மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 44

அன்பே தவம்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம்

`எல்லாத் துன்பங்களும் நமக்குத்தான் வருகின்றன’ என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், நம்மைவிட உலகில் எத்தனையோ பேர் துன்பத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை.

ருமுறை தாகூர், தன் பணியாளர் வேலைக்கு வரவில்லை என்பதற்காகக் கோபித்துக்கொண்டார். உண்மையில் அந்தப் பணியாளர் வராததற்குக் காரணம், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட பேரிழப்பு. அதைப் பின்பு தெரிந்து கொண்ட தாகூர் தன் செயலுக்காக வருத்தப்பட்டார். பிறர் துன்பத்தைப் பார்க்காத நிலை நம்மிடம் எப்போதும் இருக்கிறது. கடிகாரத்தின் முட்களைப் பார்த்து, காலம் கழிப்பவர்கள் மத்தியில், தங்கள் பசியையும் தூக்கத்தையும் மறந்து பிறருக்காக உழைக்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கின்றன.

அது, கஜா புயல் தாக்கியிருந்த நேரம். குன்றக்குடியையும் புயல் உலுக்கிப் போட்டிருந்தது. கோட்டை போன்ற திருக்கோயில் கதவுகள் சூறைக்காற்றில் கழன்று பறக்கும்நிலையில் அல்லாடிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே மரங்கள் விழுந்து சாலைகளை மறித்திருந்தன. மின்சாரம் இல்லாததால், எங்கும் கும்மிருட்டு. இடைவிடாத மழை. சுழற்றியடிக்கும் சூறைக்காற்று. நமக்கு உறக்கம் வரவில்லை. எழுந்து கோயிலை நோக்கிச் சென்றோம். நம்மோடு நம் உதவியாளர் சிங்காரவடிவேல், திருக்கோயில் பணியாளர் சுந்தர், ஏவலர் கருப்பன் ஆகியோரும் வந்தார்கள். சாலையில் கிடந்த மரங்களைத் தாண்டி நடந்தோம். திருக்கோயில் கதவுகள் பெயர்ந்து விழுந்துவிடுவதுபோல் ஆடிக் கொண்டிருந்தன. திருநாள் மண்டப வளாகத்துக்குள் கும்மிருட்டு. ஆவண அறையின் கதவுகளும், மேற்கூரையும் பிய்ந்து பறந்துகொண்டிருந்தன. அங்கிருந்த, பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டிருந்த ஆவணங்கள், அருவியாகக் கொட்டும் மழையில் நனைந்துகொண்டிருக்கும் நிலையில், அவற்றை எப்படிக் காப்பாற்றுவது என்பது தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தோம். கருப்பன் ஒரு யோசனை சொன்னார். திருமடத்தின் வேலைக்காகக் கொண்டுவரப்பட்ட சிமென்ட் மூடைகளை மூடிவந்த தார்ப்பாய் உறைகள் அங்கே இருந்தன. `அதோ… சிமென்ட் மூடைகளைச் சுற்றி எடுத்து வரப்பட்ட தார்ப்பாய் கவர்கள் இருக்கின்றன. அவற்றால் மூடிவைக்கலாம்’ என்றார். நெருக்கடியான நேரத்தில் சமயோசிதமான யோசனையை யார் கொடுத்தாலும் ஏற்புடையதுதானே!

அன்பே தவம் - 44

இருட்டு, கொட்டும் மழை, வழிமறித்துக் கிடந்த மரங்கள்... அந்தச் சூழலில், சூறைக்காற்றால் தகரக்கூரை பிய்ந்துகொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அந்த ஆவணங்களை பாலித்தீன் கவர்களால் சுற்றி, நெஞ்சோடுவைத்து அணைத்துக் காப்பாற்றினோம். விடிய விடியப் புயலின் வேகம் குறையவில்லை. திருமடத்தின் வாசலில் `சடார்’ என்று ஒரு சப்தம். உள்ளறையிலிருந்த நாம் வெளியே ஓடிச் சென்று பார்த்தோம். பெரிய மரம் ஒன்று திருமடத்தின் மதில்மீது விழுந்து, சாலையையே மூடியிருந்தது.

விடிகாலையைத் தொடும் நேரம். நம் பணிகள் ஆரம்பமாகின. கடுங்காற்று, அடைமழை, சாலைகளில் மரங்களின் மறியல். எத்தனை ஆண்டுக்காலமாய் நிழல் தந்த மரங்கள்... நொடிப் பொழுதில் சாய்ந்துகிடந்தன. புயலின் வேகம் குறையக் குறைய, பல மரங்களை அப்புறப்படுத்தினோம். பிறகு நம் பள்ளி நோக்கிப் போனோம். அங்கேயும் பல மரங்கள் விழுந்து கிடந்தன. அவற்றுக்கு நடுவே ஒற்றை மனிதராக நின்றுகொண்டிருந்தோம். நம்மோடு பணியாற்றும் திருமடத்துத் தொண்டர்கள் மட்டும் உடனிருந்தார்கள். அவர்களில் சிலர் அதிகம் படிக்காதவர்கள். ஆனால், கடமை வீரர்கள்.

நம்மில் பலர் பொய்களை நேசிக்கிறோம். விளம்பரங்களை விரும்புகிறோம். `நம்மை யாரும் புகழ்ந்து பேச மாட்டார்களா?’ என்று ஏங்குகிறோம். `நம்மால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது’ என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையைப் பற்றி உணரும் ஆற்றல் மனிதனுக்குக் குறைவாகவே இருக்கிறது.

குழந்தைகளும் ஞானிகளுமே மறைக்காமல் உண்மையைக் கூறுவார்கள். `மரணம்வரை வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை’ என்று உரைத்தவர்கள் ஞானிகள். பொய்களுக்கிடையே உண்மையைத் தேடுவது, புதையலைத் தேடுவது போன்றது.

உண்மை அமைதியானது; எளிமையானது. அது, எப்போதும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாது. விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் ஒற்றுமை ஒன்று உண்டு. விஞ்ஞானம், பரந்துபட்ட உலகத்தில் உண்மையைத் தேடுவது. மெய்ஞ்ஞானம், உள்ளத்துக்குள் உண்மையைத் தேடுவது. ஆக, இரண்டுமே உண்மையை நோக்கிய பயணம்தான்.

`இந்திய இலக்கியங்கள் சாரமற்றவை. அவற்றை ஒரு சின்ன அட்டைப் பெட்டிக்குள் அடக்கிவிடலாம்’ என்று பரிகசித்துச் சிரித்தார் ஓர் ஆங்கிலேயர். இந்தியத் தத்துவத்தின் சாரத்தை அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால், மேற்குலகில் பலர் அதைத் தெளிவாக அறிந்திருந்தார்கள். எமர்சன் எழுதிய ‘பிரம்மா’ என்ற கவிதையை ‘கீதையின் சாரம்’ என்பார்கள். கண்டங்களிடையே தொடர்வண்டிப் போக்குவரத்து தொடங்கியபோது, `இனி நாம் இந்திய ஞானத்தை அறிந்துகொள்ளலாம்’ என்று மகிழ்ந்து கூத்தாடினார் வால்ட் விட்மன்.

டி.எஸ்.எலியட் எழுதிய ‘தரிசு நிலம்’ (The Waste Land) உபநிடதங்களைத் தழுவி எழுதப்பட்டது. அதற்கு நோபல் பரிசும் கிடைத்தது. முண்டக உபநிடதத்தில் முக்கியமான ஓர் அம்சம் உண்டு... `உண்மையே வெல்லும்’ என்ற வாசகம். அது நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது. காலம் கடந்தேனும் உண்மை வெல்லும். உண்மையைச் சொன்னவர்கள்தாம் அதைக் காண உயிருடன் இருப்பதில்லை.

தனி மனிதன் உண்மையில்லாத ஒன்றைச் சொன்னால், அதற்குப் பெயர் `பொய்.’ ஒரு கூட்டமே சொன்னால், அது `வதந்தி.’ தொண்டன் சொன்னால், `புகழ்ச்சி.’ புள்ளியியல் சொன்னால், `புள்ளிவிவரம்.’ முண்டக உபநிடதம் சொல்லும் வாசகம்தான் நம் தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை ‘வாய்மையே வெல்லும்’ என்று நாம் தமிழில் வழிமொழிந்தோம்.

அன்பே தவம் - 44

உண்மைக்காக உண்மையாக வாழ்ந்தவர்கள் வரலாறாக மாறியிருக்கிறார்கள். தன் வாழ்வை உண்மைக்கு அர்ப்பணித்த காந்தியடிகள் `மை லைஃப் இஸ் மை மெசேஜ்’ என்று சொன்னார். ‘உலகத்தார் உள்ளத்தில் நீ நீக்கமற நிறைந்திருக்க வேண்டுமா... எப்போதும் உண்மை பேசிடுக’ என்றார் திருவள்ளுவர். `உடலை நீரால் தூய்மை செய்யலாம்; கங்கையில் குளித்தாலும், காவிரியில் குளித்தாலும் உடல்தான் தூய்மை அடையும். உள்ளம் தூய்மை அடைய வேண்டுமா... உள்ளத் தூய்மைக்கு வாய்மையே தேவை’ என்கிறார். `உண்மை பேசுவதைவிடச் சிறந்த அறம் எதுவும் இல்லை’ என்று சொன்னவர், ஒரே ஓரிடத்தில் விதிவிலக்கு தருகிறார். `ஓர் உயிரைக் காக்க அல்லது ஒரு தீய செயல் நிகழாமல் தடுக்க உண்மை பேச முடியாத நிலை ஏற்பட்டால், அந்த இடத்தில் பொய்யைப் பயன்படுத்தலாம்’ என்கிறார்.

‘சிந்தனையாளர்களே சிம்மாசனத்தில் அமர வேண்டும்’ என்று முழங்கினார் சிந்தனையாளர் பிளேட்டோ. கி.மு. 387-ம் ஆண்டில் சிஸிலி தீவிலிருக்கும் சிராக்யூஸ் (Syracuse) நாட்டை ஆண்டு வந்தவர் டயோனிசியஸ். அவர், பிளேட்டோவின் கனவு நாட்டை நடைமுறைப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார். பிளேட்டோவும் ஒப்புக்கொண்டார். ஆனால், டயோனிசியஸுக்கும் பிளேட்டோவின் சித்தாந்தத்துக்கும் ஒத்துப் போகவில்லை. எப்போதுமே அரசரும் சிந்தனையாளரும் ஒன்றுசேர இயலாது. விளைவு, பேரறிஞர் பிளேட்டோ, சந்தையில் அடிமையாகக் கூவி விற்கப்பட்டார். அவரின் மாணவர் ஆன்னிசெரிஸ் என்பவர்தான் அவரை விலை கொடுத்து வாங்கி, அடிமைத்தளையிலிருந்து விடுவித்தார்.

பட்டுப்புழுக்கள் முசுக்கொட்டை இலையைத் தின்று பட்டை உமிழ்வதைப்போல, பிளேட்டோ தன் கசப்பான அனுபவங்களை `சட்டங்கள்’ (Laws) என்ற நூலில் எழுதினார். `தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்று முழங்கினார். விளைவு, எண்ணற்ற சீடர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். வாழ்நாளின் நிறைவில் உலகமே அவரைக் கௌரவப்படுத்தியது.

அன்பே தவம் - 44

மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படி நாம் மற்றவர்களை நடத்த வேண்டும். இதை, `தங்க விதி’ என்று சொல்வார்கள். மனிதன் மட்டுமல்ல, மிருகங்களுமே அப்படித்தான். வெல்லம் போட்டால் வாலாட்டும் நாய், கல்லைப் போட்டால் கடிக்கும். நீரை ஊற்றினால் இளநீரைத் தரும் தென்னை. கொடுப்பதை மேம்படுத்துவது இயற்கையின் இயல்பு. தருவதை அப்படியே திருப்பிக் கொடுப்பது மனித மனம். கசக்கினாலும் மலர்கள் மணம் தரும். பிழிந்தாலும் கரும்பு இனிக்கும். தேய்த்தாலும் சந்தனம் மணம் வீசும். கல்லை எறிந்தாலும் கனியை உதிர்க்கும் மரம். சீன ஞானி கன்பூசியஸ் `தங்க விதியை’ முன்மொழிந்தார். `உனக்கு நேரக் கூடாது என்று நினைப்பவற்றை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே. நீ வெற்றியை விரும்பினால் அதை மற்றவர்கள் அடைய உதவு’ என்றார்.

அமர்நீதி நாயனார் என்ற அடியவர் உண்மையின் உரைகல்லாக இருந்தார். வந்தோருக்கு, வறியோருக்கு, பசித்தோருக்கு உணவளித்தார். கோவணம் இல்லாதவருக்கு அதை வழங்கினார். அப்படிக் கோவணத் துணியை வழங்கும் ஒரு நிகழ்வில், இறைவன் அவரிடம் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அந்தணர் கோலத்தில் வந்து, அவரிடம் ஒரு கோவணத்தைக் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்கச் சொன்னார். `குளித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிச் சென்றார். அமர்நீதி நாயனார் அதைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்தார். சிறிது நேரத்தில் மழை பெய்தது. குளிக்கச் சென்ற அந்தணர் திரும்ப வந்தார். கோவணத்தைக் கேட்டார். தேடிப் பார்த்தார் அமர்நீதி நாயனார். எங்கேயும் அது இல்லை. அடியவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ``ஐயா... தங்கள் உடையைக் காணவில்லை. அதற்குப் பதிலாக தனித்துணியால் நெய்யப்பட்ட அருமையான மாற்றுக் கோவணம் இருக்கிறது. அதைத் தங்களுக்குத் தருகிறேன்’’ என்றார்.

உண்மைக்காக உண்மையாக வாழ்ந்தவர்கள் வரலாறாக மாறியிருக்கிறார்கள். தன் வாழ்வை உண்மைக்கு அர்ப்பணித்த காந்தியடிகள் `மை லைஃப் இஸ் மை மெசேஜ்’ என்று சொன்னார்.

``இல்லை. என் கோவணம்தான் வேண்டும்’’ என்று அடம்பிடித்தார் அந்த அந்தணர். கடைசியில், தன் கைத்தடியில் சுற்றியிருந்த கோவணத்தைக் கொடுத்து, ``இதற்குச் சமமாக மாற்று உடை கொடு’’ என்றார்.

தராசுத்தட்டு. ஒரு தட்டில் அந்தணர் கொடுத்த கோவணம். மறு தட்டில் தன்னிடம் இருந்த அருமையான பட்டுக் கோவணத்தை வைத்தார் அமர்நீதி நாயனார். தராசு முள் அசையவில்லை. பொன்னாடைகள், ஆபரணங்கள் எல்லாவற்றையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லை. கடைசியில் அமர்நீதி நாயனாரும், அவர் மனைவியும், பிள்ளைகளும் தராசுத் தட்டில் ஏறினார்கள். அப்போதுதான் தராசுத் தட்டு சமமானது. இறைவன் அவருக்குக் காட்சி கொடுத்து, அவரைத் தன் அடியவராக ஆட்படுத்திக்கொண்டார். இப்படித்தான் அடியார் பெருமக்கள் உண்மையின் உரைகல்லாக வாழ்ந்தார்கள். அந்த சத்திய வாழ்வுதான் உண்மையான ஆன்மிக, அன்பு வாழ்வின் அடித்தளம்.

அன்பே தவம் - 44

கண்ணகி, தன் கணவன் கொலை செய்யப்பட்ட போது, `இந்த ஊரில் சான்றோர் இருக்கிறார்களா?’ என்ற கேள்வியை எழுப்பினாள். யார் சான்றோர்? பொய் பேசாதவர்கள் மட்டுமல்ல; மனிதகுலத்துக்கு எங்கே அநீதி நடந்தாலும், அறம் பிறழ்ந்தாலும் அவற்றைப் போர்க்குணத்தோடு எதிர்த்துப் போராடுகிறவர்கள்தாம் சான்றோர்கள். பிறர் வாழ்வுக்காகத் தங்களை அர்ப்பணிப்பவர்கள். இன்றைக்குச் சரியானவற்றுக்கு வழிகாட்டச் சான்றோர்கள் தேவைப்படுகிறார்கள். மரணத்துக்கும் அஞ்சாத அத்தகைய மகத்தான மனிதர்களை நாம் அன்பின் வலிமையால்தான் உருவாக்க முடியும்.

ஒரு புறநானூற்றுப் புலவன், கைப்பேசிகளும் சின்னத்திரைகளும் தோன்றாத, வாட்ஸ்அப், முகநூல் உருவாகாத காலத்திலேயே உரத்துச் சொன்னான்... `யாதும் ஊரே யாவரும் கேளிர்.’ `உலகமெல்லாம் என் இருப்பிடம். யாவரும் என் உறவினர்’ என்று சொன்னான். `ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்கிறது திருமந்திரம்.

வாய்மையின் வழியில், சத்தியத்தின் தடத்தில், அன்பின் வலிமையில் மானுடத்தை உறவாக்குவோம். `உலகிலிருக்கும் மனிதர்கள் அனைவரும் என் உறவு’ என்று உரத்துச் சொல்வோம். அன்பின் வலிமையை வாழும் வாழ்க்கையால் அனைவருக்கும் அடையாளப்படுத்துவோம்!

புரிவோம்...