சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

ரு முறை, பகவான் ஸ்ரீரமண மகரிஷியைத் தரிசிக்க, மாவட்ட ஆட்சியாளரும் (கலெக்டர்), உதவி மாவட்ட ஆட்சியாளரும் வந்து அமர்ந்தனர். அதிகாரம் இருக்கும் இடத்தில், பிறருக்கு உபதேசம் செய்யத் தனக்குத் தகுதி உண்டு என்கிற எண்ணம் உடனே குடியேறிவிடும். தன்னை முன்னிலைப்படுத்த மனம் மிகவும் துடிக்கும். 'நான் யார் தெரியுமா?’ என்கிற அலட்டல் மிக வேகமாக வெளி வரும். அந்த கலெக்டர் தன்னுடைய ஆன்மிக சாதனைகளையும், தான் படித்தவற்றையும், படித்ததில் பிடித்தவற்றையும் பற்றியெல்லாம் மிகச் சரளமாக பகவானிடம் வேகமாகப் பேச ஆரம்பித்தார். நீண்ட நேரம் பேசினார். பிறகு, உதவி கலெக்டர் தன்னுடைய ஆன்மிக அனுபவங்களை, மெய்சிலிர்ப்புகளை பகவானிடம் விவரித்தார். அவரும் நீண்ட நேரம் பேசினார்.

அவர்கள் பேசி முடிக்கும் வரை பகவான் வாய் திறக்கவே இல்லை. எந்த மறுமொழியும் சொல்லவே இல்லை. அவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பகவான் மௌனமாக இருப்பதைப் பார்த்து, அவர்கள் திகைத்தார்கள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. மறுபடியும் பேசத் துவங்கினார்கள்; விவரித்தார்கள். முற்றிலும் பேசி, இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல ஒருவாறு அடங்கினார்கள். அப்போதும் பகவான் மௌனமாக அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர்கள் பேசி, நிறுத்தி, மலங்க முழிப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

''இவ்வளவு நேரம் நாங்கள் பேசினோம். நீங்கள் எதற்கும் ஒரு மறுமொழியும் சொல்லவில்லையே சுவாமி, ஏன்?'' என்று கலெக்டர் கேட்க, பகவான் மெள்ள வாய் திறந்து பேசினார். ''நான் என் மொழியில் உங்களோடு பேசிக்கொண்டிருந் தேன். உங்களுக்குத்தான் கேட்கத் தெரியவில்லை.'' புத்திசாலியான அந்த கலெக்டருக்கு பகவான் சொன்னது சட்டென்று புரிந்தது. செய்ததைவிட அதிகம் பேசுகிறோம் என்பது தெளிவாயிற்று. மாளாது பேசிக்கொண்டிருந்தால் தெளிவு வராது என்பது புரிந்து போயிற்று. அவர்கள் மெள்ள விலகினார்கள்.

ஸ்ரீரமண மகரிஷி

திருவண்ணாமலை வேத பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த, ராமநாத பிரம்மசாரி என்கிற மெலிந்த உருவமுள்ள இளைஞர், ஒரு முறை விருபாக்ஷி குகைக்கு வந்து பகவானைச் சந்தித்தார். பார்த்த முதல் பார்வையிலேயே, ராமநாத பிரம்மசாரி ஸ்ரீரமண மகரிஷியின்பால் ஈர்க்கப்பட்டார். மிகப் பெரிய விஷயத்துக்கு முன்பு நின்றுகொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டார். அவருக்கு அண்மையில் இருப்பதும், அவருக்கு உதவி செய்வதும் தமது பூர்வ வினைப் பயன் என்று சந்தோஷம் கொண்டார்.

குடும்பப் பாரம் தாங்காமல் நிம்மதி தேடி, பொருளாதார விடிவு தேடி, பகவானிடம் வருபவர்கள் உண்டு. நிறையப் பணம் சம்பாதித்து, வாழ்க்கையை உறுதிப்படுத்திக்கொண்டு, தத்துவ விசாரம் ஏற்பட்டு, அதன்பால் வருபவர்களும் உண்டு. ஒருபக்கம் வேலை செய்து கொண்டே, மறுபக்கம் விசாரத்தில் ஈடுபடுகின்ற அன்பர்களும் பகவானிடம் வருவதுண்டு. ஆனால், ராமநாத பிரம்மசாரி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், 'இது ஓர் அற்புதமான இடம், இது ஞானியின் சந்நிதி, இங்கு இருப்பது தன் பிறவியின் பயன்’ என்பதாய் அந்த இடத்

தைச் சுற்றிச் சுற்றி வந்தார்.

பகவானின் அருகே இருந்தபடி பல உதவிகள் செய்தார். வேத பாடசாலை யில் உணவு போடுவார்கள். ஆனால், ராமநாத பிரம்மசாரி அந்த உணவை மறுத்து விட்டு, திருவண்ணாமலையில் வீடு வீடாக ஏறி யாசகம் கேட்டு, உணவு வாங்கிக் கொண்டு வந்து, பகவானி டம் கொடுப்பார். ஸ்ரீரமண மகரிஷியும் அதனை ஏற்றுக்கொள்வார்.

ஒருமுறை, அப்படி யாசகம் வாங்கிய உணவை எடுத்துக்கொண்டு மலைக்குப் போகும்போது, ராமநாத பிரம்மசாரியின் தந்தை எதிர்ப்பட்டார். தனக்கு உணவு கொடுக்கும்படி வேண்டினார். ஆனால், ராமநாத பிரம்மசாரி மறுத்துவிட்டு, மலையேறிச் சென்று பகவானிடம் அந்த உணவை நீட்டினார்.

''உன் தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு வந்தால்தான், நான் உணவு உண்பேன்'' என்று பகவான் சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். மறுபடியும் பகவான் வற்புறுத்த, ராமநாத பிரம்மசாரி மலையிலிருந்து கீழே இறங்கி தன் தகப்பனாரிடம் போய், ''வா... மலைக்கு மேலே போய், நீயும் சாப்பிடலாம்; பகவானும் சாப்பிடுவார்'' என்று அழைத்தார்.

ஸ்ரீரமண மகரிஷி
##~##
ஆனால், மலைக்கு வர ராமநாத பிரம்மசாரியின் தந்தை மறுத்துவிட்டார். மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், மறுபடியும் மலைக் குப் போய், ''தந்தை உணவு எடுத்துக்கொள்ள வரமாட்டேன் என்கிறாரே, என்ன செய்வது?'' என்று பகவானிடம் சொன்னார் ராமநாத பிரம்மசாரி. ''அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன் தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு வா. அப்போதுதான் உண்பேன்'' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் பகவான். வேறு வழியில்லாமல், மீண்டும் தன் தந்தையிடம் சென்று, அவருக்கு உணவு கொடுத்துவிட்டு, மீதம் இருந்ததை எடுத்துக் கொண்டு வந்து பகவானிடம் கொடுத்தார். பகவானும் அதை விருப்பத்தோடு உண்டார். தந்தைக்கு உணவு மறுத்துவிட்டு, குருவுக்குக் கொண்டு வந்து கொடுத்தால், அவர் உத்தமராகி விட முடியுமா? முடியாது. அதைத்தான் ராமநாத பிரம்மசாரிக்குப் புரிய வைத்தார் பகவான்.

'மாதா, பிதா, குரு, தெய்வம்’ இந்த வரிசை யில், தனது இடம் எது என்று ஞானிக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரியும். தாய்க்கும் தந்தைக்கும் முதலிடம் அளிக்காமல், குருதான் முக்கியம் என்று அலட்டிக்கொண்டால், அதை குரு ஒருநாளும் ஏற்க மாட்டார். எது சரியான வழி என்பதைச் சிஷ்யனுக்கு சூட்சுமமாகப் புரிய வைப்பார். அதைத்தான் பகவானும் செய்தார். அன்றிலிருந்து தந்தைக்கு உணவு கொடுத்த பிறகே, ராமநாத பிரம்மசாரி, பகவானுக்கு உணவு எடுத்து வந்து கொடுப்பது வழக்கம்.

ராமநாத பிரம்மசாரி என்கின்ற அந்த இளைஞர் சூட்சுமமானவர். குருவுக்குச் செய்வதாக மட்டும் இல்லாமல், குருவின் அன்பர்கள் அனைவருக்கும் செய்வதே குரு சேவை என்பதைத் தெளிவாக உணர்ந்து, பகவானை நாடி வரும் அன்பர்களுடைய இடத்துக்குப் போய், அங்கே சுத்தம் செய்து, அவர்களுக்கு வேண்டிய உணவு கொடுத்து, நீர் எடுத்து வந்து கொடுத்து, மருத்துவ உதவி தேவையிருந்தால் அதையும் செய்து, பிறகு பகவான் ஸ்ரீரமணருடைய சந்நிதானத்துக்கு வருவது அவரது வழக்கம்.

இங்கு தத்துவ விசாரமோ, குருவின் எதிரே அமர்ந்து உள் முகமாகத் திரும்புதலோ முக்கியமாக இல்லை. குருவின் சேவைதான்... ஓடி, ஆடி சகலருக்கும் உதவி செய்வதுதான் மிக முக்கியமாக இருந்திருக்கிறது.

ஸ்ரீரமண மகரிஷி

ஒருமுறை, பகவானுடன் அவரின் அன்பர் கள் எல்லாம் கிரி பிரதட்சணம் செய்ய வந்தார்கள். அப்போது, குரு பக்தி என்பதைப் பற்றி யாரேனும் சில மணித்துளிகள் பேச வேண்டும் என்கிற கட்டளை, அன்பர்களால் பிறப்பிக்கப்பட்டது. சிலர் பேசினார்கள். ராமநாத பிரம்மசாரி, தானும் பேச விரும்புவ தாகக் கை தூக்கினார். அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

குரு பக்தி என்பதைப் பற்றி வடமொழி ஸ்லோகங்கள் என்ன சொல்கின்றன, தனது அனுபவங்கள் என்ன உணர்த்துகின்றன என அரை மணி நேரத்துக்கு ராமநாத பிரம்மசாரி பேசினார். நேரம் முடிந்துவிட்டது என அன்பர்கள் சொன்னபோது, 'இன்னும் சிறிது நேரம் பேசுகிறேன்’ என்று அனுமதி கேட்டு, மேலும் ஒரு அரை மணி நேரம் பேசினார். மறுபடியும் நேரத்தை நினைவுபடுத்தியபோது, இன்னும் கொஞ்சம் பேச வேண்டும் என்று கெஞ்சினார். இப்படியாக, இரண்டு மணி நேரத்துக்கு வடமொழி ஸ்லோகங்களிலிருந்தும், தமிழ்மொழிப் பாடல்களிலிருந்தும், மற்றவர் சொன்ன அனுபவங்களிலிருந்தும் தனது அனுபவங்களைக் கொண்டும் குரு பக்தியைப் பற்றி விரிவாகப் பேசினார். அதிகம் பேசாத அந்த இளைஞரை குரு பக்தியைப் பற்றித் தனது முன்னிலையில் பேச வைத்தவர் அந்த குருவேதான்.

பகவானுக்கும், பகவானின் அன்பர்களுக்கும் சேவை செய்த ராமநாத பிரம்மசாரிக்கு பிளேக் நோய் பற்றிக்கொண்டது. உடம்பில் கட்டிகள் தோன்றின. கட்டிகள் உடைந்து ரத்தமும், சீழும் பெருகின. ராமநாத பிரம்மசாரி தலையைத் தூக்க முடியாமல் துவண்டு கிடந்தார்.

அந்த இடத்தில் இருந்தால், பிளேக் நோய் தங்களுக்கும் பரவிவிடும் என்று பயந்து, அன்பர்கள் பச்சையம்மன் கோயிலுக்குப் போகத் தீர்மானம் செய்தார்கள். பகவானிடம் அவ்விதமாகவே சொன்னார்கள். ''ராமநாத பிரம்மசாரிக்குத் தவறாமல் உணவு அனுப்பி விடலாம்'' என்றும் விவரித்தார்கள்.

''நல்லது. ராமநாத பிரம்மசாரிக்கு உணவு அளிக்கும்போது, எனக்கும் உணவு அனுப்பி விடுங்கள். நான் இங்கேயே இருந்து ராமநாதனைப் பார்த்துக் கொள்கிறேன்'' என்றார் பகவான்.

அன்பர்களால் தட்டமுடியவில்லை. சிலர் விருபாக்ஷி குகையிலேயே இருந்தார்கள். சிலர் பச்சையம்மன் கோயிலுக்குப் போனார்கள். பகவானின் அருகில் இருந்ததால், ராமநாத பிரம்மசாரி உடல்நலம் தேறினார்.

- தரிசிப்போம்...