சிறுவர்களும் சிறுமிகளும் கையில் செல்போனை வைத்துக் கொண்டு, இரண்டு கட்டை விரல்களாலும் விளையாடுகிற வேகத்தைப் பார்த்தால், வியப்பில் மூச்சே முட்டுகிறது நமக்கு!

இவர்கள் இப்படி விளையாடுவதற்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? யாருமில்லை. தாங்களே கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்களின் தீராத ஆர்வம் மட்டுமே காரணம். ஆர்வத்துடன் கூடிய பயிற்சியே காரணம்.

அதேபோல், தொல்லைகளில் இருந்தும் துயரங்களில் இருந்தும் விடுபட்டு ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றால், இவற்றில் இருந்தெல்லாம் விடுபட வேண்டும் எனும் ஆர்வம் நமக்கு இருக்கவேண்டும். குழந்தைகள் தங்களின் தீவிர முயற்சியாலும், இடையறாத பயிற்சியினாலும் செல்போனைத் துரிதமாக இயக்கக் கற்றுக்கொள்வதுபோல, நாமும் சிலவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படி நாம் தெரிந்துகொள்ளவேண்டியவற்றை, நான்காக வகுத்துச் சொல்லி, அதில் முதல் பகுதியான தத்துவ விளக்கப் படலத்தைத் துவங்குகிறது கைவல்லிய நவநீதம்.

நித்திய அநித்தியங்கள் நிர்ணயம் தெரி விவேகம்
மத்திய இக பரங்கள் வரு போகங்களில் நிராசை
சத்தியம் உரைக்க வேண்டும் சமாதி என்று ஆறு கூட்டம்
முத்தியை விரும்பும் இச்சை மொழிவர் சாதனம் இந்நான்கே

இ்து முதல் பாடல். இதில், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விஷயங்கள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.  விரும்புகிறோமோ இல்லையோ, இந்த நான்கையும் நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். ஏன் என்பதைப் பிறகு பார்ப்போம்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 3

சரி... முதலில் அந்த நான்கு விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா?

1. நிலையானது, நிலையில்லாதது ஆகியவற்றைத் தீர்மானமாகத் தெரிந்துகொள்ளும் விவேகம்.

2. இகலோகத்திலும், அதாவது பூவுலகிலும் பரலோகத்திலும் கிடைக்கும் போகங்களில் ஆசையின்மை.

3. சமாதி முதலான ஆறு குணங்கள். (இது பற்றி அடுத்த பாடலில் விரிவாகத் தரப்பட்டுள்ளது).

4. முக்தியை விரும்புவது.

இந்த நான்கு மட்டும் இருந்தால் போதும்; நாம் உருப்பட்டு விடுவோம். நிம்மதியை, அமைதியை, முக்தியை அடைய விரும்புபவர்களுக்கு இந்த நான்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், பிரச்னையே இங்குதானே இருக்கிறது?

படிக்கும்போது, இந்த நான்கும் ஏதோ புரிவதுபோல் தோன்றினாலும், இவற்றில் உள்ள அடிப்படையான, ஆழமான, அடர்த்தியான உண்மையைப் புரிந்து ொள்வது சற்று கடினம்தான். ஆனால் என்ன, அந்த ஆழத்தையும் அடர்த்தியையும் கண்டுகொள்வதில்தான் வாழ்வின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது.

1. நிலையானது, நிலையில்லாதது என்பவற்றைத் தீர்மானித்துத் தெரிந்துகொள்ளும் விவேகம். நிலையானதை வைத்துத்தான் நிலையில்லாததே இயங்கமுடியும். உதாரணமாக, ரயில்வே தண்டவாளங்கள் நிலையானவை. அவை ஒரே இடத்தில் நிலையாக இருக்கும். அவற்றின் மீது ஓடும் ரயிலோ நிலையில்லாதது; ஓடிக் கொண்டே இருப்பது!

ரயிலின் சக்கரங்கள் சுழன்று ஓடிக்கொண்டிருந்தாலும், ரயிலுக்குள் இருக்கிற இருக்கைகள் நிலையாகத்தான் இருக்கின்றன. ஆனால், அந்த இருக்கையில் அமர்கிற நாம் நிலையில்லாதவர்கள் என்பதை, நாம் புரிந்துகொள்வதே இல்லை. ஏதோ, இந்த உலகில் சாஸ்வதமாக இருப்பவர்கள்போல் நினைத்துக்கொண்டு, கடன் மேல் கடனாக வாங்கி, வேண்டாத பொருட்களையெல்லாம், தேவையிருக்கிறதோ இல்லையோ, வாங்கிக் குவித்துக்கொண்டே இருக்கிறோம். இதை யாராவது சுட்டிக்காட்டினாலும், 'அடப்போங்க சார்... வாழ்க்கை ஒரேயொரு தடவைதான்! போகும்போது என்னத்தைக் கொண்டு போகப் போகிறோம்? இருக்கிறவரைக்கும் எல்லாத்தையும் அனுபவிச்சிட்டுப் போவோமே?’ என்று வேதாந்தம் பேசுகிறோம்.

இனியாவது சற்று நிதானித்து, 'நிலையானது எது, நிலையில்லாதது எது?’ என விவேகத்துடன் தெரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். எனவேதான், 'நிலையானது, நிலையற்றது என்பவற்றைத் தீர்மானிக்கும் விவேகம் வேண்டும்’ என்று சொல்லித் துவங்குகிறது கைவல்லிய நவநீதம்.

2. இகலோக, பரலோக போகங்களில் ஆசையின்மை.

நிலையானதையும் நிலையில்லாததை யும் தெரிந்துகொள்ளும் விவேகம் மட்டும் இருந்தால் போதுமா? தண்டவாளம், ரயில், இருக்கை என ஆயிரம் சொன்னாலும், அவற்றில் எல்லாம் பங்குபெற்ற நாம் மாறவில்லையே! (இதுவரை) நிலையாகத்தானே இருக்கிறோம்?

இகலோக வாழ்வில், நல்வாழ்வு வாழ படாதபாடு படுகிறோம். நாம் விரும்பியதில் பாதி கிடைக்கிறது; மீதியும் கிடைக்காதா எனத் தவிக்கிறோம். அப்படியே முழுதும் கிடைத்தாலும், இன்னும் இன்னும் என்று ஆசைப்படுகிறோம். 5 லிட்டர் அளவே பிடிக்கும் பாத்திரத்தில் 5000 லிட்டரைத் திணித்து அடைக்கவேண்டும் என முட்டி மோதுகிறோம். பூவுலகில் மட்டுமா? சொர்க்கலோகம் போக வேண்டும், அங்கே போய் அப்படி இருக்கவேண்டும், இப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு, அதற்குண்டான மாந்திரீக, தாந்த்ரீக வேலைகளில் எல்லாம் இறங்குகிறோம். விளைவு..?

நகுஷன் என்ற அரசர் பூலோகத்தில் சிறப்பான வாழ்வு வாழ்ந்து, யாகங்கள் எல்லாம் செய்தார். அதன் பலனாக அவருக்கு இந்திர பதவியே கிடைத்தது. சொர்க்கலோகத்துக்குப் போயும் தன்னுடைய ஆத்திர அவசரம் காரணமாக அகத்தியரிடம் சாபம் பெற்று, பாம்பாக மாறிப் பூமியிலே விழுந்தார். அதுவரை அவர் பட்ட பாடெல்லாம் வீண்!

இகலோக, பரலோக போகங்களில் ஆசை வேண்டாம் எனக் கைவல்லிய நவநீதம் சொன்னதற்கு இதுவே காரணம்.

நினைவில் கொள்ளுங்கள்... வாழ்வில் இன்பமே கூடாது என்று ஞானநூல்கள் குறிப்பிடவில்லை. அவற்றின்மீது உள்ள தீராத ஆசையைத்தான் வேண்டாம் என்கின்றன. ஆனால், ஆசையை விடுவது என்பது நடக்கக்கூடிய காரியமா? நடக்கும் என்று சொல்லி, அதற்குண்டான வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறது கைவல்லிய நவநீதம்.  

3. சமாதி முதலான ஆறு குணங்கள். (இதுபற்றிப் பின்னால் விளக்கமாகப் பார்க்கலாம்).

4. முக்தியை விரும்பும் இச்சை. அதாவது, மோட்சத்தின் மீதான விருப்பம்.

இந்த நான்கையும் 'சாதன சதுட்டயம்’ என்பார்கள். அதாவது, நாம் உருப்படுவதற்கு இந்த நான்கும் சாதனங்களாக இருக்கின்றன என்று அர்த்தம்.

இந்த நான்கில், மூன்றாவதாகச் சொல்லப்பட்ட சமாதி முதலான ஆறு விதமான குணங்களை பின்வரும் பாடல்கள் சொல்கின்றன.

சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை எனும் அந்த ஆறு குணங்களில்...

1. சமம்:  மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவற்றைத் தன் வசப்படுத்துதல்!

2. தமம்: தச இந்திரியங்களைத் தன் வசப்படுத்துதல்.

3. விடல்: குடும்ப விவகாரங்களை மெள்ளமெள்ளக் குறைத்துக் கொள்வது. இளம் வயதில் இது முடியவில்லை என்றாலும், 50 வயதுக்கு மேலாவது கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்; அதற்கு முயற்சியாவது செய்ய வேண்டும்.

4. சகித்தல்: நம்மைப் படாதபாடு படுத்தும் இன்பம், துன்பம் இரண்டையும் 'இது பிராரப்த கர்மா’ என்று சம பாவத்தோடு அனுபவிப்பது.

5. சமாதானம்:  வேத வேதாந்தங்கள் கூறும் கருத்துக்களைக் கேட்பதுடன், அவற்றை விருப்பத்தோடு சிந்திக்கும்படியாகச் செய்வது. இதையே 'சமாதானம்’ என்பர்.

6. சிரத்தை: உத்தமமான குருநாதரிடமும், அவர் சொன்ன வேதாந்த சாஸ்திரங்களிடமும் அன்பும் மரியாதையும் வைப்பது.

இவற்றையே 'சமாதி முதலான ஆறு’ என்று கூறுகிறது கைவல்லிய நவநீதம்.

இதைத் தொடர்ந்து, பலவிதமான குறுக்குக் கேள்விகளும், அவற்றுக்குரிய தெளிவான பதில்களும் இடம்பெறுகின்றன.

கேள்வி கேட்பது யார்? பதில் சொல்வது யார்? பார்ப்போம்.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism