காலை, மதியம், மாலை ஆகிய மூன்று காலங்களிலும் அந்தந்த சந்தியா ரூபங்களாக தியானிக்கப்படும் தேவதா மந்திர சொரூபமே காயத்ரீ. 'மந்திரங்களில் எல்லாம் மிகச்சிறந்தது காயத்ரீ’ என்கின்றன ஞானநூல்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் 'மந்திரங்களில் நான் காயத்ரீயாக திகழ்கிறேன்’ என்று ஸ்ரீபகவத் கீதையில் விளக்குகிறார்.
விஸ்வாமித்திர மகரிஷி கண்டுசொன்ன இந்த மந்திரத்தில் ஒட்டுமொத்த வேதங்களின் சாராம்சமும் அடங்கும் என்பார்கள்.
புராணங்கள், ஸ்ரீகாயத்ரீதேவியை பிரம்மனின் மனைவியாக விவரிக்கின்றன. ஒருமுறை பிரம்மன் யாகம் செய்ய முற்பட்டார். குறிப்பிட்ட நேரத்தில் சரஸ்வதிதேவி வரவில்லை. எனவே, முனிவர்களும் தேவர்களும் ஒரு பசுவை உருவாக்கி அதன் வயிற்றில் இருந்து பெண்ணொருத்தியை தோன்றச்செய்தனர். அந்த தேவிக்கு காயத்ரீ என்று பெயரிட்டு, பிரம்மனுக்கு யாகதேவி ஆக்கினார்களாம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பஞ்சபூதங்களையும், ஐந்து தன்மாத் திரைகளையும் உணர்த்தும் வகையில் ஐந்து திருமுகங்களுடனும், தானே தசமகா வித்யையாக திகழ்வதை உணர்த்தும் விதத்தில் பத்து திருக்கரங்களுடன், தாமரை மலரில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் ஸ்ரீகாயத்ரீ தேவி. அவளின் திருக்கரங்களில் திகழும் சங்கு சக்கரம் விஷ்ணு அம்சத்தையும், மற்றொரு கரத்தில் உள்ள அன்ன பாத்திரம், இந்த தேவியே கலைகளின் களஞ்சியமாகத் திகழ்கிறாள் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. தாமரையில் வீற்றிருக்கும் கோலம் பிரம்மன் மற்றும் மலர்மகளை நினைவூட்டும் என்று தேவியின் அருட்கோல தத்துவத்தை ஞானநூல்கள் சிறப்பிக்கின்றன.
ஆவணி மாதத்தில் பௌர்ணமியுடன் பொருந்திவரும் அவிட்ட நட்சத்திர திருநாளில் (ஆவணி அவிட்டம்) காயத்ரீ மந்திரம் ஜபித்து வழிபடுவது அவசியம். அன்று மட்டுமின்றி அனுதினமும் காயத்ரீ மந்திரம் ஜபித்து வழிபடுவது சிறப்பு.
ஆன்மசுத்தியுடன் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை தியானித்து வழிபட, வேத பாராயணம் செய்த பலன் கிடைக்கும்; ஞான விருத்தி ஏற்படும். உடலும் உள்ளமும் ஒளிபெறும். ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நிகழ்ந்த போரின்போது அவர்களுடைய உடைமைகள் அழிந்துவிடாமல் இருக்க அவற்றை தான் ஏற்றுக் கொண்டு, போருக்குப் பிறகு திருப்பி அளித்தாளாம் காயத்ரீதேவி. எனவே, இந்த தேவியை வழிபட அழிவும், இழப்புகளும் விலகும் என்று பெரியோர்கள் அறிவுறுத்துவர்.
24 அட்சரங்கள் கொண்டது ஸ்ரீகாயத்ரீ மந்திரம். வால்மீகி அருளிய 24,000 ஸ்லோகங் கள் கொண்ட ராமாயணத்தில், ஆயிரம் ஸ்லோகங்களுக்கு ஓர் அட்சரம் வீதம் காயத்ரீ மந்திரத்தின் அட்சரங்களை உட்பொதிந்து அருளினாராம். ஸ்ரீகாயத்ரீ ராமாயணம் என்றே ஒன்றுண்டு.
இதம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீபீஜஸம்யுதம்
த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே
என்கிறது அதன் பலச்ருதி ஸ்லோகம். இந்த காயத்ரீ ராமாயணத்தை மூன்று சந்தியா வேளையில் படிப்பவர்கள், சர்வபாவங்களில் இருந்தும் விடுபடுவர்’ என்று அறிவுறுத்துகிறது. எனவே, அனுதினமும் காயத்ரீயை தியானிப்பதோடு, ஸ்ரீகாயத்ரீ ராமாயணத்தை யும் பாராயணம் செய்து பலன் பெறலாம்.
ஸ்ரீகாயத்ரீ ராமாயணம்
இதைப் படிப்பதால் ஆயிரக்கணக்காக ஸ்ரீகாயத்ரியை ஜபித்த புண்யமும், ஸ்ரீராமாயணத்தை முழுதும் படித்த புண்யமும் கிடைக்கும்.
தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர்முனிபுங்கவம்
தபஸ்வியான ஸ்ரீ வால்மீகி மகரிஷி வேதம் வேதார்த்த பிரசாரம் இவைகளைச் செய்கின்றவரும் நன்கு உபதேசிக்கும் சக்தி உள்ளவரும், மஹர்ஷி ஸ்ரேஷ்டருமான நாரதரை விநீதியுடன் கேட்டார்.
ஸ ஹத்வா ராக்ஷஸான் ஸர்வான் யக்ஞக்நான் ரகுநந்தன:
ரிஷிபி: பூஜித: ஸம்யக் யதேந்த்ரோ விஜயீபுரா
ஸ்ரீராமன் விஸ்வாமித்ரரின் யாகத்திற்கு இடையூறு செய்யும் எல்லா ராக்ஷஸர்களையும் வதம் செய்தார். மஹரிஷிகள் ஜயத்தை அடைந்த தேவேந்திரனைப் போல் நன்கு பூஜித்தனர்.
விஸ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஸ்ருத்வா ஜனகபாஷிதம்
வத்ஸ ராம தனு: பஸ்ய இதி ராகவமப்ரவீத்
தர்மாத்மாவான விஸ்வாமித்ரர் ஜனகருடைய வார்த்தையைக் கேட்டு, ஹே குழந்தாய் ராம! வில்லைப்பார் என்று ஸ்ரீராகவனைச் சொன்னார்.
துஷ்டாவாஸ்ய ததா வம்ஸம் ப்ரவிஸ்ய ஸ விஸாம்பதே
ஸ்யனீயம் நரேந்த்ரஸ்ய ததாஸாத்ய வ்யதிஷ்டத
ஸுமந்திரர் தசரதனுடைய அந்தப்புரம் சென்று அவருடைய வம்சத்தை ஸ்தோத்திரம் செய்துகொண்டிருந்தார்.
வனவாஸம் ஹி ஸங்க்யாய வாஸாம்ஸ்யாபரணானி ச
பர்தாரமனுகச்சந்த்யை ஸீதாயை ஸ்வஸுரோ ததௌ
மாமனாரான தசரதர் பதியை அனுஸரித்து காடு செல்லும் ஸ்ரீ ஸீதைக்கு காட்டில் வஸிக்கும் ஸமயத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளும்படிக்கு வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கொடுத்தார்.
ராஜா ஸத்யம் ச தர்மஸ்ச ராஜா குலவதாம் குலம்
ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம்
ராஜாவே ஸத்யத்தின் உருவம். அரசனே தர்மத்தின் ஸ்வரூபம். ஸத்குலத்தை அடைந்தவர்களுக்கு அரசனே நல்ல குலம். அரசனே மாதா பிதா. மனுஷ்யர்களுக்கு நன்மையைச் செய்கின்றவனும் அரசனே ஆவான்.
நிரீக்ஷ்ய ஸ முஹுர்த்தம் து ததர்ஸ பரதோ குரும்
உடஜே ராமமாஸீனம் ஜடாமண்டலதாரிணம்
ஒரு மூஹூர்த்தம் நன்கு பார்த்து பரதன் பர்ணசாலையில் உட்கார்ந்திருப்பவரும், ஜடையை தரித்தவரும், குருவுமான ஸ்ரீராமனைப் பார்த்தான்.
யுதி புத்தி: க்ருதா த்ரஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுனிம்
அத்யைவ கமனே புத்திம் ரோசயஸ்வ மஹாயஸு:
ஸுதீக்ஷ்ண மஹரிஷி ஸ்ரீராமனை அந்த மகாமுனியான அகஸ்தியரை தர்சிக்க ஆவலிருந்தால் ‘கீர்த்திமானான ஹே ராம, இப்பொழுதே புறப்படு'’ என்று சொன்னார்.
பரதஸ்யார்யபுத்ரஸ்ய ஸ்வஸ்ரூணாம் மம ச ப்ரபோ
ம்ருகரூபமிதம் வ்யக்தம் விஸ்மயம் ஜனயிஷ்யதி
ஸ்ரீராமனை ஸ்ரீ ஸீதாதேவி மாயாம்ருகத்தைப் பார்த்து இந்த மானின் ரூபமானது தங்களுக்கும் பரதனுக்கும் கௌஸல்யை முதலிய மாமியார்களுக்கும் எனக்கும் நிச்சயம் ஆச்சர்யத்தை உண்டுபண்ணுமென்று சொன்னாள்.
கச்ச ஸீக்ரமிதோ ராம ஸுக்ரீவந்தம் மஹாபலம் !
வயஸ்யந்தம் குரு க்ஷிப்ரம் இதோ கத்வாத்ய ராகவ
கபந்தன் சாப விமோசனத்தை அடைந்து, விமானத்தில் உட்கார்ந்துகொண்டு, ஸ்ரீ ராமனை, 'ஹே ராமா, இங்கிருந்து மஹா பலிஷ்டனான ஸுக்ரீவனிடம் போய் அவனை சீக்கிரமாக நண்பனாகச் செய்து கொள்' என்று சொன்னான்.
தேஸகாலௌ ப்ரதீக்ஷஸ்வ க்ஷமமாண: ப்ரியாப்ரியே
ஸுகது: க்கஸஹ: காலே ஸுக்ரீவவஸகோ பவ
வாலி அங்கதனுக்கு உபதேசிக்கும் ஸமயத்தில் தேச காலத்தை எதிர்பார்த்து ப்ரியம், அப்ரியம் இவைகளைப் பொறுத்துக் கொண்டும், ஸுகதுக்கங்களையும் ஸஹித்துக் கொண்டும், இந்த ஸமயத்தில் ஸுக்ரீவனுக்கு உட்பட்டவனாய் இருந்துவா என்றான்.
வந்த்யாஸ்தே து தபஸ்ஸித்தாஸ்தாபஸா வீதகல்மஷா:
ப்ரஷ்டவ்யா சாபி ஸீதாயா: ப்ரவ்ருத்திர்வினயான் விதை:
வடக்கு திக்குக்குச் செல்லும் ஸேனாபதியான சதபலியை ஸுக்ரீவன், மைனாக பர்வதத்தில் வைகாநஸாள் வாலகில்யாள் என்ற தபஸ்விகள், தபஸ்ஸின் ஸித்தியைப் பெற்றவர்கள். பாபத்தை நீக்கிக் கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்களை நமஸ்கரித்து வினயத்துடன் ஸீதை இருக்குமிடத்தைப் பற்றிக் கேள் என்று சொன்னான்.
ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காமரூபிணீம்
விக்ரமேண மஹாதேஜா: ஹனூமான்மாருதாத்மஜ::
மஹாதேஜஸ்வியும், வாயுபுத்ரனுமான ஹனுமான் காமரூபிணியான லங்கிணியை பராக்ரமத்தினால் ஜயித்தார்.
தன்யா தேவா: ஸகந்தர்வா: ஸித்தாஸ்ச பரமர்ஷய:
மம பஸ்யந்தி யே நாதம் ராமம் ராஜீவலோசனம்
ஸ்ரீ ஸீதாதேவி செந்தாமரைக் கண்ணனான தனது பர்த்தாவை தர்சனம் செய்யும் தேவர்கள் கந்தர்வர்கள் ஸித்தர்கள் மஹரிஷிகள் மஹா புண்யசாலிகள் என்று சொன்னாள்.
மங்களாபிமுகீ தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே:
உபதஸ்தே விஸாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம்
ஹனுமாருடைய வாலில் ராவணன் தீ வைத்தபொழுது விசாலமான கண்களை உடைய ஸ்ரீஸீதாதேவி மஹாபாலிஷ்டனான ஹனுமாருக்கு மங்களமுண்டாக வேண்டி பரிசுத்தையாக இருந்துகொண்டு அக்னியை ஸ்தோத்திரம் செய்தாள்.
ஹிதம் மஹார்த்தம் ம்ருதுஹேதுஸம்ஹிதம்
வ்யதீதகாலாயதிஸம்ப்ரதிக்ஷமம்
நிஸம்ய தத்வாக்யமுபஸ்திதஜ்வர
ப்ரஸங்கவானுத்தரமேதத்தப்ரவீத்
விபீஷணன் மந்திரிகளுடைய மத்தியில் அண்ணனை ஹிதமானதும், மஹத்தான அர்த்தமுள்ளதும், யுக்தியுடன் கூடியதும், முக்காலத்திலும் க்ஷேமத்தைக் கொடுக்கக்கூடியதுமான வார்த்தையைக் கடுமையில்லாமல் சொன்னான். அதைக் கேட்ட ராவணன் கவலையடைந்து பதில் சொன்னான்.
தர்மாத்மா ரக்ஷஸாம் ஸ்ரேஷ்ட:
ஸம்ப்ராப்தோஸ்யம் விபீஷண:
லங்கைஸ்வர்யம் த்ருவம் ஸ்ரீமா
னயம் ப்ராப்நோத்யகண்டகம்
ஸ்ரீராமன் யுத்தத்தில் அங்கதனை ராவணனுக்கு தூது அனுப்பி சொல்லி அனுப்புகிறார். தர்மாத்மாவும் ராக்ஷஸ ச்ரேஷ்டனும், ஸ்ரீமானுமான விபீஷணன் என்னிடம் வந்திருக்கிறான். ஒருவிதத் தடங்கலுமில்லாத லங்கா ராஜ்யத்தை விபீஷணன் அடையப்போகிறான்.
யோ வஜ்ரபாதாஸனிஸன்னிபாதாத்
ந சுஷுபே நாபி சசால ராஜா
ஸ ராமபாணபிஹதோ ப்ருஸார்த்த:
சசால சாபம் ச முமோச வீர:
முதல் யுத்தத்தில் ஸ்ரீராமன் ராவணனை அடித்தபொழுது எந்த ராவணன் தேவேந்திரனுடன் யுத்தம் செய்யும்பொழுது தன் பேரில் விழுந்த வஜ்ராயுதத்தினால் கலங்காமலும் அசையாமலும் இருந்தானோ அதே ராவணன் ராம பாணத்தினால் அடிபட்டு பீடையை அடைந்து அசைந்தான். கையிலிருந்த வில்லையும் விட்டுவிட்டான்.
யஸ்ய விக்ரமமாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா:
தம் மன்யே ராகவம் வீரம் நாராயணமனாமயம்
ராவணன் யுத்தகளத்தில் தனது ஸைன்யம் அழிந்து போனதை நினைத்து எவனுடைய பராக்ரமத்தினால் ராக்ஷஸர்கள் அழிந்தார்களோ அவன் மனுஷ்யனல்ல. அவன் அழிவற்ற ஸ்ரீமந்நாராயணனே ஆவான் என்று சொன்னான்.
ந தே தத்ருஸிரே ராமம் தஹந்தமரிவாஹினீம்
மோஹிதா: பரமாஸ்த்ரேண காந்தர்வேண மஹாத்மனா
ஸ்ரீராமன் மூலபலத்தை அழிப்பதற்காக ஸம்மோஹனாஸ்திரத்தை ப்ரயோகம் செய்தபொழுது காந்தர்வாஸ்திரத்தினால் மோஹத்தை அடைந்த ஸைன்யங்கள் சத்ரு ஸைன்யத்தை அழிக்கும் ஸ்ரீராமனைப் பார்க்கவில்லை.
ப்ரண்ம்ய தேவதாப்யஸ்ச ப்ராம்ஹணேப்யஸ்ச மைதிலீ
பத்தாஞ்ஜலிபுடா சேதமுவாசாக்நிஸமீபத::
அக்னி ப்ரவேசம் செய்வதற்கு முன் ஸீதையானவள் ப்ராம்மணர்களையும் தேவதைகளையும் நமஸ்கரித்து, அஞ்சலி செய்துகொண்டு அக்நியின் ஸமீபத்தில் ப்ரார்த்தித்தாள்.
சலனாத் பர்வதேந்த்ரஸ்ய கணா தேவாஸ்ச கம்பிதா:
சசால பார்வதீ சாபி ததாஸ்லிஷ்டா மஹேஸ்வரம்
உத்தரகாண்டத்தில் ராவணன் கைலாஸபர்வதத்தை அசைத்ததால் தேவர்களும் பூதகணங்களும் அசைக்கப்பட்டார்கள். பார்வதியும் அப்பொழுது அசைந்து பரமேஸ்வரனை ஆலிங்கனம் செய்துகொண்டாள்.
தாரா: புத்ரா: புரம் ராஷ்ட்ரம் போகாச்சாதனபாஜனம்
ஸர்வமேவாவிபக்தம் நோ பவிஷ்யதி ஹரீஸ்வர
வாலியினால் ஜயிக்கப்பட்ட ராவணன் வாலியிடத்தில் அக்நி ஸாக்ஷிகமாய் ஸ்நேகம் செய்துகொண்டு, ஸ்திரீகள், புத்ரர்கள், பட்டணம், ராஜ்யம், போகம், வஸ்திரம், வஸ்துக்கள் எல்லாம் நமக்கு இதுமுதல் ஒன்றாகவே இருக்கட்டுமென்று சொன்னான்.
யாமேவ ராத்ரிம் ஸத்ருக்ன: பர்ணஸாலாம்
ஸமாவிஸத்
தாமேவ ராத்ரிம் ஸீதாபி ப்ரஸூதா தாரகத்வயம்
வால்மீகியின் ஆச்ரமத்திற்கு சத்ருக்னன் போன அதே இரவில் ஸ்ரீ ஸீதாதேவியும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்.
இதம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீபீஜஸம்யுதம்
த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் ஸர்வபாபை:
ப்ரமுச்யதே -
இதில் ஸ்ரீராமாயணம் பூர்ணமாக அடங்கியிருக்கிறது. காயத்ரியின் ஒவ்வொரு அட்சரங்களும் ஒவ்வொரு ஆயிரம் ச்லோகங்களுக்கும் ஆதியில் முறையே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த காயத்ரீ ராமாயணத்தை மூன்று ஸந்தியிலும் எவன் படிக்கிறானோ அவன் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுபட்டவனாவான்.
காயத்ரீ ராமாயணம் முற்றிற்று.
- இன்னும் அறிவோம்...
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியாயோந: ப்ரசோதயாத்
கருத்து: நமது அறிவைத் தூண்டுபவர் எவரோ... ஒளிப் பிழம்பாக திகழும் அந்த தெய்வத்தின் ஓளிக் கிரணங்களை வணங்குவோம்.