திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

கேரளக் கதைகள் - 11 - ஆறன்முளையில் விளையாட்டுக் கண்ணன்!

கண்ணன் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணன் கதைகள்

ஓவியங்கள்: ஜெயசூர்யா

பிள்ளைகள் விளையாட்டு!

கேரள மாநிலத்தில் பழைமையான கோயில் நகரங்களில் ஒன்று ஆறன்முளா. 108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது. நம்மாழ்வாரால் திருவாறன் விளை என்ற பெயரில் பாடல் பெற்றது. இங்குள்ள திருக்குறளப்பன் கோயில், அர்ஜுனனால் உருவாக்கப்பட்டதாம்!

பாரத யுத்தத்தின்போது, கர்ணனின் தேர்ச் சக்கரம் பூமியில் இறங்கியது. கர்ணன் ரதத்தை மீட்கும் முயற்சியில் இருந்தபோது, அவன் மீது அம்பு தொடுத்து கொன்றான் அர்ஜுனன்.

போரில் வெற்றிபெற்ற பிறகும், தான் செய்த இந்தப் பாவத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான் அர்ஜுனன். இதற்குப் பரிகாரம் ஏதும் உண்டா என்று அவன் ஏங்கித் தவித்த வேளையில், ஒரு வழிகாட்டல் கிடைத்தது.

`திருவாறன்விளையில் வந்து தவம் செய்து திருமாலுக்குக் கோயில் கட்டினால் பாவம் தொலையும்' என்ற வழிகாட்டுதலைப் பெற்ற அர்ஜுனன் இந்தத் தலத்துக்கு வந்து, திருக்குறளப்பன் கோயிலைக் கட்டினான் என்கிறது தலபுராணம். கோயிலின் அருகிலேயே மதிலைத் தொட்டுக் கொண்டு அற்புதமாக ஓடுகிறது பம்பா நதி. அர்ஜுனன் இந்த நதியில் நீராடி பாவம் தொலைத்ததாக ஐதிகம்.

கேரளக் கதைகள் - 11 - ஆறன்முளையில் 
விளையாட்டுக் கண்ணன்!

பார்த்தசாரதி என்று அழைக்கப்படும் இங்குள்ள இறைவன், குழந்தை பாவத்துடன் இருப்பதால் திருக்குறளப் பன் என்றும் போற்றப்படுகிறார். எப்போதும் குழந்தை விளையாட்டுகளும் குறும்பும் இவருக்கு அதிகம்!

முன்பு கோகுலத்தில் விளையாடியது போன்று, இந்த ஊரின் குழந்தைகளுடன் விளையாடுவது இவருக்கு மிகவும் பிடித்தமானது. மார்கழி உற்சவத்தின் போது இங்குள்ள குழந்தைகள் ஒன்று கூடி, ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இந்த ஊரிலுள்ள பாக்குத் தோப்புகளுக்குச் சென்று பாக்கு இலைகளைச் சேகரிப்பர். அவர்கள் யார் தோப்புக்குள்ளும் நுழையலாம். எவரும் தடை சொல்லக்கூடாது. கண்ணனும் அந்தக் குழந்தை களுடன் விளையாடிக்கொண்டு வருவான் என்று நம்பிக்கை. எனவே, குழந்தைகளைக் கடிந்து கொண்டால் கண்ணனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், எவரும் தடை சொல்ல மாட்டார்கள்.

குழந்தைகள் இங்ஙனம் சேகரித்த பாளை களைக் கொண்டுவந்து ஆலயத்தில் நடப்பட்டிருக் கும் பந்தல் கால்களில் பொருத்தி, கருவறையில் இருந்து கொண்டு வரப்படும் விளக்குச் சுடரால் கொளுத்தி மகிழ்வர். குழந்தைக் கண்ணனே ஆனந்தத்துடன் இந்த வைபவத்தை ரசிப்பான் எனும் நம்பிக்கையோடு, இந்த வைபவத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர்.

ஒரு முறை குழந்தைகள் கூட்டமாக ஆடிப் பாடிக்கொண்டு ஒரு பாக்குத் தோப்புக்குள் நுழைந்தார்கள். அந்த வீட்டைச் சேர்ந்த உறவினர் ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருந்தார். அவருக்கு ஊரின் நடைமுறைகள் தெரியாது. குழந்தைகள் தோப்புக்குள் குதித்து விளையாடியபடி இங்கும் அங்கும் தாவுவதைக் கண்டதும் அவருக்குக் கோபம் வந்து விட்டது.

“இதென்ன அக்கிரமம்? விட்டால் இந்தக் குழந்தைகள் தோப்பையே நாசம் செய்து விடுவார்கள் போலிருக்கிறதே” என்று கத்தியபடி, குழந்தைகளை விரட்ட முற்பட்டார். அதற்குள் அருகே இருந்தவர்கள் அவரைத் தடுத்து, இது பகவானுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு என்று விளக்கினர்.

உறவினரோ, “இதெல் லாம் மூட நம்பிக்கை. இறைவனுக்குக் கோயிலில் நடக்கும் பூஜை பிடிக்கும். இப்படி அடுத்தவர் தொப்புக் குள் நுழைந்து குறும்பு செய்வதெல்லாமா பிடிக்கும்?” என்று கூறி, அந்தக் குழந்தைகளைத் அங்கிருந்து விரட்டிவிட்டார்.

பிறகு, தோப்புக்குச் சொந்தக் காரர்களான உறவினர் வீட்டுக் குச் சென்று நடந்ததை விவரித் தார். அவர்களுக்கு முகம் இருண்டு விட்டது. இவரோ அவர்களைச் சமாளிக்க முற்பட்டார்.

“எந்த விபரீதமும் நடக்காது. ஒரு மரம் வீணாய் போனாலும் நஷ்டம்தானே. குழந்தைகளை விரட்டிவிட்டால், கண்ணன் கோபித்துக்கொண்டு மரங்களைப் பிடுங்கி எறிந்துவிடுவானா... எல்லாம் பொய்...” என்று ஏகடியம் பேசினார்.

இப்படியொருவரை வீட்டில் தங்க வைத்தோமே என்று வீட்டிலுள்ளவர்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள். கோயில் உற்சவம் முடிவதற்குள் விசித்திரமான நோய் கண்டு தோப்பிலிருந்த எல்லா பாக்கு மரங்களும் பட்டுப் போய்விட்டன.

அருகிலுள்ள தோப்புகளில் எல்லாம் மரங்கள் செழுமையுடன் இருக்க, இவர்கள் மரம் ஒன்று கூட உருப்படியாக இல்லை. கடும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. தோப்பின் சொந்தக்காரர் களுக்குக் காரணம் புரிந்தது.

தவறுக்குப் பிராயச்சித்தமாக குழந்தைகளை அழைத்து, அவர்களை அரச குமாரர்களைப் போல் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, எண்ணெய் தேய்த்து நீராட்டி, புதுத் துணிகள் அணியவைத்து, பெரும் விருந்தும் படைத்தார்கள். ஆலயத்தில் கண்ணனுக்கும் விசேஷ திருப்பணிகள் செய்தார்கள். இதன் பின்னர் இறைவனின் கோபம் தணிந்தது. அந்தக் குடும்பம் நல்ல நிலையை அடைந்தது.

இதேபோல் வேறொரு நபரும் விளையாடும் குழந்தைகளைக் கேலி பேசினார். சிறிது நாள்ககளில், அவரது தொப்புள் அருகில் சிறு கட்டி ஒன்று தோன்றியது. நாளுக்கு நாள் அது வளர்ந்து, ஒரு பை போன்று தொங்கும் அளவுக்குப் பெரிதாகி விட்டது. வைத்தியர் களிடம் காட்டினார் கள். அறுவை சிகிச்சை செய்தால் வயிற்றின் மற்ற பாகங் களுக்குச் சேதம் ஏற்பட்டு உயிராபத்து ஏற்பட லாம் என்று கூறி மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்.

``ஆறன்முளையப்பனுக்கு இந்தக் கட்டியின் அளவுக்குத் தங்கத்தில் ஒரு குமிழ் செய்து சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக்கொள். 41 நாள்கள் கோயிலிலேயே தங்கியிருந்து இறைவனை வழிபட்டு வா. நிச்சயம் உன் நோய் குணமாகிவிடும்” என்று பெரியவர் ஒருவர் வழிகாட்டினார்.

கேலி பேசிய நபரும், பெரியவர் சொன்னபடி பகவானிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, அந்த கோயிலிலேயே தங்கியிருந்தார்.

ஆலயத்தில் பக்தர் ஒருவர் பகவானுக்குச் சமர்ப்பித்த மான் ஒன்று இருந்தது. அது எப்போதும் அந்த ஆலயத்தில் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டிருக்கும். குட்டி மானாக வந்தது, பின்னர் வளர்ந்து கொம்புகளுடன் கம்பீரமாகக் காட்சியளித்தது. எல்லோருக்கும் பிடித்தமான மான் அது. ஆலயத்தின் மூலை முடுக்கெல்லாம் சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும்.

கோயிலில் தங்கி வழிபட்டு வந்த அன்பர், ஒருநாள், `பஜனம் காலமான 41 நாள்கள் முடியப் போகிறது. ஆனாலும் கட்டி சரியாகவில்லையே' எனும் கவலையோடு ஆலயத்தை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த மான் இவர் மீது பாய்ந்தது. தன் கூரிய கொம்புகளால் அன்பரின் வயிற்றில் குத்தியது.அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கிச் சரிந்தார்.

பக்தர்கள் அவரை வைத்தியரிடம் கொண்டு சென்றார்கள். வயிற்றில் உள்ள காயத்தைச் சுத்தம் செய்த வைத்தியர் அசந்துபோய்விட்டார்.

“இது முழுக்க இறைவன் நிகழ்த்திய அற்புதமே! மான் கொம்பு குத்தியதால் வயிற்றுக்குள் சிறு காயமும் ஏற்படவில்லை. ஆனால், மிகச் சரியாக உன்னுடைய கட்டியை மட்டும் அது அறுத்து எறிந்துவிட்டது.” என்று கூறி வியந்தார்!

இதேபோல், ஆரன்முளையில் படகுப்போட்டி யின்போது நிகழ்ந்த வேறோரு அற்புதமும் உண்டு.

கேரளக் கதைகள் - 11 - ஆறன்முளையில் 
விளையாட்டுக் கண்ணன்!

ஓணம் பண்டிகை படகுப் போட்டி!

ரு முறை, ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரிசி, பருப்பு, காய்கறி, தானியங்கள் ஆகியவற்றை பெரிய படகுகளில் ஏற்றி, அரண்மனைக்குக் கொண்டு சென்றார்கள்.

படகுகள், பம்பை ஆற்றைக் கடந்து, கரையை நெருங்கிய தருணத்தில் திடீரென அப்படியே அசையாமல் நின்றுவிட்டன. மிக வலுவோடு துடுப்பு போட்டும் படகுகள் அசையவில்லை.

மன்னருக்குச் செய்தி போனது. அவர் தன் படைகளுடன் வந்தார். படை வீரர்கள் அத்தனை பேரும் கயிறு கட்டி இழுத்தும் படகுகள் நகரவில்லை. எல்லோருக்கும் குழப்பம்; திகைப்பு!

அப்போது இளைஞன் ஒருவன் வந்தான். “மன்னா! இந்தப் படகுகள் நிற்கும் இடத்தின் அருகில் ஆற்றங்கரையில் ஏழைக்குடும்பம் ஒன்று வசிக்கிறது. நாளை ஓணம் பண்டிகை. ஊரே விருந்தில் திளைக்கும். ஆனால், அந்தக் குடும்பத்துக்கோ அடுத்த வேளை உணவுக்கும் வழியில்லை.குழந்தைகள் பசியால் அழுவதைப் பொறுக்க முடியாமல், தாயும் தந்தையும் ஆரன்முளை கண்ணனிடம் மன்றாடியிருக் கிறார்கள். அதனால் படகுகள் நின்றுவிட்டன” என்றான்.

மன்னர் மனம் நெகிழ்ந்தார். “தக்க தருணத்தில் வந்து எங்களுக்கு நல்வழி காட்டினாய். மிக்க நன்றி!” என்றார்.

இளைஞன் அவரிடம், ``இப்போதே அவர்களுக்கான உணவுப் பொருள்களை வழங்க ஏற்பாடு செய்யுங்கள். அதுமட்டு மல்ல, இவர்களைப் போல் உணவில்லாமல் தவிக்கும் ஏழைகள் எல்லோருக்கும் என் ஆலயத்தில் உணவுப் பொருள் களை வழங்க உத்தரவிடுங்கள்'' என்றான் புன்சிரிப்புடன்.

மன்னருக்குத் திகைப்பு! `ஆலயத்திலா... அப்படியானால் வந்திருப்பது...' அவரின் மனம் கேள்வி எழுப்புவதற்குள் இளைஞன் மறைந்து விட்டான். ஏழைகளின் பசி பொறுக்காது இந்த நாடகத்தை நடத்தியது கண்ணனே என்று எல்லோரும் தெளிந்தார்கள். இந்த நிகழ்வினை யொட்டி, இன்றும் ஆறன்முளையில் படகுப் போட்டியும், ஓண விருந்தும் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆறன்முளை கண்ணாடிகள்!

கேரளத்தின் அதிசயப் பொருள்களில் ஒன்று ஆறன்முளை கண்ணாடி. அது இந்த ஊருக்கு வந்த விதம் ருசிகரமானது. இது பாதரசம் பூசப்பட்ட கண்ணாடி அல்ல. பிரத்யேகமான கலவையில் சேர்த்து உருவாக்கப்படும் உலோகக் கண்ணாடி!

பல நூற்றாண்டுகளுக்குமுன் இந்தப் பகுதி மன்னனின் கனவில் திருக்குறளப்பன் தோன்றி `எனக்குக் கண்ணாடி போல் ஜொலிக்கும் கிரீடம் வேண்டும்' என்று கேட்டார். மன்னனும் அப்படியொரு கிரீடத்தைச் செய்ய ஆணையிட்டார். ஆனால் தேர்ந்த கலைஞர்கள் பலர் முயற்சி செய்தும் அப்படியொரு கிரீடத்தை உருவாக்க இயலவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சங்கரன்கோவில் பகுதியில் இருந்த கலைஞர்களின் திறமையைக் கேள்விப் பட்டு, அவர்களை அழைத்துவந்து தங்க வைத்து விசேஷ மகுடத்தைத் தயாரிக்கச் சொன்னார்.

அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனாலும் கண்ணாடி போன்ற பளபளப்பு ஏற்படவில்லை. செய்வதறியாமல் ஆறன்முளை இறைவனையே வேண்டிக்கொண்டு வேலையைத் தொடர்ந்தார்கள். கண்ணனின் கை கண்ணுக்குத் தெரியாமல் மாயம் செய்தது. உலோகங்களைக் கலக்கும்போது, அவர்களுக்கே தெரியாத ஒருவிதமான கலவை ஏற்பட்டு, அவர்கள் நினைத்ததை விட அற்புதமான மகுடம் உருவானது.

``இது எப்படி சாத்தியமானது? இவ்வளவு அற்புதமான... கண்ணாடி போல் பளபளக்கக் கூடிய ஒரு மகுடத்தை இதுவரை கண்டதில்லை” என்று வியந்துபோன மன்னனும் மற்றவர்களும் அதுபோல் மற்றொன்றை உருவாக்க கட்டளை இட்டார்கள்.

ஆனால், அது கண்ணனின் விளையாட்டால் நிகழ்ந்த அற்புதம் அல்லவா? ஆகவே, அதுபோல் வேறொன்றைச் செய்ய முடியவில்லை, சங்கரன்கோவில் கலைஞர்களால்.

மன்னனின் கட்டளையை மீறினால் தண்டனை கிடைக்குமே என்று கலங்கியவர்கள், கண்ணனின் சோதரியான அம்பிகையை வேண்டி னார்கள். அன்று இரவு அவர்கள் குடும்பத்து மூதாட்டி ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, கண்ணாடி பளபளப்பை உருவாக்கும் உலோகக் கலவைக்கான வழிமுறையைச் சொல்லிக் கொடுத்தாள்.

இன்றளவும் அந்த வழிமுறைப்படியே, அதே குடும்பத்தின் வழித்தோன்றல்கள் மூலமாகவே ஆறன்முளை கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றனவாம். இது கேரளத்தில் அஷ்ட மங்கலப் பொருள்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கண்ணாடியைத் திருமணத்தின் போதும், வீட்டில் இறைவனின் முன்பும் வைத்தால் மங்கலம் பெருகும் என்பது திண்ணம்!

- தொடரும்...அந்த மூதாட்டியின் கனவில் தோன்றிய அம்பிகை, அதிசய கண்ணாடியை உருவாக்கும் உலோகக் கலவை வழிமுறையைச் சொல்லிக் கொடுத்தாள்!

கேரளக் கதைகள் - 11 - ஆறன்முளையில் 
விளையாட்டுக் கண்ணன்!

பால் பாயசம்!

திருப்பதி என்றதும் 'லட்டு' பிரசாதம் நினைவுக்கு வருவது போல, பால் பாயசம் என்றதும் அம்பலப்புழை கிருஷ்ணசாமி கோயில்தான் நினைவுக்கு வரும்.
கேரள மாநிலம், ஆலப்புழைக்கு அருகில் சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பலப் புழை கிருஷ்ணன்சாமி கோயில். இங்கே, கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். இவருக்குப் பால் பாயசம் நைவேத்தியம் செய்தால், நினைத்தது நடக்கும் என்பது ஐதிகம்.
இங்கு, மலையாள மீன மாசத்தில் `நாடகசால சத்யா' என்ற பெயரில் அன்னதானம் நடைபெறும். இதில் பகவான் கிருஷ்ணனும் கலந்து கொண்டு சாப்பிடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு.

- எஸ்.எஸ். மணி, திருவனந்தபுரம்-36