Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 4

துயரங்கள் மூன்று!பி.என்.பரசுராமன், ஓவியம்: நடனம்

மனிதனும் தெய்வமாகலாம்! - 4

'சாதன சதுட்டயம்’ என்று நான்கு விதமான விவரங்களை விவரித்த கைவல்லிய நவநீதம், எந்தக் காரியத்தையும் சாதனம் இல்லாமல் செய்பவர் என எவருமே இல்லை எனத் தெரிவிக்கிறது.

உண்மைதான். சாதனங்கள் இல்லாமல் யாரும் எந்தவொரு செயலையும் செய்ய முடியாது. சாதாரண காரியம் ஒன்றைச் செயலாற்றுவதற்கே இது வேண்டும், அது வேண்டும் என்றிருக்கிற போது, துயரங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு முக்தியை அடையவேண்டும் எனில், அதை அடைய வழிகாட்டும் கைவல்லிய நவநீதத்தை உணரவேண்டும் என்றால், அதற்கு எவ்வளவு சாதனங்கள் தேவை?!

முதலில், பிரச்னைகளில் இருந்து நாம் விடுபடவேண்டும் என முழு மனதுடன் விரும்பவேண்டும். அப்படி விரும்பினால், வழிகாட்டுவதற்கு நல்லதொரு குருநாதர் கிடைப்பார்.

அப்படிப்பட்ட குருநாதரை, சீடன் ஒருவன் தேடிச் செல்கிறான்.

அவனது நிலையை வர்ணிக்கும் பாடல்...

இவன் அதிகாரி ஆனோன்
இந்திரியங்களாலும்
புவன தெய்வங்களாலும்
பூத பௌதிகங்களாலும்
தவன மூன்று அடைந்து வெய்யில்
சகித்திடாப் புழுப்போல் வெம்பிப்
பவம் அனு ஞான தீர்த்தம்
படிந்திடப் பதறினானே (தத்துவ விளக்கப்படலம்5)

கொதிக்கும் தரையில் கிடக்கும் புழு, எந்தப் பக்கம் திரும்பினாலும் சூடு தாங்காமல் துடிப்பதுபோல, அந்தச் சீடனும் திரும்பிய பக்கமெல்லாம் சூடு பட்டு வந்திருக்கிறான். அவன், துயரத்தில் துடிக்கும் மனித குலத்தின் பிரதிநிதி.

அவன் அனுபவித்த துயரங்களைச் சுருக்கமாகப் பட்டியல் இடுகிறது இந்தப் பாடல். பட்டியலில் இருப்பவை நமக்குத் தெரிந்தவைதான். அவற்றை வகைப்படுத்தியிருக்கும் அழகை அனுபவிப்போம்.

அழகு உள்ள இடத்தில் ஆபத்தும் இருக்கும் எனும் பழமொழிக்கு ஏற்ப, அழகான அந்தப் பட்டியலில் அடுக்கடுக்காக ஆபத்துகள் இருக்கின்றன. அதில், மூன்று விதமான தகவல் கள் இடம்பெற்றுள்ளன. அவை ஆதியாத்மிகம், ஆதி தெய்விகம், ஆதி பௌதிகம் என்பன.

தன்னால் உண்டாகும் தீங்குகள், உடல் வியாதி, மிருகம், பிசாசு, அரசன், கள்வர், பகைவர் ஆகியோரால் விளைபவை, அடுத்தவரின் செல்வம், கல்வி, மனைவி ஆகிய விஷயங்களால் பொறாமைப்பட்டு அவற்றை விரும்புவது முதலானவை ஆதியாத்மிகம்.

அடுத்து... ஆதி தெய்விகம். கர்ப்பத் துயரம், பிறப்பு, நரை, திரை, மூப்பு, சொர்க்கம், நரகம் முதலானவை ஆதி தெய்விகம் எனப்படும். இதைச் சற்றே ஆராய்ந்து பார்ப்போம்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 4

வாழ்வில் சில விஷயங்களை நினைத்துப் பார்த்தால்தான், நம்மைப் பற்றி நமக்கே ஓரளவேனும் புரிபடும். அப்படிப் புரிந்து கொண்டால்தான் தலைகால் தெரியாமல் ஆடமாட்டோம்.

ஆதி தெய்விகத்தில் முதலில் சொல்லப்பட்ட கர்ப்பத் துயரம். தாயின் வயிற்றின் கர்ப்பப்பை யில் பத்து மாதங்கள் இருந்தோம். அதென்ன, ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியா? தங்கும் விடுதியானது நமக்குப் பிடித்தமாக இல்லை என்றால், அங்கே தங்குவதில் நமக்கு விருப்பம் இல்லை என்றால், உடனே வெளியேறி விடலாம். ஆனால், கர்ப்பவாசத்தில் இருந்து நம் இஷ்டப்படி வெளியேற முடியாது. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, பத்து மாத காலம் அங்கே இருந்துதான் ஆகவேண்டும். ஹவுஸ் அரெஸ்ட்! வேறு வழியே இல்லை.

சரி, தாயின் வயிற்றில் நம்மைச் சுற்றி இருப்பதென்ன? தாயின் மல, ஜல, ரத்தம் என ஒரே துர்நாற்றமும் களேபரமுமாக இருக்கிறது. அதையெல்லாம் சகித்துக்கொண்டு இருந்துவிட்டு, ஒருவழியாக பிரசவமாகி 'அப்பாடா!’ என்று வெளியே வந்தால், அதன் பிறகாவது நமக்கு நிம்மதி உண்டா? கையைக் காலை ஆட்டிக் கத்தி அழுகிறோம். நாம் அழுவ தைப் பார்த்துச் சுற்றியிருப்பவர்கள் சிரிக்கிறார்கள். பிறந்த குழந்தையான நம்மை கொசுவோ, எறும்போ கடித்தால், அதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. பட்ட துயரத்தை வாய் விட்டுச் சொல்லவும் முடியவில்லை.

அடுத்த கட்டமாக, வளர்ந்து வாலிபப் பருவம் அடைந்த பிறகாவது, நமது விருப்பம்போல் இருக்க முடிகிறதா? கண்ணில் பட்டவையெல்லாம் சுண்டி இழுக்கின்றன. எங்கே விழுந்தோம், எப்படி விழுந்தோம் என்பதைப் புரிந்து சுதாரித்துக்கொள்வதற்குள், தலைமுடி வெளுத்து விடுகிறது; பார்வை மங்கிவிடுகிறது. முதுமை நம்மைப் பலவந்தமாக ஆக்கிரமித்து அழுத்திவிடுகிறது.

அப்புறம் என்ன... அடுத்தவர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகி, 'சொர்க்கமோ, நரகமோ... பாவி யமன் என் ஓலையைத் தொலைத்து விட்டான்போல!’ என ஆற்றாமையுடன் புலம்பத் துவங்கிவிடுகிறோம்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 4

எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி, ஆதி தெய்விகம் எனும் இந்த வலையில் இருந்து தப்பவே முடியாது. படிப்பு, பணம், பதவி என எந்த ஒன்றாலும் ஆதி தெய்விகத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றவும் முடியாது.

மூன்றாவதானது... ஆதி பௌதிகம். பஞ்ச பூதங்களால் ஆன்மாக்களுக்கு உண்டாகும் நல்லவை கெட்டவை, குளிர் வெப்பம், மழை காற்று, மின்னல் இடி, சுனாமி, நிலச்சரிவு, நில நடுக்கம் இத்யாதி!

இந்த மூன்று விதமான துயரங்களில் இருந்தும் தப்பிக்க முடியாமல் துடிக்கும் மனிதன், கடைசியாக பிறவாத நிலையை

அடைய, தலையில் தீப்பிடித்தவன் எப்படித் தண்ணீரைத் தேடிப் பதறி ஓடுவானோ, அதுபோல குருநாதரைத் தேடி ஓடுகிறான். இப்படித் தீவிரமாக, குருதேவரைத் தேடி ஓடும் அந்த மனிதனுக்கு ஓர் உதாரணம் சொல்கிறது கைவல்லிய நவநீதம்.

ஆன இம்மனைவி மக்கள்
அர்த்த ஈடணைகள் மூன்றில்
கானவர் வலையில் பட்டுக்
கை தப்பி ஓடும் மான் போல்
(தத்துவ விளக்கப்படலம்6)

உண்மை கசக்கும் என்பார்கள். அதுபோல, இந்தப் பாடல் கசக்கத்தான் செய்யும். அதற்காக, பயணத்தைத் தொடங்கிவிட்டு எதிரில் மலை குறுக்கிட்டதும் பயணத்தை நிறுத்திவிட முடியுமா என்ன? முடிந்தவரை, மலையேறிப் பார்க்கலாம்.

மேற்கண்ட பாடலில், மூன்று ஈடணைகளைப் பற்றி அதாவது மூன்று ஆசைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. அந்த மூன்று ஆசைகள் என்னென்ன தெரியுமா..?

- தொடரும்