Published:Updated:

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

இ.லோகேஸ்வரி

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

இ.லோகேஸ்வரி

Published:Updated:

சொற்பொழிவில் 'சமயம்’ வளர்க்கும் பேராசிரியர்!

பொறியாளராகத் துவங்கிய வாழ்க்கை, பிறகு கல்லூரி துறைத் தலைவராக உயர்ந்து, தற்போது ஆன்மிகச் சொற்பொழிவு செய்து, இறைப்பணி செய்வதையே தன் முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கிறார் சிவகுமார்.

ஒரு மாலை வேளையில், காஞ்சி ஏகாம்பரேஸ் வரர் கோயிலில், திருஞானசம்பந்தர் பற்றிய சொற்பொழிவுக்குப் பிறகு, சந்தித்துப் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திருச்சி ஆர்.இ.சியில் இன்ஜினீயரிங் படித்தேன். பிறகு மேற்படிப்பு முடித்து, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் டெக்னிக்கல் ஆபீசராக வேலை செய்து வந்தேன். பின்னர் தனியார் பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராக ஏழு வருஷம் வேலை பார்த்தேன். துறைத் தலைவராகவும் பணியாற்றினேன்.

அப்போது, சொற்பொழிவு செய்யும்பொருட்டு வெளியூர்ப் பயணங்கள் நிறையவே மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால், கல்லூரி வேலையில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டு,  முழு நேரமும் சொற்பொழிவு செய்யத் தொடங்கி விட்டேன்' என்கிறார் சிவகுமார்.    

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

''சிறு வயதிலேயே நமது புராணங்கள் குறித்தும், சடங்குகள் பற்றியும் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். ஆசை, பொறாமை, வஞ்சம் ஆகியவற்றைத் தவிர்த்து, எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது இந்து மதம். அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, மனதில் பதிய வைக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதனால்தான் குழந்தைகளையும் இளைஞர்களையும் கவரும் வகையில் சொற்பொழிவில் நல்ல பல கருத்து களைச் சொல்லி வருகிறேன்.

அதுபோல, ஆன்மிகத்தில் சொல்லப்பட்டுள்ள அறிவியலையும் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். இந்த நூற்றாண்டில் அறிவியலாளர் களால் கண்டுபிடிக்கப்பட்டு, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவம்  'all selestrical bodies are spherical in nature’. அதாவது, இந்த அண்டத்தில் இருக்கும் எல்லா பொருட்களுமே உருண்டையாகத்தான் இருக்கும். இதை 'அண்டைப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பெரும் தன்மை...’ என்று திருவாசகத்தில் கூறியிருக்கிறார் மாணிக்கவாசகர். இன்றைக்கு மேலை நாட்டவர்களால் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் பல அறிவியல் உண்மைகள் வெகு காலத்துக்கு முன்பே நமது வேதங்களிலும், புராண, இதிகாசங்களிலும் கூறப்பட்டிருக்கின்றன. அதை இன்றைய  இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' என்கிறார் சிவகுமார்.

சொற்பொழிவு தவிர, ஆன்மிகப் புத்தகங்களும் எழுதி இருக்கிறார் இவர். 'ஆறுமுகனும் அறுபடை வீடும்’ எனும் புத்தகத்தில், முருகனுக்கும் எண் ஆறுக்கும் உள்ள தொடர்பைத்் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும், திருவாசகத் தெளிவுரை, திருமந்திர உபதேச விளக்கம் முதலான புத்தகங் களையும் எழுதி இருக்கிறார் சிவகுமார்.  திருமந்திரம் பற்றிய குறுந்தகடு ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

''ஞானத்திரள் என்ற இதழையும் நடத்தி வருகிறேன். கோயில் திருப்பணிகளிலும்ஈடுபட்டு வருகிறேன். கவனிப்பாரற்று இருக்கிற கோயில் களுக்குச் சென்று, அந்த ஊரில் சொற்பொழிவு நடத்தி, அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு, அந்த ஊர் கோயிலைப் புதுப்பித்து வருகிறேன். இதுபோல, பல கோயில்களுக்குத் திருப்பணி செய்து, குடமுழுக்கும் செய்திருக்கிறேன்' என்று நெகிழ்ந்து சொல்லும் சிவகுமார், இன்னொரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்...  ''ஒருமுறை இலம்பையம்கோட்டூர் 'தீண்டா திருமேனிநாதர்’ கோயிலுக்கு மதில் எழுப்ப, அன்பர்களிடமிருந்து பணம் வசூல் செய்து, கோயில் குருக்களிடம் கொடுத்தேன். சில வாரங்களுக்குப் பிறகு, திருப்பணி செய்யப் பணம் தந்து உதவிய அன்பர் ஒருவர் என்னைத் தேடி வந்தார். ''திருப்பணிக்குப் பணம் கொடுத்தா மட்டும் போதுமா, வேலை நடக்குதா, இல்லையான்னு பார்க்க வேண்டாமா என்று என் கனவில் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதான், விவரம் கேட்கலாம் என வந்தேன்' என்றார்.

உடனே, அந்த குருக்களைத் தொடர்புகொண்டு விவரம் கேட்டேன். அவர் நேராக என் வீட்டுக்கே வந்துவிட்டார். 'நீங்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு மடப்பள்ளி அமைத்தோம். பின்னர் வரும் பணத்தைக் கொண்டு சுற்றுச் சுவர் கட்ட லாம் என நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் கடிதத்தில், அந்தப் பணத்தைச் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு மட்டும் உபயோகப்படுத்தும்படி எழுதியிருந்தீர்கள். தங்கள் சொல்லை மீறிச் செயல்பட்டது எனக்கு மன உறுத்தலைத் தரவே, உங்களை நேரிலேயே பார்த்து விவரம் சொல்லி விடலாம் என்றுதான் வந்தேன்' என்றார் குருக்கள்.

அதன் பிறகு கோயில் சார்பிலேயே சுவர் கட்டி முடிக்கப்பட்டது' என்ற சிவகுமார், ''இறைவ னுக்குச் செய்யும் காரியத்தைச் செவ்வனே செய்ய வேண்டும் என நான் உணர்ந்து சிலிர்த்த தருணம் அது. இன்றைக்கும் அதன்படியே தொடர்கிறது என் பணி' என்று பூரிப்புடன் கூறி முடித்தார்.

சிவனருளால் சிந்தைமகிழ திருப்பணிகள் தொடரட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism