
2019 மே 22-ம் தேதி தொடங்கி ஜூன் 14-ம் தேதிவரை நாம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டோம்.
அட்லாண்டாவிலுள்ள ‘அமெரிக்கத் தமிழ்நாடு அறக்கட்டளை’ என்ற அமைப்பு நடத்திய மாநாட்டில் நமக்கு ‘மாட்சிமை’ விருதை வழங்கிப் பெருமைப்படுத்தினார்கள். பிரமாண்டமான அரங்கம். 2,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் குழுமியிருந்தார்கள். நம்முடைய கல்வி, சமூகத் தொண்டு, மனிதநேயப் பணிகளைப் பாராட்டி, அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்ப, அந்த உயரிய விருதை வழங்கியபோது நாம் நெகிழ்ந்துபோனோம். நம் விலாசம் தேடிவந்த அந்த விருது, இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளும் கடமைகளும் மலையெனக் காத்திருக்கின்றன என்ற உணர்வை அழுத்தமாக ஏற்படுத்தியது.

அமெரிக்கப் பயணம் நமக்குக் கற்றுத்தந்தது ஏராளம். நம் தமிழ் மக்கள் அங்கே தேனீக்களைப்போல உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறார்கள். எந்த வீட்டிலும் பணியாட்கள் கிடையாது. கார் ஓட்ட, தனியாக ஓட்டுநர்கள் வைத்துக்கொள்வது கிடையாது. எல்லா வேலைகளையும் தாங்களே செய்துகொள்கிறார்கள்.
நாம் உதவியாளர் இன்றி, தனியாகச் சென்ற வெளிநாட்டுப் பயணம் அது. அமெரிக்காவிலுள்ள பல இடங்களுக்கு, சில நேரங்களில் விமானத்திலும், பல நேரங்களில் காரிலும் பயணம் செய்தோம். ஒருநாள் ஹூஸ்டன் நகரிலிருந்து பிலடெல்பியாவுக்கு விமானத்தில் சென்றோம். விமான நிலைய முகப்புக்குச் செல்லும் தூரம் மிக நீளமானது. மொழி தெரியாது. உதவியாளர் எவரும் உடனில்லை. நம்மை வரவேற்க, தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் சோமசுந்தரம் முகப்பில் காத்திருந்தார். அந்த இடம்வரை நம்மைச் சக்கர நாற்காலியில் அழைத்துப் போக ஏற்பாடு செய்திருந்தார்கள். அவற்றை இயக்கிக்கொண்டிருந்தவர்கள் ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண்கள். ஒரு பெண்மணி, நம்மைச் சக்கர நாற்காலியில் அமரவைத்து அதை வேகமாக ஓட்டினார். ஒரு காரைப்போல அது ஓடியது.

அவர் ஆங்கிலத்தில், ``நீங்கள் எங்கே போக வேண்டும்... யாரைப் பார்க்க வேண்டும்?’ என்று கேட்டதற்கு, நாம் சொன்ன பதில் அவருக்குப் புரியவில்லை. முகப்பில் காத்திருந்த சோமசுந்தரம் நம் அருகே வந்தார். அவரிடம் நாம் சொன்னோம்... ``நீங்கள் மட்டும் வரவில்லையென்றால், இந்த அம்மையாரின் இல்லத்தில்தான் நான் தங்கியிருப்பேன்.’’ நாம் சொன்னதை அந்தப் பெண்மணியிடம் அவர் சொன்னார்.
``இவர் எங்கள் இல்லத்தில் தங்குவதாக இருந்தால், அதைவிட மகிழ்ச்சியான ஒன்று வேறு என்ன இருக்க முடியும்?’’ என்றார். அது அவர்களின் பண்பட்ட உபசரிப்பு. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண்மணிகள், எத்தனை தடைகளையெல்லாம் தாண்டி இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள் என்பது புரியும்.
ஆபிரஹாம் லிங்கன் குடியரசுத் தலைவராக இருந்த நேரம். ஒருமுறை வாஷிங்டனுக்கு கோச் வண்டியில் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு புதைகுழியில் பன்றிக்குட்டி ஒன்று விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. லிங்கன், வண்டியை நிறுத்தச் சொன்னார். இறங்கி ஓடினார். பன்றிக்குட்டியைக் காப்பாற்றினார். அப்போது அவருடைய நாகரிகமான, அழகான உடையில் சேறும் சகதியும் பட்டுவிட்டன. அந்த உடையுடனேயே வெள்ளை மாளிகைக்குப் போனார். செய்தியைக் கேள்விப்பட்ட பலரும் அவரைப் பாராட்டினார்கள்.
லிங்கன் குறுக்கிட்டு, ``என்னை யாரும் புகழாதீர்கள். அந்தச் சின்னஞ்சிறிய உயிர் புதைகுழியில் சிக்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது என் இதயத்தில் ஒரு முள் தைத்ததுபோல உணர்ந்தேன். அதன் உயிரைக் காப்பாற்றினேனோ இல்லையோ, என் இதயத்தில் தைத்திருந்த முள்ளை நான் அப்புறப்படுத்தி விட்டேன். அதை மட்டும் செய்யத் தவறியிருந்தால், என் இதயத்தில் தைத்த முள் என் வாழ்நாள் முழுவதும் ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கும்’’ என்று சொன்னார்.

ஆபிரஹாம் லிங்கன் கெட்டிஸ்பெர்க் கல்லறையில் ஆற்றிய உரை உலகப் புகழ்பெற்றது. அதை வாசிக்கும்போது அவர் உடல்நலம் குன்றியிருந்தார். ஆனால், அந்த உரைவீச்சின் தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து போனது. அந்த உரையைக் கேட்ட ஜோசப் கவுல்டன் (Joseph A.Goulden) என்ற பள்ளி ஆசிரியர், தன் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு ராணுவத்தில் சேர்ந்ததற்கு அந்தப் பேச்சின் தாக்கம்தான் காரணம்.
`மனிதகுல வரலாற்றில் அடிமை முறையைப் போன்ற அவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த நிலை மாற வேண்டும்’ என்று நினைத்தவர் ஆபிரஹாம் லிங்கன். கெட்டிஸ்பெர்க் உரையில் அடிமைத்தனம் பற்றியோ, வெற்றியைப் பற்றியோ அவர் எதுவும் கூறவில்லை. `நாம் இங்கே பேசுவதை உலகம் மறந்துவிடும். ஆனால், நாம் இங்கே என்ன செய்தோம் என்பதை ஒருபோதும் மறக்காது’ என்று இன்னுயிரை ஈந்த வீரர்களை அவர் புகழ்ந்தார். பிரெஞ்சு நாட்டு அரசியலமைப்புச் சட்டம், `மக்களால் மக்களுக்கான அரசு’ என்ற சொற்களை லிங்கனின் சாசனத்தில் இருந்துதான் தத்து எடுத்துக்கொண்டது. முன்னாள் சீன அதிபர் சன்யாட்சென் (Sun Yat-sen) `மக்களின் மூன்று கொள்கைகள்’ என்ற கோட்பாட்டை கெட்டிஸ் பெர்க் உரையிலிருந்துதான் எடுத்துக்கொண்டார்.
அமெரிக்காவில், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் மியூசியத்துக்கு நாம் சென்றிருந்தோம். சற்றுத் தாமதம். நண்பகல் வேளை. மியூசியத்தின் பொறுப்பிலிருந்த பெண்மணி ``தாமதம் ஆனாலும் பரவாயில்லை’’ என்று சொல்லி அனுமதித்தார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், லிங்கனின் அடிச்சுவட்டில் நிறவேற்றுமையை ஒழிப்பதற்குப் பாடுபட்டவர். `நானொரு கனவு காண்கிறேன்…’ (I have a dream...) என்று லிங்கனின் நினைவிடத்தின் படிக்கட்டுகளில் நின்று அவர் ஆற்றிய பேருரை உலகத்தையே உலுக்கிப் போட்டது. சில சொற்பொழிவுகள் காலத்தில் கல்வெட்டாக நிலைத்து நிற்கும். அப்படிப்பட்டது அவர் ஆற்றிய பேருரை. அவருக்கும் மகாத்மா காந்திதான் ஆன்மிக, மானசிக குரு. விலங்குகளை விடக் கொடூரமாக நடத்தப்பட்டனர் அமெரிக்காவிலிருந்த கறுப்பின மக்கள். அதைத் தீர்க்க, காலம் ஆபிரஹாம் லிங்கனை அழைத்து வந்தது. அவர் 1863-ம் ஆண்டில், `கறுப்பின மக்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்’ என்று அறிவித்தார்.
`கறுப்பின மக்கள் சாதாரண உரிமைகளைக் கூடப் பெற முடியாது’ என்ற நிலையைத் தாண்டி, அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இரண்டு முறை ஒபாமா அமர்ந்திருக்கிறார் என்றால், அது மனிதகுல சமத்துவத்துக்கான மாற்றம். அமெரிக்காவின் செல்வச் செழிப்புக்குக் கறுப்பின மக்கள் சிந்திய வியர்வையும் ரத்தமுமே காரணம்.
குஷ்வந்த் சிங், தன் நூலில் ஒரு தகவலைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அமெரிக்காவுக்குப் போனபோது, `கறுப்பின மக்களிடம் கவனமாக இருங்கள். ஏமாற்றிவிடுவார்கள்’ என்று யாரோ எச்சரித்திருக்கிறார்கள். அமெரிக்காவில், அவர் பயணம் செய்த கார் ஓட்டுநர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். `எங்கே அதிகமாக வாடகை கேட்பாரோ...’ என்ற உறுத்தலோடு பயணம் செய்திருக்கிறார் குஷ்வந்த் சிங். போக வேண்டிய இடம் வந்தவுடன், ‘எவ்வளவு வாடகை தர வேண்டும்?’ என்று அவர் கேட்க, ‘நீங்கள் எங்கள் விருந்தினர். மார்ட்டின் லூதர் கிங்குக்கு வழிகாட்டியான மகாத்மா காந்தி பிறந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு வாகனம் ஓட்டியது என் கௌரவம்’ என்று சொல்லி, வணக்கம் செலுத்திவிட்டு, ஒரு டாலர்கூட வாங்காமல் சென்றிருக்கிறார் அந்த டிரைவர்.
மார்ட்டின் லூதர் கிங், ``என்னுடைய குழந்தைகள் அவர்களுடைய சருமத்தின் நிறத்தால் மதிப்பிடப்படாமல், அவர்களின் குணநலன்களால் மதிப்பீடு செய்யப்படும் நாட்டில் ஒருநாள் வாழ்வார்கள்’’ என்று கூறும்போது நமக்கு ஏற்படும் உணர்வுதான் மனிதநேயத்தின் அளவுகோல். அறிவியல் வளர்ந்தும், பரிணாம வளர்ச்சி தெரிந்தும், படித்தவர்களே நிறம் என்பது முக்கியமல்ல என்று உணராவிட்டால் என்ன செய்ய முடியும்?

மார்ட்டின் லூதர் கிங் சிந்திய ரத்தம் வீணாக வில்லை. அது ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது. ‘கல்வி அறிவு பரவலாக்கப்படும்போது எல்லாப் புறக்கணிப்புகளும் புறமுதுகிட்டு ஓடும்’ என்பது நிச்சயம். ஜான். எஃப். கென்னடி அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்தபோது, டாலஸ் (Dallas) நகரத்தில் மக்களைப் பார்த்து முகம் மலர்ந்து கையசைத்துச் சென்றுகொண்டிருந்தார். சில நொடிகளில் துப்பாக்கிக் குண்டுகளால் வீழ்த்தப்பட்டார். உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து ஒரு கயவன் அவரைச் சுட்டுவிட்டான். `நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நாட்டுக்கு நீ என்ன செய்தாய்?’ என்ற கென்னடியின் சொற்கள் உலகம் முழுவதும் இன்றும் எதிரொலித்துக்கொண்டிருப்பவை. ஆனால், `நாட்டுக்கு நீ என்ன செய்தாய்?’ என்று கேட்ட அவர், தன்னையே தன் நாட்டுக்காகத் தந்துவிட்டார். கென்னடியின் நினைவுத்தூணை அமெரிக்கா எழுப்பியிருக்கிறது. அமெரிக்கா நினைவுச்சின்னங்களை எழுப்புவதிலும், நினைவகங்களைப் பராமரிப்பதிலும், காப்பகங்களை உருவாக்குவதிலும், நூலகங்களைப் பாதுகாப்பதிலும் மிகச் சிறப்பாக விளங்கும் நாடு.
`வாழ்ந்து மறைந்தவர்கள், வாழ்பவர்கள், இனிமேல் பிறப்பவர்கள் எவரும் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாத அளவுக்கு ஒருவன் தான் செய்யும் வேலையைச் செய்ய வேண்டும்’ என்று மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் குறிப்பிடுகிறார். வேலைக்கும் கடமைக்கும் என்ன வேறுபாடு… எப்படி வேலை செய்வது?
மறைந்த மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் குறிப்பிடுவார்கள்... `வேலை என்பது ஜீவன உபாயம், வயிற்றுப் பிழைப்பு. கடமை என்பது தானும் உயர்ந்து, சமூகத்தையும் உயர்த்துவது. வயிற்றுப் பிழைப்புதான் வேலை. ஆனால், சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயன்தரத்தக்க பணியாற்றுவதுதான் கடமை.’
கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், கறுப்பர் ஒருவர் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக வர முடியாது என்பதையும், அப்படி வந்தால் அவர் எப்படியெல்லாம் தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதையும் பிரபல எழுத்தாளர் இர்விங் வாலஸ் (Irving Wallace) `தி மேன்’ என்ற ஒரு புதினத்தில் பதிவுசெய்திருந்தார். அவற்றைத் திரட்டி அண்ணா, தன் தம்பிகளுக்குத் தொகுத்து எழுதியதுதான் ‘வெள்ளை மாளிகையில்’ என்ற நூல்.
நாடாளுமன்றத்தில் தொடக்க உரையாற்ற அண்ணாவுக்கு மூன்று நிமிடங்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். கன்னிப்பேச்சு. ஆனால் அது, கனிந்த பேச்சு. மூன்று நிமிட வாய்ப்பு, மூன்று மணி நேரத் தங்கு தடையற்ற அருவியென, ஆற்றொழுக்காக அந்தப் பேருரை நிகழ்ந்தது.
`தமிழ்மொழி ஆட்சிமொழியாக வேண்டும்’ என்று அவர் கூறியபோது, `மக்கள் பேசுவது குறைவாக இருக்கும் காரணத்தால், சிறுபான்மையாக இருக்கும் காரணத்தால் அதற்கு ஆட்சிமொழியாகும் தகுதி இல்லை’ என்று கூறிய கருத்துக்கு அண்ணா அருமையாகப் பதில் சொன்னார்:
``இந்த நாட்டில் காகங்கள் நிறைய இருக்கின்றன. மயில்கள் குறைவாக இருக்கின்றன. காகங்கள் நிறைய இருக்கும் காரணத்துக்காக காகத்தையா தேசியப்பறவையாக அறிவித்தோம்... அபூர்வமாக, அரிய வகையாக இருக்கும் மயிலைத்தானே தேசியப்பறவையாக நாம் அறிவித்தோம்.’’
அண்ணாவின் உரைகள் சமூக மேம்பாட்டுக்கானவை. அவர், சென்னையையும் செட்டிநாட்டையும் ஒருசேரப் பார்த்தார். “சென்னையில் வீடில்லா மனிதர்கள். செட்டிநாட்டிலோ ஆளில்லா அரண்மனைகள்” - இப்படி எதுகையும் மோனையும் இரண்டறக் கலந்து பேசும் அண்ணாவின் உரைகள் சமூக மேம்பாட்டுக்கானவை. அண்ணாவின் தொடர்ச்சியாக கலைஞர் கருணாநிதியின் தொடக்கக்காலச் சட்டமன்ற உரையான கன்னிப்பேச்சும் அமைந்துபோனது. நங்கவரம் ஏழை விவசாயக் கூலிகளுக்கான உரையாக அது அமைந்தது.
ஆபிரஹாம் லிங்கன் முதல் உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் மனிதகுல மேம்பாட்டுக்காக உழைக்கும் போராளிகளின் உரை உண்மையின் உரைகல்லாகத்தான் ஒளி வீசிக்கொண்டிருக்கும். அவை, மனிதகுலத்துக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள்!
புரிவோம்...