ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும்போது, மனம் கனிந்த பக்தியுடன்தான் செல்லவேண்டும்.அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப் பிரசாதமாகக் கிடைக்கப் பெறும்.

சென்னையைச் சேர்ந்த ராம பக்தர் ஒருவர், ஷீர்டி சாயிநாதரைப் பற்றியும், அவரை தரிசிக்கச் செல்லும் தன்னைப் போன்ற பஜனை கோஷ்டியினருக்கு அவர் மிகவும் தாராளமாகப் பணம் தருவதைப் பற்றியும் கேள்விப்பட்டு, தன் மனைவி, மகள், மைத்துனியுடன் ஷீர்டிக்குச் சென்று, பாபாவின் முன்னிலையில் ராமனின் புகழைப் போற்றும் பஜனைப் பாடல்களைப் பாடினார். பஜனை முடிந்ததும், பாபா அவர்களுக்கு ஏதேனும் பணம் கொடுப்பார். ஒருநாள் எதுவுமே கொடுக்கவில்லை. இதனால், பாபாவிடம் நிறைய பணம் பெற்றுச் செல்ல நினைத்து வந்த அந்த ராம பக்தர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்.

ஆனால், அவருடைய மனைவிக்கு ஆரம்பத்தில் பணத்தாசை இருந்தாலும், தினமும் பாபாவை தரிசித்து, அவர் முன்னிலையில் ராமனைப் போற்றி பஜனைப் பாடல்கள் பாடியதில், அன்றுதான் அவளுடைய மனதில் இருந்த பணத்தாசை அகன்றதுடன், பாபாவின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தியும் ஏற்பட்டுவிட்டது.  அப்போதுதான் அவள் நாளும் வழிபடும் ஸ்ரீராமனாக அவளுக்கு தரிசனம் தந்து அருளினார் பாபா. எல்லோரும் சாயிநாதரை தரிசித்தனர் என்றால், அந்த ராம பக்தரின் மனைவியோ ஸ்ரீசாயிநாதரின் உருவத்தில், தான் தினமும் பூஜிக்கும் ஸ்ரீராமபிரானையே தரிசித்தாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாயி பிரசாதம் - 3

பாபாவை துவாரகாமாயியில் தரிசித்துவிட்டுத் திரும்பியதும், அந்த ராம பக்தரின் மனைவி, பாபாவினிடத்தில் தான் ராமரை தரிசித்ததாகக் கூறினாள். மனைவியின் சொல்லை அவர் கொஞ்சமும் நம்பாமல், அவள் சொன்னதை இழித்தும் பழித்தும் பேசினார். தம்மிடம் பரிபூரணமாக சரணாகதி அடைந்துவிட்ட அந்தப் பெண்மணியின் கணவரைத் திருத்தி ஆட்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு இப்பொழுது சாயிநாதருக்கு! அன்றைய இரவே, சாயிநாதர் தம்முடைய லீலையைத் தொடங்கிவிட்டார்.

அன்று இரவு, அந்த ராம பக்தர் உறங்கும்போது, தனது கைகள் இரண்டும் பின்புறமாகக் கட்டப்பட்டு, சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு, ஒரு காவலரால் துன்புறுத்தப்படுவதுபோல் கனவு கண்டார். கனவில், சிறைக்கம்பிகளுக்கு வெளியே பாபா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த அவர் பாபாவிடம், ''பாபா, நீங்கள்தான் என்னை எப்படியாவது இந்தச் சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும்' என்று மன்றாடினார்.

''இதில் நான் தலையிடுவதற்கு இல்லை. உன்னுடைய பாவங்கள்தான் உன்னைப் பின்தொடர்ந்து வந்து, உன்னைத் துன்புறுத்துகின்றன'' என்றார் பாபா.

''பாபா, உங்களைத் தரிசித்த மாத்திரத்திலேயே என்னுடைய பாவங்கள் நீங்கிவிட்டிருக்குமே..! அப்படியிருக்க, நீங்கள் இப்படிச் சொல்லலாமா?'' என்று கேட்டார் அவர்.

''அப்படியா சரி, உன் கண்களைக் கொஞ்சம் மூடிக் கொள்'' என்றார் பாபா. அவரும் அப்படியே கண்களை மூடிக்கொண்டு, சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தபோது, திடுக்கிட்டார். அவரைத் துன்புறுத்திய காவலர் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

ஏற்கெனவே பயந்து நடுங்கிக் கொண்டு இருந்த அந்த மனிதரை, ''நீ இப்போது வசமாக மாட்டிக் கொண்டாய். காவலனைக் கொன்றதற் காக நீ கடுமையாகத் தண்டிக்கப்படப் போகிறாய்'' என்று சொல்லி மேலும் பயமுறுத்தினார் பாபா.

''பாபா, ஏன் என்னை இப்படிக் கஷ்டப்படுத்து கிறீர்கள்? என்னை இந்தத் துன்பத்தில் இருந்து விடுவிக்க தங்களைத் தவிர யாரால் முடியும்? தாங்கள்தான் என்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்'' என்று மன்றாடினார் அவர்.

''என்னிடத்தில் பூரண நம்பிக்கை உனக்கு இருக்கிறதா?'' என்று பாபா கேட்க, அவரும், ''தங்களிடத்தில் இப்பொழுது எனக்குப் பூரண நம்பிக்கை உள்ளது' என்று கூறினார். அவருடைய மனமாற்றத்தை உணர்ந்துகொண்டவர்போல், திரும்பவும் அவரைக் கண்களை மூடிக்கொள்ளு மாறு கூறினார் பாபா. அதேபோல் அவரும் கண்களை மூடித் திறந்தபோது, அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபட்டதை அறிந்தார். பாபாவின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் அந்த ராம பக்தர்.

பின்னர் பாபா அவருடைய விருப்பப்படி சமர்த்த ராமதாசராக தரிசனம் கொடுக்க, அவ்வளவில் அந்தக் கனவும் முடிவுக்கு வந்தது.

சாயி பிரசாதம் - 3

மறுநாள் காலையில் உறக்கத்தில் இருந்து எழுந்தபோது, அந்த ராம பக்தருடைய மனதில் ஒரு தெளிவும், பரவசமும் நிறைந்திருந்தது. பின்னர் துவாரகாமாயிக்குச் சென்று பாபாவை தரிசித்து வணங்கியபோது, பாபா அவரை முழுமையாக ஆசீர்வதித்ததுடன், அவருக்குப் பணமும் இனிப்புகளும் கொடுத்து அனுப்பினார்.

குடும்பத்தில் ஒரே ஒருவர் தன்னை நம்பிக்கையுடன் சரண் அடைந்திருந்தாலும்கூட அவர்பொருட்டு அந்தக் குடும்பத்தையே காப்பாற்றும் கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர்.

ஒரு பக்தருக்கு எந்த தெய்வத்திடம் பிரீதியோ, அந்தத் தெய்வத்தின் வடிவிலேயே பாபா அவருக்குக் காட்சி தந்த நிகழ்ச்சிகள் அவரின் திவ்விய சரிதத்தில் எத்தனையோ காணப்படுகின்றன.

சிறந்த சிவபக்தனான மேகாவுக்கு சிவபெருமானாக அருள் புரிந்தது, நானாசாஹேப் நிமோன்கரின் மகனான ஸோம்நாத் தேஷ்பாண்டேக்கு மாருதியாகக் காட்சி தந்தது, பாண்டு ரங்க விட்டலனின் பக்தர்களுக்கு பாண்டுரங்கனாக தரிசனம் தந்தது என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிலிர்ப்பூட்டும் பிரசாதங்களாகும்.

சாயிநாதரின் ஜீவிதமும் சரி, அவருடைய உபதேசங்களும் சரி, அவருடைய லீலைகளும் சரி... எல்லாமே நம்முடைய மன மாசுகளை அகற்றி, மனித நிலையில் இருந்து தெய்விக நிலைக்கு நம்மை உயர்த்துகின்றன.

ஸ்ரீசாயி அஷ்டோத்திர சத நாமாவளிகளில்,

ஆனந்தாய நம: ஆனந்ததாய நம:  - என இரண்டு நாமாவளிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம். ஆனால், அந்த ஒரு வித்தியாசத்தில்தான் எவ்வளவு பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது தெரியுமா?

இந்த இரண்டு நாமாவளிகளுக்கும் பொருத்த மாக பாபா எத்தகைய அதிசயங்களை நிகழ்த்தி யிருக்கிறார் தெரியுமா..?

-பிரசாதம் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism