Published:Updated:

கடல் கடந்து இந்து ஆலயம் கட்டிய செட்டிநாட்டு அருளாளர்..!

வெளிநாட்டிலும் இறைப்பணி...ரெ.சு.வெங்கடேஷ்

கடல் கடந்து இந்து ஆலயம் கட்டிய செட்டிநாட்டு அருளாளர்..!

வெளிநாட்டிலும் இறைப்பணி...ரெ.சு.வெங்கடேஷ்

Published:Updated:

னக்குப் பிறகும் தமது பெயரையும் புகழையும் பூவுலகில் நிலைநாட்டிவிட்டுச் செல்லும் அருளாளர்கள் வெகுஅபூர்வம். அத்தகைய அருளாளர்கள் வரிசையில்... தமது அருட்தொண்டுகளாலும், ஆன்மிகப் பணிகளாலும் கடல் கடந்து தமிழனின் இறையுணர்வை பறைசாற்றச் செய்த டாக்டர் அழகப்ப அழகப்பனுக்கு நீங்காத இடம் உண்டு.

அமெரிக்காவில் இன்று நூற்றுக்கணக்கான திருக்கோயில்கள் இருக்கலாம். என்றாலும், அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக, டாலர் தேசத்தில் முதல் இந்து கோயில் அமைத்த பெருமை டாக்டர் அழகப்ப அழகப்பனையே சாரும்.

அந்த ஆலயம்... நியூயார்க் மாகாணம், ஃப்ளஷ்ஷிங் எனும் இடத்தில் அழகுற அமைந்திருக்கும் ஸ்ரீமகா வல்லப கணபதி ஆலயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செட்டிநாடு என்று பெருமையுடன் சொல்லப்படும் காரைக்குடி பகுதியில் கானாடுகாத்தான் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகப்ப அழகப்பன். சென்னையில் பிரசிடென்சி கல்லூரியில் படித்து, லண்டனில் பொருளாதாரம் பயின்று, நியூயார்க்கில் பிஹெச்.டி. பட்டம் பெற்று, ஐ.நா.சபையில் நீர்வள மேம்பாட்டு நிதியத்தின் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அழகப்ப அழகப்பன், சிறிது காலம் பத்திரிகையிலும் பணியாற்றினாராம்.

கடல் கடந்து  இந்து ஆலயம் கட்டிய செட்டிநாட்டு அருளாளர்..!

மனைவி விசாலாட்சி மற்றும் மகன்களுடனும் மகளுடனும் நியூயார்க்கில் வசித்து வந்த அழகப்ப அழகப்பன், கடந்த மாதம் 24ம் தேதி இறைவனின் திருவடிகளை அடைந்தார். அவரைப் பற்றியும் அவருடைய ஆன்மிகப் பணிகள் பற்றியும், சென்னையில் வசிக்கும் அவருடைய மனைவியின் தங்கையும், சகோதரரின் மனைவியுமான அலமேலு அருணாசலம் கூறுகையில்...  

''எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்தாலும் பழைமையையும் கலாசாரத்தையும், முக்கியமா ஆன்மிகத்தை மறக்காம வாழ்ந்தவர் அழகப்ப அழகப்பன். 'நம்மளைப்போல நம்ம குழந்தைகள் பக்தியா, வழிபாட்டோட, கோயில் குளம்னு போய் வளரமுடியலியேங்கற ஏக்கம் அவருக்கு வந்ததன் விளைவுதான்... ஸ்ரீமகா வல்லப கணபதி கோயில். இன்னொரு விஷயம்... ஒருமுறை அகஸ்தியர் நாடி பார்த்தபோது, அதில்... 'அ’ எனும் எழுத்தில் தொடங்கும் இடத்தில், பிள்ளையாருக்கு கோயில் கட்டுவார் அழகப்பன்னு குறிப்பு வந்துச்சாம். பின்னாளில் அவர் அமெரிக்காவில் கோயில் கட்டியபோது  ஆச்சரியத்துல திகைச்சுபோயிட்டேன்'' என்றவர் தொடர்ந்து, ''இதுக்கெல்லாம் முன்னோர் செய்த புண்ணியம் கூட காரணம் என்று சொல்லலாம். அழகப்ப அழகப்பனின் முப்பாட்டனார்தான் சுவாமிமலை சுவாமிநாத கோயிலைக் கட்டியவர்'' என்று பரவசத்துடன் நினைவுகூர்ந்தார்.

கடல் கடந்து  இந்து ஆலயம் கட்டிய செட்டிநாட்டு அருளாளர்..!

''கோயில் கட்டணும்னு ஆசைப்பட்டாலும், கடல் கடந்து இப்படிக் கோயில் கட்டுறது சரிதானானு ஒரு கேள்வி வந்துச்சு. காஞ்சிபுரத் துக்கு வந்து மகாபெரியவாளைத் தரிசனம் பண்ணி, விஷயத்தைச் சொன்னார். 'தாராளமாக் கட்டு’ன்னு சொல்லி, ஒரு ருத்திராட்சத்தையும் கொடுத்து ஆசியருளினார் மகா பெரியவா. அதுக்கப்புறம், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது  மாதிரி மளமளன்னு நடந்துச்சு கோயில் வேலை.

கடல் கடந்து  இந்து ஆலயம் கட்டிய செட்டிநாட்டு அருளாளர்..!

பிளஷிங் பகுதியில் இருந்த ரஷ்ய தேவால யத்தை (சர்ச்) விலைக்கு வாங்கினார் அழகப்ப அழகப்பன். அங்கே ஸ்வாமி படங்களை வெச்சு, பூஜைகள் செஞ்சார். அப்புறம், 'வட அமெரிக்க இந்துக் கோயில்கள் சங்கம்’ உருவாகறதுக்கான ஏற்பாடுகளைச் செஞ்சார்.

கோயிலுக்கான விக்கிரகங்களை திருப்பதி தேவஸ்தானம் உதவியோடு செஞ்சு வாங்கினார். அதற்கான பணத்தை கொடுக்கணுமே..? அப்புறமா, பிரசாத லட்டு செய்றதுக்கான பாதாம், முந்திரின்னு அனுப்பிவைத்து கடனை அடைச்சார்!

கோபுரத்துல இருக்கிற சிலைகளையெல்லாம் முத்தையா ஸ்தபதி இங்கே செஞ்சு தர, அதை 4,000 பெட்டிகள்ல பத்திரமா வெச்சு, அமெரிக்காவுக்கு அனுப்பினோம். கஸ்டம்ஸ்காரங்ககிட்டேருந்து அவ்வளவு சீக்கிரம் அனுமதி வாங்கிட முடியாது. ஆனா பொறுமையா, நிதானமா, எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி, எந்த அவசரமும் பதற்றமும் இல்லாம, ரொம்ப அழகா கோயிலைக் கட்டி முடிச்சார் அவர்!'' என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் அலமேலு ஆச்சி.

''முத்தையா ஸ்தபதி தலைமைல ஒரு குழு அங்கே மூணு மாசம் வேலை செய்யும். அப்புறம் அடுத்த குழு அங்கே வரும். அதேபோல, கோயில் கோபுரம் முழுக்க முழுக்க கிரானைட் கல்லால செய்யப்பட்டது. எல்லா வேலைகளும் முடிஞ்சு, 77-ம் வருஷம், ஜூலை 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்துச்சு. அன்னிக்கி இவரைப் பாக்கணுமே... சின்னக்குழந்தை மாதிரி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடியாடி வேலை செஞ்சார்.  இது காஞ்சி மகாபெரியவாளின் அருளோடயும் ஆசீர்வாதத்தோடயும் கட்டப்பட்ட கோயில்.

கடல் கடந்து  இந்து ஆலயம் கட்டிய செட்டிநாட்டு அருளாளர்..!

விநாயகர் பிரதிஷ்டை செஞ்ச பீடத்துக்குக் கீழ ஒரு யந்த்ரம் வைக்கணும். அதை காஞ்சி மகானே கொடுத்தார். அதை ஒரு சின்னப் பெட்டில வைச்சுக் கொடுக்க, நான்தான் அமெரிக்காவுக்கு எடுத்துட்டுப் போனேன். பெட்டியைத் திறந்து பார்த்தா, ரெண்டு யந்த்ரம் இருந்துச்சு.

'ஒரு பிள்ளையார்தானே பிரதிஷ்டை செய்யப் போறோம்? ஆனா, ரெண்டு யந்த்ரம் கொடுத்திருக்காரே பெரியவா’னு குழம்பிட்டோம். அப்புறம் பெரியவாளை தரிசனம் பண்ணினப்ப, அந்த யந்த்ரத்தைக் கொடுத்தோம். 'நீயே வைச்சுக்கோ. உபயோகப்படும்’னு சொல்லிட்டார். எங்களுக்கு ஒரே குழப்பம். ஆனா, சென்னைல அறுபடைவீடு கோயில் கட்டும்போதுதான் பெரியவா கொடுத்ததோட அர்த்தமே புரிஞ்சுது'' என்று வியப்பு மேலிடச் சொல்கிறார் அலமேலு ஆச்சி.

கடல் கடந்து  இந்து ஆலயம் கட்டிய செட்டிநாட்டு அருளாளர்..!

''பிறகு, பல வருஷங்கள் கழிச்சு, சென்னைல அறுபடைவீடு முருகன் கோயில் கட்டலாம்னு முடிவு பண்ணினோம். பெரியவா சொல்லி, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இடம் வழங்கினார். 'அட... பெரியவா கொடுத்த விநாயகர் யந்த்ரம்தான் இருக்குதே. அதனால, அமெரிக்கா போலவே இங்கேயும் வல்லப கணபதிக்கு சந்நிதி வெச்சுடலாம்னு முடிவு பண்ணினோம். அப்படியே, அந்த யந்த்ரத்தை வெச்சுப் பிரதிஷ்டை பண்ணினோம்' என்று தெரிவிக்க, அதுவரை கேட்டுக்கொண்டிருந்த அறுபடைவீடு முருகன் கோயிலின் டிரஸ்டி சுந்தரம் நம்மிடம் பேசினார்...

''ஐ.நா. சபைல தொழில் வளர்ச்சித் துறைல நான் வேலை பார்க்கும்போது. எனக்கும் அழகப்ப அழகப்பன் சாருக்கும் நட்பு ஏற்பட்டுச்சு. அவரோட பேச்சு, ஆன்மிக சிந்தனை, கோயில் கட்டும் விஷயம், எல்லாமே அவர் மீது எனக்கு இருந்த அளப்பரிய மரியாதையையும் அன்பையும் இன்னும் அதிகப்படுத்துச்சு.'' என்று சொல்லிச் சிலாகிக்கிறார் சுந்தரம்.

அமெரிக்காவில் உள்ள மகா வல்லப கணபதி கோயில் இருக்கும் தெரு முழுவதுமே இன்றைக்குக் கோயிலின் சொத்தாகிவிட்டதாம். ஆலய நிர்வாகிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் முதலானோருக்கு அந்தத் தெருவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வழிபாட்டுத் தலமாகவும், இந்தியர்கள் நட்பு பாராட்டுகிற மையமாகவும் திகழும் மகா வல்லப கணபதி கோயிலை அமெரிக்காவில் அமைத்த அழகப்ப அழகப்பனின் ஆன்மிக சாதனை, அடுத்தடுத்த தலைமுறைக்கும் பரவி, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி!

படங்கள்: தி.ஹரிஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism