சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

காலையில் எழுந்ததும் வழக்கம்போல் காலண்டரில் அன்றைய தினத் தேதியைக் கிழித்துக் கசக்கிப் போட்டேன். பின்பு, சட்டென்று எடுத்து அதை நீவி, சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். வேறொன்றுமில்லை... 'எது பாவம், எது புண்ணியம்?’ என்ற கேள்விக்கு, 'வெறுப்பது பாவம்; நேசிப்பது புண்ணியம்’ என்று சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி அதில் அச்சிடப்பட்டிருந்தது. என் வீட்டு காலண்டரில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொன்மொழி அச்சிடப்பட்டிருக்கும். கிழித்த தேதியைக் குப்பைக் கூடையில் போடுவது, பொன்மொழியையே குப்பையில் போடுவது போன்று மனசுக்குக் கஷ்டமாக இருக்கும்.

இதைச் சொன்னதற்கு என் மனைவி பலமாகச் சிரித்துவிட்டு, ''நல்லா இருக்கு கதை! அந்தப் பொன்மொழியை நாலு தரம் படிச்சு, மனசுல வாங்கிக்கிட்டு, காகிதத்தைக் குப்பைத் தொட்டில போடுவீங்களா... இதுக்குப் போய் இவ்ளோ யோசனை பண்ணிக்கிட்டு!'' என்றாள். அதன்படி, 'வெறுப்பது பாவம்; நேசிப்பது புண்ணியம்’ எனும் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்தேன். சட்டென்று பெரியவர் மாசிலாமணியின் ஞாபகம் வந்தது.

##~##
மாசிலாமணி, நான் வேலை பார்த்த தனியார் கம்பெனியின் விற்பனைப் பிரிவு மேலதிகாரி. அலுவலகத்தில், அவருக்குப் போதுமான வசதிகளைச் செய்து தரவில்லை என எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பார். 'அறையில் ஏ.ஸி. வசதி இல்லை; போக்குவரத்து அலவன்ஸ் தருவதில்லை; இன்ஸென்டிவ் வழங்குவதில்லை’ எனக் குறைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே இருப்பார். சீனியரான அவரிடம் மதிப்பு உண்டு என்றாலும், நிர்வாகிகளைக் குறை சொல்லியபடியே இருக்கும் அவர் பேச்சை நான் ரசிப்பதில்லை.  

ஒருவழியாக அவர் ஓய்வு பெற்றார். ஒருநாள், அவருடைய உறவினர் போன் செய்து, ''உங்களை மாசிலாமணி சார் பாக்கணும்னார்'' என்றார். போய்ப் பார்த்தேன். அலுவலகத்தில் இருந்து சிறு தொகை ஒன்று அவருக்கு வரவேண்டியிருந்தது. 'கொஞ்சம் சீக்கிரம் செட்டில் பண்ணச் சொல்லுப்பா’ என்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுக் கிளம்பியபோது, 'இதைப் பார்த்தியா?’ என்று கேட்டு, புகைப்படம் ஒன்றைக் காட்டினார் அவர். அது ஒரு குரூப் போட்டோ. வருடந்தோறும், ஆண்டு விழாவின்போது அதிகாரிகளும் ஊழியர்களுமாகச் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.

அந்தப் படத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனேன். 30 பேர் கொண்ட அந்த போட்டோவில் சிலருடைய கண்கள் கிழிக்கப்பட்டிருந்தன. அதிர்ந்து போய் அவர் பக்கம் திரும்பினேன். ''எனக்கு அநியாயம் பண்ணினவங்க, வசதி செய்து தராதவங்க கண் அவிஞ்சு போயிடணும்னு வேண்டிக்கிட்டு, அவுங்க கண்ணை நோண்டிட்டேன்'' என்றார். வெறுப்பு, வெறுப்பு, வெறுப்பு! அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகுகூடவா, அலுவலகத்தின்மீது ஒருத்தர் இத்தனை வெறுப்புடன் இருக்க முடியும் என்று அவர் மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது!

சற்று நிதானமாக யோசிக்கையில், 'இப்படி வெறுக்கிறாரே’ என்று அந்த ஆசாமியை நான் வெறுப்பது மட்டும் சரியா என்று தோன்றியது. மனிதர்களில் சிலர் இப்படியும்தான் இருப்பார்கள். உண்மையான அன்பு உள்ளம் கொண்டவர்கள், இப்படியானவர்களிடமும் அன்பாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார்கள் சான்றோர்கள்!  

பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது...

தின்னவரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்  நன்னெஞ்சே!