Published:Updated:

சீகன்பால்கு அச்சிட்ட 'புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு'  நூல் எங்கே? - தஞ்சை சரஸ்வதி மகாலில் களவுபோகும் பொக்கிஷங்கள்!

சீகன்பால்கு அச்சிட்ட 'புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு'  நூல் எங்கே? - தஞ்சை சரஸ்வதி மகாலில் களவுபோகும் பொக்கிஷங்கள்!

மிகவும் பழைமை வாய்ந்த நூலகங்களில் ஒன்றான தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் கலைநயம் மிக்க ஓவியங்கள், ஓலைச்சுவடிகள், பழைமையான நூல்கள், பெரும் மதிப்புள்ள அரிய பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆசியாவிலேயே மிகப்பழைமையான நூலகம் என்ற பெயரும் இதற்கு உண்டு. அண்மைக்காலமாக பழைமையான கலைப்பொருள்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

சரஸ்வதி மகால் நூலகத்தில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள இலக்கியங்கள், வரலாறு, கலை, மருத்துவம், நாட்டியம் சார்ந்த 69 ஆயிரம் நூல்கள், 39 ஆயிரம் ஓலைச்சுவடிகள், சோழர்கால கலைநய மிக்க ஓவியங்கள், நாயக்கர்கால சுவடிகள், மராட்டியர்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டு, அவற்றை பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித் துறை இந்த நூலகத்தைப் பராமரித்து வருகிறது. நாயக்கர் காலத்தில், 'சரஸ்வதி பண்டார்' என்று அழைக்கப்பட்டு வந்த இந்த நூலகம், அரச குடும்பத்துக்கான நூலகமாக இருந்தது. 1918-ம் ஆண்டு தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜியின் காலத்தில் 'சரஸ்வதி மகால் நூலகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் சீகன் பால்கு, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 1715-ல் முதன்முதலில் அச்சுக்கூடத்தை ஆரம்பித்தார். அந்த அச்சுக்கூடத்தில் 1810-ம் ஆண்டு,  'புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு' எனும் நூலை மூன்று பிரதிகள் மட்டும் அச்சிட்டார். முதல் பிரதி லண்டன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது பிரதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை, மூன்றாவது பிரதி தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. 

அந்த நூல் கடந்த 2006 அக்டோபர் 8-ம் தேதி  காணாமல் போய்விட்டது, அன்றைய தினம் சிறப்பு அனுமதி பெற்று வந்திருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர், புதிய ஏற்பாடு நூலை கண்ணாடி பேழையிலிருந்து எடுத்துப் பார்த்திருக்கிறார்கள். புகைப்படமும் எடுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் பணிக்கு வந்த ஊழியர்கள் நூல் காணாமல்போனதை அறிந்து மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், காணாமல் போனது குறித்து காவல்துறையினர் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை. 

நூலகத்தில் உள்ள அறைகளைத் திறக்க வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி வேண்டும். ஆனால், ஜெர்மன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்தபோது ஆட்சியரிடம் முறையான அனுமதி பெறாமலே திறந்துள்ளார்கள். அதனால், இந்த நூல் காணாமல் போனதில் உள்ளூர் ஆட்களின் பங்கும் இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய அச்சுத்துறை வளர்ச்சியின் சாட்சியமாகவும் ஆவணமாகவும் இருக்கும் இந்த நூலைக் கண்டுபிடிக்க பள்ளிக்கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெரும் சோகம். 

இதற்கு முன்பு அரிய ஓலைச்சுவடிகளும், பழைமையான சித்த மருத்துவம், ஆன்மிக ஜோதிட புத்தகங்களும் காணாமல் போயுள்ளன. இதுகுறித்து யாரும் கவலைப்படவில்லை. அவையெல்லாம் பதிவாகவும் இல்லை. கலைகளையும், பாரம்பர்யத்தையும் இழந்து நவீனத்தின் திசையில் நிற்கும், நம் சந்ததியினருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்கள், ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதால் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை ஆய்வு செய்து கணக்கெடுத்து கண்காணிப்புக்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் தஞ்சாவூர் மக்கள்!

அடுத்த கட்டுரைக்கு