நம்மை நாமே அழித்துக்கொள்வோம்.

ராவணனின் வழிதவறிய செயலால் ஏற்பட்டது ராமனோடு யுத்தம். குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஏற்பட்ட யுத்தம் பாகப்பிரிவினை சம்பந்தப்பட்டது. ஆனால், முருகப்பெருமான் சூரபத்மனோடு நடத்திய யுத்தம் சூரபத்மனின் ஆணவத்தால் ஏற்பட்டது. அதனால்தான், `ஆணவத்தை மடைமாற்றுகிற கடவுள் முருகப்பெருமான்’ என்கிறோம். `நான்’ என்று தருக்கித் திரிவோர் எவராய் இருந்தாலும் சண்முகநாதன் அவரைத் திருத்துவான். காலம் அறிந்து கருணைபுரியும் குன்றக்குடியான், ஆணவத்தை மடைமாற்றும் அன்பு தெய்வம்.
கவிஞர் அப்துல் ரகுமானின் கவிதை ஒன்று இப்படிச் சொல்கிறது: `காற்றுக்குக் கண்ணில்லை, அது புகைக்கூண்டிலிருந்து வெளிவரும் புகையை மேலே கொண்டு போனது. உயரத்துக்கு வந்த புகைக்கு கர்வம் வந்துவிட்டது. மேகத்தைப் பார்த்து, `உன்னைப்போலவே நிறம். உன்னைப்போலவே உருவம். உன்னைப்போலவே நானும் உயரத்தில் இருக்கிறேன். எனவே, உன்னைப்போல நானும் மேகம்தான்’ என்றது. சில மயில்கள் அறியாமையால் அது மேகம்தான் என்று கருதித் தோகை விரித்தன. மேகம், கடகடவென்று சிரித்துவிட்டு மழையாக இறங்கியது. நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது... ‘பெருமை மேலே ஏறுவதில் இல்லை; கீழிறங்குவதில் இருக்கிறது.’
`நான்’ என்பது மறைந்து, `நாம்’ என்பது மலரும்போதுதான் உலகம் சொர்க்கமாகும். அந்தச் சொர்க்கத்தை அன்பின் அடித்தளத்தில் உருவாக்குவோம்.
புரிவோம்...