சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##
'த
லைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பார்கள். வலியும் வேதனையும் மட்டும்தானா? எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அதை அனுபவித்தால்தான் உணர முடியும்; உணர்ந்தால்தான் தெளிவு பெற முடியும்!

பால் பாயசமாக இருந்தாலும் சரி... பாகற்காயாக இருந்தாலும் சரி, சாப்பிட்டுப் பார்த்தால்தான், பாயசம் இனிப்பதையும், பாகற்காய் கசப்பதையும் அறிய முடியும். கெட்டதை அறிந்தால்தான் நல்லதும், வெயிலில் வாடினால்தான் நிழலும், தாகத்துக்குத் தவித்தால்தான் தண்ணீரின் பெருமையையும் அறிய முடியும். படைப்புக் கடவுளாம் பிரம்மனும், கர்வம் என்பது எத்தனைக் கொடியதான சிந்தனை என்பதை உணர்ந்தார். 'இந்த தலைக்கனத்தால், என் தலைகளில் ஒன்றை இழந்துவிட்டேனே’ என்று கலங்கினார்; 'எனது ஆணவத்தால், படைப்புத் தொழிலும் அல்லவா பறிபோய்விட்டது’ என்று அழுதார். 'எவ்வளவு பெரிய சிவநிந்தனைக்கு ஆளாகியிருக்கிறேன்’ என உணர்ந்து, வாடிப் போனார். 'என் கர்வம் மொத்தமும் காணாமல் போனது; என் இறுமாப்பு இன்றோடு அழிந்தது. ஆணவம் இந்த க்ஷணத்திலிருந்து அகன்றது. என் சிவமே, என்னை மன்னியுங்கள். உன் அடி- முடி தொடமுடியாமல் சோர்ந்து போனவர் களில் நானும் ஒருவன்தானே?! அதையெல்லாம் மறந்துவிட்டு, ஆணவம் தலைக்கேற, தடுமாறித்தான் போனது புத்தி. என்னை மன்னித்தருளுங்கள் ஸ்வாமி! அடியேனின் சாபத்துக்கு விமோசனம் தேடி, தலங்கள்தோறும் வந்து உம்மை ஒருமித்த நினைப்புடன் வணங்குகிறேன்’ என்று தன் தவற்றை உணர்ந்து மன்றாடினார் பிரம்மதேவன்.

கர்வத்தில் கரைந்து, மார்தட்டிய பிரம்மன், இதயத்தில் சிவனாரை நிறுத்தி, மானசிகமாக வேண்டினார். எப்படியேனும் தன்னுடைய படைப்புத் தொழி லைத் துவங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கர்வம் உள்ளுக்குள் இருப்பின் கடமையில் கவனம் சிதறும். எந்தவொரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செயலாற்ற முடியாது போகும். செயலில் தடுமாற்றம் ஏற்பட்டால், நல்லதொரு வேலைக்காரன், அருமையான படைப்பாளி என்று பெயரெடுக்க முடியாது. ஆகவே, உள்ளுக்குள் இருந்த கர்வத்தை வெளியே போட்டார் பிரம்மா. அதையடுத்து, அவரால் தெளிவாகச் சிந்திக்க முடிந்தது. படைப்புத் தொழில் ஸ்தம்பித்துப் போனால், இந்த உலகம் என்னாகுமோ, ஏதாகுமோ எனும் கவலை அதிகரித்தது.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

கவலையும் ஏக்கமும் பொங்க, ஒவ்வொரு தலமாகச் சென்று, சிவப் பரம்பொருளைப் பிரார்த்திப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் பிரம்மன். அவர் எந்தத் தலங்களுக்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் புதிதாகத் தீர்த்தம் ஏற்படுத்தி, சிவலிங்கத்தை உண்டாக்கி, வில்வத் தழைகளால்

அர்ச்சிப்பதை வழக்கமாகக் கொண்டார். ஒருகட்டத்தில்... 'அடேங்கப்பா... இந்த உலகில் பொருள் திருடுவதோ, ஒருவரை ஏளனம் செய்வதோ, பசியென வருவோருக்கு அன்னமிடாமல் இருப்பதோ பெரும் குற்றமில்லை போல! எவர் பொருள் மீது ஆசை வைத்தாலும், எவருக்கும் எந்தவொரு உதவியும் செய்யாது போனாலும், அதுகூட மிகப் பெரிய அவச் செயலா கக் கருதப்படுவதில்லை போலும்! ஆனால், அகந்தை எனும் அரக்க சிந்தனை ஒருவருக்கு இருந்துவிட்டால், மற்ற எல்லாக் குணங்களும் வந்து அவனை ஆட்டிப்படைத்து, அழித்துவிடும். கர்வம் என்கிற விஷ வித்து, வளராமல் பார்த்துக் கொள்ளும்வரை, வாழ்வாங்கு வாழலாம். மிகச் சின்னதாகவேனும் அந்த கர்வ வித்து வளர்ந்துவிட்டால், மமதை மயக்கத் தில் மூழ்கி சுக்குநூறாகப் போய்விடுவதைத் தவிர, வேறு வழியில்லை!’ என நினைத்தபடியே இருந்தார் பிரம்மதேவர்.

'சரி... புரிகிறது. நம்மை வைத்து நமசிவாய நாயகன் உலகுக்கு ஏதோ வொன்றை உணர்த்தப்போகிறார் என்பதை அறிய முடிகிறது. சிவமே... உன்னைச் சரணடைந்தேன். நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்...’ என்று சொல்லியபடி தனக்குள் கரைந்தார் பிரம்மதேவர். அப்போது ஓர் அசரீரி... 'மகிழ மரங்களும் வில்வ மரங்களும் சூழ்ந்த பகுதியைத் தேடிச் சென்று, அங்கே தவம் புரிவாயாக!’ என்று கேட்டது.

அதன்படி தலங்கள் தலங்களாகத் தேடிக் கொண்டே வந்தார் ஸ்ரீபிரம்மா. ஒரு வளர் பிறை பிரதோஷ நாளில், அந்தி சாயும் அற்புதமான நேரத்தில், மகிழம்பூவும் வில்வமும் இணைந்து மணம் பரப்பிய அருமையான சூழலை உணர்ந்து, அந்த இடம் நோக்கி நகர்ந்தார். 'அற்புதமான இடம்! ஏதோவொரு திருவிளையாடலை நிகழ்த்துவதற்காக, உலக மக்களுக்கு உணர்த்துவதற்காகச் சிவனார் தேர்ந்தெடுத்திருக்கிற திருத்தலம் இதுதானா?!’ என அந்தத் தலத்தின் அழகில் லயித்தார் ஸ்ரீபிரம்மா. அப்படியே ஓரிடத்தில் அமர்ந்து, கண்களை மூடி, உமையருபாகனின் திருவடியைப் பற்றிக்கொண்டார்.

பிரதோஷ வேளையில், அந்தப் பகுதியில் இன்னும் ரம்மியம் சூழ்ந்தது. அது வளர்பிறைக் காலம் என்பதால், இன்னும் பட்டொளியைப் பரப்பிக் கொண்டிருந்தான், சந்திரன். அதுவரை சூரியனால் பூமியில் விழுந்து படர்ந்திருந்த வெப்பம் மறைந்துபோனது. மெல்லியதாகக் காற்று வீச... இதமான குளிர் தரைகளில் பரவி, மரங்களில் அமர்ந்து, பூக்களின் வாசத்தை எடுத்து, காற்றில் கலக்கச் செய்துகொண்டிருந்தது. ஸ்ரீபிரம்மா, சிவநாமத்தில் மூழ்கியிருந்தார். 'என்னைக் கொண்டு நீங்கள் எந்த விளையாடலைச் செய்ய நினைத்தீர்களோ, அதைச் செய்து கொள்ளுங்கள்’ என்று உள்ளுக்குள் தன்னை முழுவது மாக இறைவனிடம் ஒப்படைத்தார். இதுதான் சரணடைதல் என்பது! கர்வம் இருப்பவர்கள், ஒருபோதும் எவரிடமும் சரணடைய மாட்டார் கள். அதேபோல், கர்வமிருப்பவர்களைக் கடவுள் ஒருபோதும் ஆட்கொள்ள மாட்டார்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

நீண்ட நேரத்துக்குப் பிறகு கண் விழித்தார் பிரம்மா. அதுவரை அவருக்கு ஏதேதோ கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்டார் பிரம்மா. சட்டென்று எழுந்தார். அந்த மகிழ மரத்தைக் கடந்து, சற்றுத் தொலைவில் உள்ள இடத்துக்குச் சென்றவர், இரண்டு கைகளையும் கூப்பியபடி, அந்த இடத்தையே வெறித்துப் பார்த்தார். அவ்வளவுதான்... அந்த இடத்தில் இருந்து மெள்ள மெள்ளப் பிரவாகமெடுத்த தண்ணீர், ஒரு மிகப் பெரிய வட்ட வடிவில் தேங்கி நின்றது! அதில் இறங்கி நீராடினார் பிரம்மதேவன்.

பிறகு, மகிழ மரத்தடியில் அமர்ந்து கண்கள் மூடி, சிவனாரை நினைத்து தவத்தில் மூழ்கினார். அவர் இருக்குமிடத்தைச் சுற்றிலும் ஒவ்வொரு சிவலிங்கமாகத் தோன்றியது. மொத்தம் 11 சிவலிங்கங்கள். எழுந்து, ஒவ்வொரு லிங்கத் திருமேனி யையும் நீரால் அபிஷேகித்தார். மகிழம் பூவாலும் வில்வ இலையாலும், அலங்கரித்தார்.

அந்த 11 சிவலிங்க மூர்த்தங்களும், 11 தலங்களில் குடிகொண்டிருக்கிற இறைச் சக்திகள், ஸ்ரீபிரம்மாவுக் காக அங்கே அணிவகுத்து லிங்க மூர்த்தங்களாகத் தோன்றின. 12-வது லிங்கம்... ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். ஆக, 12 சிவலிங்க மூர்த்தங்களையும், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இன்றைக்கும் தரிசிக்கலாம். 'பன்னிரண்டு ராசிக்காரர்களும் இங்கு வந்து தரிசித்தால் பெரும் புண்ணியம்’ எனப் போற்றுகின்றனர், பக்தர் பெருமக்கள்.

அதேபோல், முதலில் தென்பட்ட பதினோரு சிவலிங்கத் திருமேனிகளும் எந்தெந்தத் தலத்து நாயகர்கள் தெரியுமா?

- பரவசம் தொடரும்