Published:Updated:

மரணத்துக்குப் பின் என்ன நடக்கும்? - ஒரு அமானுஷ்ய அலசல்! #LifeAfterDeath

மரணத்துக்குப் பின் என்ன நடக்கும்? - ஒரு அமானுஷ்ய அலசல்! #LifeAfterDeath
மரணத்துக்குப் பின் என்ன நடக்கும்? - ஒரு அமானுஷ்ய அலசல்! #LifeAfterDeath

மரணத்துக்கு அப்பால்..? மரணத்துக்குப் பின் வாழ்க்கை..? என்பதெல்லாம் நமக்குப் புரிபடாமல் இருப்பதால்தான் மனித வாழ்க்கை சுவாரஸ்யமாக உள்ளது. 'ஆன்மா என்றும் அழியவே அழியாது. அழிவு என்பது நம் உடலுக்கு மட்டும்தான். நம்முடைய வினைகளின் காரணமாகவே நமக்குப் பிறவி ஏற்படுகின்றது. மரணம் சம்பவித்து வினைப் பயன் முடிந்ததும் ஆத்மாவானது தான் கொண்டிருக்கும் உடலைத் துறந்துவிடுகிறது. ஆனால், எடுத்த பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப மறுபடியும் அந்த ஆத்மா ஒரு பிறவி எடுக்கிறது. இதுதான் காலம்காலமாக சொல்லப்பட்டு வரும் பிறவி மற்றும் ஆத்மா பற்றிய தத்துவம். புராணங்களும் இப்படித்தான் சொல்கின்றன. ஆன்மிகம் மட்டுமே இதுவரை அலசி ஆராய்ந்து வந்த மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய ஆய்வை, இப்போது அறிவியலும் மேற்கொண்டு அலசி ஆராய்ந்து சில முடிவுகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

மரணத்துக்குப் பிறகு ஆன்மா என்ற வாதத்தில் ஆன்மிகத்துக்கு எதிரான நிலையைத்தான் இதுவரை அறிவியல் எடுத்தது வந்துள்ளது. மரணம் மனிதருக்கு இறுதியானது. மறு ஜென்மம் என்பதோ வினைகளுக்கு ஏற்ற சொர்க்கம் நரகம் என்பதோ கிடையாது. மூளை செயலுடன் இருக்கும் வரைதான் நினைவுகள் மற்றும் செயல்கள் யாவுமே. மூளை செயல் இழந்தால் உடலும் அழியும் அதோடு நினைவுகளும் செத்துப் போகின்றன. எனவே, மரணத்துக்குப் பின் வாழ்க்கை இல்லை. அதுபற்றி சொல்லப்படும் எல்லா மதக் கருத்துகளும் கட்டுக்கதையே என்றுதான் இதுவரை அறிவியலும், அறிவியல் அறிஞர்களும் சொல்லி வந்தனர். ஆனால், சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் மரணத்துக்குப் பிந்தைய மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி ஜெர்மானிய மருத்துவர்கள் குழு ஒன்று ஆய்வு செய்தனர். ஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநிலை ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்த குழு ஒன்று மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்துக்குப் பின் வாழ்க்கை உள்ளது என நிரூபித்துள்ளனர். மூளை தனது செயலை இழந்தாலும் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது என்பதைக் கண்டறிந்து நிரூபித்தனர்.

இந்த மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை என்பது பற்றிய ஆய்வை, பல்வேறு வகைகளில் மரணம் அடைந்தவர்களின் மரணத் தறுவாயில் அவர்களுக்கு அருகில் இருந்தபடி அவர்களுடைய மரணம் சம்பவிக்கும் நேரத்தில் அவர்களுக்கு நேரிட்ட அனுபவங்களை நவீன ரக அறிவியல் சாதனங்களின் உதவியுடன் கண்டறிந்திருக்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக சுமார் 1000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறப்பான மருந்துகளின் துணையோடு, மரணமடைந்த உடலினைச் சிதைக்காமல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மரணம் நேரிட்ட பதினெட்டு நிமிடங்களுக்குப் பிறகு உடல் நினைவு இழந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நவீன முயற்சிகளினால் இறந்துபோன உடலின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர். அவை பொதுவாக, உடலிலிருந்து உயிர் பிரிவது போன்ற நினைவுகள், தெய்வீக ஆற்றலால் ஆட்கொள்ளப்பட்டு மிதத்தல் போன்ற உணர்வு, ஒளியில் ஜொலிக்கும் ஆற்றல், அமைதி நிலை, சூடான பாதுகாப்பு, மரண வேளையின் அனுபவம் எனப் பல்வேறு உணர்வுகள் பகிரப்பட்டுள்ளன. பல்வேறு வாக்குமூலங்களில், மத நம்பிக்கைகள் பற்றிய விஷயங்கள் எதுவும் இல்லை. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் மதநம்பிக்கை அற்றவர்கள் என எல்லோரின் அனுபவமும் இங்கே பதியப்பட்டதாம். பெரும்பாலும் எல்லோரின் நிலையும் ஒரே மாதிரியாக இருந்தது ஆச்சர்யம் என ஜெர்மன் மருத்துவக்குழு கூறியது.

1944-ம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற உளவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டில் தனக்கு உண்டான மாரடைப்பும் அப்போது உருவான அசாதாரண சூழல் பற்றியும் எழுதியுள்ளார். அதில் உடலை விட்டு அவரின் உயிர் பிரிந்து சென்றதாகவும், இந்த பூமியை சில மைல்கள் தொலைவில் மேலே இருந்து கண்டதாகவும் கூறி வியந்துள்ளார். அண்டசராசரத்தில் பார்த்த விண்வெளிக் காட்சிகள் யாவும் பின்னர் விண்வெளி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது என்பது உண்மை.

இதைப் போலவே கனக்டிகட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கென்னத் ரிங் என்பவர் 1980-ம் ஆண்டில் மரணத்தின் இறுதிவரை சென்று வந்த சுமார் 100 பேரிடம் மரணத்துக்குப் பிந்தைய நிலையினைக் கேட்டு அறிந்தார். அவற்றில் பாதிக்கும் மேலானோர் பெற்ற அனுபவத்தில் ஒற்றுமை இருந்தது. அவை உயிர் நின்று போன ஒரு சூழலில் ஆழ்ந்த அமைதி, ஒளிவெள்ளம், உடலை விட்டு உயிர் சிறிய வலியோடு பிரிவது, இருட்டு சுரங்கப் பாதையை உயிர் அடைவது, வெளிச்சத்தைக் காண்பது, அங்கு வண்ணமயமான ஒளியினை அடைவது' என ஒரேமாதிரியான பதில்கள் இருந்தன. மேலும், அதிசயமாக பிறவியிலேயே பார்வை அற்றவர்கள் கூட தங்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் பூமியையும், விண்ணையும் தெளிவாகக் கண்டதை சொல்லியிருக்கிறார்கள்.

மருத்துவர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975-ம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற நூல்தான் உலக அளவில் மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை குறித்து பல ஆய்வுகளை மேற்கொள்ள செய்தது. 150 பேரிடம் இவர் மேற்கொண்ட ஆய்வுகள் 9 விதமான உணர்வுகளை அவர்கள் அனுபவித்ததை கூறியது. டாக்டர் ப்ரூஸ் க்ரேசன், டாக்டர் பிம் வான் லோம்மெல், டாக்டர் மைக்கேல் சாபொம் போன்ற மேதைகளும் பின்னாளில் ஆய்வுகள் செய்து டாக்டர் ரேமண்ட் மூடி கூறியவை உண்மை என அறிவித்தனர். ஆச்சர்யமாக அந்த 9 வகை உணர்வுகளும் ஏறக்குறைய நமது புராணங்கள் கூறியவை போலத்தான். ரீங்கார ஒளியைக் கண்டு பரவசம், உடலை விட்டு உயிர் பிரிதல், விண்வெளியில் ஆன்மா தங்குதல், சுரங்கவழிப்பயணம், ஒளிமிக்க சிலரை தரிசித்தல், பிரமாண்ட ஜோதியைக் காணல், கடந்த வாழ்க்கையை பரிசீலித்தல், வாழ்க்கை முடிவடைந்து போகவில்லை என்று உணர்தல் என அப்படியே ரேமண்ட் மூடி அவர்களின் ஆய்வுகள் நமது புராணங்களைப் பிரதிபலித்தது.

அதிலும் கருடபுராணம் சொல்லும் மரணத்துக்குப் பிந்தைய மானிடரின் நிலை சுவாரஸ்யமானது. தூங்குவதும், விழிப்பதும் போலானது வாழ்வும், மரணமும் என்று சொல்லியது வள்ளுவம். விழிப்பு உணர்வு கொண்ட ஞானியர்கள் மரணத்தை மிக எளிதாகக் கண்டுகொள்வார்கள். அவர்களுக்கு மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை முறை முன்னரே தெரியும் என்றும் நமது கதைகள் கூறுகின்றன. மரணம் என்பது உணர்வு. அதை மற்றவர்களுக்கு உணர்த்தவே முடியாது. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். எனினும் இன்று வரை உலகில், மரணம் என்பதும் மரணத்துக்குப் பிந்தைய வாழ்வு என்பதும் புதிர் மட்டுமல்ல, சுவாரஸ்யமான நிலையும் கூட. மரணத்தை வெல்லும் காலம் கூட வரலாம். அப்போது மனித வாழ்க்கை அலுப்பாகி விடும். உரிய வயதில் விடை பெறுவதுதான் உயர்வான விஷயம். அப்போதுதான் சொர்க்கம் நரகம் என்பவையும் சுவாரஸ்யமாக இருக்கும். அறிவியல் ஆராய்ச்சிகள் உடலை விட்டு ஆன்மா நீங்கும்போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன என்றால் நமது புராணங்கள் சொன்னவை யாவும் உண்மை என்றுதானே எண்ணத் தோன்றுகிறது?! மரணம் மனிதருக்கு இறுதியானதா? இல்லவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.