Published:Updated:

அன்னபூரணி நமோஸ்துதே!

கடவுள் அறிவோம்! தி.தெய்வநாயகம், ஓவியம்: பத்மவாசன்

அன்னபூரணி நமோஸ்துதே!

கடவுள் அறிவோம்! தி.தெய்வநாயகம், ஓவியம்: பத்மவாசன்

Published:Updated:

காசி என்றதும் புண்ணிய கங்கை மற்றும் காசிவிஸ்வநாதருக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது, ஸ்ரீஅன்னபூரணி தரிசனம். சொர்ண விக்கிரகமாக... இடக்கரத்தில் அன்ன பாத்திரமும், வலக்கையில் கரண்டியும் கொண்டு அன்னமிடும் கோலத்தில் புன்னகை தவழ அன்னை அருள்பாலிக்க, அருகிலேயே பிட்சாடனராக சிவமூர்த்தி!

இதென்ன அற்புதம்? உலகுக்கே படியளக்கும் பரமனுக்கு பிக்ஷையிடும் கோலத்தில் அன்னை அருள்வதன் காரணம் என்ன?

பிரம்மனின் சிரத்தை கிள்ளியெறிந்ததால் சிவனார் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளான கதை நாமறிந்ததே. தோஷத்தோடு பிரம்ம கபாலமும் அவரின் திருக்கரத்தில் திருவோடாக ஒட்டிக் கொண்டது. அதில் அன்னம் நிரம்பினால் மட்டுமே, சிவனார் கையை விட்டு அந்த ஓடு நீங்கும். ஆனால், சிவனார் எங்கெங்கெல்லாமோ பிக்ஷை ஏற்றும் திருவோடு நிறைந்தபாடில்லை. நிறைவில்  காசியம்பதிக்கு வந்து அன்னபூரணியிடம் அவர் பிக்ஷை ஏற்க திருவோடு நிரம்பியது; அவர் கரத்தைவிட்டும் அகன்றது என்ற திருக்கதையைச் சொல்கின்றன புராணங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருமுறை, கடும் பஞ்சத்தால் பரிதவித்தது காசிமாநகர். அன்னையின் மனம் பொறுக்குமா? அன்னபூரணியாக பத்ரிகாச்ரமத்தில் இருந்து காசிக்கு வந்தாள். அங்கு வசிக்கும் உயிர்க்கெல்லாம் அன்னமிட்டு பசிப்பிணி போக்கினாள். அவளின் வருகையால் காசி மீண்டும் வளம் பெற்றது என்கின்றன ஞானநூல்கள்.

அன்னபூரணி நமோஸ்துதே!

இன்ப-துன்பங்களை நுகர்வது நம் உடல்தான். அந்த உடல் வளர்க்க உணவு தேவை. அதை குறையின்றி அருள்பவள் அன்னபூரணி. எத்தனையோ செல்வங்கள் இவ்வுலகில் உண்டு. அவற்றையெல்லாம் எவ்வளவு கொடுத்தாலும் மனம் அவ்வளவு சீக்கிரம் திருப்தியுறுவது இல்லை. ஆனால், அன்னம் எனும் செல்வம் அப்படியானதல்ல; சிறிதளவே உண்டபோதிலும் 'போதும்’ என்று திருப்தியும் நிறைவும் ஏற்பட்டுவிடும். வயிறு நிரம்ப உள்ளத்திலும் ஒருவித பூரணம் ஏற்பட்டுவிடுகிறது. அது அன்னத்தால் வந்த பூரணத்துவம். அதை நிறைவாக அருள்வதால் அன்னைக்கு 'அன்னபூரணி’ என்று திருநாமம். அவளிடம் அன்னம் ஏற்கும் இறைவனுக்கு, 'அன்னவிநோதன்’ என்று திருப் பெயர்.

காசியில் தங்க அன்னபூரணியை தீபாவளியை யொட்டி மூன்று நாட்களுக்கு  மட்டும் தரிசிக்கலாம். தீபாவளித் திருநாளில் தங்கக்கவச தரிசனமும், லட்டுத்தேர் திருவுலாவும் காசியில் பிரசித்தம். சரி! காசிக்குச் செல்ல முடியாதவர்கள் அன்னையைத் தரிசிப்பது எங்ஙனம். காசிக்குச் செல்லமுடியாவிட்டால் என்ன காஞ்சிக்கு செல்லுங்கள். அங்கே... 'ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும்’ காமாட்சியை தரிசியுங்கள். அவளும் அன்னபூரணியாகவே அருள்கிறாள் என்பார்கள் பெரியோர்கள். தவிர, காஞ்சியில் அன்னபூரணிக்கென்று தனிச் சந்நிதியும் உண்டு. பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த தேவியை வழிபட வீட்டில் பசிப்பிணி நீங்கும்.

உணவு மட்டுமா? 'ஞானம், வைராக்கியம் எனும் மோட்ச சாதனங்களையும் அவள் வழங்குகிறாள்’ என்கிறார் ஆதிசங்கரர்.    

வீட்டில் சிறிய வெண்கலம் அல்லது பித்தளை பாத்திரத்தில் அரிசி நிரப்பி அதில் ஸ்ரீஅன்னபூரணி விக்கிரகத்தை வைத்து, பூஜை வேளையில் அன்னபூரணி சதகம், அன்னபூரணி அஷ்டகம் முதலான துதிப்பாடல்களைப் பாடி அம்பிகையை வழிபட, தன தானியங்கள் பல்கிப் பெருகும். வறுமை, பசிப்பிணி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

ஐப்பசி மாதத்தில் தீபாவளித் திருநாள் மட்டுமின்றி ஐப்பசி பௌர்ணமியும் ஸ்ரீஅன்ன பூரணிக்கு உகந்த திருநாள் (இந்த வருடம் வரும் நவம்பர்6ம் நாள் ஐப்பசி பௌர்ணமி). அன்று, நம் வீட்டில் இருக்கும் அன்னைக்கு அபிஷேகஅலங்காரம் செய்வித்து, நெய் தீபம் ஏற்றிவைத்து,

அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராண வல்லபே
க்ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாந்தேஹி ச பார்வதி:

எனும் சுலோகம் சொல்லி மனமுருகப் பிரார்த்தித்து வழிபட, சகல சௌபாக்கியங்களும் பெருகும். அன்றைய திருநாளில் சிவாலயங்களில் நிகழும் ஐப்பசி அன்னாபிஷேக வைபவத்தைத் தரிசித்து வருவதாலும் பெரும் புண்ணியம் சேரும்.

இன்னும் அறிவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism