மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

வடபழநி...சத சஹஸ்ர அர்ச்சனையும் சத்ரு சம்ஹாரமும்! எஸ்.கண்ணன்கோபாலன்

த சஹஸ்ர அர்ச்சனை...

இறைவனை ப்ரீதி செய்வதில் அபிஷேக - ஆராதனைகளை விடவும், அர்ச்சனைக்குத் தனிச் சிறப்பு உண்டு. இறைவனை விடவும் மகிமை பொருந்தியவை அவனது நாமாக்கள். அவற்றைச் சொல்லி வணங்குவதில், இறைவனுக்கு அலாதி பிரியம்! அதனால்தான் பக்தர்கள் அர்ச்சனை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.தங்களின் பெயர், நட்சத்திரம் போன்றவற்றைக் குறிப்பிட்டு, 'இறைவா, இன்ன பெயர், நட்சத்திரம் கொண்ட நான், உன்னுடைய நாமத்தின் மகிமைகளை உணர்ந்த நிலையில், உனக்கு அர்ச்சனை செய்கிறேன். எனக்கு எது நல்லதோ, அதை நீ எனக்கு அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டிக்கொள்வதே அர்ச்சனை செய்வதன் தாத்பர்யம்.

அர்ச்சனையில் சத சஹஸ்ர அர்ச்சனை தனிச் சிறப்பு கொண்டது. சதம் என்றால் நூறு; சஹஸ்ரம் என்றால் ஆயிரம். ஆக, நூறாயிரம் அர்ச்சனை என்பதே லட்சார்ச்சனை என்றும், சத சஹஸ்ர அர்ச்சனை என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக, கோயில்களில் வருஷத்துக்கு ஓரிருமுறை லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கந்த சஷ்டியை முன்னிட்டு, சென்னை வடபழநியில் நடைபெற்ற லட்சார்ச்சனை வைபவத்தை தரிசிக்கச் சென்றோம். பெரும்பாலான முருகன் கோயில்களில் லட்சார்ச்சனை நடைபெறும் என்றாலும், நாம் வடபழநி முருகன் கோயிலுக்குச் சென்றதற்கு ஒரு சிறப்பான காரணமும் இருக்கவே செய்கிறது.

'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்று சொல்வதுண்டு. அந்த தெய்வமே பால்மணம் மாறாத பாலகனாக அருளும் திருத்தலம் அல்லவா வடபழநி?! அங்கே கொண்டாட்டத்துக்குக் கேட்கவா வேண்டும்?! அந்தக் கொண்டாட்டத்தைக் கண்குளிர தரிசித்து, அந்த வைபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டால் என்ன என்ற எண்ணத்தில், லட்சார்ச்சனையின் நிறைவுநாளான 291014 அன்று காலை 8 மணிக்கு கோயிலுக்குச் சென்றோம். நிறைவு நாள் என்பதால், பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் திரண்டு இருந்தனர். முருகனை தரிசிக்க வெளியிலிருந்து தொடங்கிய பக்தர் களின் வரிசை, தொடங்கிய இடம் தெரிந்தாலும் அது எப்படிச் சென்று முருகனின் சந்நிதியை அடைகின்றது என்று புரிந்துகொள்ள முடியாதபடி வளைந்து வளைந்து சென்றுகொண்டே இருந்தது. எனவே, கோயிலுக்குள் சென்ற நாம், முதலில் விநாயகப் பெருமானை தரிசித்து வணங்கி, ஆலயத்தை வலம் வருகிறோம். ஆங்காங்கே அர்ச்சகர்கள் அமர்ந்துகொண்டு, லட்சார்ச்சனையில் கலந்துகொள்ள வந்திருந்த பக்தர்களுக்கு, அவர்களின் பெயர், நட்சத்திரம் போன்ற விவரங்களைக் கேட்டு, சங்கல்பம் செய்துகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு அர்ச்சகரிடமும் சங்கல்பத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

அவர்களைப் பார்த்தபடியே பிராகாரத்தை வலம் வருகிறோம். தெற்குப் பிராகாரத்தில் அமைந்திருந்த ஒரு மண்டபத்தில், தங்க நிறத்தில் ஜொலித்த மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்த வடபழநி ஆண்டவரின் உற்ஸவ மூர்த்தத்துக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தனர். பொதுவாக, மூலவர் சந்நிதியில்தான் அர்ச்சனைகள் நடை பெறும். மாறாக, இங்கே உற்ஸவருக்கு அர்ச்சனை நடப்பதற்கான காரணத்தை அறிய, அப்போதுதான் மூலவர் சந்நிதியில் இருந்து வெளியில் வந்த ஓர் அர்ச்சகரிடம் விவரம் கேட்டோம். தினேஷ் குருக்கள் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், ''நீங்கள் கேட்பது வாஸ்தவம்தான்.இங்கேயும்கூட செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, கிருத்திகை, சஷ்டி, மற்றும் விசேஷ நாள்களைத் தவிர்த்து, மற்ற நாள்களில் பக்தர்கள் மூலவருக்கு அர்ச்சனை செய்யலாம். பக்தர்கள் சிரமம் இல்லாமலும், அதிக நேரம் காத்திருக்காமலும் முருகப்பெருமானை தரிசிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குக் காரணம் எதுவும் இல்லை'' என்றார்.

அவரிடமே, வடபழநியில் முருகன் ஆலயம் அமைந்த வரலாறு குறித்தும் கேட்டோம். அவர் சுருக்கமாகக் கூறிய வரலாறு இதுதான்...

சுமார் 150 வருஷத்துக்கு முன்பு இந்தப் பகுதியில் அண்ணாசாமி நாயக்கர் என்பவர் இருந்தார். சதாகாலமும் அந்த ஷண்முகக் கடவுளின் திருவடிகளையே தியானித்திருந்த அவரை ஆட்கொள்ள நினைத்த முருகப்பெருமான், அவருக்குக் கடுமையான வயிற்றுவலியை ஏற்படுத் தினான். சோதித்து ஆட்கொள்வதுதானே முருகனுக்கு பிரியமான விளையாட்டு?!

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

தீராத வயிற்றுவலியால் கஷ்டப்பட்டவர், அருகில் இருந்த வியாக்ரபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்கிருந்த ஒரு சாதுவைப் பார்த்தார். அந்தச் சாது அவரிடம் திருப்போரூர், திருத்தணி, பழநி ஆகிய தலங்களுக்குச் சென்று முருகனை வழிபடுமாறு கூறினார். அதன்படியே அண்ணாசாமி நாயக்கரும் முதலில் திருப்போரூர் சென்று, முருகனை வழிபடத் தொடங்கினார். அக்காலத்தில் இப்போது உள்ளதைப்போல் திருப்போரூருக்குப் பேருந்து வசதிகள் இல்லை. பாத யாத்திரையாகவும், படகு பயணமாகவும்தான் திருப்போரூருக்குச் செல்ல முடியும். அண்ணாசாமி நாயக்கர், படகில் செல்லப் பணவசதி இல்லாததால் நடந்தே சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தார்.

இப்படியாகச் சில காலம் கடந்த நிலையில், ஒருநாள் திருத்தணிக்கு சென்று, முருகக்கடவுளை மனம் உருக வழிபட்டார் அண்ணாசாமி நாயக்கர். கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள் எல்லாம் கந்தக் கடவுளின் புகழை மனம் கனியக் கனியப் போற்றிப் பாடுவதைக் கேட்டு, தன்னால் அப்படி பாடமுடியவில்லையே என்ற ஏக்கத்தில், தன் நாக்கைத் துண்டித்துக்கொண்டு, மயங்கி விழுந்தார். சுற்றிலும் இருந்த அன்பர்களின் உதவியால் மயக்கம் தெளிந்து எழுந்த அண்ணாசாமி நாயக்கர், தன்னை அதுவரை வருத்திக்கொண்டிருந்த வயிற்று வலி மறைந்துவிட்டதை உணர்ந்து, தணிகை வேலவனின் கருணையை எண்ணிச் சிலிர்த்துப்போனார். நாளடைவில், அவருடைய நாக்கும் பழையபடி வளர்ந்துவிட்டது.

சென்னைக்குத் திரும்பியவரின் மனதில், உடனே பழநிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே, அப்போதே கிளம்பிச் சென்று, பழநி ஆண்டவரை பக்தி சிரத்தையுடன் வழிபட்டார். பின்னர் அங்கிருந்து கிளம்பியவரின் பார்வையில் அங்கிருந்த படக்கடை ஒன்றில், விலையுயர்ந்த உலோகத் துகள்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த முருகன் படம் இருப்பது தெரிந்தது. அதை வாங்க விரும்பினார். ஆனால், அன்றைய மதிப்பிலேயே சில நூறு ரூபாய் மதிப்புள்ள அந்தப் படத்தை வாங்கக்கூடிய அளவுக்கு அவரிடம் பணவசதி இல்லை. எனவே, அந்த ஏக்கத்திலேயே அன்றிரவு உறங்கியவரின் கனவில் முருகன் தோன்றி, காலையில் கடைக்காரரிடம் சென்று அந்தப் படத்தைக் கேட்குமாறு உத்தரவிட் டார். அதேபோல், அண்ணாசாமி நாயக்கரும் மறுநாள் அந்தக் கடைக்குச் சென்றபோது, அவர் கேட்பதற்கு முன்பே கடைக்காரர் அந்த முருகன் படத்தை எடுத்து இவரிடம் கொடுத்துவிட்டார்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

படத்துடன் சென்னைக்கு திரும்பிய அண்ணா சாமி நாயக்கர் இப்போது வடபழநி கோயில் அமைந்திருக்கும் இடத்தில் அந்தப் படத்தை வைத்து வழிபட்டு வந்தார். அதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் வரத்தொடங்கினர். அப்படி வருபவர்களின் பிரச்னைகளை முருகப்பெருமானின் அருளால் தீர்த்துவைத்தார் அண்ணாசாமி. அன்பர்கள் அவரை அண்ணாசாமித் தம்பிரான் என்றே அழைக்கத் தொடங்கினர்.

காலப்போக்கில், தேடி வரும் அன்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, முருகனுக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது அண்ணாசாமி நாயக்கருக்கு. சிறிய அளவில் ஒரு கோயில் கட்டவும் செய்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரத்தினசாமித் தம்பிரான் அந்தக் கோயிலை மேலும் விரிவுபடுத்தினார். அடுத்து வந்த பாக்கியலிங்கத் தம்பிரான்தான் இன்றைய ஆலய அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். தொடக்கத்தில் அண்ணாசாமித் தம்பிரான் குறி சொல்லி வந்த இடத்தையும், அவர் வழிபட்டு வந்த முருகன் படத்தையும் இன்றைக்கும் கோயிலில் காணலாம். பக்தனின் பக்திக்கு மனம் இரங்கி அந்தப் பழநி ஆண்டவனே இங்கு வந்து கோயில் கொண்டதும், அதுவரை கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தப் பகுதி 'வடபழநி’ என்று பெயர் பெற்றது.

ஆலயம் தோன்றிய வரலாற்றை அசைபோட்டபடி வந்த நாம் யாகசாலையில் யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த தைக் கண்டு, சற்றுநேரம் அங்கே நின்றோம். யாகசாலை மண்டபத்தின் அருகில் இருந்த ஓர் அர்ச்சகரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு.யாகத்தைப் பற்றியும், லட்சார்ச் சனையின் தாத்பர்யம் குறித்தும் விவரம் கேட்டோம்.

''கந்த சஷ்டியை முன்னிட்டு, கடந்த ஆறு நாட்களாக லட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது. காலையில் ஐந்து முறையும் மாலையில் ஐந்து முறையும் நடைபெற்று வரும் இந்த லட்சார்ச்சனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். ஒவ்வொரு முறையும் பத்து அர்ச்சகர்கள் மூலஸ்தானத்தில் முருகனின் சஹஸ்ரநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வார்கள். பத்து அர்ச்சகர்கள் பத்து முறை சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால், ஒரே நாளில் லட்சார்ச்சனை பூர்த்தியாகிவிடும். எனில், இந்த ஆறு நாள்களில் எத்தனை லட்சம் அர்ச்சனைகள் எங்கள் முருகப்பெருமானுக்கு நடைபெற்றிருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்'' என்று பூரிப்புடன் சொன்னவர், தொடர்ந்து யாகசாலையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறினார்.

''24.10.14 அன்று மாலை, கலச ஸ்தாபனம் செய்து, யாகசாலை பூஜைகள் தொடங்கின. தினமும் காலையும் மாலையும் ஸுப்ரமண்ய மந்த்ரங்களைக் கொண்டு ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. நிறைவு நாளான இன்று, இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் பூர்ணாஹுதியுடன் ஹோமம் நிறைவுபெற்றுவிடும். தொடர்ந்து, கலச தீர்த்தங்கள் பிரதட்சிணமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும்'' என்றார். அவரிடம், மாலையில் நடைபெற இருக்கும் சூரசம்ஹாரம் குறித்த விவரங்களைக் கேட்டோம். பூர்ணாஹுதிக்கு நேரம் ஆகிவிட்டபடியால், அந்த வழியாக வந்த குருக்கள் ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்தி, நமக்குத் தேவையான விவரங்களைச் சொல்லும்படி கூறிவிட்டுச் சென்றார்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

செல்வம் குருக்கள் என்ற அந்த அர்ச்சகர், ''கோயிலுக்கு வெளியில் மாலை 7 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக போர்க்கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் தன் சந்நிதியில் இருந்து புறப்பட்டு, மீனாட்சி அம்மன் சந்நிதிக்கு எழுந்தருள்வார். அங்கே அம்பிகைக்கு பஞ்ச ஆரத்தி நடைபெறும். பின்னர், அம்பிகையின் கையில் இருந்து வேலினை வாங்கிக்கொண்டு சூரசம்ஹாரம் செய்யக் கிளம்புவார் முருகப் பெருமான். உடன், வீரபாகுத் தேவரும் செல்வார். கோயிலுக்கு வெளியில் வந்ததும், கோயிலின் மாடவீதிகளை வலம் வந்து, சந்நிதித் தெருவுக்கு எழுந்தருளுவார். சுவாமி அங்கே எழுந்தருளியதுமே, அவரின் வீரத்தைத் தெரிந்துகொள்வதுபோல் சுவாமியை வலம் வந்து செல்வான் சூரபத்மன். அவன் பின்னாலேயே வீரபாகுத் தேவர் தூது செல்வார். அதன் பிறகு, போர் தொடங்கும். சிங்கமுகம், புலிமுகம், ஆட்டுமுகம், எருதுமுகம், யானைமுகம் என ஒவ்வொரு வடிவமாக எடுத்து வருவான் சூரபத்மன். அத்தனை முகங்களையும் வீழ்த்தும் வீரபாகுத் தேவர், கடைசியில் முருகப் பெருமானிடம் வேண்டிக்கொள்ள, எதிர்த்து வரும் சூரபத்மனை இறைவன் சம்ஹாரம் செய்வார்'' என்று, சூரசம்ஹாரம் குறித்த தகவல்களைக் கூறினார்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அவரிடம் பேசிவிட்டுத் திரும்பிய போது, லட்சார்ச்சனையில் கலந்து கொண்ட பக்தர்கள், ஓரிடத்தில் லட்சார்ச்சனை ரசீதைக் காட்டி, பிரசாதம் பெற்றுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம், ஆலயத்தின் துணை ஆணையரும் தக்காருமான அ.இளம்பரிதி, முருகனைப் பிரார்த்தித்து, பிரசாதப் பைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர்தான் முன்னின்று கந்தசஷ்டி வைபவத்துக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று மாலை 5.30 மணிக்கே நாம் சூரசம்ஹாரம் நடைபெற இருந்த சந்நிதி தெருவுக்குச் சென்றுவிட்டோம். அப்போதே அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு விட்டது. வீதியிலும், கட்டடங்களின் மாடிகளிலும் பக்தர்கள் திரண்டிருந் தனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது.  மாலை 6.00 மணி. சூரசம்ஹாரம் நிகழ்த்த போர்க்கோலம் பூண்டு வரப்போகும் முருகனின் வரவை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மணி 6.30 ஆகியும், அந்தப் பொல்லாத முருகன் தரிசனம் கொடுப்பதாக இல்லை. பக்தர்களின் ஆர்வமும், அது சீக்கிரம் நிறைவேறாததால் ஏற்பட்ட ஏக்கமும் அதிகரித்துக் கொண்டே இருப்பதை, அவர்களின் முகங்களில் பிரதிபலித்ததை அந்த மங்கிய ஒளியிலும் நம்மால் உணரமுடிந்தது.

முருகப்பெருமான் வரும்வரை பக்தர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுபோல் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. வானத்து நட்சத்திரங்களே வண்ண வண்ணப் பூக்களாக, அந்த அழகன் முருகனை தரிசிக்க இறங்கி வந்தது போன்று ரம்மியமாகக் காட்சியளித்த அந்த வாணவேடிக்கைகள்கூட பக்தர்களின் ஏக்கத்தைத் தீர்ப்பதாகத் தெரியவில்லை. தாயிடம் பொய்க் கோபம் கொண்டு ஓடி ஒளிந்துகொள்ளும் குறும்புக்காரக் குழந்தையைப்போல், அந்த அழகன் முருகன் கொஞ்சத்தில் கோயிலில் இருந்து வெளியில் வராமல், பக்தர்களைக் கெஞ்சுமாறு செய்துவிட்டான். அவனும் பால்மணம் மாறாத பாலகன்தானே?! பழத்துக்காக அப்பாவிடமே கோபித்துக்கொண்டு பழநிமலையில்  போய் அமர்ந்த பாலகனாயிற்றே அவன்! அவன்தானே இந்த வடபழநியிலும் கோயில் கொண்டிருக்கிறான்?! அவனைப் பார்க்காமல் இங்கிருந்து கிளம்பமுடியுமா என்ன? அவனை விட்டுப் பிரியத்தான் முடியுமா? அப்படிப் பிரிந்து வாழும் வாழ்க்கைதான் அர்த்தமுள்ளதாக இருக்குமா?

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஒருவழியாக 7 மணிக்கு, கோயிலில் இருந்து வெளிப்பட்டு, அழகு தரிசனம் காட்டியருளினான் அப்பன் முருகன். அவனது எழிலார்ந்த கோலம் கண்டு நெக்குருகிப் போன பக்தர்கள், அதுவரை கொண்டிருந்த ஏக்கம் நீங்கி, பரவசப்பட்டார்கள். வெளியில் வந்து காட்சி கொடுத்த முருகப்பெருமான், மாடவீதிகளின் வழியாக வலம் வந்து, சூரசம்ஹாரம் நிகழும் இடத்துக்கு எழுந்தருளினார். செல்வம் குருக்கள் சொல்லியிருந்த வரிசைப்படியே வேறு வேறு வடிவங்களில் வந்த அசுரனின் தலைகளை வீரபாகுத் தேவர் வீழ்த்த, இறுதியாக வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அந்தக் காட்சியைக் கண்டு பக்தர்கள் எழுப்பிய பரவசக் குரலானது, தெய்வானையை உடனே முருகப்பெருமானுக்கு மணம் முடிக்கச்சொல்லி தேவேந்திரனுக்கு உத்தரவிடுவதுபோல் இருந்தது. ஆம்... சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமணம்தானே?!

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

முருகன் அழகன் மட்டுமல்ல, குழந்தை உள்ளமும் அன்பு மனமும் கொண்டவனும்கூட! சூரசம்ஹாரம் என்று சொன்னாலும், அவன் உண்மையில் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை; அவனிடமிருந்த அசுரத் தன்மையை அகற்றி, அவனை வாகனமாகவும், கொடியாகவும்ஏற்று ஆட்கொண்ட கருணாமூர்த்தியே முருகன். நம்முடைய மனதில் உள்ள அகங்காரம், ஆணவம் உள்ளிட்ட அசுர குணங்களெல்லாம் நம்மை விட்டுத் தொலையவேண்டுமானால், ஞானக்குழந்தையான அந்த முருகனிடம் சரணடைவதைத் தவிர, அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு இறைஞ்சுவதைத் தவிர வேறு வழி இல்லை.

எனவே நாமும், சூரபத்மனையும் நம்முடைய மனங்களையும் வென்று வெற்றி வீரனாகக் கோயிலுக்குள் எழுந்தருளும் அந்த வடபழநி ஆண்டவனின் திருவடிகளைப் பணிந்து, அவன் அருளால் நம்முடைய மன மாசுகள் எல்லாம் நீங்கிய நிலையில்,தெளிவும் பரவசமும் பெற்றவர்களாக மனநிறைவுடன் திரும்புகிறோம்.

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்