Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 2

கைவல்லிய நவநீதம்வரவேற்பறைபி.என்.பரசுராமன், ஓவியம்: நடனம்

ருக்கு ஊர், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அதிகரித்துவிட்டன. அந்த ஹோட்டல்களுக்கும், அவற்றில் உள்ள கேளிக்கை விடுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பும் வசதியும் கிடைப்பது சிலருக்கு மட்டுமே! ஆனால், 'அப்படிப்பட்ட இடங்களுக்குப் போய் ஒருமுறையாவது பார்த்துட்டு வரணும்’ என்கிற ஆசையும் ஆர்வமும் எல்லோருக்குமே உண்டு.

அப்படியான பிரமாண்ட இடங்களுக்குச் சென்று பார்த்தால், அங்கே முதலில் நம்மை வரவேற்பது, 'ரிசப்ஷன்’ என்று சொல்லப்படும் வரவேற்பறைதான்! அந்த ஹோட்டல் பற்றிய அத்தனை விவரங்களையும் தகவல்களையும் அங்கே கேட்டு அறியலாம்.

நட்சத்திர ஓட்டல்களுக்குச் செல்ல பலர் விரும்புவது போல, ஆத்மானந்தத்தைத் தருகிற ஞானநூல்களைப் படித்து அனுபவிக்கும் வாய்ப்பு சிலருக்குக் கிடைத்தாலும், பலர் அது குறித்து அறிந்துகொள்ளும் ஆவல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஞானநூல்களின் துவக்கத்தில், அந்த நூல் பற்றிய விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கும். இதற்கு 'பாயிரம்’ என்று பெயர். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் என்னவெல்லாம் இருக்கின்றன எனும் தகவல்களைச் சொல்கிற வரவேற்பறையோடு இதை ஒப்பிடலாம்.

ஆனால், இரண்டுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று ஆட்டமும்பாட்டமுமாக குதியாட்டம் போடும்போது, சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால், திரும்பி வந்ததும், 'ப்ச்... என்னவோ போ! ஒருநாள் கூத்துக்கு அங்கே போய், இருந்த காசையெல்லாம் வாணவேடிக்கை விட்டுட்டு வந்தாச்சு!’ என நம்மை நாமே நொந்துகொள்வோம். ஆமாம், அந்தச் சந்தோஷம் அத்தோடு தொலைந்தது. ஆனால், ஞானநூல்களின் வரவேற்பு அறை, அள்ள அள்ளக் குறையாத ஆனந்தத்தையே எப்போதும் தரும்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 2

படிக்கும்போதும் சரி, படித்து முடித்துவிட்டுப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மற்ற வேலைகளில் ஈடுபடும்போதும் சரி... அந்த ஞானநூலின் சாராம்சம், கரும்புச் சாறென நமக்குள் இறங்கி, ஒரு தித்திப்பைத் தந்து சதா காலமும் நம்மைப் பரவசப்படுத்திக் கொண்டே இருக்கும். உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சியை உணரமுடியும்.

அந்த வகையில் நமக்கு முழுமையான தெம்பை அளிக்கக் கூடியது 'கைவல்லிய நவநீதம்’.

இங்கே நுழைவதற்குள், முதலில் இதன் வரவேற்பு அறைக்குச் செல்வோம், வாருங்கள்! அதாவது, பாயிரத்தைப் பார்ப்போம்.

கைவல்லிய நவநீதம் நூலின் நுழைவாயிலான இந்தப் பகுதியில் ஏழு பாடல்கள் உள்ளன. சம்ஸ்கிருதத்தில் நல்ல பாண்டித்தியமும் ஆராய்ச்சி செய்யும் ஞானமும் கொண்டவர் இந்த நூலின் ஆசிரியரான தாண்டவமூர்த்தி சுவாமிகள். தாம் அடைந்த தெய்விக அனுபவத்தை, உலகில் உள்ள அனைவரும் அடைய வேண்டும், எல்லோரும் ஆனந்தத்துடன் வாழவேண்டும் எனும் நல்லெண்ணத்தில் அவர் இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 2

இந்த நூல் பணி நல்லவிதமாக முடிய வேண்டும் என்பதற்காக, இறைவனைத் துதிக்கும் பகுதியில் அவற்றைப் படிப்படியாகச் சொல்லும் நூலாசிரியரின் பாங்கு, அவரின் விருப்பம் ஆகியவை மென்மையாக வெளிப்படுகின்றன. இவை அனைத்தும் அவர் பக்கமாக, இந்த நூல் பக்கமாக நம்மைத் திரும்பச் செய்கின்றன.

இறைவன் எல்லா இடங்களிலும் பரவி இருப்பதாக, ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன. அப்படிப்பட்ட இறைவனைத் துதித்துத் தொடங்கும் முதல் பாடலிலேயே, நம்மைப் பற்றிக் குறிப்பிட்டுத்தான் நூலையே துவக்குகிறார் ஆசிரியர்.

பொன் நிலம் மாதர் ஆசை பொருந்தினர்
பொருந்தார் உள்ளம்
தன்னில் அந்தரத்தில் சீவ சாக்ஷி
மாத்திரமாய் நிற்கும்.

'பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை எனும் மூன்றும் கொண்டவர், துறந்தவர் அனைவ ரின் உள்ளத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தப் பரப்பிரம்ம வடிவத்தின் திருவடியை வணங்குவோம்’ என்கிறது இந்தப் பாடல்,

அதாவது... ஆசைகளைத் துறந்தவர், ஆசை வசப்பட்டவர் என்கிற வேறுபாடெல்லாம் மனிதர்களுக்குத்தான் உண்டு; பரம்பொருளுக்கு இந்தப் பாகுபாடுகள் ஏதுமில்லை. அவர் எல்லார் மனங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என மிக அழகாகச் சொல்கிறார் நூலாசிரியர்.

தொடர்ந்து... 'அந்தப் பிரப்பிரம்மமே படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலையும் செய்யும் மும்மூர்த்திகளாகத் திகழ்கிறது. பலவித வடிவங்களில் இருப்பதும் பிரம்மம். ஆனந்தக் கடலில் உதிக்கும் ஞானசூரியனும் பிரம்மம். ஞானத்தின் வடிவாகத் திகழ்வதும் பிரம்மமே! அப்படிப்பட்ட பிரம்மத்தை வணங்குகிறேன்’ என்கிறார்.

பிரம்மத்தை ஞான சூரியனாகச் சொல்லி யிருப்பது வியப்புக்்கு உரியது. நாம் பார்க்கும் சூரியனுக்குத் தோற்றம் உண்டு. அதைப் பார்த்து விட்டு, பகல் என்போம். சூரியன் மறையும்போது, இரவு என்போம். நம்மைப் பொறுத்தவரை சூரியனுக்குத் தோற்றம், முடிவு இரண்டும் உண்டு. ஆனால், ஞானசூரியனுக்கு முடிவே கிடையாது. அதாவது, தெளிந்த நல்லறிவு தோன்றினால், அது எப்போதும் கலங்காது; விலகாது; மறையாது.

இது, படிக்கும்போது அல்லது கேட்கும்போது ஓரளவுக்குப் புரிகிற மாதிரிதான் தெரிகிறது. ஆனால், அனுபவத்தின் மூலம் கிடைக்கும்போது, அந்தகாரம் சூழ்கிறது.

சூரியனுக்கும் நமக்கும் நடுவில் ஒரு சிறிய திரை இருந்தால், சூரியன் நம் பார்வையில் இருந்து மறைந்துவிடுகிறது அல்லவா!  அதுபோல, நமக்குள் உள்ள ஞானசூரியனை நாம் உணராதபடி,  ஒரு மாயத்திரை விழுந்து, மறைத்்துவிடுகி்றது.

சூரியனுக்கும் நமக்கும் நடுவில் உள்ள திரையை யாராவது நீக்கினால், சூரியனை நாம் பார்க்கலாம். அதுபோல, அறிவில் தெளிவு உண்டாகாதபடி மறைக்கும் தீய குணங்களாகிய திரையை குருநாதர் ஒருவர் வந்து நீக்கினால், நம்மால் ஞானசூரியனை தரிசிக்க இயலும்.

''அவ்வாறு எனக்கு அருள் செய்து, எனக்கு பிரம்மநிலையை உணர்த்திய குருநாதரின் திருவடிகளை தினந்தோறும் வணங்குகிறேன்' என்கிறார் நூலாசிரியர்.

'பரந்துபட்டுக் கிடக்கும் வேதாந்த  சாஸ்திர நூல்களை ஆராய்ந்து அறியும் சக்தியில்லாத சீடர்களும் எளிமையாக உணரும்படி சொல்கிறேன். உபநிடதங்களின் சாரமாக, அதுவும் என் சொந்த அனுபவத்தால் கடைந்தெடுக்கப்பட்ட இந்த 'கைவல்லிய நவநீத’த்தை அளிக்கிறேன். விஷய வாதனைகளை நீக்கக்கூடியது இது'' என்ற ஆசிரியர், தன் உபாஸனா மூர்த்தியை வணங்கி, 'பாயிரம்’ பகுதியை நிறைவு செய்கிறார். அதில், 'என்னை அடிமை கொண்ட வேங்கடாசலபதியாகிய திருமாலை வணங்கி, 'கைவல்லிய நவநீதம்’ எனும் ஞான சாஸ்திரத்தை, தத்துவ விளக்கம் என்றும், சந்தேகம் தெளிதல் என்றும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துச் சொல்கிறேன்' என்கிறார் தாண்டவமூர்த்தி சுவாமிகள்.

'முத்தனை வேங்கடேச முகுந்தனை
எனை ஆட்கொண்ட
கத்தனை வணங்கிச் சொல்லும்
கைவல்ய நவநீதத்தைத்
தத்துவ விளக்கம் என்றும்
சந்தேகம் தெளிதல் என்றும்
வைத்து இரு படலமாக
வகுத்து உரை செய்கின்றேனே!’

வாருங்கள்... 'தத்துவ விளக்கம்’ எனும் பகுதிக்குள் நுழையலாம்.

- தொடரும்