Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திரத்தின் பாதம் (சந்திரன்) ஆகியவற்றில் ஒன்றில் இணைந்த சிம்ம ராசியில், புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் காரியத்தில் கண்ணாக இருப்பாள்.உருவத்திலும் செயல்பாட்டிலும் ஆணுக்கு உகந்த நடைமுறைகள் அவளிடம் தென்படும்.

பிறக்கும் வேளை (லக்னம்), நட்சத்திரபாதம் இணைந்த ராசி இவை இரண்டில் ஒன்று இருந்தால் போதும். புதன் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், தான் ஏற்றிருக்கும் காரியத்தில் ஏமாற மாட்டாள். இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு ராசியில் இணையும்போது, இரண்டில் எது வலுப்பெற்றிருக்குமோ அதன் வழியில் பலன் வெளிப்படும். லக்னம், சந்திரன் ஆகியவற்றின் பலத்தை ஆராய்ந்து, வலுவுற்றதை எடுத்துக்கொண்டு, பயன்பாட்டை இறுதி செய்யவேண்டும் (பலாபல விகல்பேன...).

வெப்பத்தின் தாக்கம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லக்னத்தின் காரகன் சூரியன்; மனதின் காரகன் சந்திரன். சூரியன் வெப்பக் கிரகம்; சந்திரன் தட்பக் கிரகம். இந்த இரண்டின் இணைப்பானது செயல்பாட்டை தோற்றுவிக்கும். சூரியனின் வெப்பம் சந்திரனில் இணையும்போது, தட்பத்தில் உறங்கிக்கிடந்த எண்ணமானது (சிந்தனை) செயல்பட ஆரம்பித்துவிடும். 'சந்திரனை தேய்வதும் வளர்வதுமாக மாறி மாறி தென்படவைப்பது, சூரியனின் வெப்பக் கிரணங்களின் பரவுதலே’ என்கிறது ஜோதிடம் (ஸலிலமயே சசஸ ரவேர்த்திதய:). மாறுபட்ட சிந்தனைக்கு ஆதாரம் வெப்பத்தின் தாக்கம். அசையாத பொருளை அசைக்க வைப்பது வெப்பம். மனதில் பதிந்த எண்ணம் சிந்தனையாக உருவாகவும், அதன் வழியில் செயல் பாட்டில் இணையவும் வெப்பம் ஒத்துழைக்கும். சூரியன், ஒளிப் பிழம்பாகத் தென்படும் கிரகம். பரம்பொருளில் இருந்து ஒளிபெற்று, தன்னை ஒளிப்பிழம்பாக மாற்றிக் கொண்டிருக்கிறான் சூரியன் என்கிறது வேதம்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஒளி பெறும் கிரகங்கள்!

சூரியன், சந்திரன், நட்சத்திரம், மின்னல், அக்னி (நெருப்பு) ஆகிய அத்தனையும் பரம்பொருளின் ஒளி பட்டு ஒளிப்பிழம்பாக தோற்றமளிக்கிறார்கள் (நதத்ர சூர்யோபாதி நசந்திரதாரகம்...). சூரியனின் கிரணம் பட்ட கண்ணாடி நமக்கு ஒளி தருவது உண்டு. கண்ணாடியால் தன்னிச்சையாக ஒளிர இயலாது. சூரியனிடம் இருந்து சந்திரன் ஒளி பெறுகிறான். நட்சத்திரங்களும் சூரியனிடம் இருந்து ஒளி பெறுகின்றன. ஆக, பரம்பொருளின் ஒளி நேராகவோ, பரம்பரையாகவோ இவற்றில் பரவியிருப்பதால், இவை அத்தனையும் செயல்படும் தகுதியைப் பெற்று விளங்குகின்றன.

'ஜோதி’ என்ற சொல் நட்சத்திரங்களைக் குறிக்கும் என்கிறது உபநிடதம் (ஜ்யோதிரிதிநஷத்ரேஷு). சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்றது போல், மற்ற கிரகங்களும் ஒளி பெற்றுதான் தங்களை அறிமுகம் செய்துகொள்கின்றன. சூரிய ஒளியால் உயிரோட்டம் ஏற்பட்டு, மற்ற கிரகங்கள் செயல்படும் தகுதியைப் பெறுகின்றன. அவற்றுக்குச் சந்திரனின் குளிர்ந்த ஒளியும், சூரியனின் வெப்ப ஒளியும்... இரண்டும் சேர்ந்து பல சிந்தனை மாற்றத்தை உருவாக்கும் தகுதியை அளித்துவிடுகின்றன. பலவிதமான சிந்தனைகளை உருவாக்குவதிலும், அவற்றின் நடைமுறை யில் மாறுபட்ட பலனை உணரவைப்பதிலும், வெப்பதட்ப கிரகங்களின் விகிதாசார கலவைக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆயுர்வேதத்தின் விளக்கம்

வெப்பம் (பித்தம்), தட்பம் (கபம்) ஆகியவற்றின் விகிதாசார கலவையில் ஆரோக்கியம் நிலைத்து நிற்கிறது. அவற்றின் மாறுபாடு பிணியைத் தோற்றுவிக்கிறது என்கிறது ஆயுர்வேதம்.உடலை சுகாதாரமாக வைப்பதற்கு, வெப்பதட்பமும் அதனுடன்  இணைந்த காற்றும்தான் (வாதம்) அடிப்படைக் காரணம் என்றும் சொல்லும் (ஸமதோஷ:ஸமாக்னி:ச...). காற்று வெப்பத்துடன் இணையும்போது தட்பத்தை எதிர்க்கும்; தட்பத்துடன் இணையும்போது வெப்பத்தை எதிர்க்கும். அதற்கு, தனியாக செயல்படும் தகுதி... வெப்பமும் தட்பமும் பலமிழந்த நிலையில் மட்டுமே இருக்கும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

வாத நோயானது மாறாப்பிணியாக மாறி, அதில் சிக்கித் தவிப்பவர்களிடத்தில், பித்த கபங்கள் (அதாவது வெப்பமும் தட்பமும்) வாதத்தின் தாக்கத்தால் முடங்கிவிட்டன என்று பொருள். வெப்பத்தின் தாக்கத்தில் வாதம் வலுவிழந்துவிடும். தட்பத்தின் தாக்கத்தில் வாதம் நீரை உறிஞ்ச முடியாமல் படுத்துவிடும் என்று ஆயுர்வேதம் விளக்கும். கொழுகொழுவென்று வளர வைப்பதும், சுறுசுறுப்போடு இயங்கவைப்பதும் உடலில் இணைந்திருக்கும் வெப்பதட்பங்கள்தான் என்பது கண்கூடு.

சூரியனும் சந்திரனும்

பன்னிரண்டு ராசிகளிலும் சரிசமமாக வெப்பதட்பங்களை இணைத்துவைத்துள்ளது ஜோதிடம். ஒற்றைப்படை ராசி, இரட்டைப்படை ராசி என்ற பாகுபாட்டில் சூரியனும், சந்திரனும் சரிபாதி பங்கு பெறுகிறார்கள். ராசிச் சக்கரத்தின் 360 பாகைகளில், சூரியனும் சந்திரனும் முப்பது முப்பது பாகைகளை அடுத்தடுத்து பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ராசிகளின் அளவுகோலில் சரிபாதியாகப் பிரிக்கவேண்டி வந்தது. அது, பலன் சொல்வதில் ஒத்துழைப்பு அளிப்பதால் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

மேஷத்தில் 2வது ஹோரையில் சந்திரன் இருப்பான். ரிஷபத்தில் முதல் ஹோரை சந்திரன். ஆக, சந்திரன் 30 பாகைகளில் பரவியிருப்பான். ரிஷபத்தில் 2வது ஹோரையில் சூரியன். மிதுனத் தில் முதல் ஹோரையும் சூரியன். இப்படி, முப்பதை நிறைவு செய்வான். த்ரேக்காணம், சதுர்த்தாம்சம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம். த்ரிம்சாம்சம் ஆகிய அத்தனையும், மற்ற கிரகங்களின் தொடர்பானது சூரிய சந்திரர்களோடு இணைப்பை இறுதிசெய்ய ஏற்பட்டது. சூரிய சந்திரர்களின் இணைப்பு அத்தனை கிரகங்களுக்கும் இருக்கவேண்டும். அவற்றின் தொடர்பில் வலுப்பெற்று, தனது செயல் முழுமையாக்க இயலும் என்கிறது ஜோதிடம்.

சூரியன் தனது பயணப்பாதையின் மேலும் கீழுமாக இருக்கும் மும்மூன்று கிரகங்களை (கீழே சந்திரன், புதன், சுக்கிரன்) (மேலே செவ்வாய், குரு, சனி) தனது கீழ் நோக்கிய கிரணங்களாலும், மேல் நோக்கிய கிரணங்களாலும் இயங்கவைக்கிறான் என்கிறது வேதம். புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி அகிய அத்தனையும் இயங்க சூரியசந்திரர்களின் (வெட்பதட்பத்தின்) தொடர்பு தேவைப்படுகிறது.

ஆன்மாவும் மனதும்

வெப்பத்தின் தாக்கமானது, தட்பத்தையும் வெப்ப இயல்பை ஏற்கவைக்கும். கொதிக்கும் வெந்நீர் தொடுபுலனை பொள்ள வைக்கும். பனியின் தாக்கம், வெப்பத்தை செயலிழக்கச் செய்யும். சூரிய சந்திரர்களின் பங்குதான் பல கிரகங்களின் இணைப்பில் இன்பதுன்பத்தை உணரவைப்பதில் அடிப்படைக் காரணமாக மாறுகிறது என்கிறது ஜோதிடம் (ப்ரத்யஷம் ஜ்யோதிஷம் சாஸ்திரம் சந்தரார்க்கென யத்ர ஸாஷிணௌ).

நம்மில் உதயமாகும் எண்ணங்களுக்கு ஆன்மாவும் மனதும்தான் (சூரியனும், சந்திரனும்) காரணம் என்கிறது சாஸ்திரம். பரம்பரை காரணங்கள் மாறுபட்டு இருந்தாலும், அடிப்படைக் காரணம் அவர்கள் இருவரும்தான் என்பதில் சாஸ்திரத்துக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆகையால்தான் லக்னம், சந்திரன் இவற்றில் எது வலுவாக இருக்கிறதோ, அதன் வழியில் பலன் உருவாகும் என்று விளக்குகிறது ஜோதிடம். அவற்றின் வலுவை ஆராயும் திறன் பெற்றவர்கள், பலன் சொல்வதில் ஏமாறமாட்டார்கள். ராசியைப் பலவாறாகப் பிரித்து, எல்லா கிரகங்களுக்கும் அதில் அவர்கள் பங்கை உறுதி செய்து, அத்தனை கிரகங்களுக்கும் ஹோரை வாயிலாக சூரியசந்திரர்களின் இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஜோதிடம்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

செயல்படுபவன் சந்திரன் (மனம்). செயல்படவைப்பவன் சூரியன் (ஆன்மா). சந்திரன் வலுப்பெற்றால், அவன் தொடர்பில் பலனை இறுதி செய்வான். சந்திரன் வலுவிழந்தால், சூரியனின் தூண்டுதலில் செயலில் இறங்கிவிடுவான். சந்திரன் வலுப் பெற்று இருந்தால், தன்னிச்சையாக செயல்படும் தகுதி வலுத்திருக்கும் என்பதால், அவனது செயல்பாட்டில் பலன் சொல்ல வேண்டும். லக்னம் வலுப்பெற்று இருந்தால், அதன் தூண்டுதலில் பலனை இறுதி செய்ய வேண்டும். வலுப்பெற்ற கிரகத்தின் (லக்னம் அதன் காரகன் சூரியன்; மனம் அதன் காரகன் சந்திரன்) பலனை இறுதி செய்வதில் நம்பிக்கை இருக்கும் என்ற கோணத்தில், வலுப் பெற்றது எதுவோ அது அதன் பலனை அளிக்கக் காரணம் ஆகும் என்று விளக்கியது ஜோதிடம்.

புதன் த்ரிம்சாம்கம்

சிம்ம ராசியில் 18 பாகைகளுக்கு மேல் 7 பாகைகள் புதனின் த்ரிம்சாம்சகம். ராசி, ஹோரை, த்ரேக்காணம் ஆகியவற்றில் மாறுபட்ட கிரகங்களின் இணைப்பு இருந்தாலும், புதன் த்ரிம்சாம்சகம் வலுப்பெற்று, அதில் பிறந்தவளை... காரியம் சாதிப்பதில் வல்லவளாகவும், ஆண்மையின் தோற்றத்தை உடையவளாகவும் உருப்பெற ஒத்துழைக்கிறது. சிந்தனை வளமும் அவளிடம் செயல்பட்டு வெற்றியைத் தழுவவும், சுறுசுறுப்பாக இயங்கவும் ஒத்துழைக்கும். ஆண்மையின் செயல்பாடு தென்படும். எதிர்ப்பு, முட்டுக்கட்டை ஆகியவற்றைச் சந்தித்து மனம் சுணக்கமுறாமல் செயல்பட ஆண்மை வேண்டும். எடுத்த காரியம் வெற்றியை எட்டும் வரையிலும், கண்காணிப்புடன் செயல்பட விவேகம் வேண்டும். அதை நிலைநாட்ட புதனின் த்ரிம்சாம்சகம் பயன்படுகிறது. பகுத்தறிவோடு காரியமாற்றும் கண்காணிப்பு வெற்றிக்கு வழிகோலும். எதிர்ப்பை எதிர்கொள்ள ஆண்மை வேண்டும். இரண்டும் ஒருங்கே இருப்பவளாக உருவாக்குகிறது புதன் த்ரிம்சாம்சகம்.

ஆராய்ந்து செயல்படும் அறிவை வளர்ப்பவன் புதன். துன்பத்தில் இருந்து விடுபட்டு இன்பம் சேர விவேகத்தைப் பயன்படுத்தும் தகுதியை அளிப்பவன் புதன். புதன் தட்பக் கிரகமானாலும், அதோடு இணைந்தவனின் இயல்பை ஏற்பவனாக ஜோதிடம் சித்திரிக்கும். வெப்பக் கிரகத்துடன் இணைந்தால், அதன் தாக்கத்தில் சிக்கி, அதன் வழியில் சிந்தனை மாற்றத்தை அடைந்து, ஆபத்தில் இருந்து வெளிவரும் தகுதியை அளிப்பான். சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்காமல், சமயோசித சிந்தனையால் வெளிவர உதவுவான்.

புக்குண்டன் கதை...

சந்தர்ப்ப சூழ்நிலையில், குற்றம் புரியாத ஒருவன் குற்றவாளியாக்கப் பட்டான். அவன் பெயர் புக்குண்டன். சாட்சிகளும் எதிர்பாராத நிலையில் அவனுக்கு விபரீதமாக அமைந்துவிட்டது. அவனுக்கு மரண தண்டனை வழங்க முன்வந்தான் அரசன். இந்த இக்கட்டான சூழலில், புக்குண்டனின் சமயோசித புத்தி செயல்பட ஆரம்பித்தது. ''பிறந்த வனுக்கு இறப்பு உண்டு. ஆகையால் இறப்பு நான் எதிர்பார்த்ததுதான். சில நாட்களுக்கு முன் 'பட்டி’ மரணம் அடைந்தான். அதன்பிறகு வரிசையாக பாரவி, பிஷு, பீமசேனன் ஆகியோர் மடிந்தனர். தற்போது புக்குண்டனாகிய நான் மரணத்தைத் தழுவப் போகிறேன். அதற்கு பிறகு 'பூபதி’யாகிய தாங்கள் மரணத்தின் பிடியில் சிக்கப்போகிறீர்கள். எமதர்மன் அகரவரிசையில் ப, பா, பி, பு, பூ என்று உயிரைப் பறிக்கத் துவங்கியிருக்கிறான். பூபதியான தங்கள் உயிரைப் பறிப்பது தகாது. நாட்டை ஆளும் தங்களைத் துன்புறுத்துவது பாபம். எனக்கு இப்போதே தண்டனை அளித்து, எப்போதோ வரவேண்டிய தங்கள் மரணத்தை இப்போதே வரவழைத்துக்கொள்கிறீர்கள். அதுதான் எனக்குக் கவலை அளிக்கிறது'' என்று சொன்னான் புக்குண்டன். பயந்து நடுங்கிய அரசன் அவனை விடுதலை செய்தான் என்ற தகவல் உண்டு.

இதுபோன்று ப்ரத்யுத்பன்ன மதித்வம் (சமயோசித புத்தியை). அளிப்பவன் புதன். பலபேருடன் பழகும் பாங்கு, அறிமுகம் இல்லாதவர்களுடன் இணைந்து போகும் இயல்பு, சுயமாக செயலில் ஈடுபடும் ஆர்வம், எந்த விஷயத்தையும் ஆராய்ந்து செயல்படுவதில் முன்னுரிமை, ஏற்றுக்கொண்ட காரியத்தைப் பொறுமையுடன் கையாண்டு, பெருமைபட நிறைவேற்றுவதில் அக்கறை ஆகிய அனைத்தையும் புதனின் செயல்பாடாக சித்திரிக்கிறது ஜோதிடம். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ராமனுடன் லட்சுமணனையும் அனுப்பிய சுமித்திரை, புறக்கணிக்கப்பட்ட சகுந்தலை விக்ரமனுடன் இணைந்த ஊர்வசி ஆகியோர் புத த்ரிம்சாம்சகத்தில் அடங்குவார்கள். சமயோசித விளக்கத்தால் தன்னையும் காட்டுக்கு அழைத்துக்கொண்டு போக ராமனைச் சம்மதிக்கவைத்த சீதை முதலாக பல சரித்திர நாயகிகளையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

புதனின் பங்களிப்பு...

ராசியில் சூர்யனும், ஹோரையில் அதிக பாகைகளில் சந்திரனும், த்ரேக்காணத்தில் செவ்வாயும் இணைந்து இருந்தாலும் அவற்றை பின்னுக்குத்தள்ளி, புதனானது தனது த்ரிம் சாம்சகத்தில் பிறந்தவளை... செயல்பாட்டில் திறமையும், எதையும் எதிர்கொள் வதில் ஆண்மையும், சிந்தித்து செயல் படுவதில் ஆர்வமும் இவை அத்தனையும் முழுமை பெற்ற பெண்மணியாக உருவாக்கிவிடுகிறார். மனதின் உருப்படியான புத்தியை வளரச் செய்வதிலும், வளர்ந்த புத்தியை பயனுள்ளதாக மாற்று வதிலும் புதனுக்குப் பங்கு உண்டு என்கிறது ஜோதிடம்.

இப்படியிருக்க, புத சந்திரயோகம், புதன் நீசபங்க ராஜயோகம் பெற்று இருக்கிறான், புதாத்திய யோகம் உண்டு என்றெல்லாம் மூன்றாம் வரிசையில் இருக்கும் யோகங்களை சுட்டிக்காட்டி, சந்தர்ப்பத்துக்கு உகந்த முறையில் பலன் அளிக்கும் எண்ணம் ஜோதிட மேதைகளுக்கு வரக்கூடாது. பிறந்தவனின் இயல்பு, பொருளாதாரம், இலக்கணம், ஆயுள் ஆகியவை குறித்து... லக்னம், நட்சத்திர பாதம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு முடிவெடுப்பதில் ஜோதிடத்துக்கு உடன்பாடில்லை.

புதன், சூரியனை விட்டு வெகு தூரத்தில் விலகிப் பயணிக்க மாட்டான். நான்கு ராசிகள் முன்னும் பின்னுமாக இருக்க இடம் உண்டு. வெப்பக் கிரகமான சூரியனோடு இணையும் தறுவாயிலும் தனது இயல்பை இழக்கமாட்டான் புதன். உண்மையில் மனிதனை மனித இயல்போடு பாதுகாப்பவன் புதன். 'கிரகணம் நிகழவேண்டிய தறுவாயில், புதனின் சேர்க்கை கிரகணத்தைத் தவிர்த்துவிடும்’ என்கிறது ஜோதிடம் (க்ரூரக்ரஹ: ஸகேது: சந்திரமஸம் பூர்ணமண்டலமிதானீம். அபிபவிதுமிச்சதி பலாத் ரக்ஷத்யேனம் துபுத யோக:). மனிதனைப் பண்போடு விளங்க வைப்பவன் புதன். இதையெல்லாம் மறந்து, தங்களை அண்டியவர்களின் மனநிலையை அறிந்து, அவர்களை திருப்திப்படுத்தும் முறையில் பலனளிப்பது தகாது.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism