Published:Updated:

ஆலயம் தேடுவோம்...

மன நோய் தீர்க்கும் ஈசனுக்கு கோயில் கட்டுவோம்! உம்பலப்பாடி ஸ்ரீமகாதேவர் கோயில்இ.லோகேஸ்வரி

ஆலயம் தேடுவோம்...

மன நோய் தீர்க்கும் ஈசனுக்கு கோயில் கட்டுவோம்! உம்பலப்பாடி ஸ்ரீமகாதேவர் கோயில்இ.லோகேஸ்வரி

Published:Updated:

தாமாகவே தோன்றிய லிங்கம் சுயம்புலிங்கம் ஆகும். அளவற்ற ஆற்றலும் அருள்திறனும் கொண்ட சுயம்புலிங்கமூர்த்தத்தை முனிவர்களும் ஞானிகளும் வணங்கி வழிபட்டுப் பலன் பெற்றுள்ளனர். அவ்வளவு ஏன்... தெய்வங்களேகூட சுயம்புலிங்க மூர்த்தத்தை பூஜித்து வணங்கி, தவமிருந்து வரங்கள் பெற்றுள்ளதாக புராணங்கள் சொல்லுகின்றன.  

ஆலயம் தேடுவோம்...

சந்திர பகவான், தனக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, அப்படியொரு சுயம்புலிங்கத் திருமேனியைத் தேடி அலைந்தார். மண்ணியாற்றங்கரைப் பகுதிக்கு வந்தவர், அங்கே ஒரு சுயம்புலிங்கத்தைக் கண்டார்; ஆனந்தம் கொண்டார். ஆத்மார்த்தமாக சிவபூஜையில் ஈடுபட்டார். பூஜையின் பலனாக சாபம் நீங்கப் பெற்றார். அதுமட்டுமா... சிவனார் தன் தலையில் பிறை வடிவாக சந்திரனை சூடிக்கொண்டு, சந்திர பகவானுக்குப் பெரும்பேறு அளித்தார். சந்திரனைத் தலையில் சூடியதால் சிவனாருக்குச் சந்திரசேகரன் என்று திருநாமம் அமைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது கபிஸ்தலம். அதையடுத்து அமைந்துள்ள கிராமம் உம்பலப்பாடி. மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த அழகிய கிராமத்தில் இருந்தபடி, அகிலத்துக்கே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் சிவனார். இங்கு இவரின் திருநாமம் ஸ்ரீமகாதேவர். நிலவானை மகாதேவர் என்பது முழுப்பெயர். 'நிலவு அணைந்த திருமுடியை உடையவனாகிய சிவபெருமான்’ என்கிறார் கள். அதாவது, ஸ்ரீசந்திரசேகர ஸ்வாமி. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட, சுமார் 900 வருடத் தொன்மை வாய்ந்த திருக்கோயில் இது என்கிறது கல்வெட்டுக் குறிப்பு.

இத்தனைப் பெருமைகள் கொண்ட ஆலயம், சுமார் 150 வருடங்களாக வழிபாடு இல்லாமல், பூஜை நடத்தப்படாமல், ஸ்வாமிக்கு நைவேத்தியம்கூட செய்யப்படாமல் இருந்திருக்கிறது. காலப்போக்கில் பராமரிப்பின்றி, கோயில் சிதிலமாகிப் போனதுதான் கொடுமை. உலகத்தையே காப்பாற்றி அருள்புரியும் கருணாமூர்த்தியான அந்த உமையொருபாகனின் திருக்கோயிலுக்கே இந்த நிலையா? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

ஆலயம் தேடுவோம்...

கோயில் கருவறையில் விமானம் இல்லாமல், வெட்ட வெளியிலேயே நெடுங்காலமாக இருந்திருக்கிறார் ஈசன். கோயிலில் உள்ள மற்ற சந்நிதிகள் யாவும் சிதிலமாகி, அம்பாள் மற்றும் விநாயகரின் சிற்பத் திருமேனிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.  மற்ற சிலைகள் பின்னமாகிவிட்ட நிலையில், ஸ்வாமி, அம்பாள், விநாயகர் திருமேனிகளை ஒரு கீற்றுக் கொட்டகையில் வைத்துப் பாலாலயம் செய்து வழிபட்டு வருகின்றனர் ஊர்மக்கள்.

''ஒருகாலத்தில் பிரமாண்டமா இருந்த கோயில் இது. இன்னிக்கு வழிபாடே இல்லாம, கூட்டமும் வராம, பூஜை புனஸ்காரங்கள்னு எதுவும் இல்லாம இருக்கிறதை நினைச்சாலே மனசு வலிக்குது. அதனாலதான் திருப்பணிக் கமிட்டி அமைச்சு, கோயில் கட்டும் வேலையை ஆரம்பிச்சிருக்கோம்'' என்கிறார்கள் உம்பலப்பாடி கிராம மக்கள்.  

தற்போது, முதல் கட்ட புனரமைப்புப் பணிகள் ஓரளவு நிறைவுற்றுவிட்டன. விமானம், மதில், மடப்பள்ளி, நவகிரக சந்நிதி முதலான பணிகள் துவங்கி உள்ளன. ஆனால், போதிய நிதி இல்லாததால், பணிகளில் தற்போது மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் திருப்பணிக் கமிட்டி உறுப்பினர்கள்.

ஆலயம் தேடுவோம்...

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்தான் என்றாலும், அடுத்தடுத்து வந்த மன்னர்களும் இந்த நிலவானை மகாதேவர் கோயிலுக்குத் திருப்பணிகள் பலவும் செய்துள்ளனர். இந்த ஊருக்கு உம்பலப்பாடி என்றும், எதிரிலி சோழநல்லூர் என்றும் பெயர்கள் இருந்ததாகக்     

கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. குலோத்துங்க சோழ மன்னனுக்கு 'எதிரிலி சோழன்’ எனும் பட்டப்பெயர் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

உம்பல் என்பது ஆடு அல்லது யானையைக் குறிக்கும் என்பர். ஒருகாலத்தில், இந்த ஊரில் ஆடுகள் நிறைந்திருக்கலாம்; அல்லது, சோழப் படையில் உள்ள யானைகள் இங்கு கட்டப் பட்டிருக்கலாம். அதனால் இந்த ஊர் உம்பலப்படை என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் உம்பலப்பாடி என மருவியதாகவும் சொல்வர்.

''மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.  அம்பாளின் திருநாமம் ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள்.  அத்தனை லட்சணங்களையும் ஒருங்கே கொண்டு, அழகு ததும்பக் காட்சி தருகிறாள். பரிவார தெய்வங்களின் சிலைகளை இனிமேல்தான் செய்ய வேண்டும்'' என்கிறார் திருப்பணிக் கமிட்டியின் தலைவர் பாலசுப்ரமணியம்.

ஆலயம் தேடுவோம்...

ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீமகாதேவர் ஆலயத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் மனோபலம் பெருகும் என்பது ஐதீகம். சந்திரன் மனோகாரகன். சந்திர பகவானே வணங்கி வரம் பெற்ற தலம் என்பதால், இங்கு வந்து தரிசித்தாலோ, இந்தக் கோயில் திருப்பணிக்கு உதவினாலோ, மனக் கோளாறுகளும் குறைபாடுகளும் நீங்கும்; மனதில் தேவையற்ற பயம் விலகி, தைரியம் பிறக்கும் என்கிறார்கள் ஊர்மக்கள்.

அதேபோல், கடக ராசிக்காரர்கள் வணங்கவேண்டிய தலம் இது என்றும் தெரிவிக்கிறார்கள். சந்திரசேகரர் என்கிற நிலவானை மகாதேவரை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்றும் கூறுகிறார்கள். மகாதேவன், சந்திரசேகரன் எனப் பெயர் கொண்டவர்கள் குறிப்பாக வணங்கி வழிபட வேண்டிய தலம் இது என்கிறார் திருப்பணிக் கமிட்டித் தலைவர்.

ஆலயம் தேடுவோம்...
ஆலயம் தேடுவோம்...

''இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமியைத் தரிசித்துப் பிரார்த்தித்தால், தோல் சம்பந்தமான வியாதிகளும் பிரச்னைகளும் உடனே நிவர்த்தியாகும். ஒருகாலத்தில் தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், சுவாமிமலை எனப் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடனாக உப்பு செலுத்தி, நோய் நீங்கப் பெற்றிருக்கிறார்கள்'' என்கிறார் கிராமத்தில் உள்ள பெரியவர் ஒருவர்.

சந்திரன் வணங்கிய சந்திரசேகரர் திருக்கோயில் விரைவில் புனரமைப்பு செய்யப்பட வேண்டாமா? திருப்பணிகள் துரிதமாக நடந்தேறி, சீரும் சிறப்புமாகக் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டுமல்லவா? அதற்கு நம்மால் முடிந்ததைச் செய்வோம்; கோயில் திருப்பணியில் பங்கேற்போம். ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீமகாதேவர் ஆலயப் பணியில் பங்கு கொண்டு, அவரது அருளுக்குப் பாத்திரமாவோம்; ஆனந்தமாய் வாழ்வோம்!

படங்கள்: க.சதீஷ்குமார்

எப்படிச் செல்வது?

ஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது கபிஸ்தலம்.  இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது உம்பலப்பாடி கிராமமும் ஸ்ரீமகாதேவர் ஆலயமும்! கபிஸ்தலத்தில் இருந்து உம்பலப்பாடி செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism