Published:Updated:

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

எந்நாட்டவர்க்கும் இறைவா..!

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

எந்நாட்டவர்க்கும் இறைவா..!

Published:Updated:

லையே சிவம், சிவமே மலை என எல்லோரும் போற்றிக் கொண்டாடுகிற பூமி, திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் திருத்தலம் இது. மலையில் ஏற்றுகிற திருக்கார்த்திகை தீபத்தைத் தரிசிப்பது எத்தனை புண்ணியமோ, அத்தனை புண்ணியம் தருவது கிரிவலம் வந்து பிரார்த்திப்பது!

லட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதை சீராக இருந்தாலும், அதையொட்டியுள்ள பகுதிகள் கழிவுகளாகவும் குப்பைகளாகவும் கிடப்பதை, தொடர்ந்து கிரிவலம் செல்வோர் கவனித்திருப்பார்கள். தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர் என குப்பைக்கூளங்களால் நிறைந்து காணப்படுகிறது மலையடிவாரப் பகுதி. அதையெல்லாம் அகற்றி, மலையையும் மலைப் பகுதியையும் சுத்தம் செய்வதற்காகவே அங்கு ஓர் ஆஸ்ரமம் இயங்கி வருகிறது என்றால், வியப்பாக இருக்கிறது அல்லவா?

கிரிவலப் பாதையில், செங்கம் ரோடு பிரிவு அருகில் அமைதியே உருவெனக் கொண்டு திகழ்கிறது சாந்தி மலை ஆஸ்ரமம். இந்த ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள்தான், மலையடிவாரத்தைத் தூய்மைப்படுத்துவதையே தங்கள் கடமையெனக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதில் நம் வியப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் விஷயம் என்னவென்றால், ஆஸ்ரமத்தை நிறுவி, நிர்வகித்து, செயல்பட்டு வருபவர்கள் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள். திருவண்ணாமலையின்மீது கொண்ட ஈர்ப்பாலும், அருணாசலேஸ்வரர்மீது வைத்திருக்கிற அளவற்ற பக்தியாலும் இங்கே ஆஸ்ரமம் அமைத்து, சிவனாருக்கு சேவை செய்வதற்கே இந்தப் பிறப்பு என நினைத்து, வாழ்ந்து வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

'கிரிவல தூய்மை... ஆண்டவன் சேவை’ என்பதையே தங்கள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வரும் ஹூகோமேயர் ஆன்மேயர் தம்பதி, திருவண்ணாமலையில் கடந்த 40 வருடங்களாக வசித்து வருகிறார்களாம்!

மகான்களும் யோகிகளும் வாழ்ந்த திருவண்ணாமலைக்கு தினமும் வெளிநாட்டினர் வந்து இறங்குவதும், இங்கேயே சில மாதங்கள் வரை தங்கி, தியானம் மற்றும் வழிபாடுகளில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிற விஷயம்தான். அப்படி திருவண்ணாமலைக்கு வந்வர்கள்தான் அந்தத் தம்பதியும். மலையைப் பார்த்து மலைத்துப் போனார்கள் அவர்கள். அருணாசலேஸ்வரரின் சாந்நித்தியத்தை உணர்ந்து சிலிர்த்தார்கள். தியானம் செய்வதும், அதன் மூலம் இறைவனை அடைவதுமே  தங்கள் பிறப்புக்கான நோக்கம் என உணர்ந்து, பூரித்துப் போனார்கள். முதலில், ரமணாஸ்ரமத்தை தூய்மைப்படுத்துவதில் இருந்தே அவர்கள் தங்கள் பணியைத் துவக்கினார்கள். அதன்பின் சில வருடங்கள் கழித்து, ஜெர்மனியில் இருந்து ஆண்ட்ரியாஸ் என்பவர் வந்தார். இவர்களின் ஆன்மிக சேவையில் கவரப்பட்டு, இவர்களுடன் இணைந்தார்.  

''என்னைவிட என் கணவர் ஹுகோமேயருக்கு ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் அலாதி விருப்பம் உண்டு. இப்போது அவர் உயிருடன் இல்லை. அவர் இருந்தால் இந்த ஆஸ்ரமத்தின் பணிகளை எப்படிக் கவனித்துக்கொள்வாரோ, அதேபோல் அந்தப் பணிகளைச் செவ்வனே செய்து வருகிறேன்' என்கிறார் அவரின் மனைவி ஆன்மேயர்.  

65 வயதாகும் ஆன்மேயரை, ஆஸ்ரம அன்பர் களும் ஊர்க்காரர்களும் 'அம்மா’ என்றே அழைக் கிறார்கள். மலையைத் தூய்மைப்படுத்துவது மட்டுமின்றி, குழந்தைகளுக்கு இலவச கல்வியும், முதியோருக்கு இலவச மருத்துவமும் அளித்து வருகிறார் இவர். இவருடன் இணைந்து சேவையாற் றும் ஆண்ட்ரியாஸ், ஒரு மருத்துவரும்கூட என்பதால், அவர் சாந்தி மலை ஆஸ்ரமத்தில் இருந்தபடி, மருத்துவச் சேவை செய்து வருகிறார். அவரின் குழந் தைகளும் இங்கே இருந்தபடி, கிரிவலப்பாதையைச் சுத்தம் செய்து வருகின்றனர்.  

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

''எட்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இவங்களோட சேவை எனக்குத் தெரிய வந்தது. வெளிநாட்டுலேர்ந்து வந்து, இந்த மலையைச் சுத்தம் செய்றதுல இவங்களோட ஆத்மார்த்தமான ஈடுபாடு தெரிஞ்சு, மலைச்சுப் போயிட் டேன். அதன் பிறகு நானும், திருவண்ணாமலையைச் சேர்ந்த இன்னும் பலரும் இவங்க அமைப்புல சேர்ந்துக் கிட்டோம்' என்கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜயலட்சுமி.

'எத்தனையோ தடவை கிரிவலப் பாதைலேருந்து மலையைப் பார்த்ததோட சரி. சுத்தம் செய்றதுக்காக நெருங்கிப் போனப்பவும், மலையேறி னப்பவும் பார்த்தா... அழுகையே வந்துருச்சு எனக்கு. மலை முழுக்க பிளாஸ்டிக் பேப்பர்கள், கவர்கள், டம்ளர்கள். சாப்பாட் டுப் பொட்டலக் கழிவுகள். எல்லாத்தையும் எடுத்து சுத்தம் செஞ்சோம். அவ்வளவு ஏன்... தீபம் ஏத்துறதுக்குப் போற பாதைகூட, கரடுமுரடாத்தான் இருந்துச்சு. அதையும் நாங்க சுத்தம் செஞ்சு, சீராக்கிக் கொடுத்தோம்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் விஜயலட்சுமி.  

தற்போது, ஆன்மேயர் மற்றும் ஆண்ட்ரியாஸுடன் 150க்கும் மேற்பட்டோர் தங்களை இணைத்துக்கொண்டு, மலையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கிரிவலப்பாதையில் சுமார் 200 இடங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் குப்பைகளைப் போடச் சொல்லி பக்தர் களை அறிவுறுத்தி வருகின்றனர் இவர்கள்.

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...
என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

'கிரிவலப் பாதை மொத்தம் 14 கி.மீ சுற்றளவு கொண்டது. பௌர்ணமி நாட்களில் லட்சக் கணக்கான மக்கள் கிரிவலம் வருவாங்க. அவங்க, தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்களையோ பண்டங்களையோ பயன்படுத்திட்டு, அப்படியே தூக்கிப் போட்டுட்டுப் போயிடறாங்க. அதையெல்லாம் சுத்தம் செய்றதுக்கே நாலு மாசம் ஆகிடுது. கிட்டத்தட்ட கோயில்ல உழவாரப்பணி செய்றதுபோலவே, மலையைத் தூய்மைப்படுத்தற பணியைச் செஞ்சிட்டிருக்கோம். லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே வர்றாங்க. இந்தப் புண்ணிய பூமியில் நம்ம பாதம் பட்டாலே புண்ணியம்னு கிரிவலம் வர்றாங்க. அப்பேர்ப்பட்ட மலையை சுத்தம் செய்றதும், சுத்தமா வெச்சிருக்கறதும் நம்ம கடமைதானே!' என்கிறார் ஆண்ட்ரியாஸ்.

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

'கிரிவலப்பாதையைச் சுத்தம் செய்வது இறைவனின் திருப்பாதங்களை சுத்தம் செய்வது போல! கடவுளே மலையாகக் காட்சி தரும் பூமி இது. ரமண மகரிஷி முதலான எத்தனையோ மகான்களின் திருப்பாதம் பட்ட புண்ணியத் தலம் இது. அப்பேர்ப்பட்ட பூமியில் சுத்தம் செய்யும் பணி எங்களுக்குக் கிடைச்சது மகா புண்ணியம். அண்ணாமலையாரின் அருளால் எங்கள் பணி தொடர்ந்துகொண்டே இருக்கும்!'' என்று சொல்லிப் பூரிக்கிறார் ஆன்மேயர்.

'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்பது சத்தியமான வார்த்தைதான்!

- இ.லோகேஸ்வரி,  ரா.கீர்த்திகா

படங்கள்: கா.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism