மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பழம்பெருமைகளை கேலி செய்து நகைச்சுவை ஆக்கலாமா?

? தற்போதைய சினிமாக்களிலும் சின்னத்திரைகளிலும் நகைச்சுவை என்ற பெயரில், நமது பாரம்பரியத்தையும், பழைய சம்பிரதாயங்களையும் கேலி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இது, தற்கால தலைமுறை யினரிடையே நமது பழம் பெருமைகள் குறித்து தவறான எண்ணத்தை அல்லவா தோற்றுவிக்கும்? இதுபோன்ற நகைச்சுவைகள் அவசியம்தானா?

- ஜி.பரமேஸ்வரன், ராதாபுரம்

முதல் கோணம்...

'தலையில் மொட்டை, நெற்றியில் விபூதிப் பட்டை, கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை...’  நகைச்சுவைக்காக அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர் இது. விபத்தில் லாரி சுக்குநூறாக நொறுங்கிவிடும். அதன் முன்புறம் கட்டப்பட்டிருக் கும் எலுமிச்சைப் பழம் சேதம் அடையாமல் இருக்கும். அந்தப் பழத்துக்கு விளக்கம் அளிப்பார் ஒரு சீர்திருத்தவாதி. இதுவும் நகைச்சுவை கலந்த சீர்திருத்தம்.

காதலன் பஞ்சகச்ச வேட்டியும், கழுத்தில் ருத்ராட்சமும்  அணிந்திருப்பான்; காதலி 18 முழம் புடவை கட்டிக்கொண்டு, நெற்றியில் உதித்து எழும் சூரியன் அளவுக்கு ஒரு பொட்டு வைத்துக்கொண்டு், கன்னங்களில் மஞ்சளைப் பூசிக்கொண்டு காட்சி தருவாள். இதையும் நகைச் சுவை கலந்த காதல் காட்சியாகவே காட்டுவார்கள். திருட்டுக் கும்பல்களிடம் இருந்து பணத்தைத் திருடி, ஏழை - எளியவர்களுக்கு வாழ்வளிப்பான். அவன் ஏழைப் பங்காளனாகக் காட்டப்படுவான். காகத்துக்கு வைத்த அன்னத்தைத் திருடி, பசியை ஆற்றுவான். அவன், எவரிடமும் கையேந்தாமல் சுயமரியாதையைக் காப்பவனாகக் சித்திரிக்கப்படுவான்.

கேள்வி - பதில்

? கதைக்கு அவசியம் என்ற கண்ணோட்டத்தில் சேர்க்கப்படும் இதுபோன்ற காட்சிகளை தவறு என்று சொல்ல முடியாதே?

அவசியம் என்ற போர்வையில் வலுக்கட்டாய மாக சேர்க்கப்படும் காட்சிகளும் உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குப்பையைச் சேர்த்து, நைந்துபோன துணி மூட்டைகளை ஒருவர் எரிக்க முற்படுவார். அதைப் பார்த்து வெகுண்டு எழும் சீர்திருத்தவாதி, அதை ஏழைகளுக்கு தானம் அளிக்கச்சொல்லி கர்ணனாக மாறுவான். உண்டியலில் சேர்ந்த செல்வத்தைத் தனதாக்கிக்கொண்டு, அது மக்களின் செல்வம் என்ற தத்துவத்தை உதிர்த்து, நவீன சீர்திருத்தவாதியாக மாறுவான் ஒருவன். இப்படியான காட்சிகளும் இடம்பெறும். இறுதிச் சடங்கில் சிதை மூட்டும் வேளையில், அரையில் துண்டுடன் தோன்றுவான்; அறத்திலும் பழைய பண்பாட்டிலும் சிறப்புப் பெற்றவனாக மாறுவான். தலைமறைவாக வாழ, காவி உடையை ஏற்பான். சிக்கலில் இருந்து விடுபடவும் காவியைப் பயன்படுத்துவான். சில நேரம், களவாடுவதற்கும் அது பயன்படும்!

விதவைப் பெண்ணுக்கு வாழ்வளிக்க, அவளுக்குத் தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்வான். இதைப் புரட்சியாகச் சித்திரிப்பான். அதேபோன்று, கணவன் உண்ட இலையில் இருக்கும் எச்சிலை மனைவி பெருமையோடு உண்டு மகிழ்வாள். இதை, பதிவிரதையின் தனி உருவமாகச் சித்திரிப்பார்கள். அதேபோன்று, பட்டிக்காட்டானை படித்த பட்டணத்து மங்கை காதலிப்பாள். காதலுக்குக் கண் இல்லை என்பதை உறுதி செய்வாள். காதலில் இணைந்தவர்களின் வேஷம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கும்; ஆனால், அவர்களின் காதல் என்றும் மாறாமல் பசுமையாக இருக்கும் என்று விளக்குவார்கள்.

? சரி, நீங்கள் மேற்கோள் காட்டும் இந்தக் காட்சிகளால் என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது?

விஞ்ஞானத்தின் ஒத்துழைப்பில் உலகளாவிய சிந்தனை மாற்றத்தில் இணைந்திருக்கும் இன்றைய முதியோர்களும் நடுத்தர வயதினரும் இவற்றையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் அத்தனை பேரிடமும், தற்காலச் சூழலுக்குத் தகுந்தவாறு பணம் சேர்ப்பதிலும், பட்டம் பெறுவதிலும், புகழ் ஈட்டுவதிலும் மட்டுமே நாட்டம் இருக்கும். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

கேள்வி - பதில்

ஆனால், காலத்துக்கு உகந்த வகையில் முன்னேறத் துடிக்கும் இன்றைய இளையதலைமுறையினரை இதுபோன்ற காட்சிகள் பாதிக்கும். பிஞ்சு உள்ளங்களில் இவற்றைப் பதியவைத்தால், அவர்களின் சிந்தனை திசை மாறி, சமுதாயத்தில் நீந்திக் கரையேற முடியாமல் தவிப்பார்கள். செயற்கைக் கோளையும் ராக்கெட்டையும் கணினியையும் சிறு வயதிலேயே கண்டு களித்தவர்களின் சிந்தனையில், மண் மூடி மறைந்துபோன பழைய சிந்தனைகளை இணைப்பது, சுய முயற்சியில் முன்னேறிக்கொண்டு இருப்பவர்களைப் பின்னுக்கு இழுக்கும் செயலாகும். மூன்று வயதிலேயே இன்டர் நெட்டைப் பயன்படுத்தவும், கணினியை இயக்கவும், தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றித் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும் திறமை பெற்ற தற்காலக் குழந்தைகளின் சிந்தனை வளத்தைக் குன்றவைப்பது பெருமையல்ல.

'காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது’ எனும் நிலையில் தத்தளிக்கும் முன்னோர் தங்களது சுகாதாரத்தைப் பாதுகாக்க மருத்துவர்களையும், வாழத் தகுதியான முதியோர் இல்லங்களையும் நாடுவதில் ஈடுபட்டிருப்பார் களே தவிர, இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்துகொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், இயல்பாகவே நகைச்சுவை காட்சிகளை விரும்பும் சிறுவர்கள், இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும் நிலையில், அவர்களின் பிஞ்சு உள்ளங்கள் உறிஞ்சி எடுக்கப்பட்டு, வருங் காலத்தைச் செம்மையாக்கிக்கொள்ள முடியாமல் தவிப்பார்கள். செல்வங்களை ஈன்றெடுப்பது அரிது. அப்படி ஈன்றெடுத்த செல்வங்களை வளர்ப்பதில் அக்கறை குறைந்து, சிறுவர் காப்பகத்தை நாடுவோர் இன்றைக்குப் பெருத்துவிட்டார்கள். இப்படி, தங்களை வளர்ப்பதற்குத் தாய் தந்தையரும் அக்கறையோ ஆர்வமோ காட்டாத சூழலில், இதுபோன்ற அறிவுரைகளால் திசைதிருப்பப்பட்டு, அந்தக் குழந்தைகள் தங்களையும் இந்த சமுதாயத்தையும் வருத்திக்கொண்டு வாழ நேரிடும். வியாபார நோக்கில் செய்யப்படும் இந்த அறிவுரைகள் குழந்தைகள் மனதில் வேரூன்றி, பல பக்க விளைவுகளைத் தோற்றுவித்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு அச்சுறுத் தலாக மாறுவதற்கு இடமுண்டு. இந்த நிலை நீடித்தால், இன்றைய சிறுவர் களை சீர்திருத்த இன்னொரு புதிய சீர்திருத்தவாதி முளைத்தாக வேண்டும்!

இரண்டாவது கோணம்...

மொட்டை அடிப்பது காலம் காலமா கத் தொடரும் பண்பாடு. அதன் மூலம் சேகரிக்கப்படும் ரோமங்கள்

பலபேருக்குப் பயன்படுவ துடன், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை யும் செழிப்பாக்குகிறது. பல கோயில்களில் அதை ஏலம் எடுப்பதில் போட்டாபோட்டி நிலவுகிறது. விபூதிப் பட்டையும் அப்படித்தான். பல டிரேட் மார்க்குகளில் விபூதி தயாரிக்கும் நிறுவனங்கள் தோன்றி, பலபேருக்கு வேலை வாய்ப்பு அளித்து, அவர்களது வாழ்வைச் செம்மையாக்குகின்றன.

ருத்ராட்சக் கொட்டையும் அப்படித்தான். ஒரு முகம், இரண்டு முகம், மூன்று முகம் என ருத்ராட்சங்கள் வகை பிரிக்கப்பட்டு, பெரிய வியாபார கேந்திரங்களாக வளர்ந்தோங்கி, பலபேருக்கு வேலைவாய்ப்பு அளித்து, வாழ வைக்கின்றன. இவையெல்லாம் வியாபாரச் சரக்குகளே என்று பிஞ்சு உள்ளங்களுக்கு உணர்த்தி, மூடநம்பிக்கைகளில் சிக்கிக்கொள்ளாமல் அவர்களைப் பாதுகாக்க மேற்சொன்ன படக் காட்சிகள் உதவுகின்றன.

? மூடநம்பிக்கைகள் என்ற பெயரில் பெருமைக்கு உரிய விஷயங்களையும் இழிவுபடுத்தலாமா?

ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது. பஞ்சகச்ச வேட்டியையும், 18 முழம் சேலையையும் மறந்த இனத்தினரிடையே, விளம்பரம் வாயிலாக அவற்றைப் புதிதாக அறிமுகம் செய்து ஏற்கவைப்பதில் எந்தத் தவறும் இல்லை. மாறிக்கொண்டிருக்கும் ஆடைஆபரணங்களில், பழம்பெரும் ஆடைகளில் ஒரு மாற்றத்தை ஏற்பதில் என்ன தவறு? அவர்களது வியாபாரம் செழிப்புற்று, பல கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதை ஏன் குறையாகப் பார்க்க வேண்டும்? ரோஜாப்பூ இன்றைக்கு இடம்பெறாத இடமே இல்லை. கல்யாணத்திலும் இருக்கும்; கல்லெடுப்பிலும் இடம் பெறும். பூத உடலுக்கும் அதை அணிவிப்பது உண்டு; வரவேற்பிலும் மாலை மாற்றுவதிலும், ஃபிளவர் பொக்கேவிலும் அது இடம் பெற்றிருக்கும். கடவுளுக்கு  மட்டும்தான் என்றில்லை; எல்லா இடங்களிலும் ரோஜா நிறைந்திருக்கிறது. எலுமிச்சையும் அப்படித்தான். அது சமையலுக்கு  மட்டும் பயன்படக்கூடியது இல்லை. திருஷ்டி கழிக்கவும், கடவுளின் நீராடலிலும், நறுமணம் கமழும் சோப்புகளிலும், தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்களிலும் அது பயன்படுத்தப்படுகிறது. அப்படியிருக்க, எந்தப் பயனும் இல்லாமல் அழிவைச் சந்திக்கும் (வீணாகப்போகும்) எலுமிச்சையைக் காட்டி, மூட நம்பிக்கையில் விழாமல் இருப்பதற்காகத் தரப்படும் விளக்கங்கள் தேவையானவைதான்.

? இன்னும் சில காட்சிகளையும் குறிப்பிட்டிருந் தோம். அவற்றுக்குப் பதில் இல்லையே?

திருட்டுக்கும்பலிடம் களவாடி ஏழைகளுக்கு உதவுவது குறித்து கூறியிருந்தீர்கள். அரசாங்கத்தின் கண்ணில் படாத திருட்டுச் செல்வத்தை வெளிக்கொண்டுவரத் துணிந்தவனைப் பாராட்ட வேண்டுமே தவிர, இகழக்கூடாது. அடுத்ததாக, உண்டியல் செல்வத்தை மக்கள் செல்வமாக திரைப்படங்கள் விளக்குவ தையும் குறைகூறியிருந்தீர்கள். உண்டியலில் பொதுமக்கள் காணிக்கை நிரம்பி வழியும் தறுவாயில், அது ஏழையின் பசியாறுவதற்குப் பயன்படுவது எப்படித் தவறாகும்? அந்த ஏழையும் இறைவனின் செல்வன்தானே? கோயில் உண்டியலில் சேமிக்கப்படும் பணம் அன்னதானத்துக்கும், கோயில் விழாக்கள், உற்ஸவங்கள் என்ற பெயரில் பலதரப்பட்ட மக்களுக்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுவது உண்டு. வேதபாராயணம், கோயில் சேவகம், மளிகை, வாத்தியம், பாட்டுக்கச்சேரி, சொற்பொழிவு, கொண்டாட்டம்... இப்படி, பல தொழில்களில் ஈடுபடுபவருக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களை வாழவைக்கிறது உண்டியல் பணம்.

கேள்வி - பதில்

காகத்துக்கு அன்னம் வைக்கும் அளவுக்குச் செல்வச்செழிப்பு படைத்தவன், ஏன் பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவளிக்கக் கூடாது? தன் இனத்தைக் காப்பாற்றிய பிறகு, மற்ற இனத்தைக் காப்பாற்றட்டுமே? காக இனத்தைக் காப்பாற்ற இயற்கை இருக்கிறது. அது சைவமல்ல. அதற்கு அன்னம் அளிக்காவிட்டாலும், அசைவத்தில் வாழ இயலும். ஆனால், பசியோடு தவிக்கும் மனிதர்கள் ஏராளம். அவர்களை திருப்திப்படுத்துவது நம் கடமை. அந்தக் கடமையை ஆற்றிய பிறகு, பொது அறத்தில் நுழையலாம். இந்தக் கருத்தை விளக்கும் காட்சி களை எப்படிக் குறை கூற முடியும்?

? அதற்காக எதையும் மிகைப்படுத்துதல் கூடாது அல்லவா?

மிகைப்படுத்துதல் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. கணவன் உண்டபிறகு மிச்சம் இருக்கும் பாலை மனைவி பருகும் காட்சியை, அவர்களது முதல் சந்திப்புக்கு ஆரம்பமாகச் சுட்டிக்காட்டுவது உண்டு. அன்பு மேலிட்ட அவளது மனமானது, கணவன் உண்டது போக எஞ்சியதை எச்சிலாகப் பார்க்காது. காதலின் நுணுக்கத்தை வலுவூட்டுவதாக எண்ணும் அவளது மனம். இது, அவளுடைய அன்பின் எல்லையைக் காட்டுகிறது. பண்டைய நாட்களில் அன்னதானம் முடிந்தபிறகு, வெளியே போடும் இலைகளில் மிஞ்சியிருக்கும் உணவை ஏற்கும் ஏழைகள் தென்பட்டார்கள். அலுவலகங்களில் சாப்பிட்டு மிச்சமான உணவை தங்களின் வீட்டுக்கு எடுத்துச்செல்லும் ஏழைகளும் இருந்தார்கள். அதேபோன்று, உணவகங்களில் பயன்படுத்தும் உணவுகளில் மிச்சமாவதை ஏற்பதிலும் சில ஏழைகள் சுணங்கு வது இல்லை. கணவன் மனைவி இருவரும் உள்ளத்தோடு மட்டுமல்லாமல், உடலோடும் ஒட்டிக்கொண்டவர்கள். ஆகையால், கணவன் எச்சிலில் மனைவிக்கு அருவருப்பு இல்லை.  

அடுத்து, காவி குறித்த கருத்துக்கு வருவோம். ஒருவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள காவி வேஷம் போடுவதில் தவறில்லை. மறைந்து வாழ வேண்டிய சூழலில், நம்பிக்கைக்கு உகந்த வேஷம் காவி. ராவணன் காவியுடையில் சீதையைக் கவர்ந்தான். எடுத்த காரியத்தை இடையூறின்றி நிறைவேற்ற, அதைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம். தற்காப்பு அவசியம் என்ற நிலையில், நெருக்கடியான நிலையில், காவியை ஏற்பது தவறு ஆகாது. ஆக, சிறுவர்களில் மூடநம்பிக்கை பதியாமல் இருக்க, இதுபோன்ற விளக்கங்கள் தேவையே!

மூன்றாவது கோணம்...

பழம்பெரும் தத்துவங்களை, நல்ல நடைமுறை களை காழ்ப்பு உணர்ச்சி மேலிட்டு நகையாடுவது தவறு. அதோடு நிற்காமல், வியாபார நோக்கில் விளக்கம் அளிப்பது பெரும் தவறு.

முடி வளர்ந்தால் மொட்டை அடித்துக் கொள்பவர்களும் உண்டு. அவர்கள் வியாபார நோக்கில் மொட்டை அடிப்பது இல்லை. தவற்றுக்குத் தண்டனையாகவும் மொட்டை அடிப்பது உண்டு. அதுவும் வியாபாரத்தில் அடங்காது. வளர்ச்சியடைந்த வியாபார நோக்கு சிறுவர்களையும் பெண்களையும் வியாபாரப் பொருளாக எண்ணவைத்திருக்கிறது. இன்றைக்கு, மொட்டை அடித்து, கோவணம் தரித்து, உடம்பு முழுவதும் திருமண் சாத்தி, தங்கள் போராட்டத்தை நடத்த முற்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆக,  மொட்டையடிப்பது போன்ற காட்சியை வைத்து, அதை இழுக்காகவும் நகைச்சுவையாகவும் விமரிசிப்பது தவறு.

குழந்தைகளின் மனவளத்தைப் பாங்காக செழிக்கவைக்க உதவும் அன்றைய நல்லுரைகள், தவறான விளக்கங்களால் சீரழிக்கப்படுவதால், வருங்காலச் சந்ததியினர் ரீஃபில் இல்லாத பேனாவாக மாறிவிடுவார்கள். அவர்களுக்கு ஆன்மிக அறிவுரைகள் வேண்டும். அந்த விளக்கங்கள் ஆன்மிகச் சிந்தனையில் உருப் பெற்றவை. கடவுளை ஏற்பவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதாலும், மனம் தளராமல் செயலில் சிறப்புற்று வெற்றியை எட்டுவதற்கு ஒத்துழைப்பதாலும், பண்டைய நடை முறைகள் குழந்தைகளுக்கு வேண்டும். மனதில் இறை சாந்நித்தியத்தைச் சுவைக்க வைப்பதில் திருநீறுக்கும், ருத்ராட்சத்துக்கும், திருமண்ணுக் கும் பங்கு உண்டு.

? எனில், ஆன்மிகத்தை நையாண்டி செய்யும் நகைச்சுவை காட்சிகளே கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?

அப்படியில்லை. எந்தக் காட்சியாக இருந்தாலும் நம்பிக்கைகளை சீர்குலைப்பதாக இருக்கக்கூடாது என்று சொல்லவருகிறோம்.சிந்தனை வளம் குன்றியவர்களில் ஒருசாராரின் தாழ்வுமனப்பான்மையினால் வெளிவந்த வியாபார விளக்கங்கள் வருங்கால சந்ததியின் மனவளர்ச்சியைக் குன்றவைத்து, அவர்களைச் சமுதாயத்தில் போட்டிபோட இயலாமல் முடங்கச்செய்துவிடும்.

ஒருகாலத்தில் தலைவிரித்தாடிய அவர்களது விளக்கங்கள் எல்லாம், எதிர்ப்புகள் இல்லாம லேயே சோர்வடைந்து படுத்துவிட்டன. முடிகாணிக்கையும், திருநீறும், ருத்ராட்சமும் பக்தர்களது பக்தி மேலீட்டால் இறைப்பணியில் பயன்படுத்தப்பட்டன. பக்தியில் வியாபார நோக்கு இருக்காது. பஞ்சகச்சமும், 18 முழப் புடவையும் அணிவது, கடமையை நிறைவேற்றும் தருணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை. காகத்துக்கு அன்னம் அளிப்பதை அறமாகச் சொல்கிறது வேதம். ஒருவரது எச்சிலை மற்றொருவர் ஏற்க சாஸ்திரம் இடமளிக்காது. உணவு உட்கொள்ள இலை இல்லாத நெருக்கடியான நிலையில், மனைவியானவள் கணவன் உண்ட இலையை ஏற்கலாம். அவளுக்கு அது எச்சில் ஆனாலும், குறையில்லை என்றும் விளக்குகிறது.

கேள்வி - பதில்

உபயோகமற்ற பொருளை தானமாக வழங்கக் கூடாது; கிழிந்த துணிகளை தானம் அளிப்பது தவறு என்கிறது சாஸ்திரம். அரசாங்கத்தின் கண்களில் படாத திருடனைக் காட்டிக் கொடுக்கலாமே தவிர, தானே அரசனாகச் செயல்படுவது குற்றம்.

உண்டியல் பணத்தைப் பாதுகாக்கவும், பகிர்ந்தளிக்கவும் அதிகாரிகள் இருக்கும்போது, தனிப்பட்ட ஒருவன் அதை ஏற்பது குற்றம். எல்லாம் துறந்த துறவியின் வேஷத்தில் தனது செய்லபாடுகளை வகுத்துக்கொள்வதும் அநாகரிகம்.

பண்டைய தத்துவங்களை நகைச்சுவையாகவும், வியாபார நோக்காகவும் சித்திரித்து, பிஞ்சு உள்ளங்களில் தவறான கருத்துக் களைப் பதிய வைப்பது பாவம். மன வளர்ச்சியே மனிதனின் அளவுகோல்; வியாபார வளர்ச்சி அல்ல. பணம் ஈட்டி உடலை வளர்க்கலாம். உள்ளத்தை வளர்க்கப் பழைய பண்புகள் அவசியம். இதைச் சிறுவயதிலேயே மனதில் விதைக்கவேண்டும். இந்த முயற்சியில் நகைச்சுவை, வியாபாரம் இரண்டையும் கலந்து அளிக்கக்கூடாது. இல்லையெனில், குழந்தைகள் நகைச்சுவையையும் வியாபாரத்தையும் ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் ஏமாற்றத்தை அடைந்துவிடுவார்கள்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மனம் நம்மை வழிநடத்துகிறது. மனம் தெளிவு பெற இறைவனை அதில் குடியிருத்தவேண்டும். உருவம் இல்லாத இறைவனை குடியிருத்தும் தகுதி நமக்கு இல்லை. உருவத்தை அமைத்து, அவனை உருவம் உடையவனாக உருவாக்கினால், மனதில் குடியேறுவான். அப்படி குடியேறியவனை நிரந்தரமாக இருக்கச் செய்ய, ஸனாதனம் நமக்கு சில நடைமுறைகளைப் பரிந்துரைக்கும்.

நெற்றியில் திருமண் இடுவது, விபூதி அணி வது, கழுத்தில் ருத்ராட்சம், துளசி மாலை அணிவது, அவனது பெயரை உச்சரிப்பது, மனதாலும், வாக்காலும், செயலாலும் பிறருக்கு தவறுகள் இழைக்காமல் இருப்பது... ஆகிய அத்தனையும் மனதில் குடியேறிய இறைவனை, வெளிவரமுடியாமல் கட்டிப்போட்டு விடும்.

மனதோடு செயலில் இறங்கும்போது, நம்மோடு இணைந்து வெற்றியை ஈட்டித்தருவார் அவர். ஸனாதனத்தின் வாசனையற்ற சிந்தனை இறைவனை எட்டாது (நாவேதவின்மனுதேதம் ப்ருஹந்தம்). ஸனாதனத்தின் பேருரைகள் நம்மை நல்வழிப்படுத்தும் என்கிற நம்பிக்கை இருந்தால் போதும்; வெற்றி பெறலாம்.

தனது சிந்தனைக்கு எட்டாத பொருளில் குறை கூறுவது இயல்பு.ஆதங்கத்தை அப்படிச் சொல்லித்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும்!

முன்னோர் நடந்த பாதையில் நமது பயணம் வெற்றி பெறுவதில் ஐயம் இல்லை. குழந்தைகளை உலகம் போற்றும் உத்தமனாக உருவாக்க, முதியோரின் கண்காணிப்பு அவசியம்.

பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை-600 002.