Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 17

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி

துங்கா நதி தீரத்தில்... - 17

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி

Published:Updated:

ரஸிம்ம பர்வதத்தில் அந்தி சாயும் பொழுதில், ஏகாந்தமாக ஸ்ரீசந்திரமெளலீசுவர பூஜை செய்தபடி தியானத்தில் இருநச்ர் ஸ்ரீஸ்வாமிகளை நோக்கி இரண்டு புலிகள் ஆக்ரோஷமாகப் பாய்ந்து வந்த நிலையில், ஏதொன்றும் அறியாதவர் போலவே ஸ்வாமிகள் தியானத்திலேயே திளைத்திருந்தார். ஆனாலும், அவருடைய அன்பு ததும்பும் பார்வை அனுக்கிரஹம் செய்வதுபோல் அந்தப் புலிகளின்மீதே பதிந்திருந்தன.

துங்கா நதி தீரத்தில்... - 17

 ஸ்வாமிகளுக்குப் பாதுகாப்பாக நின்றிருந்த பாராகாரர்கள்  என்ன செய்வதென்றே புரியாமல், ஒரு புதர் மறைவில் சென்று மறைந்துகொண்டனர். ஸ்வாமிகளை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து வந்த அந்த இரண்டு புலிகளும், ஸ்வாமிகளை நெருங்கியதும் அப்படியே அசைவற்று நின்றுவிட்டன. அதுவரை ஆக்ரோஷத்தினால் நெருப்புத் தணலென சிவந்து காணப்பட்ட அந்தப் புலிகளின் கண்களும்கூட, தங்கள்மீது ஸ்வாமிகளின் அன்புப் பார்வை பதிந்ததுமே, ஆக்ரோஷம் அகன்று சாந்தம் தவழும் கண்களாகப் பிரகாசித்தன. ஸ்வாமிகள் தியானத்தில் திளைத்தபடி ஸ்ரீசந்திரமெளலீசுவர பூஜை முடித்து தீபாராதனை காட்டும்வரை, மந்திரத்தால் கட்டிப்போட்டதுபோல் அசைவற்று நின்றிருந்த அந்தப் புலிகள், அதன்பின் தாமாகவே வந்த வழியில் திரும்பிச் சென்றுவிட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இது சாத்தியம்தானா’ என்ற சந்தேகம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஏற்படுவது இயல்புதான். மகான்களைப் பொறுத்தவரை இப்படியான நிகழ்வுகள் சாத்தியமே! குருவருளாலும் யோக ஸித்தியினாலும் அனைத்து உயிர்களிடத்தும் அந்தக் கடவுளையே கண்டு அன்பு செலுத்தக்கூடிய பரிபக்குவ மனநிலையைப் பெற்றுவிட்ட மகான்களின் அருட்பார்வையில், ஓரறிவு முதல் ஆறறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுமே பகைமை மறந்து, பாச உணர்ச்சியினால் கட்டுண்டு இருக்கும். அதிலும், அனைத்து உயிர்களிடத்தும் சமபாவம் கொண்டவர் அல்லவா நம் ஸ்வாமிகள்! ஸ்வாமிகளின் முன்னிலையில் அனைத்து ஜீவன் களுக்குமே அப்படியான மனநிலை வாய்ப்பது என்பதும் இயல்புதானே?!

இங்கே இன்னொரு நிகழ்ச்சியையும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

ஒருமுறை, ஸ்வாமிகள் ஒரு மரத்தின் அடியில், பீடத்தில் அமர்ந்து, சிஷ்யர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். சிஷ்யர்கள் தாம் சொல்லுவதைக் கவனிக்காமல், ஒருவித கலக்கத்துடன் இருப்பதைக் கண்டு, அவர்களுடைய கலக்கத்துக்கான காரணத்தைக் கேட்டபோது, ஸ்வாமிகள் அமர்ந்திருந்த பீடத்தின் அடியில் ஒரு ராஜநாகம் படமெடுத்த நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர். அதைக் கேட்டு ஸ்வாமிகள் சற்றும் பதற்றம் அடையாமல், பலகையைவிட்டு எழுந்திருக்காமலேயே ஒரு பக்கமாக நகர்ந்து, மற்றொரு பக்கத்தை இடக் கையால் பிடித்துத் தூக்கினார். 'ஸ்வாமி பலகைக்கு அடியில் கையைக் கொண்டுபோகிறாரே, ராஜநாகம் அங்கே படமெடுத்து நிற்கிறதே, என்ன ஆகுமோ’ என்று சிஷ்யர்கள் பதறிப் போனார்கள். ஆனால், அந்த ராஜநாகம் அவர்களுடைய பதற்றத்தைப் போக்கும் விதமாக தன் படத்தைச் சுருக்கிக்கொண்டு, அங்கிருந்து அகன்றது.

துங்கா நதி தீரத்தில்... - 17

அதேபோல், ஸ்வாமிகள் காட்டுப் பாதையில் நடந்து செல்லும்போது, அவருடைய காலடிச் சத்தம் கேட்டு ஏதேனும் பாம்பு சரசரவென வேகமாகப் போக ஆரம்பித்தால், ஸ்வாமிகள் அந்தப் பாம்பின் பதற்றத்தைத் தணிவிப்பதுபோல், 'மெள்ள... மெள்ள’ என்பார். உடனே அந்தப் பாம்பும் அச்சம் நீங்கி, தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, மெதுவாக நிதானமாக ஊர்ந்து போகும். இப்படியாக, துஷ்ட ஜந்துக்களிடமே ஸ்வாமிகளுக்கு இத்தகைய அன்பும் பரிவும் இருக்குமானால், மனிதர்களிடத்தில் மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?!

ஸ்வாமிகள் ஸந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டு, பற்றுக்கள் அனைத்தையும் துறந்தவர்தான் என்றாலும், மற்ற உயிர்களிடத்து செலுத்தக்கூடிய அன்பை மட்டும் துறந்துவிடவில்லை. எவரேனும் தன்னுடைய துக்கத்தை ஸ்வாமிகளிடம் தெரிவிக்கும்போது, அந்த துக்கமானது ஸ்வாமிகளின் முகத்திலும் பிரதிபலிக்கும். தமக்கு எதிரில் இருப்பவரின் நிலையில் இருந்து, அவருடைய துயரத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, அவருக்கு அனுக்கிரஹம் செய்வதில் ஸ்வாமிகளுக்கு நிகர் ஸ்வாமிகள்தான்!

துங்கா நதி தீரத்தில்... - 17

விஷய ஞானமே இல்லாத சிறுபிள்ளைகளிடம் பேசும்போது, ஸ்வாமிகளும் சிறு பிள்ளையாகவே மாறி, அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்து, அவர்களை சந்தோஷப்படுத்துவார். ஸ்வாமிகளை தரிசிக்க எத்தனையோ மகாராஜாக்களும், பெரிய பெரிய வித்வான்களும், படிப்பறியா பாமரர்களும் வந்திருக்கிறார்கள்.

அதேபோல், ஸ்வாமிகளுக்குக் காணிக்கைகளை அர்ப்பணம் செய்பவர்களும், ஸ்வாமிகளிடம் உதவி கேட்டு வருபவர்களும் ஸ்வாமிகளை தரிசிக்க வந்திருக்கிறார்கள். துன்பப்படுபவர்களும் வந்திருக்கிறார்கள்; சந்தோஷப்படுபவர்களும் வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அந்நிய மதத்தினரும்கூட ஸ்வாமிகளை தரிசிக்க வந்திருக்கிறார்கள்.

இப்படியாக, அவருடைய ஜீவிய காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஸ்வாமிகளை வந்து தரிசித்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருமே, மற்ற யாரிடத்திலும் இல்லாத அளவுக்கு,ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளுக்கு தன்னிடம் ப்ரீதியும் அனுக்கிரஹமும் உண்டு என்று நெகிழ்ந்து சொல்லுவார்கள். இப்படி எல்லோரிடத்திலும் ஒரே ரீதியான மனோபாவத்தைக் காட்ட வேண்டுமானால், ஸ்வாமிகள் ஸர்வாத்மபாவம் அடைந்த ஜீவன்முக்தராக இருந்தால்தானே சாத்தியமாகும்?!

யோக சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி அஹிம்சா நிஷ்டையானது ஸ்வாமிகளிடத்தில் நன்கு பொருந்தி இருந்தது என்றே சொல்லவேண்டும். ஸ்வாமிகள் அப்படிப்பட்ட ஜீவன்முக்த நிலையை அடைந்திருந்தபடியால்தான், ஸ்வாமிகளை  சாட்சாத் பகவதம்சம் என்று, அவருக்கு அடுத்து பீடத்தில் அமர்ந்த ஸ்ரீசந்திரசேகர பாரதி ஸ்வாமிகள், போற்றி இருக்கிறார்கள்.

ஸ்வாமிகள் யோகநிஷ்டையில் ஆழ்ந்து விட்டால், தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அவருக்குத் தெரியாது.

ஒருமுறை ஸ்வாமிகள் காட்டுப்பகுதியில் சமாதி நிலையில் இருந்தபோது, காட்டு ஈ ஒன்று ஸ்வாமிகளின் தொடையில் அமர்ந்து, தன்னுடைய கூரிய கொடுக்குகளால் ஸ்வாமிகளின் உடலில் இருந்து ஏராளமான ரத்தத்தை உறிஞ்சிவிட்டது. நிஷ்டை கலைந்து சுய உணர்வு பெற்றபோதுதான், ஸ்வாமிகளுக்கு அதுபற்றித் தெரிய வந்தது.

துங்கா நதி தீரத்தில்... - 17

அதேபோல், யாத்திரை காலங்களில்கூட, பல இடங்களில் பூஜை ஆராதனைகள் முடிந்து தியானத்தில் அமர்ந்த சில நிமிஷங்களிலேயே சமாதி நிலையை அடைந்துவிடுவார் ஸ்வாமிகள். அந்த மாதிரியான நேரங்களில், பக்தர்கள் பிரசாதத்துக்குக் காத்திருப்பதாலும், மேற்கொண்டு ஸ்ரீமடத்தின் காரியங்கள் நடக்கவேண்டுமே என்பதாலும், மடத்துச் சிப்பந்திகள் சேண்டி  என்ற வாத்தியத்தை பலமாக ஒலிக்கச் செய்து ஸ்வாமிகளின் சமாதி நிலையைக் கலைப்பார்கள்.

சூழ்நிலையின் காரணமாகவே சிஷ்யர்கள் அவ்விதம் செய்கிறார்கள் என்பதால், ஸ்வாமிகள் அவர்களைக் கனிவுடன் பார்த்து அனுக்கிரஹம் செய்வார்களே தவிர, ஒருபோதும் அவர்களைக் கடிந்துகொள்ள மாட்டார்கள்.

ஸ்வாமிகளிடம் ஏற்பட்டிருந்த இத்தகைய ஸித்திகளினால், அநேக மக்களுடைய கஷ்டங்கள் நீங்கியிருக்கின்றன. அப்படி ஒருமுறை, நாகர்கோயில் பக்கம் இருந்து வந்த ஒரு வித்வானின் மனதைப் பெரிதும் வாட்டிய கவலையைத் தீர்த்து வைத்தார் ஸ்வாமிகள்.

அந்த வித்வானின் கவலைதான் என்ன..? ஸ்வாமிகள் அதை எந்த வகையில் அகற்றி, அனுக்கிரஹம் செய்தார்?

தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism