Published:Updated:

ஆலயம் தேடுவோம்

நாஞ்சூர் காசி விஸ்வநாதருக்கு கும்பாபிஷேகம் எப்போது? இ.லோகேஸ்வரி

ஆலயம் தேடுவோம்

நாஞ்சூர் காசி விஸ்வநாதருக்கு கும்பாபிஷேகம் எப்போது? இ.லோகேஸ்வரி

Published:Updated:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தும், உழவாரப்பணி களை மேற்கொண்டும் வருகிற கந்தசாமி சிவனடியார், அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் புராதனமான சிவாலயம் குறித்துத் தெரியப்படுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து உருகம்பட்டி செல்லும் வழியில் உள்ளது நாஞ்சூர் கிராமம். வயல்களுக்கு நடுவில், அமைதியே உருவாக அமைந்திருக்கிறது ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில்.

முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட புராதனமான ஆலயம். ஆனால், கற்கள் பலவும் பெயர்ந்து விழுந்துவிட்டன. கட்டடங்களும் சந்நிதிகளும் இடிந்தும் சிதைந்தும் கிடக்கின்றன.  உள்ளே, கருவறையில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகாசி விஸ்வநாதர். காசியம்பதியில் உள்ளது போலவே, நாஞ்சூர் கிராமத்தில் உள்ள ஆலயத்திலும் சிறிய வடிவில் காட்சி தருகிறார் சிவனார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தேடுவோம்

அந்தக் காலத்தில், புதுக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு, தொண்டைமான் அரச பரம்பரையில் வந்த   மன்னர்கள் பலர் ஆட்சி செய்து வந்தனர். அப்போது, காசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்குமாக பக்தர்கள் பலரும் பாதயாத்திரையாகவே சென்று, ஸ்வாமி தரிசனம் செய்து வந்தனர். நாளும் இறைவனை தரிசிக்கும் வழக்கமுடைய அவர்கள் பயணத்தின் வழியில் தரிசிப்பதற்காக, பல கோயில்கள் கட்டப்பட்டன. நாஞ்சூரில் உள்ள இந்த ஆலயமும் அப்படி தொண்டைமான் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். நாஞ்சூர் கிராமத்துக்கு 'நமணராய சமுத்திரம்’ என்ற பெயர், ராஜகோபால தொண்டைமான் காலத்தில் இருந்திருக்கிறது. அதுவே, காலப்போக்கில் மருவி நாஞ்சூர் என்றானது என்கிறார்கள். ஒருகாலத்தில், விழாக்களும் கொண்டாட்டங்களுமாக இருந்த கோயிலில் இன்றைக்கு விழாக்களே இல்லை. விழாக்களை விடுங்கள்... நித்தியப்படி பூஜைகளோ, பக்தர்களின் வருகையோ இல்லாமல், மிகப் பரிதாபமாகக் காட்சி தருகிறது கோயில்.

ஆலயம் தேடுவோம்

பரிவார தெய்வங்களின் சந்நிதிகள் முற்றிலுமாகச் சிதைந்து விட்டன. அந்த தெய்வத் திருவிக்கிரகங்கள், கோயில் பிராகார வளாகத்துக்குள் ஓரமாகக் கிடப்பதைப் பார்க்கும்போது, நெஞ்சமெல்லாம் பதறிப்போகிறது.

கோயிலில் கோபுரம் உண்டு. ஆனால், மரங்கள் வளர்ந்து, எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடலாம் என்கிற நிலையில் உள்ளது. ஒருகாலத்தில், பிரமாண்டமான கோயி லாக இருந்த நிலை மாறி, இப்போது இடிந்தும் சிதைந்தும் சுருங்கிவிட்ட ஆலயத்தை மீண்டும் பழையபடி சீர்படுத்தி, கும்பாபிஷேகம் காண வேண்டும் என்பதே ஊர்மக்களின் விருப்பம்.  

வேண்டியவருக்கு வேண்டிய வரங்களைத் தரும் தலம் இது. முன்னோர்களின் ஆசீர்வாதத்தைத் தந்து, முற்பிறவியின் பாவத்தைக் களைந்து அருள்பாலிக்கும் ஸ்ரீகாசி விஸ்வநாதரின் ஆலயம், இப்படி வழிபாடு இல்லாமல் இருக்கலாமா?

''எனக்கு நாஞ்சூர்தான் சொந்த ஊர். இப்ப திருச்சில இருக்கேன். சின்ன வயசிலேருந்தே இந்தக் கோயிலைப் பார்த்திருக்கேன். எத்தனை அருமையும் பெருமையுமா இருந்த கோயில் தெரியுமா, இது! இப்ப இப்படி இருக்கேனு நான் வருத்தப்படாத நாளே இல்லை. கடவுள் அருளாலயும், பக்தர்களின் ஊக்கத்தாலயும் இப்ப திருப்பணி வேலைகளை ஆரம்பிச்சிருக்கோம்'' என்கிறார் ராமச்சந்திரன் என்பவர்.

மலையப்ப ஐயர் என்பவர் இந்தக் கோயிலில் பூஜைகளைச் செய்து வந்தார். அவருக்குப் பிறகு அவரின் மகன், பூஜை ஆராதனை களைச் செய்தார். வழிபடுவதற்கு பக்தர்கள் வருகிறார்களோ இல்லையோ, பூஜை மட்டும் குறையற நடந்துகொண்டிருந்தது. ஆனால், ஒருகட்டத்தில் அதுவும் நின்றுபோனது.

ஆலயம் தேடுவோம்

''முதல்கட்டமாக, பிரதோஷ பூஜையைத் தொடர்ந்து நடத்துவது எனத் தீர்மானித்தோம். அதன்படி, கடந்த மூன்று மாதங்களாக பிரதோஷ பூஜையை இடைவிடாமல் செய்து வருகிறோம். விரைவில், கோயிலுக்கு மின் இணைப்பும் பெற்று, அடுத்தடுத்த வேலைகளைத் துவங்க முடிவு செய்துள்ளோம்' என்கிறார் ராமச்சந்திரன்.

அஷ்டமி திதி அன்று 48 அந்தணர்களுக்கு நிலங்களை தானமாகக் கொடுத்த தகவலும், 'கோயில் நிலங்களைக் கையகப்படுத்துவது போன்ற செயல் களைச் செய்பவர்கள், கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற பாவத்துக்கு ஈடாவர்’ என்றும் கோயில் தாமிரப்பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

ஆலயம் தேடுவோம்

தற்போதுள்ள கோயில் கற்களைப் பிரித்து விட்டு, பாலாலயம் செய்யும் முயற்சியில் ஈடுபட் டுள்ளனர். பின்னர், அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் தனித் தனி கருவறைகள் கொண்டதொரு சிறிய அளவிலான கோயில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர் திருப்பணிக்கமிட்டியினர்.

''பத்து வருஷத்துக்கு முன்னாடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களைக் கணக்கு எடுத்தோம். அப்பதான், நாஞ்சூர் சிவாலயம் பத்தித் தெரியவந்துச்சு. அதன்பிறகு, கோயில்ல விளக்கு எரியணுங்கறதுக்காக, மாசாமாசம் எண்ணெயும் திரியும் கொடுத்திட்டிருக்கோம். சென்னை அன்பர்கள் சிலரையும் சேர்த்துக்கிட்டு, சுமார் 400 பேரைக் கொண்டு, இங்கே உழவாரப் பணிகளைச் செஞ்சோம். சீக்கிரமே இந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடக்கணும். எல்லாமே சிவனருள்!'' என்று சொல்லி நெகிழ்கிறார் கந்தசாமி சிவனடியார்.

ஆலயம் தேடுவோம்

பித்ருக்கள் சாபம் தீர்த்தருள்பவர் ஸ்ரீகாசி விஸ்வநாதர். அவரின் ஆலயம் சிதைந்திருப்பது பெரும் பாவமல்லவா! ஸ்ரீவிசாலாட்சி அம்மையும் ஸ்ரீகாசி விஸ்வநாதரும் குடிகொண்டிருக்கும் ஆலயத்தைச் செப்பனிடவும் சீர்படுத்தவுமான திருப்பணிகள் தடைப்படாமல் நடந்து, சீக்கிரமே கும்பாபிஷேகம் நடந்தேற நம்மால் இயன்றதைச் செய்வோம்; கோயில் திருப்பணியில் நாமும் பங்கு பெறுவோம். சிவனருளாலும் அம்பிகையின் கருணையாலும் நம் சந்ததி சிறக்கும்!

படங்கள்: தே.தீட்ஷித்

எப்படிச் செல்வது?

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து உருகம்பட்டி செல்லும் வழியில் 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது நாஞ்சூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism