Published:Updated:

ஆலயம் தேடுவோம்...

சிவாலயத்துக்கு அள்ளிக் கொடுப்போம்! பென்னலூர் அகத்தீஸ்வரமுடைய மகாதேவர் கோயில்இ.லோகேஸ்வரி

ஆலயம் தேடுவோம்...

சிவாலயத்துக்கு அள்ளிக் கொடுப்போம்! பென்னலூர் அகத்தீஸ்வரமுடைய மகாதேவர் கோயில்இ.லோகேஸ்வரி

Published:Updated:

லக மக்களைக் காக்கும்பொருட்டு, இறைவன் பல ரூபங்களில் தோன்றி, பல அதிசயங்களை நிகழ்த்தி, உலக ஜீவராசிகளைக் காத்து அருள்புரிகிறான். ரிஷிகளும், முனிவர்களும், மன்னர்களும் நம்மைக் காக்கும் இறைவனுக்கு ஆலயங்கள் எழுப்பி, வழிபட்டு வந்துள்ளனர். அவற்றில் எத்தனையோ கோயில்கள் இறைவனின் திருவிளையாடலின்பேரில் கட்டப்பட்டிருக்கின்றன. ஆலய தரிசனம் என்பது இந்தப் பிறவிக்கான பயனைக் கொடுத்து, மறுபிறவியை விடுத்து, இறைவனின் பாதத்தை அடையச் செய்யும். அதற்காகவே உலகம் முழுதும் பல கோயில்கள் கட்டப்பட்டு, இன்று வரை வழிபாட்டில் இருந்து வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில், இன்றைக்குப் பல கோயில்கள் புதுமைப்படுத்தப்பட்டும், நவீனப்படுத்தப்பட்டும் வருகின்றன. அரசாங்கமே பல கோயில்களைப் புதுப்பித்து, புனர்நிர்மாணம் செய்து பாதுகாத்து வருகிறது. ஆயிரம், இரண்டாயிரம் வருடப் பழைமையான கோயில்கள் அனைத்தும் நம் புராதனத்தை எடுத்துக் கூறும் சாட்சியாகக் காட்சி தருகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் பல வரலாற்றுச் சிறப்புகள் உண்டு.

அப்படிப்பட்ட கோயில்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டி யது நம் கடமை. ஆனால், நாம் நமது கடமையைச் சரிவரச் செய்கிறோமா என்றால், இல்லை. இன்று எத்தனையோ  கோயில்கள் சிதைந்தும் பாழடைந்தும் கிடக்கின்றன. நாம் நம் தொன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். கட்டடக் கலைக்கும் சிற்ப சாஸ்திரத்துக்கும் உறைவிடமாகத் திகழும் பழைமைமிகு ஆலயங்களைப் பாதுகாத்து பராமரிப்பது நம் கடமை அல்லவா!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தேடுவோம்...

ஆனால் ஒரு கிராமமே, தங்கள் ஊரில் உள்ள சாந்நித்தியம் நிறைந்த கோயிலையும் அதன் பெருமையையும் அறியாமல் இருக்கிறது என்பதை அறிய திகைப்பாக இருக்கிறது.

கோயிலில் கோபுரங்கள் வைப்பதற்கும், கலசங்கள் வைப்பதற்கும் காரணங்கள் உண்டு. அதுபோல, ஸ்தல விருட்சம் வைப்பதற்கும் காரணம் உண்டு. இயற்கையையே இறைவனாக வழிபட்டதன் அடை யாளமாகவும், விருட்சங்களின் மகத்துவத்தை பின் வரும் சந்ததிக்கு உணர்த்தவும் மரங்களை வழிபாட்டுக்கு உரிய தெய்வ விருட்சங்களாக கோயிலில் வைத்து சிறப்பித்தார்கள், நம் முன்னோர். அந்த வகையில் இந்த ஆலயத்துக்கும் ஸ்தல விருட்சம் உண்டு. அதுவே, இன்று அந்தக் கோயிலையே தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது எனலாம்.

ஆலயம் தேடுவோம்...

சென்னை, பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது பென்னலூர். இந்த ஊரில் அமைந்துள்ள சிவாலயம், சாளரக்கோயில் பாணியில் உள்ளது.  நந்திக்கு அருகில் சாளரம் இருக்கிறது. அந்தச் சாளரத்தின் வழியே ஸ்வாமியை தரிசிக்கலாம். கருவறையில் அற்புதமாகக் காட்சி தந்துகொண்டிருக்கிறார் பரமனார்.

கோயிலுக்குக் கதவுகள் இல்லை. வாரத்துக்கு ஒருமுறை அல்லது பிரதோஷ தினங்களில் மட்டுமே இங்கு வழிபாடு நடக்கிறது. கோயிலின் பெருமை உணர்ந்த வெளியூர் அன்பர்கள்,  பிரதோஷ நாளில் வந்து ஈசனை வணங்கிச் செல்கின்றனர். கோயிலுக்கென அர்ச்சகர்கள் இல்லை. எனவே, அன்பர்களே பூஜை செய்கின்றனர்.

''முன்பு இந்த ஊரில் நக்கீரன்னு ஒரு போஸ்ட்மாஸ்டர் இருந்தாரு. அவர்தான் இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து பூஜைகள் செய்துட்டு இருந்தாரு. இப்போ அவருக்குப் பதவி உயர்வு கிடைச்சு, வெளியூருக்கு மாற்றலாகிப் போயிட்டாரு!' என்கின்றனர் ஊர்மக்கள். இப்போது, பென்னலூரைச் சேர்ந்த தனபால் என்பவர்தான் இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து இரண்டு வருடங்களாக விளக்கேற்றி வருகிறார்.

கோயிலைச் சுற்றிலும் நான்கு தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. ஆனால், அவை எதிலும் விக்கிரகங்கள் இல்லை. ஒரே ஒரு சந்நிதியில் மட்டும் தலை இல்லாமல் ஒரு விக்கிரகம் இருக்கிறது. கோயிலைச் சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. பிராகாரப் பகுதியிலும் உடைந்த நிலையில் சில விக்கிரகங்கள் உள்ளன. தற்போது கோயிலைப் புதுப்பிக்க, திருப்பணி கமிட்டி ஒன்றை அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர் ஊர் மக்கள்.

ஆலயம் தேடுவோம்...

''ஸ்வாமியின் பெயர் தெரியாமலேயே வழிபட்டு வந்தோம். கோயிலில் இருந்த கல்வெட்டுகளைப் புகைப்படம் எடுத்து, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியத்துக்கு அனுப்பி வைத்தோம். அவர் அவற்றைப் படித்துச்  சொன்ன  பிறகுதான், இங்கே உள்ள ஸ்வாமியின் திருநாமம் திருஅகத்தீஸ்வரமுடைய மகாதேவர் என்று எங்களுக்குத் தெரிய வந்தது'' என்கின்றனர் ஊர்மக்கள்.

பென்னலூர் கிராமத்துக்கு கோணந்தட்டநல்லூர், உலகளந்த சோழ சதுர்வேதிமங்கலம் எனும் பெயர்கள் இருந்ததாகவும் தெரிய வருகிறது. கி.பி.1070ம் ஆண்டு முதல் 1074ம் ஆண்டுக்குள் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் எனவும், 'ராஜகேசரி ராஜேந்திர சோழன்’ என்று அழைக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கன் இந்தக் கோயிலைக் கட்டி, மானியங்கள் வழங்கியிருக் கிறான் என்றும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஆலயம் தேடுவோம்...

கோயில் மாடங்களில் பல சிற்பங்கள் அழகுறக் காட்சி தருகின்றன. வெளிப்புறச் சுவர்களில் ஆலிலைக் கண்ணன், பிரம்மா, நரசிம்மர், கஜலக்ஷ்மி, அகஸ்திய முனிவர் ஆகியோரின் விக்கிரகங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

புதர்களையும் புல் பூண்டுகளையும் அகற்றி, கோயிலைச் சுத்தம் செய்து, தினப்படி பூஜைகளைச் செய்ய இருப்பதாகச் சொல்லும் திருப்பணிக் குழுவைச் சேர்ந்த பென்னலூர் முருகன், திருப்பணி வேலைகளையும் வெகு விரைவில் தொடங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாலாலயம் செய்து, கோயில் கருங்கற் களைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும். அதையடுத்து கோயில் திருப்பணியைத் துவக்க வேண்டும். பிரசன்னம் பார்த்து அம்பாள் பெயர் தெரிந்து கொள்ளவும் முடிவு செய்திருக் கிறார்கள் ஊர்மக்கள். பரிவார தெய்வங் களுக்கு விக்கிரகங்கள் செய்ய வேண்டும்.

இறைவன் உறைந்திருக்கும் கோயிலைப் புனரமைப்பது நம் கடமை. பென்னலூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் திருப்பணிகளுக்கு  நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம். அவன் அருள் பெறுவோம்!

படங்கள்: ஆர்.வருண்பிரசாத்

எங்கே உள்ளது?  

சென்னை பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது பென்னலூர். பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோயிலுக்கு இருபது நிமிடங்களில் நடந்தே சென்றுவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism