Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 16

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 16

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

Published:Updated:

பாஸ்கர சேதுபதி அவர்கள், ஸ்வாமிகளுக்குப் பட்டாபிஷேகம் செய்து தம்முடைய ராஜ்யத்தை சமர்ப்பணம் செய்துவிட்டதைப் பார்த்தோம். 'சந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்ட ஸ்வாமிகள், இப்படி ஒரு ராஜ்யத்தை தானமாகப் பெறலாமா?’ என்ற கேள்வி அங்கிருந்தவர்களின் மனங்களில் எழத்தான் செய்தது. அப்போது ஸ்வாமிகள், 'மறுநாள் சபை கூடப்போகிறது. அப்போது தாம் என்ன செய்தாலும் அதை யாரும் ஆட்சேபிக்கக் கூடாது’ என்று கூறிவிட்டு, தம்முடைய இருப்பிடத்துக்குத் திரும்பினார்.

மறுநாள் அரசவை கூடியது. பாஸ்கர சேதுபதியும், மந்திரிப் பிரதானிகளும் சபா மண்டபத்தில் கூடினர். சற்று நேரத்துக்கெல்லாம் ஸ்வாமிகளும் தம்முடைய பரிவாரங்கள் சூழ வந்து சேர்ந்தார். அங்கிருந்த எல்லோரும், அடுத்து ஸ்வாமிகள் என்ன செய்யப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்புடனும் பரபரப்புடனும் காத்திருந்தனர்.

ஸ்வாமிகள், ''நாம் இந்த ராஜ்யத்தை தானமாகப் பெற்றது குறித்து உங்களில் பலருக்கும் பலவிதமான எண்ணங்கள் தோன்றி இருக்கலாம். இங்கே நீங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாமாக எதையும் சங்கல்பித்துக் கொள்வதில்லை. ஸ்ரீசாரதையின் சங்கல்பத்தின்படியே அனைத்தும் நடைபெறுகின்றன' என்று சொல்லி நிறுத்தியவர், சபையில் இருந்த பாஸ்கர சேதுபதியின் மகன் ராஜேசுவர முத்துராமலிங்க சேதுபதியை அன்பு ததும்ப நோக்கி, அவரைத் தமக்கு அருகில்  அழைத்து, முந்தின தினம் பாஸ்கர சேதுபதி தமக்குச் சமர்ப்பித்த ராஜ்யத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்து, பட்டாபிஷேகமும் செய்து வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்வாமிகளின் இந்தச் செயலைக் கண்டு சபையில் இருந்தவர்கள் அளவற்ற சந்தோஷம் கொண்டார்கள். வரிசையில் நின்று ஸ்வாமி களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள். பின்னர், மன்னரின் வேண்டுகோளுக்கு மனம் இரங்கியவராக, ஐந்து கிராமங்களை மட்டும் ஸ்ரீமடத்துக்குக் காணிக்கையாகப் பெற்றுக் கொண்டார் ஸ்வாமிகள்.

துங்கா நதி தீரத்தில்... - 16

ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட ஸ்வாமிகள் கோவிலூருக்கு வந்து சேர்ந்தார். ஸ்வாமிகள் அங்கிருந்த நேரத்தில்தான், கல்கத்தா சென்றிருந்த மைசூர் மகாராஜா சாமராஜ பிரபு இறைவனின் திருவடிகளில் சேர்ந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. மகாராஜாவின் ஆத்ம சாந்திக்காக அம்பாளிடம் பிரார்த்தித்துக் கொண்டார் ஸ்வாமிகள்.

பின்னர், திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தவர் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருந்த ஸந்த்யா மண்டபத்தை அடைந்தார். அங்கே ஸ்வாமிகளை பக்திபூர்வமாக வரவேற்ற அப்பகுதியைச் சேர்ந்த அந்தணர்கள், ஸ்வாமிகளை தங்கப் பல்லக்கில் அமர்த்தி அவர்களே வேத கோஷங்களுடனும் மங்கள ஆரத்திகளுடனும் சுமந்து சென்றார்கள். எல்லா தெருக்களிலும் பக்தர்கள் பரவசத்துடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்து அருளாசிகளைப் பெற்றுக் கொண்டார்கள். தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானமான பாணதீர்த்தத்துக்கு விஜயம் செய்த ஸ்வாமிகளை சிங்கம்பட்டி ஜமீன்தார் வரவேற்று, வேண்டிய செளகர்யங்களைச் செய்து கொடுத்தார். சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு 'தீர்த்தபதி’ என்ற விருது கொடுத்த ஸ்வாமிகள், அவருக்கு புத்திர சந்தானம் ஏற்படும்படியாக அனுக்கிரஹம் செய்துவிட்டு, சேலம் மாவட்டம் வழியாக பெங்களூரை அடைந்தார்.

அங்கே ஒரு வாரம் தங்கி இருந்த ஸ்வாமிகள், மைசூருக்கு விஜயம் செய்து, சாமராஜ பிரபுக்களின் பட்டமஹிஷிக்கும், அரச குடும்பத்தினருக்கும் அநேக விதமான தர்மோபதேசங்கள் செய்து ஆறுதல் சொல்லிவிட்டு, சிருங்கேரியை அடைந்தார்கள்.

துங்கா நதி தீரத்தில்... - 16

தம்முடைய தேச சஞ்சாரத்தின்போது, மக்களிடையே குறைந்துகொண்டு வருகிற தெய்வ பக்தி மற்றும் ஆன்மிக நாட்டம் குறித்துப் பெரிதும் சஞ்சலப்பட்ட ஸ்வாமிகள், அதைச் சரிசெய்ய ஸ்ரீசாரதைதான் அனுக்கிரஹம் செய்யவேண்டும் என்று மனதை சமாதானம் செய்துகொண்டு, ஒரு சுப தினத்தில் வேத சாஸ்திர அத்யயனத்துக்காக 'ஸத்வித்யா ஸஞ்ஜீவிநீ’ என்ற பெயரில் வேத பாடசாலை ஒன்றை ஏற்படுத்தினார்கள்.

அதன் பிறகு, லோக சம்ரக்ஷணத்துக்காக ஏகாந்தமாக தியானம் செய்வதில் ஆர்வம் கொண்டுவிட்ட ஸ்வாமிகள், சிருங்கேரியில் துங்கா நதிக்குத் தென்புறத்தில், கொடிய மிருகங்கள் சஞ்சாரம் செய்யக் கூடியதாக இருந்த வனத்தில் சிறிதளவு இடத்தைச் சீர்திருத்தி, அங்கே பர்ணசாலை ஒன்றை அமைத்துக் கொண்டு, அதற்குத் தம்முடைய குருநாதரின் நினைவாக, 'நரஸிம்ம வனம்’ என்று பெயரிட்டு, அங்கேயே தம்முடைய முகாமை அமைத்துக் கொண்டார். ஸ்ரீமட சமஸ்தானத்துக்கென்றே பிரத்யேகமாக ஏற்பட்டிருந்த ராஜ சின்னங்களைப் பயன்படுத்து வதையும், தங்கம், வெள்ளி முதலான பாத்திரங்களை உபயோகிப்பதையும் நிறுத்திக் கொண்டார்கள். சந்தியா வேளைகளில் பர்ணசாலையில் இருந்து புறப்பட்டு வனத்துக்குள் பிரவேசித்து, ஏகாந்தமான இடம் பார்த்து தியானத்தில் ஈடுபட்டு, ஆத்மானந்தத்தை அனுபவித்து வந்தார்கள். ஆனாலும், ஸ்ரீமடத்துக்கு உரிய பூஜைகளும், வேத பாடங்களும் தடங்கல் இல்லாமல் நடைபெறும்படியாகப் பார்த்துக்கொண்டார்கள்.

ஸ்வாமிகள் நரஸிம்ம வனத்தில் தங்கி இருந்தபோது, அப்போதைய மைசூர் மகாராஜா நால்வடி கிருஷ்ணராஜ பிரபு, பிரேஸர் என்ற ஐரோப்பியருடன் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தார். சதா காலமும் லோகாயத சிந்தனைகளிலேயே ஈடுபட்டிருக்கும் பிரேஸர், ஸ்வாமிகளை தரிசித்ததுமே, அதுவரை அனுபவித்தறியாத ஒருவித பரவச நிலையை அடைந்தார்.

துங்கா நதி தீரத்தில்... - 16

ஸ்வாமிகளுடன் ஏகாந்தமாக உரையாட விரும்பி, அவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார் பிரேஸர். ஸ்வாமிகளும் அதற்குச் சம்மதித்தவராக மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பிரேஸருடன் உரையாடி, அவருக்குப் பலவகைகளிலும் தர்மோபதேசங்களைச் செய்தார். உரையாடி முடித்ததும் ஸ்வாமிகளின் தவ வலிமை, யோக ஸித்தி, எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்வாமிகளின் உள்ளத்தில் இருந்து பெருக்கெடுத்த அன்பின் சக்தி போன்றவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பிரேஸர், ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, ''ஸ்வாமி, சம்சார பந்தங்களில் சிக்கிக் கிடக்கும் எங்களைப் போன்றவர்களின் வீட்டுக்கு யாரேனும் வந்தால் அவர்களுக்கு காபி, தேநீீர், கோகோ போன்ற பானங்களைக் கொடுத்து உபசரிக்கிறோம். ஆனால், தங்களைச் சந்திக்க வரும் எங்களைப் போன்றவர்களுக்குத் தங்கள் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பெருக்கெடுக்கும் அன்பை வழங்கி, எங்களைப் பரவசம் அடையச் செய்கிறீர்கள்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஸ்வாமிகளின் ஏகாந்த தியானம் சில வருஷங்கள் தொடர்ந்தது. சில நேரங்களில், வனத்தின் ஒரு பகுதியில் இருந்த நரஸிம்ம பர்வத மலைக்குச் சென்று, அங்கேயே பல தினங்கள் தங்கி, பூஜைகளிலும் தியானத்திலும் ஈடுபட்டுவிடுவார். கொடிய வன விலங்குகள் சஞ்சரிக்கும் அந்த இடத்துக்கு ஸ்வாமிகள் ஏகாந்தமாகச் சென்றுவிடுவது பற்றி அச்சம் கொண்ட ஸ்ரீமடத்து நிர்வாகிகள், ஸ்வாமிகள் அறியாமலேயே இரண்டு சிப்பந்திகளை பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனாலும், ஸ்வாமிகள் எதையுமே லட்சியம் செய்யாதவராக, தம் போக்கிலேயே ஏகாந்தமான இடத்துக்குச் சென்று தியானத்தில் திளைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்படி ஓர் அந்தி சாயும் பொழுதில், நரஸிம்ம பர்வதத்தில் ஸ்வாமிகள் தியானத்தில்  ஆழ்ந்திருந்தபோது...

இரண்டு புலிகள் ஸ்வாமிகளை நோக்கி ஆவேசமாகப் பாய்ந்து வந்தன.

தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism