Published:Updated:

 அட... உண்மையான தர்மயுத்தம் எது தெரியுமா?

 அட... உண்மையான தர்மயுத்தம் எது தெரியுமா?
 அட... உண்மையான தர்மயுத்தம் எது தெரியுமா?

லகில் தர்மம் ஒழிந்து அதர்மம் தலை தூக்கும் நேரத்தில் எல்லாம் கடவுள் தோன்றுகிறார். தர்மத்தை காக்கவும், அதர்மத்தை ஒழிக்கவும் தீயவர்களோடு மோதி கடவுள் 'தர்மயுத்தம்' நடத்துகிறார். இது யுகம் தோறும் நடைபெற்று வந்துள்ளது. திருமால் அசுரர்களுக்கு எதிரான தர்ம யுத்தம் நடத்தியதைக் குறிப்பிடுகின்றன தசாவதாரக் கதைகள். கிருதயுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், ஏன் கலியுகத்திலும் திருமால் தோன்றி தீயவர்களை கல்கி அவதாரம் கொண்டு அழிப்பார் என்பது நம்பிக்கை. அவரின் தர்ம யுத்தம் எப்போதும் சத்தியத்தையும், சத்தியத்தின் வழி நடக்கும் நல்லவர்களையும் காப்பாற்றும் என்பதே புராணங்களின் அடிப்படை. 

வேதங்களின் துணையோடு உயிர்களின் சிருஷ்டியை நான்முகன் தொடங்கவிருந்த வேளையில் சோமுகாசுரன் என்ற அசுரன் வேதங்களைக் கவர்ந்து கொண்டு கடலில் ஒளித்து வைத்துக்கொண்டான். திருமால் நான்கு கரங்களுடன் மேற்பாகம் தேவ வடிவாகவும், கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் மச்ச அவதாரம் எடுத்துக் கடலில் பாய்ந்தார். சிருஷ்டி என்ற பிரம்மனின் தர்மத்தைக் காக்க சோமுகாசுரனுடன் தர்ம யுத்தம் புரிந்தார். சோமுகாசுரனை அழித்து வேதங்களை மீட்டார். சிருஷ்டி என்னும் தர்மத்தைக் காப்பாற்றினார்.

தேவர்கள் பலம் பெற அமிர்தம் வேண்டி, பாற்கடல் கடையப்பட்டது. பாரம் தாங்காது பாற்கடலில் மூழ்கிப்போன மந்தர மலையைத் தாங்க மஹாவிஷ்ணு கூர்மம் எனும் ஆமை வடிவினை எடுத்தார். இதனால் தேவர்கள் பலம் பெற்று மக்களைக் காக்கவும், பூமி வளம் பெறவும் திருமால் உருவில்லாத அதர்மத்தோடு தர்ம யுத்தம் நடத்தி அமிர்தம் பெற உதவினார்.

பூமியையே கவர்ந்து சென்று ரண்யாட்சன் கடலுக்கடியே ஒளித்து வைத்தான். இதனால் உலக உயிர்கள் தவித்துப் போக, பூமாதேவி நாராயணனை வேண்டினாள். தீனதயாளுவான நாராயணன் வராக வடிவம் கொண்டார். ரண்யாட்சனோடு தார் யுத்தம் நடத்தி பூமியை மீட்டார். அதுமட்டுமா? பூமியைத் தனது கூரிய கொம்புகளில் தாங்கியும் கொண்டார். ரண்யாட்சனோடு வராகர் 1000 ஆயிரம் ஆண்டுகள் தர்ம யுத்தம் மேற்கொண்டார் எனப் புராணம் கூறுகிறது.

தானே கடவுள் என்று ஆணவம் பேசிய இரண்யகசிபு என்ற அசுரன், உலக உயிர்களையும் தேவர்களையும் வதைத்து வந்தான். அதுமட்டுமா? நாராயண பக்தனான தனது மகன் பிரகலாதனையும் இரண்யகசிபு துன்புறுத்தத் தொடங்கினான். தெய்வ தர்மத்தை காக்கவும், மக்களை மீட்கவும் நாராயணர் நரசிம்ம வடிவம் கொண்டு இரண்யகசிபுவைக் கொன்றார். இதன் மூலம் தனது பக்தர்களை என்றுமே காப்பேன் என்ற வாக்குறுதியை நிலை நாட்ட திருமால் எந்த வடிவிலும் தர்ம யுத்தம் மேற்கொள்வார் என்று நிரூபித்தார்.

மக்களைக் காக்க வேண்டிய மன்னனான கார்த்தவீர்யார்ஜுனன், பரசுராமரின் தந்தையான ஜமதக்கினி முனிவரைத் துன்புறுத்தி தேவலோகப் பசுவைக் கவர்ந்து சென்றான். திருமாலின் அவதாரமான பரசுராமர் மன்னர் குலத்தின் மாண்பைக் காக்கவும், எளியோர்களை மீட்கவும் அகந்தை கொண்ட எல்லா மன்னர்களோடும் தர்மயுத்தம் செய்து அவர்களை வீழ்த்தினார். அவரவர் கடமைகளை அவரவர் செய்தே தீர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியே பரசுராமரின் தர்ம யுத்தம் தொடர்ந்தது.

ராவணன் தொடங்கி எத்தனை எத்தனை அசுரர்கள் தோன்றி இந்த பூவுலகை இம்சித்து வந்தார்கள். அந்தக் காலத்தில்தான் தர்மத்தை மீட்டெடுக்க வில்லேந்திய ராமனாக திருமால் தோன்றி அவர்களை வதைத்தார். மாற்றான் மனைவியை விரும்புவது எத்தனை இழிவானது என்பதை வலியுறுத்த அவர் எல்லா அசுரர்களோடும் தர்மயுத்தம் நடத்தினார். இல்லற வாழ்வின் மேன்மையை எடுத்துக்கூறவே அவரின் தர்மயுத்தம் தொடர்ந்தது. 

திருமாலின் அவதாரம் என்று சொல்லப்படும் பலராம அவதாரத்தின் வழியாக  அவரது தம்பியான ஸ்ரீகிருஷ்ணரோடு இணைந்து பல அரக்கர்களை வென்று தர்ம பரிபாலனம் நடைபெற உதவி புரிந்தார்.

உலகெங்கும் தீயவர்கள் கூட்டம் பெருகி, நல்லவர்கள் அருகிப்போன காலத்தில் பூமாதேவி ஓலமிட்டு அழுதாள். கண்ணனை எண்ணி தொழுதாள். பூமியின் பாரத்தைக் குறைக்கவும், தீயவர்களை வேரறுக்கவும் கிருஷ்ணராக அவதாரம் கொண்டார் திருமால். சிறுகுழந்தையாக இருந்தபோதே கம்சன் உள்ளிட்ட எண்ணற்ற அரக்கர் கூட்டத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டினார். அதுமட்டுமா? ஊசி முனை நிலத்தைக் கூட உற்றாருக்குத் தரமாட்டேன் என்று அநியாயம் பேசிய கௌரவர்கள் கூட்டத்தை ஒழிக்க தர்மத்தின் வழியே நின்றார். பாண்டவருக்குத் துணையாக கௌரவருக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார். கிருஷ்ணர். பாஞ்சாலிக்கு நியாயம் சேர்க்கவும், பாண்டவரின் உரிமை காக்கவும் இந்த தர்ம யுத்தம் கண்ணனுக்கு அவசியமானது. குருஷேத்ர போர் முடிந்ததும் தீயவர்கள் கூட்டம் ஒழிந்து பூமியின் பாரம் குறைந்தது. கிருஷ்ணரின் தர்ம யுத்தமும் வென்றது.

இப்படி ஸ்ரீமன் நாராயணனே யுகந்தோறும், அவதாரம் தோறும் தீயவர்களை ஒழிக்க பல்வேறு தர்ம யுத்தங்களை மேற்கொண்டார் என அறிகிறோம். நல்லதுக்கு எதிரான எந்த சக்தியும் எப்போதும் வீழ்த்தப்படும் என்பதே தர்ம யுத்தங்கள் நமக்குச் சொல்லும் பாடம். திருமால் மட்டுமல்ல, முப்புரம் எரித்த சிவன், அட்டவீரட்டம் எனப்படும் தலங்கள் யாவும் ஈசன் நடத்திய தர்ம யுத்தங்களைக் குறிக்கிறது. நவராத்திரி பண்டிகையே அம்பிகை அசுரர்களை எதிர்த்து நடத்திய தர்ம யுத்தத்தைதான் சொல்கிறது. சூரசம்ஹாரம், முருகப்பெருமானின் தர்ம யுத்தத்தையும்,  தீபாவளி சத்யபாமாவின் தர்ம யுத்தத்தையும் காட்சிப்படுத்துகிறது. காலங்கள் தோறும் தர்ம யுத்தங்கள் வெவ்வேறு வடிவங்களில் நடந்துகொண்டுதான் வருகின்றன.