Published:Updated:

சக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி

ஆரியம் என்பது இனம் அல்ல... வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் இல.கணேசன்

சக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி

ஆரியம் என்பது இனம் அல்ல... வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் இல.கணேசன்

Published:Updated:

ன்மிகம், வரலாறு, அரசியல், சமூகம் என எந்தப் பக்கமிருந்து கேள்விகள் கேட்டாலும், அவை அனைத்துக்கும் ஆழமாகவும் தெளிவாகவும் பதில் வருகிறது இல.கணேசனிடமிருந்து. அந்த பதில்களால் ஈர்க்கப்பட்ட வாசகர்கள், இன்னும் இன்னும் உற்சாகமாகக் கேள்விகளை அடுக்க... ஒரு சத்சங்கம்போல் தொடர்ந்தது கலந்துரையாடல்.

? ஆன்மிகத்துக்கும் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பு பற்றிக் கூறுங்களேன்?  வாசகர் விட்டல் நாராயணனின் கேள்விக்கு ஆர்வத்துடன் பதில் சொன்னார் இல.கணேசன்.

''முதலில், மதம் வேறு ஆன்மிகம் வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மிகம் இல்லாத இலக்கியம், உயிர் இல்லாத உடம்புக்குச் சமம். ஆன்மிகம் இல்லாத எதுவுமே இந்தியாவில் ஒளிராது.  அரசியலில் மதம் ஒருபோதும் கலக்கக்கூடாது. அதேநேரம், ஆன்மிக நாட்டமுள்ள ஒரு தலைவன் இருந்தால்தான், அந்த அரசு நல்லவிதமாகத் திகழும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஒரு மிதி வண்டித் தொழிற்சாலையில் பல்வேறு பாகங்களைத் தனித்தனியாக உற்பத்தி செய்து அவற்றை ஒன்று சேர்க்கிறார்கள். ஆனால், மனித உடம்பு அப்படியல்ல. பிறக்கும்போதே ஒன்றாகப் பிறக்கிறது. பாரத தேசமும் ஒரே நாடாகத்தான் பிறந்தது என்று கருதுகிறேன். உங்கள் அபிப்ராயம் என்ன?’ என்று தமிழறிஞர்கள் பலரிடமும் கேட்டேன். என் கருத்தை அவர்கள் முழுச் சம்மதத்துடன் ஏற்றுக் கொண்டனர். 'பக்தியில்லாத தமிழ் இலக்கியம் வெறும் சக்கை’ என்றும் சொன்னார்கள். கடவுள் மறுப்புக் கொள்கையை மேற்கொண்டவர்களைவிடவும், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்களால்தான் தமிழிலக்கியம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  

சக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி

ஒருமுறை, கம்பன் விழாவில் பேசிய பெண்மணி  - அவரை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பெயரெல்லாம் வேண்டாமே... 'கம்பனை ஆழ்ந்து பார்க்கும்போது, பெரியாரின் தாக்கம் கம்பனிடம் தெரிகிறது’ என்றார். மனசுக்குள் சிரித்துக்கொண்டேன். ஈ.வெ.ரா அவர்கள், கம்பனுக்குப் பின்னால் வந்தவர். அதனால், கம்பனின் தாக்கம் பெரியாரிடம் இருக்கிறது என்று சொல்வதுதானே சரியாக இருக்கும்? சொல்லப்போனால் அதுவும்கூடத் தவறுதான். கம்பனுக்கும் பெரியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

முற்போக்குவாதம் போன்று ஒன்றைப் பேசும் குழுவினர் சிலர் இருக்கிறார்கள். இந்த நாட்டின் பாரம்பரியம், மண்ணின் மகிமை, பண்பாடு, தேசியத்தன்மை இவற்றையெல்லாம் உடைப்பதும் சீர்குலைப்பதும்தான் அவர்களின் நோக்கம். மேடையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்று இளைஞர்கள் சிலரும் அங்கே போய்ச் சிக்கிக்கொள்கிறார்கள். அதைக் கண்டு நான் வருந்தினேன். ஆனால், 'இன்றைய இளைஞர்களில் பலர், உண்மையிலேயே நமது பண்பாடு, பாரம்பரியம் இவற்றையெல்லாம் மதித்து, அவற்றைப் போற்றும்விதமாக வளர்ந்துள்ளார்கள்; வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மேடை கிடைப்பதுதான் குதிரைக்கொம்பாக இருக்கிறது. அவர்களுக்கென்று ஒரு மேடை உருவாக்கித் தந்தால், நிச்சயம் அவர்கள் நல்ல கருத்துக்களை எடுத்துரைப்பார்கள்’ என்று என் நட்பு வட்டத்தில் உள்ள பலரும் என்னிடம் சொன்னார்கள்.

நான் அடிப்படையில் தேசியவாதி. நமது தேசியம் என்பது பண்பாட்டின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது. ஆனால், பண்பாட்டைச் சீர்குலைக்கும் விதமாக சில அமைப்புகள் செயல்படுகின்றன எனும்போது, அதற்கு மாற்றாக ஓர் அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். ஆனால், நான் அரசியலில் இருப்பதால், நான் உருவாக்கும் அமைப்புக்கு அரசியல் முத்திரை விழுந்துவிடுமே என்று தயங்கினேன். 'உங்களால் அரசியலைக் கலக்காமல் நிச்சயம் நல்லவிதமாக அந்த அமைப்பை நடத்த முடியும்’ என்று அவர்கள் நம்பிக்கையும் ஊக்கமும் அளித்தார்கள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் 'பொற்றாமரை’ ''.

இல.கணேசன் கூறி முடித்ததும், வாசகர் கிருஷ்ணா கேட்டார்...

? பொற்றாமரை  அருமையான பெயர். இந்தப் பெயரைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

''தாமரை என்பது அறிவு, ஞானத்தைக் குறிக்கும். உலகப் பொதுமறையான திருக்குறள் அரங்கேறியதும் மதுரையில் இருக்கும் பொற்றாமரையில்தானே? ஆக, இந்தப் பெயர் ஆன்மிகத்துக்கும் தொடர்புடையது. எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில், ஆரம்பத்தில் கூட்டத்துக்கு 26 பேர் மட்டுமே வந்தார்கள். அவர்களில் கோவி.மணிசேகரன், கௌதம நீலாம்பரன் என ஒரு பத்து பேர் மிக முக்கியமானவர்கள். கா.சோ.முத்துக் கண்ணன் அவர்கள்தான் அமைப்பாளர்.

இன்னும் சில மாதங்களில் பொற்றாமரை அமைப்புக்கு வயசு பத்து. 'தேசிய சிந்தனை உள்ள இலக்கிய ஆர்வலர்கள் மட்டும் வருக’ என்றுதான் அழைப்பிதழிலேயே வெளியிடுவோம். தேசியவாதத்துக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர்களைப் பேச அழைப்பதே இல்லை. இலக்கியத்தில் சிறந்தவர்களுக்கு விருது கொடுப்பது, பாராட்டுவது, பேச வாய்ப்பளிப்பது என அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறோம்.''

சக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி

? இந்த அமைப்பைத் துவக்கியதன் நோக்கம் நிறைவேறிவிட்டதாக உணர்கிறீர்களா?  இது வாசகர் ரமணியின் கேள்வி.

''இதுவரை இருநூறுக்கும் மேற்பட்டவர்கள், பொற்றாமரையின் மேடைக்கு வந்திருக் கிறார்கள். கலை இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள் மாதந்தோறும் நடை பெறுகின்றன. பொற்றாமரை இப்போது ஓர் அங்கீகரிக்கப் பட்ட அமைப்பாகிவிட்டது. சென்னையைத் தவிர, தமிழகத்தின் பல ஊர்களிலும் கூட்டங்கள் நடத்த வேண்டும் எனப் பலரும் விரும்புகின் றனர். மதுரை, சேலம், பாண்டிச்சேரி எனப் பல இடங்களிலும் கூட்டங்கள் நடந்தபோது, இலக்கிய ஆர்வலர் களிடம் இதற்கு எக்கச்சக்க வரவேற்பு!

5.30 மணிக்குக் கூட்டத்தை ஆரம்பித்து, சரியாக 8:30 மணிக் கெல்லாம் முடித்துவிடுவோம். ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என முன்பே திட்டமிட்டு, கச்சிதமாகச் செயல்படுவதால், மக்கள் மத்தியில் பொற்றாமரை அமைப்புக்கும் நல்ல வரவேற்பு.

ஆண்டுவிழாவின்போது, ஆன்மிகத் துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடந்த சொற்பொழிவில், வேளுக்குடி கிருஷ்ணன் வைணவத் தமிழ் பற்றியும், இலங்கை ஜெயராஜ் சைவத் தமிழ் பற்றியும் பேசினார்கள். ஆன்மிகம், பக்தி, இலக்கியம் இவற்றின் சங்கமம்தான் பொற்றாமரை! ஆக, எங்கள் அமைப்பு நன்றாக இயங்கி வருகிறது. நோக்கங்களும் நிறைவேறி வருகின்றன. அதேநேரம், இன்னும் செய்ய வேண்டிய  பணிகளும் நிறைய உள்ளன.''

? இந்தியாவை கலாசாரத்தின் மூலம் ஒருங்கிணைப்பது சாத்தியமா..?  வாசகர் காந்தி, கேள்வியை முடிப்பதற்கு முன்பே பளீரென பதில் வருகிறது இல.கணேசனிடமிருந்து.

''உங்கள் கேள்வியின் அடிப்படை யில் பெரிய தவறு இருக்கிறது. நாம் புதிதாக அப்படி ஒருங்கிணைக்க வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் ஏற்கெனவே கலாசார அடிப்படையில்தான் ஒருங்கிணைக் கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர், கேரளம், தமிழகம் எனப் பல மாநிலங்களில் வாழ்பவர்களும் கலாசாரத்தாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்கப் பட்டு, ஒற்றுமை யுடன் திகழ்கிறார்கள்.

அரிஸ்டாட்டில் அலெக்ஸாண் டரிடம், 'மற்ற நாடுகளைப்போல பாரதத்தை நினைத்துவிடாதே! மற்ற தேசங்களில் சிம்மாசனத்தைக் கைப்பற்றி விட்டால், நாட்டையே கைப்பற்றிவிட்டதாக அர்த்தம். ஆனால், பாரதத்தில் சிம்மாசனம் என்பது ஒரு பகுதி; அவ்வளவுதான்! புல்லாங்குழல், பகவத்கீதை, மகாபாரதம், ராமாயணச் சுவடிகள், கங்கை நீர் கொண்ட சொம்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, இமயமலையில் தவமிருக்கும் யோகி ஒருவரையும் அழைத்து வா!’ என்று அறிவுறுத்தியதுடன், அதன் பின்னே உள்ள தத்துவத்தையும் விளக்கினாராம்.

அடுத்து, மொகலாயர்களின் படையெடுப்பைக் கவனித்துப் பாருங்கள். எதிர்பார்த்த சிம்மாசனம் கிடைத்தபோதிலும், கோயில்களை ஏன் இடித்தார்கள்? பெண்களை எதற்காக மானபங்கப்படுத்தினார்கள்? துறவிகளை எதன் பொருட்டுத் துன்புறுத்தினார்கள்? இந்தத் தேசமே பண்பாடு, கலாசாரம் இவற்றால் இறுகப் பின்னிப் பிணைந்திருந்தது என்பதால்தானே?

கோபத்தின் உச்சியில் மதுரையை எரிக்கும் போதுகூட, 'அந்தணர், அறவோர், ஆவினம், பெண்டிர், ஆலயம் தவிர்த்து மற்றவை அனைத்தும் தீப்பற்றி எரியட்டும்’ என்கிறாள் கண்ணகி. பிற்காலத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியபோது, இதன் ஒற்றுமையைக் குலைக்க வேண்டுமானால், இதன் பண்பாட்டைச் சீர்குலைக்க வேண்டும் என அதற்கான முயற்சியில் இறங்கினார்கள். அதன் விளைவுதான், அவர்கள் கொண்டு வந்த மெக்காலே கல்வி முறை. அது தரும் விளைவுகளை இன்றைக்கும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.''

சக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி

? பண்பாடு என்பதற்கு நீங்கள் சொல்லும் வரையறை என்ன?  என்று கேட்டார் வாசகர் டால்பின் சந்தானம்.

'' 'அடுத்த நாட்டைப் பார்த்து காப்பி அடிக்காதீர்கள். ஆண்டவன் ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு விதமான வினாத் தாள்களைக் கொடுத்திருக்கிறார்’ என்றார் ரவீந்திரநாத் தாகூர். பரந்து விரிந்த நமது பாரத தேசத்துக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. மற்ற நாடுகளுக்கெல்லாம் இல்லாத ஒரு விசேஷத்தன்மை இருக்கிறது. 'இது தொன்மையானது. எப்போது பிறந்தது என்பதைக் கூற இயலாது’ என்கிறார் பாரதி. 'சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா...’ என்ற பாடலில், கிரேக்கம் முதலான நாகரிகங்கள் அழிந்தபிறகும்கூட, இந்துஸ்தான் அழியாமல் இருக்கிறது’ என்று ஒரு வரி உண்டு. இதைப் பாடியவர் முகம்மது இக்பால்.

நம் நாட்டுக்கே உண்டான அந்தத் தனித்தன்மையை, பண்பாட்டை நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் நாட்டுக்கே உண்டான பண்பாட்டுத் தத்துவம். ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு, பண்பாட்டை ஒட்டியே உருவாக்கப்பட்டிருக்கிறது.

'அதிதி தேவோ பவ’ அதாவது, விருந்தினர் களையும், யாரென்றே தெரியாதவர்களையும்கூட உபசரித்து உணவு வழங்கவேண்டும் என்பது நம் தேசத்துப் பண்பாட்டின் மிகப் பெரிய அடையாளம். பெறுபவரை உயர்ந்தவராகக் கொண்டு, கொடுப்பவர் பணிந்து வழங்க வேண்டும் எனும் நடைமுறையும் இங்கேதான் இருக்கிறது.

தாயை தெய்வமாகவும், நதி, தேசம், மொழி ஆகியவற்றை தாய்க்கு நிகராகவும் போற்றுகிற பண்பாடும் நம் தேசத்தில்தான் உள்ளது. பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக்கொள்பவர்கள்கூட, காவிரி நதியை காவிரித்தாய் என்று சொல்லும் வழக்கம் நம் நாட்டில் மட்டுமே உண்டு. வேலைக்கார அம்மா, பால்கார அம்மா, டீச்சரம்மா என்றுதானே அனைவரையும் தாய்க்கு நிகராகச் சொல்கிறோம்!

யுத்தத்தில்கூட, நெறிமுறைகளைக் கையாண்ட தேசம் இது. 'இன்று போய், நாளை வா’ என்று போர்க்களத்தில் ராமபிரான் சொல்கிறார். வேறு எந்த நாட்டில் இப்படிச் சொல்ல முடியும்?'

அடுத்த கேள்வியை வாசகி சரளா முன்வைத்தார்... ''பரிகாரங்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா, சார்?''

''நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. ஆனால், அவர்கள் சொல்லிச் சென்றதை முழுமையாக அறிந்து உணரும் புத்திதான் நமக்கு இல்லை. கமலாத்மானந்தர் எழுதிய ஆன்மிக விளக்கங்கள், ஏழு தொகுதிகள் கொண்ட புத்தகத்தைப் படித்தேன். அதில், நம் பல சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.  

ஒருமுறை, 'பிளானடோரியம்’ எனப்படும் விண்மீன் விளக்கக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே, ஒரு நட்சத்திரக் கூட்டத்தைக் காண்பித்து, 'மீன் வடிவில் இந்த நட்சத்திரக் கூட்டம் இருப்பதால், இதை மீன ராசி என்றே அறிவித் தார்கள் முன்னோர்கள்’ என்று தெரிவித்தனர். இப்படி ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரக் கூட்டம் காட்டி விளக்கினார்கள். விஞ்ஞானம் வளர்ந்திருக்கிற நிலையில் இன்றைக்கு என்ன வேண்டுமானாலும் கண்டுபிடிக்க முடியும். ஆனால், எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்திலேயே இவற்றைத் துல்லியமாகக் கணித்திருக்கிறார்கள் என்றால், அவர்களின் மேதைமையை என்னவென்று புகழ்வது? எனவே, பக்தியையும் வழிபாட்டையும் பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்வதே உத்தமம்.

சக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி

'வராஹமிஹிரர்’ எனும் அறிஞர், மன்னர் ஒருவரின் மகனது ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, அவன் 14வது வயதில், சித்திரை மாத பௌர்ணமியில், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, மாலையில் பன்றியால் இறப்பான் என்று கணித்துச் சொன்னார். மன்னன் என்ன செய்தான் தெரியுமா? அரண்மனை மேல்தளத்தில் மகனை மிக்க பாதுகாப்புடன் தங்கவைத்தான். ஆனாலும், வராஹமிஹிரர் குறிப்பிட்ட நேரத்தில் பலத்த காற்று வீச, அதனால் அங்கு நடப்பட்டிருந்த பன்றிக்கொடி முறிந்து விழுந்து, அதன் கூர்முனை தாக்கி மன்னன் மகன் மரணத்தைத் தழுவினான். துக்கத்தைக் கடந்தும் வியந்து போனான் மன்னன். ஜோதிட ஞானிக்கு வராஹமிஹிரர் என்று பட்டம் தந்து கெளரவித்தான்.

ஆக, வழிபாடு, பூஜை, பரிகாரம் என்பதெல்லாம் ஒரு கணக்கைக் கொண்டு திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்று நம்பிக்கை மிளிரச் சொன்னார் இல.கணேசன்.  

''பிரமாண்டமான விநாயகர் சிலைகள்... சாலையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஊர்வலங்கள்... நமக்கு இது தேவையா? தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''  இது வாசகர் விட்டல் நாராயணனின் கேள்வி.  

''தமிழகத்தில், விநாயக சதுர்த்தியில் வீட்டுக் குள் மட்டுமே வழிபடப்பட்டு வந்த விநாயகரை, வீதிகளுக்கும் கொண்டு வந்து, வழிபட வைத்த பெருமை, ராமகோபாலனையே சாரும்!

மொகலாயர்களின் படையெடுப்பும் தாக்குதலும் தீவிரமாக இருந்த காலகட்டம் அது. வித்யாரண்யர்  என்ற துறவி தனது மடத்தை விட்டு வெளியே வந்து, இரண்டு இளைஞர்களுக்கு வாள்போர், வில் வித்தை என எல்லாவிதமான போர் முறைகளையும் கற்றுத் தந்து, 'முதலில் நமது தேசத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்’ என்றார். அந்த இளைஞர்கள் ஹரிஹரர், புக்கர். அவர்கள் ஸ்தாபித்ததுதான் விஜயநகரப் பேரரசு. அவர்களின் வழிவந்தவரே கிருஷ்ணதேவராயர்.

'இந்த நாட்டுக்கு எது தர்மம்?’ என்று கேட்டபோது, 'அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசத்துக்கு தர்மம் என்பது ஏது? விடுதலை அடைவதுதான் முதல் தர்மம்’ என்றார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

மகாத்மா காந்தி தனது பிரசங்கங்களில் ஆரம்பத்தில் 'வைஷ்ணவோ ஜனதோ...’ பாடி, பிரார்த்தனை செய்த பிறகே, தேச பக்தி குறித்துப் பேசத் தொடங்குவார். திலகர், விநாயகர் ஊர்வலத்தை முன்னெடுத்துதான் தேச விடுதலைப் பிரசாரத்தை மேற்கொண்டார். இவையெல்லாம் சரி என்று நினைக்கிறீர்களா, தவறு என்று நினைக்கிறீர்களா? இப்போதைய விநாயகர் ஊர்வலமும் அப்படித்தான்! மக்களை ஒருங்கிணைக்கும் இதில் இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள் என்பது கூடுதல் சந்தோஷம்!' என மலர்ச்சியுடன் தெரிவித்தார் இல.கணேசன்.

சக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி

ஆரியம் என்றால் என்ன?  வாசகர் கிருஷ்ணாவின் இந்தக் கேள்விக்கு, ஆர்வத்துடன் பதிலளித்தார் இல.கணேசன்.

''ஆரியம் என்பது ஓர் இனத்தைக் குறிப்பதல்ல; குணத்தைக் குறிப்பது! ராமபிரானைப் பார்த்து, 'ஆரியா’ என்று அழைக்கிறாள் சீதாதேவி. ஆனால், ராமனோ க்ஷத்திரியன். அவன் ராஜா அல்லவா? மண்டோதரி, ராவணனைப் பார்த்து ஆரியா என அழைக்கிறாள். மாண்புமிகு, மானமிகு, மேதகு என அழைப்பதைப் போல, அப்போது 'ஆர்ய’ என்ற சொல், வழக்கில் இருந்திருக்கிறது. திருவள்ளுவர் தமிழகத்தில் பிறந்தவர். அனைவராலும் உயர்ந்தவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவரை 'ஆர்யர்’ என்றே அழைப்பேன்.

பகவத்கீதையில் அர்ஜுனன் போர்க்களத்தில் தன்னால் போரிட முடியாது என்று சொல்லி வில்லைக் கீழே போட்டுவிடும்போது, 'ஓர் ஆர்யனுக்குப் பொருத்தம் இல்லாத செயலைச் செய்கிறாயே’ என்கிறார் கிருஷ்ணர். ஆக, உயர்ந்தவர்கள் எல்லோருமே ஆர்யர்தாம். அந்த வகையில் பாரதி, வ.உ.சி., அம்பேத்கர் எல்லோருமே ஆர்யர்கள்தான்!''

? 'சங்கப்பலகை’ என்ற அமைப்பையும் நடத்தி வருகிறீர்கள். அது குறித்து விளக்குங்களேன்..?  இது, வாசகர் காந்தியின் கேள்வி.

''இமயத்தைப் போற்றுகிறோம். வேள்வியைப் போற்றுகிறோம். இந்திரனை, மகாபாரதத்தை, ராமாயணத்தை, பசுவை இப்படி எல்லாவற்றையும் நமது பழம்பாடல்கள் போற்றியுள்ளன.ஆனால், சங்க இலக்கியத்தைப் பற்றிப் பேசும் போது, இவற்றைப் பலரும் குறிப்பிட்டுச் சொல்வதே இல்லை. இதற்காகக் கொண்டு வரப் பட்டதே தேசிய சங்கப்பலகை அமைப்பு! தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருக்குறள், பத்துப் பாட்டு என இலக்கியங்களை ஆய்வு செய்கிறோம். உங்களுக்கு ஒன்று தெரியுமா... கோவலன், அம்மி மிதித்து அருந்ததி பார்த்துத் திருமணம் செய்துகொண்டான் என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலும் இளைஞர்களுக்கே முக்கியத்துவம். அவர்களுக்குப் பேச்சுப் பயிலரங்கம் உட்பட பல நல்ல விஷயங்களைக் கற்றுத் தருகிறோம். அந்த அமைப்புக்கு 'மண் வாசனை’ என்று பெயர்' என்றார் இல.கணேசன்.

சக்தி சங்கமம் - 2 - சென்ற இதழ் தொடர்ச்சி

''உங்களை மிகவும் கவர்ந்த தமிழ் இலக்கியங்கள் என்னென்ன?''  இது வாசகி சரளாவின் கேள்வி.

''பட்டியலிடுகிற அளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் அத்தனை பரிச்சயமில்லை எனக்கு. கம்ப ராமாயணமும், திருக்குறளும் நான் கொண்டாடுகிற இலக்கியங்கள். தற்போது, சிலப்பதிகாரத்திலும் ராமாயணத்திலும் உள்ள ஆட்சிமுறை, அரசியல் நெறிமுறை ஆகிய விளக்கங்களைப் படிக்கப் படிக்க பிரமிப்பாக இருக்கிறது. 'கம்ப ராமாயணத்தில் அரசியல் நெறிமுறைகள்’ என்ற தலைப்பில் சமீபத்தில்கூட டெல்லி தமிழ்ச்சங்கத்தில் பேசினேன். பல வருடங்களுக்கு முன்பே, 'திருக்குறள் என்பது ஒரு வாழ்வியல் நூல்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் திருக்குறள் மாநாட்டில்  பேசியிருக்கிறேன். பாரதியின் படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தவை! தற்கால இலக்கியத்தில் ஜெயகாந்தன் நூல்களைப் படித்திருக்கிறேன்.''

''தமிழில் மொழிமாற்றம் செய்யவேண்டிய இலக்கிய நூல்களாக எவற்றையெல்லாம் சொல்வீர்கள், ஐயா?''  விட்டல் நாராயணன் கேட்டார்.

''கடவுளின் அருள் பெற்ற மகா கவிஞர், காளிதாசன். அவர் இயற்றிய சாகுந்தலம், மேகதூதம் முதலானவை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அதேநேரம், தமிழிலேயே மிகச் சிறந்த இலக்கியங்கள் பல உள்ளன. மகாகவி பாரதியையே இன்னும் நாம் தேசிய அளவில் கொண்டு செல்லவில்லை என்பது வேதனையான ஒன்று. கம்ப ராமாயணத்தில் உள்ள சொல்லாடல்கள், பிற மொழிக்குச் செல்லும்போதுதான், நம் தமிழின் தொன்மையும் இனிமையும் உலகுக்குத் தெரியவரும். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகியவையும் மொழிபெயர்க்கப்பட வேண்டியவையே!''

அடுத்த கேள்வியை பரமேஸ்வரன் கேட்டார்... ''இப்போது நம் தேசத்துக்கான அவசிய தேவை எது என்று நினைக்கிறீர்கள்?''

''நூறு வருடங்களுக்கு முன்புகூட வீடு, குருகுலம், கோயில் என அருமையான கட்டமைப்பு இங்கே இருந்திருக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். வீட்டில், பெரியவர்களின் அரவணைப்பிலும் அன்பிலும் குழந்தைகள் வளர்ந்தார்கள். ஆனால், இன்றைக்குப் பெற்றோர் இரண்டுபேருமே வேலைக்குப் போகிற நிலை.

அடுத்து, குருகுலம்! ஐந்து முதல் பதினைந்து வயது வரை, குருகுலத்தில் தங்கிப் படித்து, கல்வியைக் கடந்து பல பழக்க வழக்கங்களையும் நீதிநெறிகளையும் கற்றுக் கொண்டார்கள். நீதி, தர்மம் என்பதெல்லாம் போய், இன்றைக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும், கை நிறையச் சம்பளம் வழங்கும் உயர்ந்த உத்தியோகம் வேண்டும் என்பதே லட்சியமாகி விட்டது. கோயில்கள் ஆன்மிகத்தைப் பரப்பி, மக்களை நல்வழிப்படுத்தி வந்தன. கலைகள் வளர்க்கப்பட்டு, பிரார்த்தனைக் கூடங்களாக இயங்கி வந்த ஆலயங்கள், அரசுக்குப் பணம் ஈட்டித் தரும் பிக்னிக் ஸ்பாட்டுகளாக மாறிவிட்டன. இந்த மூன்றும் சரியாக இருக்கவேண்டும் என்பது மிக மிக அவசியம்!''

முத்தாய்ப்பாக இல.கணேசன் சொல்லி முடிக்க, ஒரு பழுத்த அரசியல்வாதிக்குள் ஓர் உயர்ந்த ஆன்மிகவாதியை அடையாளம் கண்டுகொண்ட பூரிப்புடன் விடைபெற்றார்கள் வாசகர்கள்.  

- தொகுப்பு: பாரதி மித்ரன், படங்கள்: க்ளிக் ரவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism