Published:Updated:

நாடியம்மன், அய்யனார், அம்பரப்பர்... வாழ்வாதாரப் போராட்டங்களின் காவல் தெய்வங்கள்!

நாடியம்மன், அய்யனார், அம்பரப்பர்... வாழ்வாதாரப் போராட்டங்களின் காவல் தெய்வங்கள்!
நாடியம்மன், அய்யனார், அம்பரப்பர்... வாழ்வாதாரப் போராட்டங்களின் காவல் தெய்வங்கள்!

மிழர்களின் பண்பாட்டுக்கும், தொழில்நுட்பத் திறனுக்கும், செழுமையான வாழ்க்கைக்கும் சான்றாக காலம் கடந்து ஓங்கி உயர்ந்து நிற்கின்றன கோயில்கள். எவ்வளவோ இயற்கை சீற்றங்கள், போர்களைக் கடந்தும் இன்னும் சிதைவின்றி நிற்கிற தஞ்சை பெரிய கோயிலும், கங்கை கொண்ட சோழீச்சுவரமும் இதற்குச் சான்று. 

கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் உருவாக்கப்பட்டவை அல்ல. மக்கள் கூடுதலமாக, நீதிமன்றமாக, ஆவணக் காப்பமாக, கல்விக்கூடமாக, கலைக்கூடமாக, நிர்வாக மையங்களாக... ஏன் கருவூலங்களாகவும், வங்கிகளாகவும் கூட இருந்துள்ளன. அந்நிய நாடுகளை வென்று கொண்டுவரும் செல்வங்களும், வரிகளாக வசூலிக்கப்படும் தானிய மூட்டைகளும் கோயில்களில் தான் இருப்பு வைக்கப்பட்டன. ஒரு நாட்டின் கௌரவச் சின்னமாக கோயில்களே கருதப்பட்டன. அதனால்தான் படையெடுத்து வரும் அந்நிய மன்னர்கள், கோயில்களைக் குறி வைத்துத் தாக்கினார்கள். வென்ற நாடுகளில் இருந்து, கோயில் சிற்பங்களை பெயர்த்து எடுத்துச்சென்று, தங்கள் தேசத்தில் வெற்றிச் சின்னங்களாக நிறுவினார்கள். 

அந்த வரலாறை மீண்டும் மெய்ப்பிக்கின்றன சமகால நிகழ்வுகள். தமிழத்தில் திசைக்கொரு வாழ்வாதாரப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மீதுள்ள வஞ்சத்தால், பிற மாநிலங்கள் புறக்கணிக்கும், துரத்தியடிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தின் மீது திணித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.  கதிராமங்கலம் எரிவாயுத் திட்டத்துக்கு எதிரான போராட்டமும் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டமும் 100 நாட்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் மிகுந்த எழுச்சியோடு நடந்து அடங்கியிருக்கிறது. அதேபோல், தேனியில் கொண்டுவர முயற்சித்த நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகவும் மக்கள் பெரும் திரளாகப் போராடினார்கள்.   

இந்தப் போராட்டங்கள் அனைத்திலும்  ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவை அனைத்துமே கோயில்களைக் கூடுதலமாகக் கொண்டு தொடங்கிய போராட்டங்கள்.

கூடங்குளத்தில் விசுவாமித்திரர் கோயில், லூர்து மாதா ஆலயம். நெடுவாசலில் நாடியம்மன் கோயில். கதிராமங்கலத்தில் ஈஸ்வர மூர்த்தி ஐய்யனார் கோயில். தேனி பொட்டிபுரத்தில் அம்பரப்பர் கோயில். கோயில்களை வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி, தங்கள் வாழ்வாதாரப் போராட்டத்துக்கான களமாகவும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.  

கோயில்களுக்கும், மக்களுக்கான நீதிக்கும் மரபு ரீதியான, வரலாற்று ரீதியான தொடர்பு இருக்கிறது. போராட்டங்கக் களமாக மாறிய அந்தக் கோயில்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கூடங்குளம் அணு உலைப் போராட்டம் :

கூடங்குளத்தில், ரஷ்யா ஆதரவோடு நிறுவப்பட்ட அணு உலைக்கு எதிரான போராட்டம் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நடந்தது. நெல்லை, தூத்துகுடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். முதலில் நிறுவப்பட்ட இரண்டு அணு உலைகளுக்கு எதிராக மக்கள் போராடி வந்த நிலையில் இப்போது மேலும் நான்கு அணு உலைகளை அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. பேரிடர் மேலாண்மை பயிற்சி  அளிக்கவேண்டும், இழப்பீடு தொடர்பான ஆவணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்பட  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடத் தொடங்கினார்கள் மக்கள். அந்தப் போராட்டத்துக்கு இடிந்தகரை விசுவாமித்திரர் கோயிலும், லூர்து மாதா ஆலயமும் அரண்களாக இருந்தன. 

லூர்து மாதா கோயில் :

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் 'மாதா' காட்சியளித்த  பின்பு  உலகம் முழுவதும், 'லூர்து மாதா ஆலயங்கள்' பெருகின. அந்த அடிப்படையில் உருவானதுதான் இடிந்தகரை லூர்துமாதா ஆலயமும். லூர்து நகரில் மாதா காட்சியளித்தபோது அவரின் பாதம் பட்ட கல் ஒன்று இங்கே பதிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கல்லை இடிந்தகரையைச் சேர்ந்த தாமஸ் ஆண்டகை பிரான்ஸில் இருந்து எடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இடிந்தகரையை வரலாறு 'இசைநகர்' என்று குறிப்பிடுகிறது. சுமார் 39 அருட்தந்தையர்கள், 150 கன்னிமார்கள், 2 ஆண்டைகைகளை இறைசேவைக்கு தந்த புண்ணியபூமி இது.

ஒவ்வோராண்டும், லூர்து நகரில் மாதா காட்சியளித்த நாள் வரும்போது இங்கு திருவிழா நடைபெறும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாதா தங்கத்தேரில் பவனி வருவார். 

விசுவாமித்திரர் கோயில் :

நவக்கிரக பரிகார ஸ்தலங்களில் மிக முக்கியமானது இது. இங்கே மகாலிங்க ஸ்வாமி, அகிலாண்டேஸ்வரியுடன் காட்சி தருகிறார்.  தமிழகத்திலேயே விசுவாமித்திரருக்கென்று உள்ள தனிக்கோயில் இதுதான். அதனால் இதை 'விசுவாமித்திரர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. 

ஒருமுறை விசுவாமித்திரர் யாகம் செய்து கொண்டிருந்தபோது, தாடகை மற்றும் சில அரக்கர்கள் இடையூறு செய்தனர். இதனால் ராமன், லட்சுமணன் இருவரும் இணைந்து அரக்கர்களை அழித்தனர். இதனால் அவர்களுக்குத் தோஷம் உண்டானது. அதை போக்குவதற்காக யாகம் செய்ய முடிவெடுத்தனர். இது போன்ற யாகங்கள் கடலோரங்களில்தான் மேற்கொள்ளப்படவேண்டும். எனவே தெற்கு நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்து விஜயபதியில் உள்ள தில்லைவனத்துக்கு வந்தடைந்தனர். அங்கே  காளியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதோடு, ஹோமக்குண்ட விநாயகர், விஸ்வாமித்திர மகாலிங்கஸ்வாமி , அகிலாண்டேஸ்வரி அம்மனையும் பிரதிஷ்டை செய்தனர். பின்னர் யாகம் செய்து தங்களது  தோஷத்தைப் போக்கினார்கள் என்கிறது கோயிலின் தலவரலாறு. 

இங்கு நவக்கிரகங்களுக்கு செய்யப்படும் நவக்கலச அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பிரதோஷம், ஆடி அமாவசை மற்றும் தை அமாவாசைக் காலங்களில் இங்கே அதிகமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இங்குள்ள விசுவாமித்திர தீர்த்தக் கட்டிடத்தில் தீர்த்தமாடி, தில்லைக்காளிக்கு பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.

கதிராமங்கலம் காளீஸ்வரமுடையான் கோயில் :

கதிராமங்கலத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக  ஓ.என்.ஜி.சி நிறுவனம் விவசாய நிலங்களுக்கடியில் குழாய்கள் பதித்து இயற்கை எரிவாயுவை எடுத்து வருகிறது. இதனால் நிலவளம், நீர்வளம் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக போராடி வருகிறார்கள். பலர் கைது செய்து செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர். 

கூடங்குளத்தில் போராட்டக் களமாக இருந்தது, லூர்து மாதா ஆலயம், விசுவாமித்திரர் கோயில் என்றால், கதிராமங்கலத்தில் காளீஸ்வரமுடையான் கோயில். இது ஆரம்ப காலத்தில் சிவன் கோயிலாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கு அடையாளமாக நந்தி ஒன்று உள்ளது. பிரதோசமும் இக்கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது. போராடும் மக்களின் நெஞ்சுரமாக அய்யனார் இருக்கிறார் என்றால் மிகையில்லை.

பொட்டிபுரம் அம்பரப்பர் :

தமிழ்நாட்டின் சூழலியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மேற்குத் தொடர்ச்சி மலை. இது உயிர் பன்மயச்சூழல் நிறைந்த பகுதியாகவும், உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்குள்ள அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்தன. இது ஏழு மலைகளைக் கொண்ட தொடர் பகுதி.  சின்னபொட்டிபுரம், பெரியபொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை, குப்பனசாரிபட்டி  ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்கு இந்த ஏழு மலைகள் தான் குல தெய்வம். மலையடிவாரத்தில், ஒரு சிறிய ஓலைக் குடில் ஒன்று உள்ளது. அந்தக் குடிலில் ஏழு மலைகளைக் குறிக்கும் விதமாக ஏழு நடுகற்கள் இருக்கின்றன.  

திருவிழாக் காலங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கோயிலில் பொங்கல் வைத்து, தேவராட்டம், தவில் இசையுடன் வழிபடுவது வழக்கம். பெண்கள் பொங்கல் வைத்து தயராக இருக்க, ஆண்கள் மலையேறிச் சென்று விளக்கு ஏற்றி கொடி அசைப்பர். அதன்பிறகு அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்படும். வயதான பெண்மணிகள், பாரம்பர்ய உடையணிந்து அம்பரப்பர் மலையைத் தொழுது பாடல்களைப் பாடுவார்கள். 

தவிர, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்ததும் இந்த மலைகள் தான். நியூட்ரினோ திட்டத்தால், தாங்கள் கடவுளாக வழிபடும் மலைகள் உடைக்கப்படும் என்பதை அறிந்து மக்கள் கொதித்தெழுந்தார்கள். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை அனைத்தையும் திருப்பி அளித்துவிட்டு மலையிலேயே நிரந்தரமாக குடியேறிவிடுவோம் என்று எச்சரித்தார்கள். அதோடு, வயதான பெண்மணிகள்  தினமும் இக்கோயிலுக்கு வந்து தங்கள் பாரம்பர்ய உடையணிந்து, பாடல்கள் பாடி, கோஷமிட்டு வித்தியாசமான வடிவத்தில் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இப்போராட்டம் முழுவதுமாக பெண்களாலே வழிநடத்தப்பட்டது. 

நெடுவாசல் நாடியம்மன் கோயில் :

மீத்தேன் திட்டத்துக்கு தமிழக விவசாயிகளிடையே பலத்த எதிர்ப்பு ஏற்படவே, 'ஹைட்ரோகார்பன்' என்ற பெயரில் புதிய திட்டமாக அதை கொண்டு வந்து தமிழகத்தின் மீது திணித்தது மத்திய அரசு.  இதற்காக தேர்வு செய்யப்பட்ட 31 இடங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமமும் ஒன்று. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்றாலும் நெடுவாசலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகவும் பசுமையானவை.

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்த நிலையில் மக்கள் அதற்கு எதிராக களத்தில் இறங்கினார்கள். இந்தப் போராட்டத்துக்குக் களமாக இருந்தது. நெடுவாசல் நாடியம்மன்  கோயில். 

செங்கல் கட்டுமானத்தில் இருந்த நாடியம்மன் கோயில் 1974-ல் தான் கற்கோயிலானது. 1994- ம் ஆண்டு கல் மண்டபம் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் திருவிழா  ஒருமாத காலம் நடைபெறும். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடத்தப்படும்.  

முளைப்பாரி, காவடி, பால்குடம் எனத் திருவிழா களைகட்டும். எட்டாவது நாள் குருத்தோலை சப்பரத் திருவிழா நடக்கும். பனங்குருத்து, தென்னங்குருத்துகளால்  65 அடி உயரம், 30 அடி அகலத்தில் ராஜ கோபுரம் உருவாக்கப்படும். தேர், முத்துப் பல்லக்கு, தீர்த்தம் என்று மாதம் முழுவதும் விழாக்கோலம் தான்.

நெடுவாசல் கிராமத்தின் முக்கியமான கூட்டங்கள், ஆலோசனைகள் அனைத்தும் நாடியம்மன் கோயிலில் தான் நடைபெறும். அந்த அளவுக்கு மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாக இருக்கிறது இந்தக் கோயில்.

இந்தக் கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற திருத்தலம் இது.. 

இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதியை காப்பதற்காகத்தான் நாடியம்மனின் துணையோடு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்!