சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

நாங்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் ஸ்ரீநொண்டி வீரனார் சுவாமி, பல்லாண்டுகளாக வெட்டவெளியிலேயே அருள்புரிந்து வருகிறார். ஏன் கோயில் எழுப்பவில்லை என்று பெரியவர்கள் சிலரிடம் கேட்டபோது, 'உத்தரவு வரவில்லை’ என்கிறார்கள். மீறினால், அபவாதம் ஏதேனும் வந்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கை! எங்களுக்கோ அழகாக ஓர் ஆலயம் அமைக்க விருப்பம். புதிய கோயில் கட்டலாமா?

- வெ.செ.பிரபாகர், கள்ளக்குறிச்சி

அரச மரத்தடிப் பிள்ளையார், ஊர் எல்லையில் அமைந்திருக்கும் காவல் தெய்வங்கள், மலைகள் மற்றும் வனங்களில் வசிக்கும் பழங்குடி இனத்தவரின் இஷ்ட தெய்வங்கள்... இவர்கள் அத்தனைபேரும் வெட்டவெளியை விரும்பும் தெய்வங்கள்.

கேரளத்தில் அமைந்திருக்கும் சில ஐயப்பன் கோயில்களும், மாரியம்மன் கோயில்களும் பல பிராகாரங்களுடன் விளங்கினாலும், மூலவர் சந்நிதி வெட்டவெளியாக (கூரை இல்லாமல்) இருப்பது உண்டு. இதுபோன்ற கோயில் அமைப்புகளும் வழிபாடுகளும் ஆகமத்துக்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றியவை என்பதால், புதிய நடைமுறையைப் புகுத்தவேண்டிய கட்டாயம் இல்லை.

கடவுள் விருப்பம் மற்றும் அவரது சாந்நித்தியமே முக்கியம். ஆகமங்களுக்கு முற்பட்ட வழிபாட்டு முறைகளும் ஏற்கத்தக்கவையே. ஆகவே, நீங்கள் ஆலயம் அமைப்பதைவிட, வழிபாட்டு முறைகளை விரிவு படுத்தலாம். மனம் அமைதி பெறவும், விருப்பம் ஈடேறவும் அது பயன்படும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கோபூஜை செய்யும்போது பசுவின் முன்புறம் அர்ச்சனை ஆராதனைகள் செய்ய வேண் டுமா அல்லது பின்புறம் செய்ய வேண்டுமா?

- கூந்தலூர் ஜெயராமன்

##~##
பதினான்கு உலகங்களும் கோமாதாவில் அடக்கம் என்கிறது சாஸ்திரம் (கவாமங்கேஷூ திஷ்டந்திபுவனானி சதுர்தச). அத்தனை தேவர்களும் கோமாதாவிடம் உறைந்திருக்கின்றனர். கொம்பு முதல் குளம்படி வரையிலும் புஷ்பம் சொரிந்து அவளை வழிபடலாம். அவள் நடக்கும்போது, குளம்படியால் கிளம்பும் தூசிகள் நமது உடல் மலத்தை அகற்றிவிடும் என்கிறது சாஸ்திரம். அந்த வேளையை 'கோதூஸி லக்னம்’ எனச் சிறப்பித்து, நல்ல காரியங்களை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தச் சொல்கிறது சாஸ்திரம். 'அதன் இரண்டு கொம்புகளின் இடைவெளியானது, வெற்றியின் நுழைவாயில்’ என்று கருதி, திலீபன் தம்பதி அங்கு அர்ச்சனை செய்ததாக காளிதாசன் கூறுவான்.

ஆனாலும் தர்மசாஸ்திரம், பசுவின் பின்புறமே பூஜைக்கு உகந்த இடம் எனச் சுட்டிக்காட்டும். பின் புறம், 'திருமகள்’ குடியிருக்கும் இடம் எனப் புராணம் சொல்லும். கோமாதாவை கொடை அளிக்கப் பயன்படுத்தும் வேளையில், அதன் வாலைப் பிடித்துக் கொடுப்பதுண்டு. இதன் மூலம் பின்பகுதியின் பெருமை சுட்டிக்காட்டப்படுகிறது. அதுவும் தவிர, கோமாதா பிரசவிக்கும் வேளையில், கன்றின் தலை வெளியே தெரியும்போது, கொடை அளிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம். இதை, 'இரண்டு பக்கமும் முகத்தை உடைய கோதானம்’ என்று சிறப்பிக்கும் (உபயதோமுகீ கோதானம்). இதுவும் பின்புற பூஜையை சிறப்பிப்பதற்குச் சான்று. ஆகையால், பணிவிடைகள் அனைத்தையும் பின்புறம் செய்ய வேண்டும். அர்ச்சனைகளை பின்புறமும், உடலின் எல்லா அவயவங்களிலும் செய்யலாம்.

வெளிநாட்டில் வசிப்பவள் நான். எங்கள் பகுதியில் உள்ள ஒரு கோயிலில், விக்கிரகத்தின் கால் பின்னம் அடைந்துவிட்டது. இதனால் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுமா? ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

- திரிபுரசுந்தரி, வட அமெரிக்கா

பின்னம் அடைந்த விக்கிரகம் பூஜையை ஏற்கும் தகுதியை இழந்துவிடும். அதனை மாற்றி, புது விக்கிரகம் அமைத்து வழிபட வேண்டும். பரிகாரத்தின் வாயிலாக பின்னத்தை சரிசெய்ய முடியாது. குறையுடன் இருக்கும் விக்கிரகம் பூஜைக்கு உகந்தது அல்ல.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இடத்தைக் கணக்கிடும்போது, ராசியிலிருந்து கட்டங்களை எண்ண வேண்டும் என்று சிலரும், லக்னத்தில் இருந்தே கணக்கிட வேண்டும் என்று சிலரும் கூறுகின்றனர். இதில், எது சரி?

- ஏ.எஸ்.பத்மநாபன், சென்னை-10

லக்னத்தில் இருந்து கணக்கிடுவது சிறப்பு என்கிறது ஜோதிடம். ஒருவன் பிறக்கும்போது பூமியோடும் காலத்தோ டும் இணைந்த அவனது தோற்றம், லக்னம். கருவறையில் இருந்து வெளிவரும்போது, உலகத்தின் இணைப்பை ஏற்படுத்திய வேளையே லக்னம். அவனுடன் அணைந்த தேசமும் காலமும்தான் அவனது வளர்ச்சியில் தென்படும் மாறுதலுக்குத் தடயமாக இருக்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றன.

ராசி என்பதில் மூன்று நட்சத்திரங்களின் பங்கு உண்டு. பிறந்தவனின் நட்சத்திரத்துக்கு மட்டுமே அந்தப் பலன் பொருந்தாது. தவிர, அவன் பிறந்த நட்சத்திரத்தின் வேளை, ஏற்கெனவே லக்னத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இரண்டேகால் நாள் வரைக்கும் அவனது பிறந்த வேளையை விரிவாக்கிக் காட்டு கிறது ராசி.

ஆனால் லக்னமோ, அவன் தோன்றிய வேளையை மிகச் சரியாக- துல்லியமாகக் காட்டும். ராசியில் 3 நட்சத்திரக்காரர்களின் பலன் சேர்த்துச் சொல்லப்படும். அது, நடைமுறைக்கும் பொருந்தாது. தவிர, பிறந்த நட்சத்திரம் இரண்டு ராசிகளில் தென்பட்டால், பலன் சொல்லுவது சிக்கலாகிவிடும்.

உதாரணத்துக்கு, மிருகசீரிஷ நட்சத் திரம் சரிபாதியாக இரண்டு ராசிகளில் தென்படும். ஒரே நட்சத்திரத்துக்கு மாறுபட்ட இரண்டு பலன்களைச் சொல்லவேண்டியது வரும். கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய மூன்றில் தோன்றியவர்களது பலன்களை ஒன்றாகச் சொல்லவேண்டியது வரும்.

பிறந்த வேளையை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டு, ராசியை வைத்துப் பலன் சொல்லும் சம்பிரதாயம் வலுப்பெற்று விட்டது. அதிசயம் என்னவென்றால், ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்த முதல் அறிஞனும் அதை ஏற்கிறான். பாமரர்கள் மனத்தை எளிதில் ஈர்க்கச் செய்யலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது, ராசியை வைத்து எண்ணும் முறை.

பிறந்த வேளைதான் ஒருவனின் அடை யாளம். அந்த வேளையுடன் தேசம், காலம், காலத்தின் அளவுகளான நட்சத்திரம், கிரகங்கள் அத்தனையும் ஒட்டிக் கொண்டிருக்கும்.

உண்மையைச் சொல்வதானால், காலம் என்பது கற்பனை. இவையெல்லாம் சேர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் வேளையையே காலம் எனக் குறிப்பிடுகிறோம். அதற்கு ஆதாரமாக, காலத்தைத் தவிர வேறொன்றும் இல்லாமல் இருப்பதால், வேளையை சுட்டிக்காட்டக் காலத்தை கையாளுகிறோம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஒருவன் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தான். அவனுக்கு ராசியைக் கணக்கிட, ரிஷபத்தை கையாண்டால்... அவன் தோன்றாத வேளையான கிருத்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரங்களின் பலனையும் ராசியை வைத்து அவனில் ஒட்டவைப்பது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று. ஆகவே, ராசியைவிட லக்னத்தை நம்புவது சிறப்பு.

சந்திரன் மனதுக்குக் காரகன். அவனை வைத்து மன நிலையை அளிப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் எனச் சொல்பவர்களும் உண்டு. சந்திரனின் பங்கு, லக்ன வேளையில் ஒட்டிக் கொண் டிருப்பதால், லக்னமே மன இயல்பையும் சேர்த்துச் சொல்லிவிடுகிறபோது, அதை ஒதுக்கிவிட்டு, ராசியை எண்ணி நடைமுறைப்படுத்துவதில் தெளிவு ஏற்படவில்லை.

ஜோதிடம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. எனினும், பிறப்பில் கிடைத்த சிந்தனையை முடக்கி வைத்து, ஜோதிடத்தை ஏற்க வேண்டும் என்று சனாதனம் சொல்லாது. ஜோதிடம், ஆராய்ந்து தெரிந்துகொள்ள உபதேசம் செய்கிறது.

அதன் தகவல்களை நாம் ஆராய்ந்து தெரிந்து, தெளிவு பெற்று, ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜோதிடத்தில் ஆராய்ச்சிக் குறைதான் இப்படிப்பட்ட இரு வகை விளக்கங்களுக்கு இடமளித்து உள்ளது.

இன்றைய சூழலில், முழுமையான ஜோதிட அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை. பாமரர்களுக்கும் சந்தேகம் இல்லாமல் விளக்கும் எண்ணம் பெருகவேண்டும். அதன் வளர்ச்சி அவர்களிடம் இருப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.  பண்டிதன் சாஸ்திரத்தை வளர்க்கவில்லை; சமுதாயம் அதை வளர்க்கிறது. அறிஞர்கள் நினைத்தால் எல்லாம் நடக்கும். நாமும் அதை ஏற்று மகிழ்வோம்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்