சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஸ்ரீசாயி பிரசாதம் - 4

சரணம்... சாயி சரணம்...எஸ்.கண்ணன்கோபாலன்

ஆனந்தாய நம:
ஆனந்ததாய நம:

முதல் நாமாவளியின் பொருள் 'ஆனந்தமாக இருப்பவர்’ என்பதாகும்; 'ஆனந்தத்தை வழங்குபவர்’ என்பது அடுத்த நாமாவளியின் பொருளாகும். நாம் ஒருவரிடம் ஒன்றைக் கேட்டால், நாம் கேட்பது அவரிடம் இருந்தால்தான், அவரால் அதை நமக்குக் கொடுக்க முடியும். தன்னிடம் இல்லாத ஒன்றை அவரால் நமக்குத் தரமுடியாது. அப்படியே இருந்து, அவர் நமக்கு அதைக் கொடுத்தாலும், அவரிடம் அது குறைந்துவிடும்.

ஆனால், சாயிநாதரிடம் நாம் கேட்பது நிச்சயமாகக் கிடைக்கும். அதேநேரத்தில், அவரிடம் அது குறைந்துவிடப்போவதும் இல்லை. எப்போதுமே ஆனந்தமாக இருக்கும் சாயிநாதர், நாம் வேண்டுகின்ற ஆனந்தத்தை நமக்கு வழங்குவதுடன், அவரும் ஆனந்தம் குறையாதவராகக் காணப்படுகிறார்.

சுக்ல யஜுர் வேதத்தில்,

'ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூரணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே’

'அதுவும் பூர்ணம்; இதுவும் பூர்ணம்; அந்த பூர்ணத்தில் இருந்தே இந்த பூர்ணம் தோன்றி உள்ளது. பூர்ணத்தில் இருந்து பூர்ணத்தை எடுத்த நிலையிலும், பூர்ணம் அப்படியே இருக்கிறது’ என்று சொல்லியிருப் பதைப்போல, ஆனந்தமயமாகவும் ஆனந்த சொரூபியாகவும் இருக்கும் சாயிநாதரிடம் இருந்து, நாம் ஆனந்தத்தைக் கேட்டுப் பெற்றாலும்கூட, அவரிடம் இருக்கும் ஆனந்தம் அணுவளவும் குறைந்துவிடப் போவதில்லை.

ஸ்ரீசாயி பிரசாதம் - 4

இத்தகைய ஆனந்தம் குறைவின்றி அவரிடம் நிலைத்திருப்பதற்கு என்ன காரணம்? அந்த ஆனந்த அனுபவத்தை எந்த குருநாதரிடம் இருந்து, எந்த வகையில் அவர் பெற்றார்? இதுபற்றி, சாயிநாதரே ஓர் உருவகக் கதையின் மூலமாகக் கூறியிருக்கிறார்.

ஒருமுறை, புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த நான்கு பேர், பிரம்மஞானத்தை அடைவதற்காகக் காட்டு வழியில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களில் மூவர் பிரம்மத்தை அடைவதற்கான வழிகளைக் குறித்து வெவ்வேறு விதமான கருத்துக் களைக் கொண்டிருந்தனர். நான்காமவரோ, நம்முடைய அனைத்தையும் பரிபூரணமாக குருவின் திருவடிகளில் அர்ப்பணித்துவிட்டு, அவரை சரண் அடைவது ஒன்றே பிரம்மத்தை அடை வதற்கான சரியான உபாயமாகும் என்றார். இந்த நான்காவது நபராக பாபா குறிப்பிட்டது தம்மைத்தான்.

இப்படியாக அவர்கள் பேசிக்கொண்டு, காட்டுப் பாதையில் போய்க்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த காட்டுவாசி ஒருவன் அவர்களிடம், ''நீங்கள் யார்? இந்தக் காட்டுக்குள் ஏன் போகி றீர்கள்?'' என்று கேட்டான். அதற்கு அவர்கள், தாங்கள் பிரம்மஞானத்தைக் கண்டறிவதற்காகச் செல்லுவதாகச் சொன்னார்கள்.

பிரம்மஞானத்தைப் பற்றி காட்டுவாசிக்கு என்ன தெரியும்? எனவே அவன், ''உங்களைப் பார்த்தால் பசியால் களைத்துப் போனவர் களாகத் தெரிகிறது. என்னிடம் இருக்கும் உணவையும் தண்ணீரையும் தருகிறேன். சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். அப்போதுதான் உங்கள் களைப்பு நீங்கும். அடர்ந்த இந்தக் காட்டுக்குள் சென்றுவிட்டால், சென்ற வழியில் திரும்புவதற்கான தெளிவும் கிடைக்கும்'' என்றான். ஆனால், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவனாகக் கருதப்பட்ட அவன் தரும் உணவை ஏற்றுக்கொள்வதா என்ற எண்ணி, அவர்கள் மறுத்துவிட்டனர்.

அடர்ந்த அந்த காட்டுக்குள் அலைந்து திரிந்து சோர்ந்துபோன அவர்கள், எப்படியோ கஷ்டப்பட்டு வந்த வழியைத் தெரிந்துகொண்டு திரும்பினர். வழியில் அதே காட்டுவாசி எதிர்ப்பட்டான்.

''நான் சொன்னதை நீங்கள் கேட்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்தக் கஷ்டம். நீங்கள் செல்லும் வழியில் யாரேனும் எதிரில் வந்து, உங்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்தால், இறைவனே அதை அனுப்பியதாகத்தான் அர்த்தம். அதை உதாசீனப்படுத்திவிட்டுச் சென்றால், போகும் காரியம் நிறைவேறாது'' என்று கூறினான்.

அவன் மீண்டும் அவ்வளவு வற்புறுத்திச் சொல்லியும், அதை ஏற்றுக்கொள்ளாமல் முதல் மூன்று பேர் தங்கள் போக்கிலேயே போய்விட்டனர். ஆனால், நான்காமவரான பாபாவோ, அந்த மனிதனின் பேச்சில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டவராக, அவன் அன்புடன் கொடுத்த உணவையும் தண்ணீரையும் ஏற்றுக்கொண்டு, அவனுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, பிரம்மஞானத்தைத் தேடி தமது பயணத்தைத் தொடர்ந்தார்.

சற்றைக்கெல்லாம், ஒரு குருநாதர் பாபாவின் எதிரில் வந்தார். பாபா அவரிடம், ''தாங்கள் எனக்கு பிரம்மஞானத்தை காட்டி அருளவேண்டும்'' என்று விநயத்துடன் கேட்டுக்கொண்டார்.

அந்த குருநாதர் ஒன்றும் பேசவில்லை. பாபாவின் கால்களை  நீண்ட கயிற்றின் ஒரு முனையில் கட்டிவிட்டு, பாபாவை அங்கிருந்த ஒரு கிணற்றில் தலைகீழாகத் தொங்கவிட்டார். கயிற்றின் மறுமுனையை, கிணற்றின் அருகில் இருந்த மரத்தில் கட்டிவிட்டார். பிறகு, தன் போக்கில் சென்றுவிட்டார்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 4

கிணற்று நீருக்கும் பாபாவின் தலைக்கும் இடையில் சில அடிகளே இடைவெளி இருந்தன. சுமார் 5 மணி நேரம் பாபா அப்படியே தொங்கிக்கொண்டு இருந்தார். பிறகு அங்கே வந்த குருநாதர் பாபாவிடம், ''நீ இப்போது எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டதற்கு, ''நான் பேரானந்த நிலையில் திளைத்திருக்கிறேன்'' என்றார் பாபா. உடனே அந்த குரு, பாபாவைத் தம்முடைய சீடராக ஏற்றுக்கொண்டார். குருவின் அருகில் தாம் இருந்த காலத்தைப் பற்றிக் கூறுகையில், தாம் மிகுந்த பரமானந்தத்துடன் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் பாபா. அவர் சொன்ன இந்தக் கதையை ஓர் உருவகக் கதை என்றே கொள்ளலாம்.

தாமே சத்குருவாகத் தோன்றிய ஸ்ரீசாயிநாதருக்கு குருநாதர் ஏது? குருநாதரின் அருமையும் அவசியமும் பற்றி, குருவின் ஆணையை ஒரு சீடன் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிப் பாமரர்களாகிய நாமும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே பாபா இப்படி ஓர் உருவகக் கதையைக் கூறியிருப்பதாகக் கொள்ள வேண்டும்.

பிரம்மஞானமும் பேரானந்தமுமே வடிவமான ஸ்ரீசாயிநாதர், தம்மை முழுதும் நம்பி சரணடைந்த பக்தர்களின் குறைகளையெல்லாம் இல்லாமல் செய்து, அவர்களை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார். இப்படியாக ஆனந்தமாகவும் இருந்தார், ஆனந்தத்தை வழங்குபவராகவும் இருந்தார் நம்முடைய ஸ்ரீசாயிநாதர்.

பாபாவின் அனுக்கிரகத்தினால், பேரானந்த நிலையை அனுபவித்த ஓர் அன்பரின் அனுபவம் இது.

பாந்த்ரா என்னும் இடத்தைச் சேர்ந்த ஜனார்த்தன் கல்வாங்கர் என்பவர் பாபாவிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். ஒருமுறை, பாபாவை தரிசிக்க வந்தபோது, அவருடன் பேசிக்கொண்டே பாபா அந்த அன்பரின் தலையில் தம்முடைய கையை வைத்தார். அப்போது ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி அவர், ''பாபா தம்முடைய திருக்கரத்தை என்னு டைய தலையில் வைத்தபோது, புதுமையான ஆனந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது. வீடு, வாசல், மனைவி, மக்கள், சொத்து சுகம் அனைத்தும் மறந்த பேரானந்த நிலை அது. அந்த நிலையிலேயே நான் எத்தனை நாள் இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையிலேயே அந்த அன்பர் பாக்கியசாலிதான்.

பாபா இத்தகைய பேரானந்த நிலையை எல்லோருக்குமே அளித்துவிடவில்லை. தம்மிடம் வருபவர்க்கு என்ன தேவையோ அதைச் சரியாகக் கொடுத்து அருள்புரிவார்.

அப்படித்தான் ஒருமுறை, 'பாபாவிடம் சென்றால் பிரம்மஞானம் கிடைக்கும்’ என்ற எண்ணத்தில், ஒரு பெரிய செல்வந்தர் ஷீர்டிக்கு வந்து பாபாவை தரிசித்து, தமக்கு பிரம்மஞானத்தை உபதேசிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பாபா, அந்த செல்வந்தருக்கு பிரம்மஞானத்தை உபதேசித்தாரா?

- பிரசாதம் பெருகும்