'அமைச்சரே...''
'மன்னா..?''
'முற்றும் துறந்த துறவி ஒருவரை நான் சந்திக்க வேண்டும். உடனே ஏற்பாடு செய்யுங்கள்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'ஆகட்டும், மன்னா..!''
'உனக்கு இது அருமையான வாய்ப்பு! நாளை ஒருநாள் மட்டும் துறவி வேடமிட்டு, நான் சொல்லும் மரத்தடியில் போய் உட்கார்.காவி உடையும், பொய் தாடியும் நான் ஏற்பாடு செய்கிறேன். மன்னர் உன்னைக் காண வருவார். அவரிடம் நான் சொல்கிறபடி பேசு; நடந்துகொள்..!''
'இதனால் எனக்கு என்ன லாபம்?''

'மன்னரிடமிருந்து ஏராளமான பொன்னும் பொருளும் கிடைக்கும். அதன்பின், நீ தெருத் தெருவாகச் சென்று யாசிக்க வேண்டியதில்லை.''
'சரி, உங்களுக்கு இதனால் என்ன பலன்?''
'அரண்மனையில் தலைமை அமைச்சர் என்கிற பதவி உயர்வு!''
'மன்னா, தாங்கள் சொன்னது போலவே முற்றும் துறந்த துறவி ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டேன். புறப்படலாமா?''
'ஆகட்டும்! யாரங்கே... ஒரு தங்கத் தட்டில் பழ வகைகளும், கஜானாவிலிருந்து பொற்காசுகளும், ரகசிய அறையிலிருந்து தங்கக் கட்டிகளும் எடுத்துக்கொண்டு என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். அமைச்சரே, உமது மேற்பார்வையில் இதெல்லாம் நடக்கட்டும்..!''
'உத்தரவு, மன்னா!''
'சுவாமி, சமீபகாலமாக அரண்மனையில் ஏகத்துக்கும் சிக்கல். மன நிம்மதி இழந்து தவிக்கிறேன். என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்வதற்குக் காத்திருக்கிறேன்...''
'நாடாளும் மன்னருக்கே மனநிம்மதி இல்லையா? ஆச்சரியம்தான்! போகட்டும்... இப்போது என்னை நீங்கள் சந்திக்க வந்ததே ஒரு பரிகாரம்தான். சென்று வாருங்கள். இனி உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது!''
'தங்கள் ஆசி சுவாமி..!''
'இல்லை, அமைச்சரே! இந்தப் பொய் தாடியையும், காவி உடையையும் திருப்பிக் கொடுப்பதாக இல்லை. இனி, நான் இந்தத் துறவுக் கோலத்தில்தான் தேசாந்திரியாகச் செல்லப் போகிறேன்!'
'அடப்பாவி! மன்னர் காணிக்கையாக அளித்த பொன்னையும் பொருளையும் நீயே அபகரிக்கத் திட்டமிட்டுவிட்டாயா? அதில் எனக்குரிய பங்கு வந்தாக வேண்டும்!'
'பங்கு என்னய்யா பங்கு? அனைத்தையும் நீங்களே எடுத்துக் கொண்டு புறப்படுங்கள். மக்கள் நலமே மன்னர் நலம்! நல்லாட்சி நடத்திட மன்னருக்கு உறுதுணையாக இருங்கள். எனக்கு அது போதும்!'
'வேடிக்கை! துறவி வேடம் போட்டதாலேயே உன்னை நிஜத் துறவி என்று எண்ணிக்கொண்டு விட்டாயா?'
'ஒருநாள் துறவி வேடம் புனைந்ததற்கே மன்னரும், மந்திரிப்பிரதானிகளும் என் காலில் விழுந்து ஆசி பெற்றுச் செல்கிறீர்கள். உண்மையாகவே எல்லாவற்றையும் துறந்தால்..? துறவின் மகத்துவத்தை எனக்குப் புரிய வைத்தமைக்கு நன்றி அமைச்சரே! நீங்கள் புறப்படுங்கள்!''
'தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி|
வலைப்பட்டார் மற்றையவர்’ என்பது குறள்.