Published:Updated:

கேள்வி - பதில்

திருமணங்கள்... பிரிவும் தோல்வியும் ஏன்?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

திருமணங்கள்... பிரிவும் தோல்வியும் ஏன்?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி - பதில்

? திருமணத்தில் முறைகேடுகள், அடுக்கடுக்கான விவாகரத்துகள், கலப்புத் திருமணம், அதனால் கௌரவ கொலைகள் என்று நாளேடுகளில் வரும் செய்திகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. இன்றைய இளையதலைமுறை அழிவுப் பாதையில் செல்கிறதோ என்று அச்சம் நேரிடுகிறது. 'எல்லாவற்றிலும் சுதந்திரம்’ என்றிருக்கும் இன்றைய நிலை சரியானதுதானா?

- வி.ரவிச்சந்திரன், திண்டிவனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் கண்ணோட்டம்:

சுதந்திரம் தனிமனித ஒழுக்கத்துக்கு பங்கம் ஏற்பட வழிவகுத்து விடக் கூடாது. விவாகரத்தை எடுத்துக்கொள்வோம். எந்தக் கண்ணோட்டத்தில் நாம் ஆட்சியாளர்களாக அமர்ந்து விவாகரத்தை அமல்படுத்தினோமோ, அந்தக் குறிக்கோள் பல பக்க விளைவுகளை உண்டுபண்ணி, திருமண வாழ்வை சீரழிப்பதில் முற்றுப்பெற்றுள்ளது.

பெற்றோர் பரிந்துரையில் நடந்த திருமணங்களில், வாழ்நாள் முழுவதும் அவர்களின் ஒத்துழைப்பு தொடர்ந்ததால், நம்பிக்கை வலுப்பெற்று திருமண வாழ்க்கை இனித்தது. மணமக்களால் ஒட்டுமொத்தமான வாழ்க்கைச் சுவையை உணர முடிந்தது. பின்னர் கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பதை ஏற்றுக்கொண்ட நாம், திருமணத் துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் சுதந்திரம் பெற்றோம். விளைவு... விருப்பங்களை விடவும் விபரீதங்களே நம்மை ஆட்கொண்டு அலைக்கழிக்கின்றன.

? அப்படியென்றால், சுய விருப்பு  வெறுப்புகள் கூடாது என்கிறீர்களா?

சுய விருப்பு  வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே  பண்டைய சம்பிரதாய திருமணத்தை ஒதுக்கி, பதிவுத் திருமணத்துக்குப் பெருமை அளித்தோம். இன்றைக்கு விபரீதமான பதிவுத் திருமணங்கள் அரங்கேறியதாக நாளேடுகள் தெரிவிக்கின்றன. காதலில் ஏமாந்தவர்கள் நீதி மன்றத்தையும் காவல் நிலையத்தையும் அணுகும் அவலம் தென்படுகிறது. சிறுமிகளிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் அளவுக்கு மனக்கட்டுப்பாடு தளர்ந்து காணப்படுகிறது. தவறான முறையில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் அமைப்புகள் அரசாங்கத்தின் கண்ணில் படாமல் நடந்து கொண்டிருக்கின்றன. இனம், மொழி, பருவம் ஆகியவற்றைக் கண்டுகொள்ளாமல், காதல் திருமணங்களும் கலப்புத் திருமணங்களும் அரங்கேறுகின்றன. ஆனால், அவற்றில் அதிகமானவை தோல்வியையே தழுவுகின்றன. விரக்தியடைந்த அவர்களின் வாழ்க்கை துயரத்தில் தத்தளிக்கிறது. எண்ணிக்கையில் அதிகமான விவாகரத்தானது, அவர்களது குழந்தைகளையும் அனாதைகளாக்கிவிடுகிறது. வேறு இணையுடன் இணைந்தாலும் வியாபார ரீதியில் உடலுறவைச் சந்திக்கிறார்களே தவிர, இருவரது மனமும் நம்பிக்கையுடன் இணைவதில்லை.

கேள்வி - பதில்

கணவன்  மனைவி என்ற புனித உறவு மறைந்துவிட்டது. 'வாழ்வின் ஆதாரம் திருமணம்’ என்பது மறைந்து, வாழ்வில் சுவைக்க வேண்டிய நுகர்பொருட்களில் ஒன்றாகிவிட்டது திருமணம்.இளைஞர்களிடம் மட்டுமின்றி, முதியோர்கள் சிலரிடமும் கள்ளக் காதல் தென்படுகிறது!

பண்டைய காதல் காவியங்கள் முக்காடு போட்டுக்கொண்டு மறைந்து வாழ்கின்றன. தற்போது மதமும், மொழியும், இனமும் திருமணத்துக்கு இடையூறு அல்ல. வெளிநாட்டவரையும், முன்பின் தெரியாதவரையும்கூட திருமணத்தில் இணைத்துக் கொள்வார்கள். மறைமுகமாக பல திருமணங்கள் புரிந்த இளைஞர்கள் இருப்பதை நாளேடுகள் தெரிவிக்கின்றன. மாட்டு மந்தையில்  இருக்கும் காளைமாடு, விருப்பத்துக்கு உகந்த வகையில் எந்த பசுவுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். விலங்கினத்துக்கு உரிய இந்த இயல்பு,சில மனிதரிலும் தென்பட ஆரம்பித்திருக்கிறது.

? என்ன சொல்ல வருகிறீர்கள்... விருப்பப்படி இணைவதும், எதிர்பார்ப்பு பொய்க்கும்போது, இணையை சட்டப்படி விலக்குவதும் தவறு என்கிறீர்களா?

நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இப்படியான ஒரு வாய்ப்பை தவறாகப் பயன் படுத்தும்போது வாழ்க்கை நரகமாகிவிடுகிறது என்பதே எங்கள் கருத்து. இளமையில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்கள் வாழப் பிறந்தவர்கள். ஆனால் அவர்கள், வாழ்வின் நிறைவுக்கு நிரந்தர ஒத்துழைப்பை அளிக்க வேண்டிய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் மனமாற்றம் ஏற்பட வேண்டும். சட்டங்களால் மனமாற்றம் ஏற்படாது; சட்டங்கள் இருந்தும் பூதாகரமான சில விபரீத விளைவுகளைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதையும் தாண்டி யோசிக்கவேண்டும்.

பெற்றோர் பரிந்துரையில் நிகழ்ந்த பண்டைய திருமணங்கள் வெற்றிபெற்று விளங்கின. படித்துப் பட்டம் பெற்று, வேலைவாய்ப்பில் உயர்ந்து, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற ஆண்களும் பெண்களும் தங்களின் இணையைத் தேர்வு செய்வதில் தோல்வியையே தழுவுகிறார்கள். அவர்கள் மனமாற்றம் பெற்று வெற்றிபெற பண்டைய பண்பான நடைமுறைகளும் ஒழுக்கமும் தேவை. இவற்றைச் சிறு வயதிலேயே அவர்களுக்கு ஊட்டினால், பல இன்னல்கள் தோன்றாமலேயே போய்விடும்.

புது சிந்தனையாளர்களின் விஞ்ஞான விளக்கங்கள், தாம்பத்திய வாழ்க்கையின் சிறப்பைத் தக்கவைக்க உதவாது. அன்பும், பண்பும், பரிவும், சகிப்புத்தன்மையும், ஒழுக்கமும்தான் அதை ஈட்டித்தரும்.  இந்த குணநலன்களின் குறைபாடே மனித இயல்பை இழக்கவைத்து, விலங்கின இயல்பை ஏற்க வைத்திருக்கிறது. சிறுசிறு விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி, பூதாகரமாகக் காண்பித்து விளக்கும் சீர்திருத்தவாதிகளுக்கு இந்த அவலம் கண்களில் படாதது அதிசயம். கடவுள்தான் கண் திறந்து இளைஞர்களின் மனதில் நல்ல எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.

இரண்டாவது கோணம்...

அறியா பருவத்தில் இணைந்த திருமணங்கள் பல விதவைகளைத் தோற்றுவித்திருக்கிறது. அந்தப் பெண்ணின் சுதந்திரமும் பறிக்கப்பட்டு கூண்டுக்கிளியாக வாழும் நிலைக்குத் தள்ளி, அவளின் வாழ்க்கையை மங்கவைத்திருக்கின்றன. ஒருதலைப் பட்சமான அன்பும், ஆர்வமும் அவளை இயந்திரமாகவே மாற்றியிருக்கின்றன. அவர்களுக்காகப் பரிந்துரைக்கவோ, அவர்களது வாழ்க்கைக்கு பொறுப்பேற்கவோ அன்றைய சமுதாயம் முன்வரவில்லை.

? எனில், இன்றைய நிலை பெண்களுக்கு சாதகமாக இருக்கிறதா?

அதில் சந்தேகம் என்ன?! அன்றைக்கு அவர்கள், கணவனை இழந்ததும் வாழ்க்கையையும் இழந்து விடுவார்கள். பல இன்பங்களைச் சுவைக்கும் எண்ணம் இருந்தும் அவற்றை ஏற்கவிடாமல், அன்றைய சமுதாயம் அவர்களை முடக்கி வைத்தது. திரைமறைவில் பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருந்தது. மறைமுகமாக பலபேரது விருப்பத்துக்கு இணங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. திருட்டுத்தனமான உறவில் வெளிவந்த குழந்தைகளைக் காப்பாற்றுவதிலும் சிக்கல் இருந்தது. அவர்களை சமுதாயம் பாவம் செய்தவர்களாகப் பார்த்தது. படிப்பும் பட்டமும் பெற்று, வேலை வாய்ப்பை ஏற்று, சிந்தனை வளம் பெற்றபிறகு, இருவரும் தங்களது விருப்பப்படி வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானவுடன், விதவை ஆவதும், ஒருதலைப்பட்சமான அன்பும் அடிமைத்தனமும் முழுமையாக மறைந்து, அவர்களுக்கு புதுவாழ்வு மலர்ந்தது.

வாழ்வில் இணைந்தபிறகு எதிர்பாராத இன்னலுக்கு ஆளாகி, உறவைத் தொடரவும் முடியாமல் விடவும் முடியாமல் மன உளைச்சலில் வாடுபவர்களைக் காப்பாற்ற விவாகரத்து முளைத்தது. விவாகரத்து பெற்று மறுமணத்தில் இணைந்தவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

? எனில், தற்கால தலைமுறையினர், வாழ்வில் தோற்பதே இல்லை என்கிறீர்களா?

அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படும் தோல்வியைப் பெரிதாக்கி, அது வெற்றி பெறவில்லை என்பது சரியான கணிப்பல்ல. சுயநலமும், கட்டுப்பாடு இன்மையும் தென்படும் சில ஆண்களிலும் பெண்களிலும் விவாகரத்து அடுக்கடுக்காகத் தொடர்வது தவிர்க்க முடியாத ஒன்று. 'திருடுவது தவறு’ என்று சட்டம் இருந்தும் திருடுவதும், அதற்கான தண்டனை வழங்குவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கேள்வி - பதில்

'கற்பு’ என்பதைச் சுட்டிக்காட்டி தகாத கணவனையும், துன்புறுத்தும் கணவனையும் சுமக்கவைத்து வேடிக்கை பார்த்தது, அன்றைய சமுதாயம். ஆணாதிக்கம் பெண்களைப் பந்தாடியது. முதியோரும் இளம் குமரிகளை மணந்து, அவர்கள் வாழ்க்கையையும் எண்ணங்களையும் அழித்ததும் உண்டு. ஆண்களுக்கு எத்தனை மனைவிகளும் இருக்கலாம். ஆனால், பெண்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால், இன்றைய ரோபோக்கள் போன்று அவர்கள் வளைய வந்தார்கள். பிறப்புரிமையான தனது விருப்பத்தை பிறருக்காக அழிக்க வேண்டி வந்தது.

ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு என்பதை வலியுறுத்தி, அவர்களை நுகர்பொருளாகவே பயன்படுத்தியது அன்றைய ஆணாதிக்கம். அவர்களையும் அப்படியே எண்ணவைத்தார்கள். கற்புக்கரசி, மணாளனே மங்கையின் பாக்கியம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்... என்றெல்லாம் அவர்களை இணங்க வைத்து, தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டார்கள். ஆண் சுரத்தில்லாதவனோ, கையாலாகாதவனோ, பேடியோ, பயந்தாங்குளியோ, அசடோ...  எப்படி இருந்தாலும் அவனுக்குப் பாதுகாப்பும், பணிவிடையும் செய்வதற்குப் பெண்களைப் பயன்படுத்தியவர்களும் உண்டு!

அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி, அவர்களும் சுதந்திரமாகச் செயல்பட்டு, பிறப்புரிமையில் கிடைக்க வேண்டியதைப் பெற்று மகிழவேண்டும் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்த இன்றைய மாற்றங்கள் நிச்சயம் தேவை. அதை குறையாகப் பார்த்து வேறு கோணத்தில் விளக்கமளிப்பது தவறு. பிறப்பில் சமமான இருவரில் ஒருவர் மற்றொருவருக்கு அடிமையாகி, தன் விருப்பங்களை அழித்துக் கொள்வது தகாது.

மூன்றாவது கோணம்...

ஜோதிடத்தில் எவருக்கும் நம்பிக்கை இல்லை. வருங்காலத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், 'தகுதி இல்லை’ என்று தெரிந்தும் விருப்பத்தை அடையத் துடிக்கும் மனம் கொண்டவர்கள், பிறரது வாழ்க்கைச் செழிப்பைப் பார்த்து பொறாமையில் குறுக்கு வழியில் முன்னேற எண்ணுவோர், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போன்று பேராசையில் சிந்தனை வளம் குன்றிப் போன மனம் இருப்பவர்கள்... இவர்கள் அத்தனை பேரும் ஜோதிடத்தை அணுகுவார்கள். காரணம் அதன் மீதான நம்பிக்கையில் அல்ல; வேறுவழி தெரியாததால் ஜோதிடரிடம் அடைக்கலம் ஆவார்கள். தன்னம்பிக்கையும், தகுதியும், சிந்தனை வளமும் இருப்பவர்கள் ஜோதிடத்தைப் பற்றி நினைக்கமாட்டார்கள்.

? இன்றைய நடைமுறை, சட்டதிட்டங்களைப் பற்றி பேசும்போது ஜோதிடத்தை ஏன் இழுக்கிறீர்கள் என்று தெரியவில்லையே?

ஜோதிடரீதியாகவும் இன்றைய தலைமுறை யினர் ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள் என்று சொல்லவருகிறோம். சொல்வளத்தால் ஜோதி டத்தை உயர்த்திப் பேசுபவர்கள், எழுதுபவர்கள், அந்த சேவையை வேலைவாய்ப்பாக ஏற்றவர் களும் உண்டு. ஜோதிடம் எதற்கு உதயமானது, அதன் பயன்பாடு என்ன என்பதைப் புரிந்து கொண்டவர்களும்கூட, மனசாட்சிக்கு விரோத மாக சூழலைப் புரிந்துகொண்டு, அதை வேலை வாய்ப்பாகப் பயன்படுத்துவது உண்டு. இதில் இரட்டை வேடம் போடுபவர்களும் உண்டு.

'ஜாதக பரிவர்த்தனகேந்திரம்’ என்ற பெயரில், பல நிறுவனங்கள் திருமணத்தில் இணையத் துடிக்கும் சிந்தனைவளம் பெற்றவர்களையும் ஈர்த்து தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்தியிருக் கின்றன. நேர்காணலில் சந்தித்து, திருமண வாழ்வில் இணைவதற்குத் தயாரானவர்களையும், இந்த ஜாதகம் திசைதிருப்பி தேடுதலைத் தொட ரவைத்து, அவர்களை அலைக்கழிக்கிறது. இந்த நிலைமை அந்த நிறுவனங்கள் வளர ஏதுவாக மாறுகிறது.

மேட்டுக்குடி மக்களிடமும் படித்த இனத்திலும் ஜோதிடம் பார்ப்பது இல்லை. பாமர மக்களும், நடுத்தரவர்க்கமும் அறியாமையால் அதன் விளக்கங்களில் சிக்கி முடிவெடுக்க முடியாமல், நல்ல இணைப்புகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். இப்படி ஜோதிடத்தின் சிபாரிசில் நடந்த திருமணங்களும் அதிக எண்ணிக்கையில் விவாகரத்தைச் சந்தித்து இருக்கின்றன.

? இப்போது இருப்பதைவிட பண்டைய நாட்களில் தானே ஜோதிட ஆதிக்கம் அதிகம் இருந்தது?!

பண்டைய நாளில் ஜோதிட சிபாரிசை எதிர்பார்க்காமல் திருமணம் நடந்தேறிவிடும். திருமணம் தர்மசாஸ்திரத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிகழ்வு. ஜோதிடப் பொருத்தத்தை அது எதிர்பார்க்காது. பண்டைய தம்பதிகள் இணைந்து வாழ்ந்து இன்பத்தைச் சுவைத்து மகிழ்ந்தார்கள். காதல் முற்றும் தறுவாயில் சட்ட திட்டங்களைத் தகர்த்தெறிந்து விரும்பியவளின் கைப்பற்றுவான்.

தற்காலத்தில் இருவரும் படிப்பிலும், சுதந்திரத் திலும், தகுதியிலும், அழகிலும், வயதிலும் சமமாக இருப்பதால் விட்டுக்கொடுக்கும் எண்ணம் இருவரிலும் இருக்காது. தங்களது சுதந்திரத்தைப் பாதுகாக்கும்பொருட்டு, இருவருமே தங்களது விருப்பத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதில் முடிவெடுக்க முடியாமல் அவர்களது திருமண பந்தம் தோல்வியைத் தழுவும். இப்படி கலங்கிய மனதில், ஜோதிடப் பொருத்தம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, முடிவை மாற்றிக்கொள்ள வைக்கும். கல்யாண சேவை நிறுவனங்களும் அவர்களைக் குழப்பிவிடுவது உண்டு. பலவீனத்தைப் பயன்படுத்தி முன்னேற நினைப்பது நாகரிகமான செயல் அல்ல.

? சமுதாயம் மேம்பட வேறு என்னதான் தீர்வு?

அவர்களின் மனப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அவர்களில் மனமாற்றம் ஏற்பட வேண்டும். இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. அது இயற்கையின் நியதி. இரண்டும் கலந்த அனுபவம் தாம்பத்தியத்தின் அலாதியான இன்பம். கருத்து மாறுபாடு இல்லாத தம்பதிகளே இருக்க முடியாது. கருத்து மாறுபாடு உதயமாகி, அதில் ஆராய்ந்து முடிவெடுத்துச் செயல்படும்போது ஏற்படும் இன்பத்தை வேறெதிலும் காண முடியாது. கசப்பையும் இனிப்பையும் பாகுபாடில்லாமல் ஏற்கும் மனம் இருந்தால் இன்பத்தைச் சுவைப்பது உறுதி. கருத்து மாறுபாடு அவர்களின் இன்பத்தைப் பெருக்க உதவ வேண்டும். தெளிவான மனம் தங்களது இணைப்பையும், சூழலையும் புரிந்து கொண்டு, கசப்பையும் ஏற்கவைத்து இனிப்பை சுவைக்க உதவும்.

கேள்வி - பதில்

நேர்காணலிலும் தங்களது சுயசிந்தனையில் முடிவெடுக்க வேண்டும். வெளியே இருந்து வரும் சிபாரிசுகள் உள்நோக்கம் உடையதாக இருக்க வாய்ப்பு உண்டு. கல்வி பயின்று, திறமை பெற்ற இன்றைய இளைஞர்கள் ஆற அமர ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அதன்பிறகு தோன்றும் இன்னல்களை எதிர்த்துப் போராடி வெற்றியை எட்ட முயற்சிக்க வேண்டும். அதற்கு உகந்த வகையில் மனோதிடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மேன்மேலும் லோகாயத வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு மனோதிடத்தைப் பேணிக்காப்பது கடினமல்ல. சிந்தனை வளம் பெற்ற முதியோர்கள், தொலைநோக்குப் பார்வையுடன் இளையோர் களின் மனப்போராட்டத்துக்கு முடிவுகட்ட உதவ வேண்டும்.

இன்றைய இளைஞர்களில் இருந்து தான் வருங்கால குடிமகன்கள் உருவாக வேண்டும். இப்போது சந்திக்கும் இன்னல்களின் தரத்தைக் கண்ணுற்று வருங்கால தலைமுறையில் அது தலைதூக்காமல் செய்யவேண்டும். பண்பும் பரிவும் சகிப்புத்தன்மையும் அத்தனை இளைஞர்களிலும் நீறு பூத்த நெருப்பு போல் உறங்கிக்கிடக்கும்.

அவற்றைத் தட்டியெழுப்பும் முயற்சி யில் முதியோர்கள் முனைய வேண்டும். மூன்றரை வயதில் கல்வியில் இணையும்போதே நல்ல எண்ணங்களைப் பிஞ்சு மனதில் பதியவைக்க வேண்டும். இன்றைய முதியோர்கள் தாங்கள் சந்தித்த இன்னல்களை நினைத்தாவது விழித்துக்கொண்டு, தங்களின் வாரிசுகளை வழிநடத்த வேண்டும்.

இளைஞர்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டால் அத்தனை இன்னல்களும் மறைத்துவிடும். கசப்பான அனுபவங்கள் தலைதூக்காது. பலவீனத்தைப் பயன்படுத்தி முன்னேறுபவர்கள் தானாகவே விலகிவிடுவார்கள். விவாகரத்தும் தலைதூக்காது. சட்டம் செய்யாத காரியத்தை ஒழுக்கம் நிறைவேற்றும். மனஉறுதியைப் பாதுகாத்தால் எந்த இடையூறும் தோற்றுவிடும். புதுப்புது சீர்திருத்தவாதிகள் முளைக்க மாட்டார்கள். சூழலுக்கு உகந்த புதுப்புது சட்டங்களும் இயற்ற வேண்டி வராது.

தனி மனிதனின் பண்பு, நடைமுறை  இவற்றைச் சீர்திருத்துவதற்கு சட்டம் போடுவது சமுதாயத்துக்குச் சுமை. ஒழுக்கத்தை ஊட்டினால் அத்தனை இடர்ப்பாடுகளும் மறைந்துவிடும். அவ்வப்போது ஒட்ட வைக்கும் சட்டங்கள் குழப்பத்தை அதிகமாக்கும். மனதை தெளியவைக்காது.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

இளைஞர்கள் இன்றைய நாட்டின் காவலர்கள். அவர்கள் மனமொடிந்து போனால் வீட்டுக்கும் நாட்டுக்கும் இழப்பு. திருமண இணைப்பு அவர்களுக்கு டானிக். மயக்க மருந்தில் அவர்களை தூங்கவைக்கக் கூடாது. இப்போது இருக்கும் சூழல் அவர்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறது. அதைத் தெளியவைக்க மனமாற்றம் தேவை. மாற்றத்தை உண்டு பண்ணுவது ஒழுக்கம். அதை அவர்களில் விளங்கச் செய்ய வேண்டும். எதிர்பாராத இன்னல்கள் அத்தனையும் விட்டில் பூச்சி போல் ஒழுக்கத்தில் எரிந்து விடும் மகிழ்ச்சியான வாழ்வு அனுபவத்துக்கு வரும்.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism