Published:Updated:

சக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி

ஒரு சொட்டு ஆன்மிகம்!வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் சத்குரு

சக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி

ஒரு சொட்டு ஆன்மிகம்!வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் சத்குரு

Published:Updated:

ந்தவொரு கேள்விக்கும் தயங்காமல் உடனுக்குடன் பளீர் பதிலும், சரியான விளக்கமும் தருவது சத்குருவின் பாணி. அதிலும், சத்குரு அந்த பதில்களையும் விளக்கங் களையும் ஒரு தோழமையோடு, அன்போடு, சிரிக்கச் சிரிக்கச் சொன்னது வாசகர்களின் இறுக்கத்தைப் பெரிதும் தளர்த்திவிட, அவர்கள் உற்சாகமாகி, தடதடவெனக் கேள்விகள் கேட்டு அசத்தினார்கள்.

அந்த தித்திப்புக் கலந்துரையாடலின் தொடர்ச்சி, இதோ..!

''சுவாமிஜி! தங்களின் பசுமைக் கரங்கள் திட்டம் குறித்துச் சொல்லுங்களேன்? எல்லோரும் எப்போதாவதுதான் மரம் நடுகிறார்கள். ஆனால் நீங்களோ, மரம் நடுவதைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். மரம் நடுவதில் அப்படியொரு ஈடுபாடு எப்படி வந்தது உங்களுக்கு?''  - இது வாசகி நந்தினியின் கேள்வி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''புதுடெல்லி விஞ்ஞான் பவனில், இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார் விருதை எனக்கு வழங்கினார்கள். அப்போது அங்கே நான் சொன்னதையே இங்கேயும் சொல்ல  விரும்புகிறேன்.

1998-ம் ஆண்டு, ஐ.நாவில் இருந்து வந்திருந்த ஒரு குழு தமிழ்நாட்டைப் பரிசோதித்துவிட்டு், 2025ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் 60 சதவிகிதப் பகுதி் பாலைவனமாகிவிடும் என்று அறிவித்தது. ஆனால், இந்த மாநிலத்தில் கடந்த 12,000 வருடங்களாகத் தொடர்ந்து விவசாயம் நடந்து வருகிறது. தென் அமெரிக்காவின் சில பகுதிகள் தவிர, இத்தனை நீண்ட காலமாக உலகில் வேறெங்கும் விவசாயம் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் அடிப்படை சுவாசமே விவசாயம்தான்.  

நிலம், பயிர், விதை ஆகியவற்றைப் பற்றிய நம் விவசாயிகளின் அறிவு மிகவும் ஆழமானது. இன்றைக்கும்கூட தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் வருடத்துக்கு மூன்று போகம் விளைவிக்கிறார்கள். சிலர் நான்கு போகம்கூட விளைச்சல் பார்க்கிறார்கள். இது போன்று விவசாயத்துக்கு வளமான நிலம் உலகில் மிகவும் குறைவு. எனவே, இத்தகைய நிலம் ஒரு தலைமுறையிலேயே பாலைவனமாகிவிடும் என்பதைக் கேட்டதும் நான் பதறிப்போனேன். உண்மையை அறிய, தமிழகம் முழுவதும் சுற்றினேன். நான் அறிந்த உண்மையோ, இன்னும் அதிர்ச்சி ரகம். 2025 வரைகூடக் காத்திருக்காது, அதற்கு முன்னரே தமிழகம் பாலைவனமாகிவிடும் என்பதுதான் அந்த அதிர்ச்சி உண்மை!

சக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி

கடந்த 15 வருடங்களில் சிறிய ஆறுகள் அனைத்தும் வறண்டுவிட்டன. கோவை நகரத்தில் 125 அடி ஆழத்தில் கிடைத்த தண்ணீர், இப்போது 1,400 அடி தோண்டினால்தான் கிடைக்கிறது. நான் பார்த்தவரையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பனை மரங்கள் இறந்துகிடந்தன. அரேபியா பாலைவனங்களில்கூட பனை வகைகள் பிழைத்திருக்கின்றன. ஆனால், இங்கோ இறந்திருந்தன. அந்த அளவுக்கு மண்ணில் ஈரப்பசையே இல்லை. எனவே, இந்த நிலையை மாற்ற முடிவெடுத்தோம். மரம் நடுவது அதற்கு முக்கியமான ஒரு மாற்று வழி என உணர்ந்தோம்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மாற்றுவதற்கு முன், ஈஷா யோக மையத்தை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலைகளைப் பசுமையாக்க முடிவெடுத்தோம். ஏனெனில், திருட்டுத்தனமாக அங்கு மரங்கள் வெட்டப்பட்டு பசுமை ரொம்பவே குறைந்திருந்தது. என் எண்ணத்தை அறிந்தவர்கள், 'இது நடக்காத காரியம்’  என்றார்கள். இப்படி ஒவ்வொருவருமே நினைக்க ஆரம்பித்தால், அழிவை நோக்கித்தான் நாம் நகர்வோம் என்று சொல்லி, புதுமையான செயல்பாட்டில் இறங்கினோம்.

சில ஆயிரம் தன்னார்வத் தொண்டர்களை வைத்து, மலைப் பகுதியில் சில அங்குலம் ஆழம் கொண்ட ஆயிரக்கணக்கான குழிகளைத் தோண்டி விதைகளை நட்டு, மண் போட்டு மூடினோம். அவற்றில் 80 சதவிகிதம் பிழைத்தன. 6-7 வருடங்கள் முன்பு வரை, கோடைகாலத்தில் இந்த மலை பசுமையாகத் தோற்றமளிக்காது. வெப்பம் தாக்கியெடுத்துவிடும். ஆனால், இப்போது கோடையின் உச்சத்தில்கூடப் பசுமையாகக் காட்சியளிக்கிறது, வெள்ளியங்கிரி மலை. வெப்ப நிலையும் கொஞ்சம் குறைந்திருக்கிறது. இந்த மாற்றத்துக்காக நாங்கள் உழைத்தது வெறும் 20 நாட்கள் மட்டுமே! செலவும் அதிகம் இல்லை; அனைவருக்கும் ஆஸ்ரமத்தில் இருந்து இரண்டு வேளை சாப்பாடு மட்டுமே தரப்பட்டது. அவ்வளவுதான்!  

அதன் பிறகு, மற்ற பகுதிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். ஒரு கொள்கையைத் திணித்துக் கொள்வதால் மட்டுமே எந்த ஒரு பணியும் நிறைவடைந்துவிடாது. அந்தப் பணியில் உணர்ச்சிபூர்வமாக இறங்கவேண்டும். எனவே, மரம் நடுவது என்பது ஒரு திட்டம் அல்ல; அதுதான் நமது உயிர் மூச்சு! நமக்காக அது சுவாசிக்கிறது. 'அதன் வெளிமூச்சுதான் உங்கள் உள்மூச்சு’ என்று மக்களை உணரவைத்தோம்.

சக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி

ஒரு யோகி எதற்காக மரம் நடவேண்டும் எனக் கேள்வி் கேட்டவர்களுக்கும் இதையே பதிலாகச் சொன்னோம். சுவாசிக்கத் தேவை இருப்பவர்கள் எல்லோருமே மரம் நடவேண்டும் என்று கூறினோம். இது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி முதல் ஆறேழு வருடங்கள் மக்கள் மனங்களில் மரங்கள் நட்டோம். பிறகே, இந்தத் திட்டம் எங்களுக்கு எளிதாயிற்று.

இந்தப் பணியில் ஆர்வத்துடன் ஒத்துழைக்கும் தமிழக கிராமப்புற மக்களைப் பார்க்கும்போது எனக்கு உண்மையிலேயே கண்ணீர் வருகிறது. ஏனெனில், அவர்களுக்கு தட்பவெப்ப நிலை மாற்றம் பற்றியெல்லாம் தெரியாது; உலகம் வெப்பமயமாகி வருவது பற்றியும் அவர்களுக்குப் புரியவில்லை. உலகத்தை வெப்பமாக்கும் வாயுக்கள் உருவாக்கத்தில் அவர்களின் பங்கு மிக மிகச் சொற்பமானது. ஏனெனில், அவர்கள் தங்கள் நிலங்களில் கிடைப்பதை வைத்து மட்டுமே வாழ்கிறார்கள். அவர்களின் வீடுகளில் மின்சாரம் கிடையாது. அவர்கள் எதையும் எரிப்பதில்லை. அவர்கள்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம்தான் மரங்கள் நட உதவி கேட்கிறோம். அவர்களின் உற்சாகமும் செயல்பாடும் எல்லையற்றதாக இருக்கிறது. நடப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை பற்றிய மலைப்பு இல்லாமல் பணியாற்றும் அவர்களின் அக்கறை, உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் கவர்வதில் ஆச்சரியமே இல்லை!

கடந்த நான்கைந்து வருடங்களில் தமிழகத்தின் பசுமைப் பரப்பு 4.2 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அரசு அறிக்கை கூறுகிறது. நாங்கள் இப்போது தமிழ்நாட்டில் மட்டும் எங்கள் கவனத்தைப் பதித்திருக்கிறோம். இந்த இயக்கம் தற்போது ஒரு முன்மாதிரியாகச் செயல்படுகிறது. நமது நாட்டில் பசுமைப்பரப்புக்காக இதுபோன்ற இயக்கம் இதற்கு முன்னர் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே, இந்த இயக்கத்தைத் தமிழகப் பகுதிகளில் வெற்றிகரமாக முடித்துவிட்டு, பின்னர் நாட்டின் இதர பகுதிகளிலும் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறோம்.

இது எனது தனிப்பட்ட சாதனையோ, ஈஷா மையத்தின் சாதனையோ இல்லை. இந்தத் திட்டத்தில் தாமாக முன்வந்து சேர்ந்த சாமானிய மக்களின் சாதனை இது! எனவே, இந்தச் சாதனை மற்றும் விருதுக்கான பயன்கள், மரம் வளர்ப்பில் தங்களை ஆத்மார்த்தமாக அர்ப்பணித்துக்கொண்ட சாமானிய மக்களையே சாரும்!'' என்கிறார் சத்குரு நெகிழ்ச்சியுடன்.  

''சித்தர் மரபின் தொடர்ச்சிதான் உங்கள் ஆன்மிகப் பயணமா? பதினெண் சித்தர்களும் சொல்லாதது எதையேனும் நீங்கள் சொல்லி வருகிறீர்களா?'’ என்று வினா எழுப்பினார் வாசகர் விஜயகுமார்.  

''நான் படிக்காதவன். அதனால், அவர்கள் என்ன சொல்லி வைத்திருக்கிறார்கள் என்ப தெல்லாம் எனக்குத் தெரியாது. என் உள்ளத்தில் எது உண்மை என்று உணர்ந்திருக்கிறேனோ, அதையே சித்தர்களும் சொல்லியிருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால், எக்காலத்திலும் உண்மை உண்மைதானே? சொல்கிற விதம், சொல்கிற பாணி வேறாக இருக்கலாம். ஆனால், சொல்லப்படுவது ஒன்றுதான்! ஃபேஷன் மாறுவதுபோல், இந்த அடிப்படை விஷயங்களும் மாறும் என்று நினைக்காதீர்கள். அது மாறவே மாறாது. உள்ளுக்குள்ளே சென்று தொட்டுப் பார்த்தவர் யாராக வேண்டுமானாலும் இருக் கலாம். நானாகவும் இருக்கலாம்; நீங்களாகவும் இருக்கலாம்; படிப்பாளியாகவும் இருக்கலாம்; பாமரனாகவும் இருக்கலாம். முயற்சியும் பயிற்சியும் இருக்கவேண்டும். அவ்வளவுதான்!' என்று அழுத்தமாகச் சொன்னார் சத்குரு.

''கடவுள் தேடல், ஆன்மிகம், சாமியார், ஆஸ்ரமம்... இப்படி உங்களை மாற்றியது எது அல்லது யார்?'’ என்று கேட்டார் வாசகர் ராசு.

''இதில் எதுவாகவுமே நான் இல்லையே! பிறகு, நீங்கள் எதை வைத்து இப்படிக் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. என் நான்கு வயதிலேயே சாமி இருக்கிறாரா, இல்லையா... சாமி என்பவர் யார் எனும் கேள்விகள் வந்துவிட்டன. ஒருவேளை, அதனால்தான் என்னைச் சாமியார் என்கிறீர்களா?' என்று கேட்டுக் கலகலவென்று சிரிக்கிறார் சத்குரு.  

'இதோ... பிரபஞ்சம் என்ற ஒன்று இருக்கிறது. கண்ணால் பார்க்கிறோம். இந்தப் பிரபஞ்சம் எப்படி வந்தது, யார் உருவாக்கியது, எப்படிச் செயல்படுகிறது, செயல்படுத்துபவர் யார் என்கிற கேள்வியெல்லாம் வருகிறது. இந்தக் கேள்விகள் எல்லோருக்கும் வரவேண்டும்

இதோ, போட்டோகிராபர் நம்மைப் படம் பிடித்துக்கொண்டு இருக்கிறார். இவரிடம் ஒரு கேமரா இருக்கிறது. அது பற்றி அவர் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் அதை உபயோகப்படுத்துவார். நீங்களெல்லாம் ஆளுக்கொரு ஒரு செல்போன் வைத்திருக்கிறீர்கள். அதிலுள்ள தொழில்நுட்பத்தை எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்குப் பயன்படுத்துவீர்கள். ஆக, எதையும் நாம் புரிந்துகொள்கிற அளவுக்குத் தான் உபயோகப்படுத்த முடியும். இந்த உயிராகட்டும், மனமாகட்டும்... புரிவதைக் கொண்டுதான் பயன்படுத்த முடியும். அதை நன்றாக, தெளிவாக, முழுமையாகப் புரிந்து உணர்ந்து பயன்படுத்திக்கொள்பவன் வாழ்கிற வாழ்க்கையே நிறைவான வாழ்க்கை. அப்படிப் புரிந்துகொள்வதற்குத் தேவையான மிகப் பெரிய, அதே நேரம் மிக எளிமையான உபகரணம்தான் ஆன்மிகம்.

சாதாரண வாழ்க்கையில், ஒருவருக்குக் கூரையும் தேவை; கூழும் அவசியம். இந்த இரண்டும் இருந்துவிட்டால், ஒருவர் நிம்மதியாக வாழ முடியும். ஆனால், அதுவே நிறைவான வாழ்க்கை ஆகிவிடாது. அதற்கு ஆன்மிகம் மிகவும் அவசியம். அது எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஈஷா அமைப்பு, ஒரு சொட்டு ஆன்மிகத் திட்டம் எல்லாமே!  சாப்பாட்டைத் தயார் செய்வதற்கும், அதைத் தின்று தீர்ப்பதற்குமே நாம் நிறைய நேரங்களைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த நேரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு, ஆன்மிகத்தின் பக்கம் வரவேண்டும்'' என்றார் சத்குரு.

சக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி

''இறைவனை நம்பி, அவனைச் சரணடைந்தும்கூட, எந்தத் துன்பமும் குறைந்தபாட்டைக் காணோமே? இது பக்திக் குறைபாடா? நம்பிக்கையின்மையா? ஊழ்வினைப் பயனா? என்ன காரணம்?' என்று கேட்டார் வாசகர் சண்முகம்.

''சரணடைந்துவிட்டேன் என்கிறீர்கள். எல்லாவற்றையும் சமர்ப்பித்துவிட்டேன் என்கிறீர்கள். அப்படியெனில், உங்கள் துன்பத்தை மட்டும் ஏன் நீங்களே சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்? அதையும் கடவுளிடம் அல்லவா கொடுக்க வேண்டும்? அங்கே பக்தியும் இல்லை. சரணாகதியும் நடக்கவில்லை. தொழில்தான் நடக்கிறது. வியாபாரம். 'நான் இதெல்லாம் கொடுக்கறேன். நீ இதெல்லாம் கொடு’ என்று கடவுளிடம் வியாபாரம் செய்துகொண் டிருக்கிறோம். பக்தி, சரணாகதி என்பதெல்லாம் மிகப் பெரிய வார்த்தை. மிக உன்னதமான விஷயம். முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மை இல்லாத இடத்தில் பக்தியும் இருக்காது; முக்தியும் கிடைக்காது!''

''ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர். அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறீர்கள் நீங்கள். இதில், நாங்கள் எதைப் பின்பற்றுவது?' என்று கேட்டார் வாசகி அம்ருதா.

''குழப்பம் எதற்கு? ஆசைப்படாதே என்று அடுத்தவருக்கு அறிவுரை சொல்லும்போது புத்தரைப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஷாப்பிங், சினிமா என்று சுற்றும்போது, நான் சொல்வதை எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிச் சிரிக்கிறார் சத்குரு. சற்று இடைவெளிவிட்டு, நிதானமாக...

'ஒருவகையில் பார்த்தால், புத்தர் சொன்னதும் நான் சொல்வதும் வேறு வேறு அல்ல. 'எதிலும் ஆசையே படாதீர்கள்’ என்றார் புத்தர். அப்படி, எதற்்கும் ஆசைப்படாமலேயே இருக்க உங்களால் முடியுமா, ஆசையே இல்லாமல் வாழமுடியுமா என்று யோசியுங்கள். 'எனக்கு ஆசையே வேண்டாம். அப்படி இருப்பதையே விரும்புகிறேன்’ என்பதேகூட, ஒருவகையில் ஆசைதானே? ஆக, ஆசையே இல்லாமல் வாழ முடியாதுதானே? எப்படியும் நீங்கள் ஆசைப்படத்தான் போகிறீர்கள். அதனால்தான் ஆசைப்படுங்கள், பரவாயில்லை என்று உங்கள் வழியிலேயே வந்து, உங்களுக்காகச் சொன்னேன். ஆசைப்படுவது என முடிவாகிவிட்டது. பிறகு ஏன் சின்னச் சின்னதாக ஆசைப்பட வேண்டும்? அதனால்தான் அத்தனைக்கும் ஆசைப்படுங்கள் என்றேன். பெரிதாகவே ஆசைப்படுங்கள் என்றேன். எது பெரிது? இந்தப் பிரபஞ்சம் பெரிது.

ஆகவே, இந்தப் பிரபஞ்சம் அனைத்தையும் ஆசைப்படுங்கள். நன்றாகக் கவனியுங்கள். அதிகமாக ஆசைப்படு என்று சொல்லவில்லை. அத்தனைக்கும் ஆசைப்படு என்றுதான் சொன்னேன். பிரபஞ்சம் முழுவதும் ஆசைப்படத் துவங்கினால், பிடித்தவர் பிடிக்காதவர், விரும்புவது விரும்பாதது, நல்லவர் கெட்டவர் என்கிற பாகுபாடே இருக்காது. எல்லாவற்றையும், எல்லாரையும் விரும்ப ஆரம்பித்துவிடுவோம். அத்தனைக்கும் ஆசைப்படுவோம். அதுதான் ஞானோதயம்!"

''சுவாமிஜி, உண்மையைச் சொல்கிறேன். எனக்கு ஆன்மிகத்தில் சற்றும் நாட்டமில்லை. ஆனால், பிறருக்கு உதவ வேண்டும் என்கிற நல்ல இதயம் உள்ளது. இது போதாதா? எனக்கும் ஆன்மிகம் தேவை என்று நினைக்கிறீர்களா?' என்று கேட்டார் வாசகர் குமார்.

''ஆரோக்கியமான, 'நல்ல’ இதயம் இருந்தால், அது தொடர்பான நோய்கள் வராது. மற்றபடி, ஆன்மிகத்துக்கும் நல்ல இதயத்துக்கும் பெரிய தொடர்பில்லை. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே மனித நேயம் கொண்டவராக வாழ வேண்டும். அப்படி வாழ்வதுதான் இயல்பான வாழ்வு. நீங்கள் ஆன்மிகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மற்றவரிடத்தில் நீங்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை இதுதான்.

ஆனால், ஆன்மிகம் என்பது மற்றவரிடத் தில் கருணையுடன் இருப்பது மட்டுமல்ல; வாழ்க்கையின் மூலத்தையே அணுகிப் பார்ப்பது. படைப்பின் காரணத்தை உணர்ந்து பார்ப்பது. உங்களுக்கு உள்ளேயும் வெளியே யும் விரவி இருந்து, எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் சக்தியை ருசித்துப் பார்ப்பது.  இந்தப் படைப்பின் ஆதாரம் எது, அதன் மூலம் எது என்று அறிந்துகொள்ளும் தேடல் உங்களுக்கு வந்துவிட்டால், ஆன்மிகம் உள்ளே அடி எடுத்து வைக்கிறது என்று அர்த்தம். அதற்கான ஆன்மிகப் பயிற்சிகள் தேவைப்படுகின்றன. மற்றபடி, நல்ல இதயம் கொண்டவராக வாழ்வது உங்களுக்குள் இருக்கும் மனிதநேயத்தைக் கிளறிவிடும் ஒரு சாதனம் மட்டுமே!'' என்று தெள்ளத் தெளிவாக பதில் உரைக்கிறார் சத்குரு.  

சக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி

''நீங்கள் புதிதாக தியானலிங்கத்தை உருவாக்கி உள்ளீர்கள். சும்மா இருந்து சுகம் பெறவும், பிறப்பறுக்கவும் நம் முன்னோர், வெவ்வேறு விதமான லிங்கங்களை வழிபட்டனர். அவற்றுக்கும் தியானலிங்கத்துக்கும் என்ன வித்தியாசம்?'' என்று கேட்டார் வாசகர் சுப்ரமணியன்.

''முதலில், லிங்கம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். லிங்கம் என்ற சொல்லின் பொருள் 'வடிவம்’ என்பதாகும். இன்றைய நவீன விஞ்ஞானம், முழுப் பிரபஞ்சமும் சக்திதான் என்று சொல்கிறது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் இந்த முழுப் பிரபஞ்சமுமே ஒரே சக்தியின் பல்வேறுவிதமான வெளிப்பாடுகள்தான் என்று உறுதிபடத் தெரிவிக்கிறது.

படைப்பின் முதலும் முடிவுமான வடிவம் லிங்கம். இதை யோக அறிவியல் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது. இன்று ஆராய்ச்சியாளர்கள் வானமண்டலத்தில் இருக்கும் பல கோளங்களைப் படம் பிடித்திருக்கிறார்கள். கோளங்கள் ஒவ்வொன்றும் நீள்வட்ட வடிவத்தில்தான் இருக்கின்றன. ஏனென்றால், முதல் வடிவம் எப்போதுமே நீள்வட்ட வடிவத்தில்தான் இருக்கிறது. இறுதி வடிவம்கூட அப்படித்தான். எனவே, லிங்கம் என்பதன் பொருள் அதுதான்.

பொதுவாக, ஒரு லிங்கத்தை உருவாக்கும் போது ஏதோ ஒரு குறிப்பிட்ட சக்கரத்துக்காக மட்டுமே பிரதிஷ்டை செய்யும் வழக்கம் நிலவுகிறது. ஆனால், தியானலிங்கம்... ஏழு சக்கரங்களும் முழுமையாக சக்தியூட்டப்பட்டுள்ளது. அதனால், தியானலிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், வாழ்வின் ஏழு அடிப்படை அம்சங்களும் அதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்தனை சக்கரங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதால், இது ஒரு உயிருள்ள மனிதரைப் போன்றது. ஆனால், தியான லிங்கத்துக்கு உடல்தன்மை மட்டும் இல்லை.

தியானலிங்கம் அமைந்திருக்கும் இடம், 100 சதவிகித நிசப்தத்தில் இருக்கக்கூடிய ஒரு வளாகம். அங்கே எந்தச் சடங்குகளும் இல்லை; எந்த வழிபாடுகளும் இல்லை; எந்த நம்பிக்கைகளும் இல்லை. அங்கே சிறிது நேரம் அமைதியாக, கண்மூடி அமர்ந்திருந்தால் தியானம் என்பதை எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் நீங்களே உணர முடியும். இயல்பாகவே தியானத்தன்மையை அடைவீர்கள். அது மிகவும் சக்தி வாய்ந்த இடம். உங்கள் முதுகுத்தண்டை அசைத்துப் பார்க்ககூடிய அளவுக்குச் சக்தி வாய்ந்த சூழ்நிலை அங்கே நிலவுகிறது. தியானலிங்க வளாகத்தில் இருக்கும்போது, எந்த ஒரு வாய்மொழியான குறிப்பும் இல்லாமல் ஆன்மிக வளர்ச்சிக்கான ஆன்ம விதை உங்களுக்குள் விதைக்கப்படுகிறது.

முன்காலத்தில் கோயில்கள் விஞ்ஞான ரீதியாகக் கட்டப்பட்டன. அங்கே சென்று சிறிது நேரம் அமர்ந்திருப்பதன் மூலம், அந்த இடத்தை உங்களுக்குள் சக்தியூட்டிக்கொள்ள நீங்கள் பயன்படுத்திகொள்ள முடியும். இந்தியாவில் உள்ள கோயில்கள் எல்லாம் வெறுமே வழிபாட்டுக்காக, பிரார்த்தனைக்காக  மட்டுமே உருவாக்கப்பட்டவை அல்ல. கோயிலுக்குச் சென்றால், சிறிது நேரம் அங்கே அமர வேண்டும் என்று உங்களுக்குச்  சொல்லியிருப்பார்களே? ஏனென்றால், கோயில் வடிவமைக்கப் பட்டிருக்கும் விதமும், கோயிலில் உள்ள கடவுள் சிலையின் உருவமும், அதன் வடிவமும் அளவும், அந்தச் சிலைமீது செதுக்கப்பட்டிருக்கும் முத்ராவும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. குறிப்பிட்ட விதமான அதிர்வுகளை அவை உருவாக்குகின்றன. கருவறையின் அமைப்பும், சுற்றியுள்ள பிராகாரத்தின் வடிவமைப்பும் ஒரு சக்தி வாய்ந்த ஸ்தலமாக அதை மாற்றியுள்ளன.

கோயில் என்பது, வெறுமே கும்பிட மட்டுமல்ல; பேட்டரியை சார்ஜ் செய்து கொள்வது போன்று, நம்மை நாமே சார்ஜ் செய்துகொள்வதற்கான இடம் அது. துறவிகளும் ஞானிகளும் கோயிலுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை என்பார்கள். காரணம், அங்கெல்லாம் போகாமலே அவர்களுக்குத் தங்களை சக்தியூட்டிக் கொள்ளத் தெரியும். உங்களுக்கு அந்த வழிமுறை தெரியாவிட்டால் கோயில், அதிஷ்டானம் போன்ற சக்தி வாய்ந்த இடங்களுக்குச் சென்று உங்களை சக்தியூட்டிக் கொள்ளலாம். மனிதனுடைய நல்வாழ்வுக்கென முற்றிலும் வித்தியாசமான பரிமாணத்தில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் நம் கோயில்கள். தியானலிங்கம் முழுக்க முழுக்க யோக விஞ்ஞானத்தின்படி உருவாக்கப்பட்டது'' என விளக்கினார் சத்குரு.

சக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி

''கிராம நலவாழ்வில் அதிகளவில் ஈடுபடுகிறது ஈஷா. மருத்துவ வசதி வழங்குகிறது. அதைப் பற்றிச் சொல்ல முடியுமா?’'  - இது வாசகர் கிருஷ்ணகுமாரின் கேள்வி.

''மருத்துவ உதவி என்பது ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே! புத்துணர்வு இல்லாதபோது மனிதனுக்கு வேறு எதிலுமே நாட்டம் இருக்காது. கிராமப்புறங்களில் தற்போது சரியான உணவுப் பழக்கம் இல்லை; கொண்டாட்டங்களும் இல்லை. முன்பு, விவசாயம் என்பது வாழ்வதற்குத் தேவையான பயிர்களை விளைவிப்பது என்பதாக இருந்தது. எனவே, கையில் காசு இல்லை என்றாலும், நன்றாகச் சாப்பிடுவதில் பிரச்னை இருக்காது. கிராமத்து மக்கள் நல்ல உணவு சாப்பிட்டு, நல்ல உடற்கட்டுடன் இருந்தார்கள்.

தற்போது, பணப்பயிர்களை விளைவிப் பதற்குத்தான் விவசாயம் எனும் மனநிலை அதிகரித்து வருகிறது. இப்போது காசு இருக்கிறது. மின்சாரம் இருக்கிறது, டிராக்டர் இருக்கிறது, செல்போன் இருக்கிறது. காசு இருந்தாலும், அதை வைத்து காய், பழம் அல்லது ஊட்டச் சத்துள்ள பொருட்களை வாங்கி உண்ண வேண்டும் என்று தெரியவில்லை. அதனால், கிராம மக்களின் உடல் வளர்ச்சி முழு அளவில் இல்லை. மேலும், கொண்டாட்டம் என்றால் நகரம் நோக்கிப் போகவேண்டும் என நினைக்கிறார்கள். எனவே, பல வகைகளிலும் கிராமங்களில் புத்துணர்வைத் திரும்ப கொண்டு வருவதுதான் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் நோக்கம்!'

''தங்களின் எதிர்காலத் திட்டம் குறித்துச் சொல்லுங்களேன்!''  - இது வாசகி நந்தினியின் கேள்வி.

''உலகில் 720 கோடி மக்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரு துளி ஆன்மிகம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதுவரைக்கும் நம் திட்டத்தைச் செயல்படுத்திக்கொண்டே இருப்போம். நான் மட்டும் அல்ல, நாம் அனை வரும் செயல்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

ஆன்மிகம் என்பது தத்துவமோ, மதமோ அல்ல. போதனைகளுக்கும் இங்கே அவசியமில்லை. உள்ளுணர்வை, உள்தன்மையை ஒவ்வொரு மனிதனும் ஒரு சொட்டு அளவேனும் உணர வேண்டும். அப்படி உணராததாலேயே தன்னை உடல் என்றும், ஆன்மா என்றும், எண்ணம் என்றும், விருப்பம் என்றும் விதம்விதமாக நினைத்துக்கொள்கிறான்.  கிட்டத்தட்ட தன்னை ஒரு பொருளாக நினைத்தே வாழ்கிறான். உயிராக வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால்தான், வாழ்ந்ததற்கான அர்த்தமும் நிறைவாகும். ஒரு சொட்டு ஆன்மிகம் உள்ளே போய்விட்டால், எளிதில் உணருவான். அதுதான் நோக்கம்' என்று உறுதிபடத் தெரிவித்தார்.

சக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி

''ஈஷா யோகத்தைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று வாசகர் ஸ்யாம் பிரசாத் கேட்டார்.  

''அவர்களுக்கு இனியும் என்ன சொல்வது? அவர்கள் யோகா கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இனி, அவர்களை அந்த யோகாவே வழிநடத்திச் செல்லும். நான் அவர்களை அழைத்துச் செல்பவன் அல்ல. என்னை எவரும் பின்பற்றி வருவதும் இல்லை. எனவே, அவர்களுக்குச் சொல்ல புதிதாய் ஒன்றுமில்லை என்னிடம்!

ஈஷா யோகா என்பது, உள்ளே இருக்கிற ஆத்மாவை அறியச் செய்வது. அதை விட்டுவிட்டு என் பின்னால் வந்தால், உங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. ஈஷா யோகாவில் முழுமையாக ஈடுபடுங்கள். ஈஷா யோகாவை மதமாகவோ போதனையாகவோ பார்க்காதீர்கள். அதுவொரு தொழில்நுட்பம். அந்த நுட்பத்தை அறிந்துகொண்டு, உள்ளுக்குள் இருப்பதைக் கண்டறியுங்கள். புதிதாக ஒரு செல்போன் வாங்கினால், அது உங்கள் சாதியைக் கேட்கிறதா, மதத்தைக் கேட்கிறதா? செல்போன் என்பது ஒரு தொழில்நுட்பம். அதைப் புரிந்துகொண்டால், அதைக் கையாள்வதும் பயன்படுத்துவதும் அதிகமாகும். யாருக்கும் எளிதாகும். எல்லாவற்றுக் கும் தேவை ஓர் ஒழுக்கம்; ஓர் ஒழுங்கு.

ஈஷாயோகம் ஒரு தொழில்நுட்பம் என்றேன். அதை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதில் பயன் இருக்கிறது என்று என் அனுபவத்தில் சொல்கிறேன். நீங்களும் பயன் பெறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். என் உள்ளத்துக்கும் உங்கள் உள்ளத்துக்கும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் எல்லோருமே ஒரு மூலத்தில் இருந்துதான் வந்திருக்கிறோம். ஆகவே, எனக்குப் பிரமாதமாக வேலை செய்ததுபோல், உங்களுக்கும் மிக அருமையாகக் கைகொடுக்கும் ஈஷா யோகா!'' என்று தெளிவுபடச் சொல்லி, நிறைவு செய்தார் சத்குரு.

உண்மையில், தன்னோடு உரையாடும் வாய்ப்பைப் பெற்ற வாசகர்களின் உள்ளங்களில் ஆன்மிகத் தேடலைத் துவக்கி வைத்தார் சத்குரு என்றுதான் சொல்லவேண்டும்.

தொகுப்பு: வி.ராம்ஜி

படங்கள்: க.தனசேகரன்

''புத்த மத தியானம், ஜென் தியானம், பதஞ்சலி முனிவர் வகுத்த தியான முறை, குண்டலினி யோகம்... இவற்றிலிருந்து ஈஷா தியானம் எவ்விதத்தில் வேறுபட்டது?''

- சி.ராமநாதன், கடலூர்

''அடிப்படையில், தியானத்தன்மை என்பது ஒன்றுதான். தியானத்தின் முறைகள் வேண்டு மானால் வித்தியாசப்படலாம். ஒவ்வொரு காலத்திலும் மக்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்கேற்ற முறையில்தான் தியானம் சொல்லித் தரப்பட்டு வந்திருக்கிறது. புத்தர் 2,500 வருடங் களுக்கு முன்பு இருந்தவர். அவரைச் சுற்றி என்ன விதமான மனிதர்கள் இருந்தார்களோ, அவர்களுக்கேற்ற முறையை அவர் போதித்தார். பதஞ்சலி எந்த தியானமும் கற்றுத் தரவில்லை. அவர் அடிப்படையை மட்டுமே வழங்கினார். அந்த அடிப்படையைப் பயன்படுத்தி ஒவ்வொரு குருவும் தன் காலத்தில் இருக்கும் மக்களின் கலாசாரத்துக்கும் சூழ்நிலைக்கும் எது சரிப்பட்டு வருகிறதோ, அதற்கேற்ப சொல்லித் தருகிறார்கள். அப்படி, தற்கால வாழ்வுக்கேற்ப வடிவமைக்கப் பட்டதுதான் ஈஷா தியானம். அனைவரும் கற்றுக் கொண்டு பயன் பெறுங்கள்!'

சக்தி சங்கமம்... 2, சென்ற இதழ் தொடர்ச்சி

''பலமுறை மானசரோவர், கயிலாயம் சென்று வந்துள்ளீர்கள். அப்போது உங்க ளுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?'

- வே.பாலாஜி, தூத்துக்குடி

''உலகிலேயே, மகத்தான ஞானக் களஞ்சியம் என்றால், அது கயிலாயம்தான். நீங்கள் எதைப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களோ, அது உள்ளுல கமாக இருந்தாலும் சரி, வெளியுலகமாக இருந்தா லும் சரி, பிரபஞ்சத்தைப் பற்றியதாக இருந்தாலும் சரி... இவற்றை கயிலாயம் சென்றால் எளிதில் உணரலாம். அப்படி உணர்வதற்கான ஞானமானது அங்கே சக்தியாகத் திகழ்கிறது. அந்த சக்தியை கிரகித்துக்கொள்ள முடியும் என்றால், உங்களால் எதையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், டூர் போல ஒரிரு நாட்கள் அங்கே போய்விட்டு வந்தால் கிடைத்துவிடும் என்பது மாதிரியான விஷயம் இல்லை இது. இதுவரை எட்டு, பத்து முறை அங்கே போயிருக்கிறேன். அதே மலை, அதே பாதை, அதே பயணம். ஆனால், அனுபவம் மட்டும் ஒவ்வொரு முறையும் கூடிக்கொண்டே போகிறது. அதை வார்த்தையாக வடிப்பது சுலபம் அல்ல. சொல்லப்போனால், அந்த அனுபவத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இதை உணர்ந்து பார்த்தால்தான் தெரியும்.

ஒவ்வொரு முறையும் போய் வந்ததும், கை கால்கள் கெஞ்சும். 'போதும், இனிமேல் போக வேண்டாம்’ என்று உத்தரவிடும். ஆனால், ஒவ்வொரு வருடமும் போய்க்கொண்டுதான் இருக்கிறேன். அதுவொரு சுகானுபவம். இந்தப் பயணமும் மதத்துக்காகவோ பக்திக்காகவோ இல்லை. மலையளவு ஞானம் கயிலாய மலையில் கொட்டிக் கிடக்கிறது. அப்படியிருக்கும் போது, எப்படிப் போகாமல் இருக்க முடியும்? திருப்பித் திருப்பி நம்மைக் கவர்ந்திழுக்கிற மகா சக்தி அது!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism