மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

மங்கல வாழ்வருளும் காந்திமதி கல்யாணம்! எஸ்.கண்ணன்கோபாலன்

லக மக்கள் எந்த பேதமும் இல்லாமல் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காக, அன்னை கோமதியாய் வந்து தவம் இருந்ததையும், அனைவருக்கும் நல்ல மணவாழ்க்கை அமையவேண்டும் என்பதற்காக திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரி உச்சிக்கால பூஜையில் ஜம்புகேஸ்வரரை பூஜிப்பதையும் தரிசித்து வந்த நம் மனதில் ஓர் ஏக்கம் தோன்றவே செய்தது.

'அகிலம் காக்கும் அம்பிகை இப்படி நமக்காகவே தவமும் பூஜையும் மேற்கொண்டிருந்தால், அவள் எப்போதுதான் மணக்கோலம் காண்பது? நம்முடைய நலன்களுக்காகவே தன் நாயகனைப் பிரிந்து வந்த அந்த அன்னை, கல்யாணக் கோலம் கொண்டு ஈசனை மணம்கொள்ள வேண்டாமா? அந்த வைபவத்தை தரிசிக்கும் பேறு நமக்குக் கிடைக்காதா?’ என்ற ஏக்கம்தான் அது.

குலசை தசரா விழாவுக்குச் சென்றிருந்தபோது, அங்கே சந்தித்த ஒரு நெல்லை அன்பர் நம்மிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். 'நெல்லை மக்களைப் பொறுத்தவரை, தீபாவளி என்றாலே இரட்டிப்பு சந்தோஷம்தான். காரணம், தீபாவளியை ஒட்டி ஓரிரு நாட்களுக்கு முன்னதாகத்தான், அந்த ஊருக்கே பெயர் வரக் காரணமாக இருந்த நெல்லையப்பரின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். கல்யாணம் முடிந்த ஓரிரு நாள்களிலேயே நெல்லையப்பருக்குத் தலைதீபாவளி!’

நாம் எந்த அம்பிகையின் கல்யாண வைபவத்தைத் தரிசிக்க ஏங்கிக் கிடந்தோமோ, அதைப் பற்றி அந்த நெல்லை அன்பர் கூறியதைக் கேட்டதுமே தீர்மானித்திருந்தபடி, இதோ இப்போது நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் இருக்கிறோம்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி கடைசியில், ஐப்பசி தொடக்கத்தில் காந்திமதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண உற்ஸவம் தொடங்குகிறது. காந்திமதி அம்மனின் திருக்கல்யாண உற்ஸவம் ஒரு தொடர் நிகழ்ச்சி என்பதால், அந்த வைபவத்தைத் தரிசிக்க, இரண்டு நாள்களுக்கு முன்பாக அக்டோபர் 18, சனிக்கிழமையன்று நடைபெற்ற 9ம் நாள் திருவிழா அன்று மாலையே, நாம் கோயிலுக்குச் சென்றுவிட்டோம். நாம் சென்றிருந்தபோது, அன்னை காந்திமதி, சுவாமி நெல்லையப்பருக்கு சிவபூஜை செய்யும் வைபவம் நடைபெற இருந்தது. அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பரத்தில் எழுந்தருளியிருந்த அம்பிகை, தன் கையில் வைத்திருந்த வட்டிலில் இருந்த புஷ்பங்களால் இறைவனை பூஜிக்கும் அந்த வைபவத்தைக் கண்டபோது, சாட்சாத் அந்த கயிலையில் பார்வதிதேவி ஈசனை வழிபடுவதை தரிசித்தது போன்ற உணர்வு ஏற்பட்டுப் பரவசமானோம்.

அக்காலத்தில் மூங்கில் வனமாக இருந்தபடியால் 'வேணு வனம்’ என்று அழைக்கப்பட்ட நெல்லை திருத்தலத்தில் அன்னை தோன்றியதற்கான காரணம், அவளுக்கு காந்திமதி என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணம் எல்லாமே மனிதர்களுக்கு வாழ்வியல் தத்துவ உண்மைகளை உணர்த்துவதற்காகத்தான் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு, காந்திமதி அன்னையின் திருக்கல்யாண உற்ஸவம் நம்முடைய வாழ்க்கை நெறிகளை ஒட்டியே அமைந்திருக்கிறது. இதுதான் காந்திமதி அம்மன் திருக்கல்யாணத்தின் தனிச் சிறப்பு!

பக்தர்களின் ஆரவாரம் கேட்டது. காந்திமதி அன்னை சிவபூஜை முடித்துவிட்டு, தந்தப் பல்லக்கில் வீதி உலா வருவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. சற்றே தள்ளி இருந்த கோயில் அர்ச்சகர் மூர்த்தி பட்டரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, காந்திமதி அன்னையின் கல்யாண உற்ஸவத்தின் சிறப்பம்சங்கள் குறித்துக் கேட்டோம்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

''ஆதியில் உலக மக்களுக்கு அருள்புரிவதற்காக பூமியில்  தோன்றிய அன்னை, காந்திமதி எனப் பெயர் கொண்டாள். ஈசனைப் பிரிந்து வந்த அம்பிகை, சிவபெருமானின் மகிமைகளைக் கேட்டு, அவரையே மணந்துகொள்ள வேண்டி, விபூதி, வருணை நதிகளுக்கிடையில் பாய்ந்ததாகச் சொல்லப்படும் கம்பை நதியின் கரையில் கடும்தவம் புரிந்தாள். காலப்போக்கில், தவக்கோலம் கொண்ட அன்னையின் திருமேனியின் மேலாக விபூதிப் புற்று தோன்றி விட்டது. அன்னையின் தவம் கண்டு இரங்கிய சிவபெருமான், அன்னைக்கு தரிசனம் தந்து, திருமணம் செய்துகொண்டார். அதை நினைவு கூரும் விதத்தில்தான் இந்தக் கோயிலில் கல்யாண உற்ஸவம் பன்னிரண்டு நாள்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது'' என்றார்.

காந்திமதி அம்மன் 32 அறங்களைப் புரிந்ததாக நாம் கேள்விப் பட்டிருந்த ஒரு செய்தி அப்போது நம் நினைவுக்கு வரவே, அது பற்றிய விவரங்களை அவரிடம் கேட்டோம்.

''மக்களிடம் தர்மகுணம் தழைத்துச் செழிக்கவேண்டும் என்பதற்காக, காந்திமதி அன்னை 32 வகையான தர்மங்களைச் செய்ததாகத் தல புராணம் சொல்லுகிறது. அதை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், 3ம் நாள் திருவிழா முதல் 7ம் நாள் திருவிழா வரை, காந்திமதி அன்னை கம்பை நதிக்கு நீராடச் செல்லும்போது, அங்கே வரும் பெண்களை எல்லாம் அம்பாளின் தோழிகளாக பாவித்து, அவர்கள் நீராட, கோயிலின் சார்பில் நல்லெண்ணெயும் பாலும் வழங்கப்படுகின்றன'' என்றார் (எண்ணெயை சிரசில் வைத்தால் பாலும் சேர்த்து வைக்க வேண்டும்; அப்போதுதான் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்).

அம்பிகை 32 அறங்களைச் செய்த அந்தத் திருத்தலத்தில், திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும் நாள்களில், அங்கே வசிக்கும் அன்பர்கள் மட்டும் இல்லாமல் மற்ற பகுதி மக்களும் அம்பிகை செயல்வழியில் நமக்குக் கற்பித்தபடி தங்களால் இயன்ற அளவுக்குத் தர்மங்களைச் செய்யலாமே என்பதாக ஓர் எண்ணம் நமக்கு ஏற்பட்டது. அப்போதுதானே அம்பிகை, காந்திமதியாய் இந்தப் புண்ணிய பூமியில் தோன்றியதன் நோக்கம் பூரணத்துவம் பெற்றிட முடியும்?!

மறுநாள் காலை அம்பிகைக்கு தீர்த்தவாரியும், சிறப்பு அபிஷேக அலங்காரங்களும் நடைபெறுவதாக இருந்ததால், அன்று காலை 10 மணிக்கே கோயிலுக்குச் சென்றுவிட்டோம். அன்று மதியம் முதல் மறுநாள் மதியம் வரையிலான நிகழ்ச்சிகளைத்தான் நாம் தரிசிக்கச் சென்றிருந்தோம்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அம்பிகையின் கோயிலுக்குள் உள்ள புஷ்கரணியில் தீர்த்தவாரியும், தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அன்னைக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. மழையையும் பொருட்படுத்தாமல் அங்கே கூடியிருந்த பக்தர்கள் அத்தனை பேர் முகங்களிலும் காணப்பட்ட பரவசம் நம்மையும் பற்றிக்கொண்டது.

அபிஷேகத்தை தரிசித்துவிட்டு அம்பாள் சந்நிதிக்குச் சென்றோம். மடப்பள்ளி பணியாளர் ஒருவர் தன் தலையில் மூடி இட்ட ஒரு பாத்திரத்தைக் கொண்டு செல்ல, அம்பாள் சந்நிதி பட்டர் ஒருவரும் உடன் சென்றார். அம்பாளுக்கு நைவேத்தியம் செய்யாமலேயே கொண்டு செல்லவே, குழப்பத்துடன் நாமும் பின் சென்றோம். நேராக சுவாமி சந்நிதிக்குச் சென்ற அவர்கள், அம்பாள் சந்நிதியில் இருந்து கொண்டு வந்த பாத்திரத்தை வைத்து நைவேத்தியம் செய்தனர். இந்த நிகழ்ச்சி நமக்குச் சற்றே வியப்பை ஏற்படுத்தியது. பொதுவாக மடப்பள்ளியில் இருந்து சுத்த அன்னம்(வெறும் சாதம்) சமைத்து, முதலில் சுவாமிக்கும் பின்னர் அம்பாளுக்கும் நைவேத்தியம் செய்வதுதானே முறை? இது என்ன புதுப் பழக்கம்? வாழ்வியல் நெறிகளை நமக்கு உணர்த்த வந்த அன்னை காந்திமதி காரணம் இல்லாமல் எதுவும் செய்வாளா என்ன?

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பிற்பகலில், வேதாகம வித்யாசார்யர் வித்யாசங்கர சிவாசார்யாரிடம் இதுபற்றி விசாரித்தபோது, அவர் சொன்னார்... ''இந்த வேணுவனத்தில் அம்பாள் காந்திமதியாய் அவதரித்து, அறங்களும் தவமும் செய்து சிவபெருமானைக் கல்யாணம் செய்துகொண்டாள். தான் அன்புடன் மணந்துகொண்ட தன் நாயகனுக்கு, தன் கையாலேயே சமைத்து அனுப்ப வேண்டும் என்பது அம்பிகையின் திருவுள்ளம். அதனால்தான் நம்முடைய நெல்லையப்பர் கோயிலில் உச்சிக்காலத்தில் மட்டும் மடப்பள்ளி பணியாளர் ஒருவர் அம்பாள் சந்நிதியில் இருந்து, மூடியிட்ட பள்ளயத்தில்(உண்கலம்) பிரசாதம் எடுத்துக்கொண்டு, அம்பாள் சந்நிதி பட்டருடன் சுவாமி சந்நிதிக்குச் செல்லுவது மரபாக உள்ளது.'

இல்லறம் மேற்கொள்ளும் பெண்கள், தன் கணவன் தன் கையால் சமைத்த உணவை உண்ணவேண்டும் என்றுதானே விரும்புவார்கள்? அதனால்தான், வாழ்வியல் நெறிகளை நமக்கு உணர்த்தவே அவதரித்த அன்னை காந்திமதி, இப்படியான ஒரு வழக்கத்தை தனக்கென்று ஏற்படுத்திக்கொண்டாள் போலும்!

''பொதுவாக, சுவாமிக்குச் சுத்த அன்னம்தான் நைவேத்தியம் செய்வது வழக்கம். ஆனால், எம் அன்னை காந்திமதி, தான் காதலுடன் மணந்துகொண்ட தன் நாயகராம் நெல்லையப் பருக்கு சுத்த அன்னத்துடன் ஒரு கூட்டு, ஒரு பொரியல், ஒரு குழம்பு என அறுசுவையுடன் கூடிய உணவையே பிரசாதமாக நைவேத்தியம் செய்வது தனிச்சிறப்பு!'' என்ற வித்யாசங்கர சிவாச்சார்யார், அன்னை காந்திமதி என்ற பெயர் பெற்றதற்கான காரணத்தை விவரித்தார்... 'பிரகாசமான ஞானத்தை நமக்கு அருள்பவள் என்பதால்தான் அன்னைக்கு இந்தப் பெயர். காந்தி என்றால், பிரகாசம்; மதி என்றால், ஞானம்!''

காந்திமதியின் அழகு முக தரிசனம் கண்ட நம் மனதில் அம்பிகையின் பெயருக்கான மற்றொரு பொருத்தமும் பளிச்சிட்டது. அதுபற்றி நிறைவில் பார்ப்போமே!

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அன்று மாலை 7 மணிக்கு, நாம் திரும்பவும் கோயிலுக்குச் சென்றோம். காந்திமதி அன்னை தவக்கோலம் பூண்டு தவம் இயற்றச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இரவு 11 மணிக்கு மேல், இடக் கையில் கமண்டலம், வலக் கையில் தீர்த்த கெண்டி, பிரம்பு ஏந்தி, எளிய ஆடை உடுத்தி, தவக்கோலம் பூண்டவளாக, தங்கச் சப்பரத்தில் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த ஒரு கோயிலுக்கு எழுந்தருளினாள். அங்கேதான் ஆதியில் காந்திமதி அன்னை தவம் இருந்து சிவபெருமானை வழிபட்டதாகச் சொல்கிறார்கள்.

சிவபெருமானை கல்யாணம் செய்துகொள்வதற் காக காந்திமதி அன்னை தவம் இயற்றும் அந்த நிகழ்ச்சியுடன் அன்றைய வைபவம் நிறைவு பெற்றது. மறுநாள் காலை 10 மணிக்கு, கோயிலுக்குச் சென்றோம். சுவாமி நெல்லையப்பர் மாப்பிள்ளைக் கோலத்தில் சர்வாலங்கார பூஷிதராக, ரிஷப வாகனத்தில் அமர்ந்து, வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பரத்தில் எழுந்தருளியிருந்ததை தரிசித்தோம். சற்று நேரத்துக்கெல்லாம், அன்னை காந்திமதிக்கு தரிசனம் தரப் புறப்பட்டுவிட்டார் நெல்லையப்பர். மாப்பிள்ளையை வரவேற்று அழைத்துச்செல்ல, பெண் வீட்டார் யாரும் வரவில்லையே என்று யோசித்தபடியே நெல்லையப்பரைப் பின்தொடர்ந்தோம்.

காந்திமதி அம்மன் கோயில் கோபுரத்தை அடைந்ததும், நாம் கண்ட காட்சி நம்மைச் சிலிர்க்க வைத்தது. ஆம்! நெல்லையப்பரை வரவேற்க, காந்திமதியின் சகோதரர் நெல்லை கோவிந்தர் பல்லக்கு ஒன்றில் தயாராக இருந்தார். அடடா..! இத்தகைய நிகழ்ச்சிகள் நம்முடைய வாழ்வியல் நடைமுறைகளுக்குத்தான் எத்தனை பொருத்தமாக அமைந்திருக்கின்றன!

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

நெல்லையப்ப சுவாமியை வாஞ்சையுடன் வரவேற்ற நெல்லை கோவிந்தர், அவரை அம்பிகை தவம் இயற்றும் கோயிலுக்கு  அருகில் இருக்கும் காட்சி மண்டபத்துக்கு அழைத்து வருவதற்குள், நாம் அங்கே விரைந்து சென்றுவிட்டோம்... அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காணலாமே என்கிற உத்தேசத்தில்!

நெல்லையப்பர் கோயிலில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில், சுமார் 2 கி.மீ. தொலைவில் இருந்த அந்தக் கோயிலுக்குச் சென்றபோது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தனர். நேற்று இரவு தரிசித்ததைவிட, இப்போது இன்னும் தெளிவாக காந்திமதி அன்னையை நம்மால் தரிசிக்க முடிந்தது. அம்பிகையின் திருமுகத்தில் விபூதிக் காப்பு சார்த்தப்பட்டிருந்தது. எழிலார்ந்த அன்னையின் திருமுகத்தை மறைப்பதுபோல் ஏன் இந்த விபூதிக் காப்பு? நம் சந்தேகத்தை, அம்பாளின் சப்பரத்துக்கு அருகில் இருந்த மணிகண்டன் பட்டர் என்பவரிடம் கேட்டோம்.

''காந்திமதி அம்பாள், சிவபெருமானை கல்யாணம் செய்துகொள்ளத் தவம் இயற்றிய போது, காலப்போக்கில் விபூதிப் புற்று தோன்றிவிட்டது. அதை நினைவு படுத்தத்தான், தவக் கோலத்தில் இருக்கும் அம்பிகைக்கு விபூதிக் காப்பு சார்த்தப் படுகிறது'' என்றார்.

தவம் இயற்றும் அம்பிகையைத் தரிசித்துவிட்டு, வெளியில் வருகிறோம். சாலையில் அருகருகில் இரண்டு கல் மண்டபங்கள், வண்ண மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டி ருந்ததைக் கண்டோம். அங்கேதான் நெல்லையப்பர் அம்பிகைக்குக் காட்சி கொடுப்பாராம். அதனால்தான் அந்த மண்டபத்துக்கு, 'காட்சி மண்டபம்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது.

சாலையே தெரியாதபடி ஆயிரக் கணக்கான பக்தர்கள், நெல்லையப்ப சுவாமி அம்பிகைக்குக் காட்சி தருவதை தரிசிக்கக் குழுமி இருந்தனர்.

10 மணி சுமாருக்கு, தன் திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட நெல்லையப்பர், சுமார் 12.30 மணிக்கு நெல்லை கோவிந்தர் உடன்வர, காட்சி மண்டபத்தை அடைந்தார். சுவாமி வந்து சேர்ந்த சிறிது நேரத்துக்கெல்லாம் அம்பாளும் வந்து, சுவாமியை மூன்று முறை வலம் வந்து, மற்றொரு மண்டபத்தில் எழுந்தருள, தொடர்ந்து, மறுநாள் அதிகாலையில் நடைபெற உள்ள திருமணத்தை உறுதிப்படுத்திக்கொள்வதுபோல், ஓர் அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதுதான் சுவாமியும் அம்பாளும் மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம்!

சுவாமி சப்பரத்திலும் அம்பாள் சப்பரத்திலும் அலங்காரத் தலைப்பாகை அணிந்துகொண்டு காணப்பட்ட பட்டர்கள், சுவாமியிடமிருந்தும் அம்பாளிடமிருந்தும் தாம்பாளத்தில் வைத்துக் கொண்டுவரப்பட்ட பூமாலைகளைப் பெற்று, சுவாமி மாலையை அம்பாளுக்கும், அம்பாள் மாலையை சுவாமிக்கும் சார்த்தும் அழகுத் திருக்காட்சி அது! இப்படி மூன்று முறை நடைபெற்ற மாலை மாற்றும் வைபவத்தின்போது, பக்தர்கள் எழுப்பிய சந்தோஷ ஆரவாரத்தை வர்ணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. தீபாராதனைக்குப் பின்னர், சுவாமியின் எழிலார்ந்த வடிவழகை தரிசித்தபடி, தான் தவக்கோலம் கொண்டிருந்த கோயிலுக்குக் காந்திமதி அம்மன் எழுந்தருள, சற்று நேரத்துக்கெல்லாம் சுவாமியும் அம்பிகையின் அருகில் எழுந்தருளினார். மறுநாள், அதிகாலையில் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற இருப்பதாகத் தெரிந்துகொண்டோம்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

'முன்னம் அவன் நாமம் கேட்டாள்’ என்ற நாவுக்கரசரின் பாடலுக்கு முன்னோடியாக, சாட்சாத் அந்த உமையவளே இந்த உலகத்தில் காந்திமதியாய் அவதரித்து, சிவபெருமானின் திருநாம மகிமைகளை உலகத்தவர் சொல்லக் கேட்டு, அதன் விளைவாக சிவபெருமானிடத்தே காதல் கொண்டு அவரையே மணந்துகொள்ள வேண்டிக் கடும் தவம் புரியச் சித்தம் கொண்டு, தான் இயற்றும் தவம் பூரண பலனைத் தந்திட, உரிய அறங்களை முறைப்படி செய்து தவம் இருந்து, சிவபெருமானின் தரிசனம் பெற்று அவரையே கல்யாணம் செய்துகொண்ட அம்பிகை, உலகத்தவரின் இல்லற வாழ்க்கையும் தன்னைப் போலவே அன்பும் அறமும் கொண்டதாகத் திகழவேண்டும் என்று எத்தனை அழகாக நமக்குச் செயல்வழியில் கற்பித்துவிட்டாள்!  

நமக்கான வாழ்வியல் நெறிகளை நமக்கு உணர்த்திடவே உலகத்தில் அவதரித்த அன்னையின் திருவடிவம் சந்திரனைப் போன்று ஒளியும் குளிர்ச்சியும் பொருந்தித் திகழ்வதால்தான், அவளுக்குக் காந்திமதி என்ற திருநாமம் கிட்டியதோ என்றே நமக்குத் தோன்றியது. வானத்துச் சந்திரனின் குளிர்ச்சியும் பிரகாசமும் மங்குவதும், மறைவதும் உண்டு. ஆனால், நமக்காக இந்த உலகத்தில் அவதரித்த நம் அன்னை காந்திமதியின் குளிர்ச்சியும் பிரகாசமும் என்றென்றும் மங்குவதும் இல்லை; மறைவதும் இல்லை! அன்னை செயல்வழியில் கற்பித்த அன்பு, அறம் உள்ளிட்ட வாழ்வியல் நெறிகளை நாமும் நம் வாழ்க்கையில் கொண்டு வாழ்ந்தால், நம் வாழ்க்கை மட்டுமின்றி, நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையும் சிறந்து பிரகாசிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

படங்கள்: எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்

சிதம்பரத்தில் ஐப்பசி  பூரம்!

பூரம் அம்பிகையின் நட்சத்திரம் ஆகும். குறிப்பாக ஐப்பசி பூரத்தில் அம்பிகைக்கு நீராட்டு செய்கின்றனர். இந்த நாளில் நீர்நிலைகளில் அம்பிகையை எழுந்தருளச் செய்து திருமுழுக்காட்டுவது வழக்கம்.  இதற்கு ஐப்பசி பூரம் ஆறாட்டு என்று பெயர்.

தில்லையில் கொண்டாடப்படும் பூர விழாவில் திருவிழாவின் நிறைவில் சிவகாமி அம்பிகை பூரத்தன்று இரவில் சிவகங்கையில் தீர்த்தம் அளிக்கிறாள். அன்று கொடி இறக்கப்படுவதற்கு முன்னரும், கொடி இறங்கியபிறகுமாக இரண்டு முறை அம்பிகையின் திருவீதியுலா நடைபெறுகிறது. மறுநாள் காலையில் தவம் இருத்தலும் மாலையில் திருக்கல்யாணமும் சிறப்புற நடைபெறும்.

- சி.அம்பலவாணன், கடலூர்