மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

பொருத்தம் பார்ப்பது அவசியமா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? 'ஒருவருக்கொருவர் நல்ல பொருத்தமான ஜோடி. இருவருக்கும் நல்ல வேலை. இணையான சம்பளம். இரு குடும்பங்களும் பரஸ்பரம் அனுசரணையானது. மொத்தத்தில் நல்ல இடம். ஆனால், ஜாதகப் பொருத்தம் கூடிவரவில்லை என்று தவிர்க்க வேண்டியதாகிவிட்டது...’ என்று நண்பர் ஒருவர் அங்கலாய்த்துக் கொண்டார்.

எதிர்காலத்தில், மணவாழ்க்கை நலமாக அமைய வேண்டும் என்பதற்காகத்தானே ஜாதகப் பொருத்தம் பார்க்கிறோம். ஆனால், நண்பர்களைப் போன்ற சிலரது அனுபவங்களைக் கேட்கும்போது, ஒரு நெருடல் தோன்றவே செய்கிறது. இதுகுறித்து விளக்கினால் இன்றைய சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

- கே. சிதம்பரம், நாகர்கோவில்

முதல் கோணம்...

அறிமுகம் ஆகாதவர்களிடமும் அழகான அணுகுமுறை, எடுத்த காரியத்தில் வெற்றியை எட்டும் வரை ஈடுபாடு, எதையும் ஆராய்ந்து ஏற்கும் பாங்கு, தகவல்களைச் சரியாகப் புரிந்து கொள்ளும் மன முதிர்ச்சி... திருமணத்தில் இணைய இருவருக்கும் இந்த நான்கு தகுதிகளும் இருக்கவேண்டும்.

தற்காலத்தில் பட்டமும், பட்டமேற்படிப்பும் பெற்று வேலை வாய்ப்பில் இணைந்து, திருமணத் துக்கு உகந்த உடல் வளமும் மன முதிர்ச்சியும் எட்டிய பிறகே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வாழ்வின் அடிப்படைத் தேவைகளை  மிக எளிதில் நடைமுறைப்படுத்தும் அளவுக்குப் பொருளாதாரம் செழிப்புற்ற பிறகு திருமணத்தில் இணைபவர்களே ஏராளம். இதற்காக  30 வயது வரை காத்திருக்கவும் தயங்குவது இல்லை. வயது ஒரு பொருட்டல்ல; கூட குறைய இருந்தாலும் ஏற்கப்படும். துணையின் ஒத்துழைப்பு நூறு விழுக்காடு இருப்பதை உறுதி செய்தபிறகே, துணையுடன் இணையத் துணிவார்கள். நேர்காணலின்போது தோற்றம் தரும் ஈர்ப்பு, உரையாடலின்போது மனவளத்தின் நிறைவு இருவரிடமும் பரிமாறிக் கொள்ளப்படும். அவற்றை ஊர்ஜிதம் செய்ய பல அடுக்கு பேச்சுவார்த்தைகள் நிகழும். தங்களுடைய  சுயநலம் பறிபோகாமல் இருக்கும் என்ற உணர்வு இருவரிடமும் பதியும் தறுவாயில் திருமணத்தில் இணையத் துணிவார்கள். ஆக, இருவரின் மனமும் இறுதி முடிவெடுக்கும்.

கேள்வி - பதில்

? மனப்பொருத்தம் போதும் என்றால், ஜாதகம் சொல்லும் பத்துப் பொருத்தங்கள் எல்லாம் வீண்தானா?

பத்துப் பொருத்தங்கள் அவசியம்தான். ஆனால், அவை என்னென்ன என்பதை இன்றைய சிந்தனையோடு ஒன்றிப் பார்க்க வேண்டும். வயது, அழகு, படிப்பு, வேலை, பொருளாதாரம், தோற்றம், மனப்போக்கு, சுயநலத்தின் நிறைவு, விருப்பம் நிறைவேற ஒத்துழைப்பு, வருங்கால குறிக்கோளில் நம்பிக்கை  இந்தப் பத்து பொருத்தங்களும் ஆராயப்படும். பொருத்தங்களின் நிறைவுடன், அன்பும் இணைப்புப் பாலமாக அமைந்துவிட்டால், நீண்ட சுவையான தாம்பத்தியம் கிடைத்துவிடும்.

உடலுறவு என்பது ஆசையின் உச்சகட்டம். அதுமட்டுமே இணைப்புக்கு காரணமாக அமைந்தால், அடுக்கடுக்கான விவாகரத்தைத் தழுவி, தாம்பத்தியம் அமைதி இழந்துவிடும். உடலுறவு ஆசைக்கு காதல் முலாம் பூசிப் பெருமைப்படுத்திய சீர்திருத்தவாதிகள் இருந்தார்கள். அதுமட்டுமே தாம்பத்தியம் இல்லை. தாம்பத்தியத்தின் அடித்தளம் அசையாமல் இருக்க உடலுறவும் ஒத்துழைக்கும்.

காதல் இணைப்புக்கு ஆதரவளித்து முன்னுரிமை அளித்ததில் நன்மையை விட தீமைகளே அதிகம். திருமண முறிவுக்கு ஆசையின் இணைப்பே காரணம். ஆசை அகன்றதும், அன்பு இல்லாததால் முறிவு முளைத்துவிடுகிறது. ஆக, இருவரது சிந்தனையின் தரமானது இணைப்புக்கு ஆதாரமாக இருக்கும்போது, அதை முற்றிலும் ஒதுக்கிவிட்டு பத்துப் பொருத்தம் பார்த்து, ஜாதகத்தையும் இணைப்புக்கு ஆதாரமாகக் காட்டி, அப்பாவி மக்களுக்கு தப்பான வழிகாட்டுவது நாகரிகம் ஆகாது.

? எதன் அடிப்படையில் 'தவறான வழிகாட்டுதல்’ என்கிறீர்கள்?

பிறந்தவேளையில் இணைந்த நட்சத்திரத்தையும் (நட்சத்திரப் பொருத்தம்), அந்த வேளையின் வரைபடத்தையும் (ஜாதகம்) இருவரது இணைப்பை இறுதிசெய்யப் பயன்படுத்துவது அறிவீனம். நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று இணையும் - இணையாது என்பதும், காலத்தின் வரைபடம் ஒன்றுக்கொன்று இணையும் - இணையாது என்பதும் இருவரின் இணைப்புக்குக் காரணமாகாது. இணைப்பு என்பது மனம் சார்ந்த விஷயம். வெளியுலக காலமோ வரைபடமோ அவர்கள் மனதின் தரத்தை அளந்து, விளக்கம் அளிக்காது. நட்சத்திரத்துக்கும் நட்சத்திரத்துக்குமோ அல்லது கிரகத்துக்கும் கிரகத்துக்குமோ திருமணம் இல்லை. அது, மனம் படைத்த ஆணுக்கும் பெண்ணுக்குமானது.

காலம் (ஜாதகம்) நட்சத்திரம் (பத்துப் பொருத்தம்) ஆகியவற்றால் அவர்களின் மனப்போக்கை வரையறுக்க இயலாது. பூர்வபுண்ய கர்மவினையின் இணைப்பில், மனதின் போக்கை ஆராய்ந்து அவர்களது பொருத்தத்தை இறுதி செய்ய வேண்டும். எல்லோருக்கும் பொதுவான நட்சத்திரங்கள், எல்லோருக்கும் பொதுவான காலம் (ஜாதகம்) ஆகியவற்றை தனிமனிதனின் மன இயல்புக்குக் காரணமாகச் சொல்வது பொருந்தாது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முற்படக்கூடாது.

பத்துப் பொருத்தங்களும், ஜாதகமும் சான்றில்லாத தகவலின் அடிப்படையில் உருப்பெற்றவை. இவற்றை அறிமுகம் செய்தவர் கள், எல்லோரும் ஏற்கும்படியான சான்றுகளை அளிக்கவில்லை. இயற்கையின் தூண்டுதலில் பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் ஈர்ப்புக்கு, பிறந்த வேளையின் வரைபடமும் (ஜாதகம்), அவன் தோன்றிய வேளையில் இணைந்த நட்சத்திரமும் தேவை என்பது சம்பந்தம் இல்லாத இடைச்செருகல். அவற்றை அலட்சியம் செய்துவிட்டுத் திருமணம் நடந்தேறியிருப்பது கண்கூடு. எனவே, ஜாதகம் பொருத்தம் என்பதெல்லாம் அப்பாவி மக்களுக்குக் குழப்பத்தையே அதிகப்படுத்தும்.

கேள்வி - பதில்

இரண்டாவது கோணம்:

காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு நல்ல நடைமுறையை, மாற்றுக்கண்ணோட்டத்துடன் குறையாகக் குறிப்பிடுவது தவறு.

ஜோதிட சாஸ்திரத்தின் வாசனையற்ற புது சிந்தனையாளர்களின் கணிப்பு ஏற்கத்தக்கதல்ல. முறையாக ஜோதிடத்தைப் படித்து உள் வாங்காத சிந்தனைகளுக்கு விடையளிக்கத் தேவையில்லை. தாங்கள் வளர்ந்த சூழல், தங்களது அனுபவத்தில் விளைந்த தகவல் ஆகியவற்றை ஆதாரமாக வைத்து, உயர்ந்ததொரு சிந்தனையில் குறை காண்பது... அவர்களது சிந்தனையின் கோணலே தவிர, சாஸ்திரத்தின் குறையல்ல.

? அதற்காக, சான்றில்லாத தகவல்களை எல்லாம் ஏற்க முடியுமா?

ஒன்றை நீங்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். சட்டமும், கோட்பாடும், அறநெறியும், சம்பிரதாயமும், பண்பும்... அவற்றைக் கடைப்பிடிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்காக ஏற்பட்டது. எதற்கும் கட்டுப்படாத சுயசிந்தனை யாளர்களுக்கு இவை தேவையில்லை. அவர்களை யும் திருப்திப்படுத்த வேண்டிய பொறுப்பு சாஸ்திரங்களுக்கு இல்லை. அவர்களது நற்சான்றையும் சாஸ்திரம் எதிர்பார்க்கவில்லை. 'காட்டுக் கோழிக்கு மகர ஸங்கிராந்தி பண்டிகை எதற்கு’ என்றொரு சொல் வழக்கு உண்டு. அந்த கோழி பண்டிகையை ஏற்காததால், பண்டிகை பொய் ஆகாது. அதேபோல், கோழியை ஏற்க வைத்தால்தான் பண்டிகை பயனுள்ளது என்றும் ஆகாது.

வேத காலத்து முனிவர்களின் சிந்தனையில் வெளிவந்த தகவலுக்குச் சான்று தேடுவது அறிவீனம். முனிவர்கள்தான் சான்று. மக்கள் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்ற இயல்பில் தோன்றிய சிந்தனையில் களங்கம் இருக்காது. லோகாயத வாழ்க்கையை இலக்காகக் கொண்ட புது சிந்தனையாளர்களுக்கு, ஆன்மிக வாசனையோடு இணைந்த சிந்தனைகளின் தரத்தைப் புரிய இயலாது. ஊண், உறக்கம், உடலுறவு ஆகியவற்றுடன் நிறுத்திக் கொள்ளும் வாழ்வை ஏற்றவர்களுக்கு, எந்தவொரு தகவலும் சான்று இல்லாததாகவே படும். அவர்களின் மனம் எந்த நல்ல நடைமுறையையும் ஏற்காது. அவர்கள் மனித இனத்தின் அனுகூல சத்ருக்கள். உடன் இருந்து குழப்பம் விளைவிப்பவர்கள்.

? எனில், நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டும்தான் ஜாதகம் பலிக்குமா?

அப்படியில்லை. எந்தவொரு விஷயத்தையும், அதை ஏற்றுக் கடைப்பிடிப்பவர்களிடம் கொண்டு போனால் மட்டுமே பயன் தரும். இல்லையெனில் விழலுக்கு இரைத்த நீராக வீணாகும்.

கோயில்களும் இறையுருவமும் அவற்றில் நம்பிக்கை இருப்பவர்களுக்காக ஏற்பட்டது. குடியரசின் சட்டதிட்டங்கள் அதில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டும்தான். பொறுப்பில்லாத சுதந்திரத்தோடு வாழ விரும்புகிறவர்களுக்கு, இந்த கோட்பாடுகள் தேவை இல்லை. குடும்பம், கிராமம், நகரம், தேசம், உலகம் - அத்தனையிலும் தொடர்புகொண்டு, தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கும் விதத்தில் சட்டதிட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்துபவர்களுக்கு அவை தேவை. மற்றவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு இல்லை.

? பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. எல்லா தகுதிகளும் இருந்தும் ஜாதகத்தின் உருவில் தடை ஏற்படுகிறதே என்பதுதான் எங்கள் ஆதங்கம். அதைப் புரிந்துகொண்டு பதிலளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

நட்சத்திரமும் (பொருத்தம்), கிரகங்களும் (ஜாதகம்) ஆகாய பூதத்தோடு ஒவ்வோர் உயிரினத்திலும் இணைந்திருக்கும். காலத்தின் வரைபடம், காலத்தோடு இணைந்த மனிதனின் செயல்பாட்டின் தரத்தை உணர்த்தும். நட்சத்திரமும் (பத்து பொருத்தங்களும்) கிரகங்களும் (ஜாதகம்) இருவரது மனப்போக்கை வரையறுக்கும் தடயங்கள் ஆகும். இயல்புக்கு நட்சத்திரமும், இயல்பின் செயல்பாட்டில் விளையும் தகவலுக்கு கிரகங்களும் பயன்படுகின்றன.

மாற்றானுடனும் இணைந்து வாழும் பாங்கு, எடுத்த காரியத்தைப்  பொறுப்புடன் ஏற்றுத் தளராமல் செயல்பட்டு வெற்றி அடையும் திறமை, தகவல்களை ஆராய்ந்து ஏற்றுப் பயன்படுத்தும் துணிவு, தகவலில் உள்ள கருத்தைப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கும் மனமுதிர்ச்சி இவையனைத்தும் பத்து பொருத்தங்களிலும், ஜாதகத்திலும் ஆராயப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படாத கர்மவினையின் உருவத்தை, தடயங்களின் வாயிலாக புரிவது தகும். அதற்கு ஜாதகம் ஒத்துழைக்கும். நேர்காணலிலும் உரையாடலிலும் இருவரது மனப்போக்கை அறிய இயலாது. இருவருமே தங்களின் குறைகளைத் திறந்துகாட்ட மாட்டார்கள்.   அதில் மிகுந்த எச்சரிக்கையோடு, தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் செயல்படுபவார்கள். இந்த நிலையில், ஆசைகளின் உந்துதலில், பொருளாதாரப் பெருக்கில், பெருமையின் ஈர்ப்பில் அவர்கள் ஏற்கும் முடிவு தவறாகிவிடும்.ஜோதிடம் சொல்லும் தடயங்களைப் பயன்படுத்தி ஆராய்ந்தால், அவர்களுடைய மனதின் வரைபடம் தெளிவாகத் தெரிந்து விடும். நேர்காணலும் உரையாடலும் மன ஒற்றுமையை சுட்டிக் காட்டாது.

ஜாதகம்தான் மன ஒற்றுமைக்குச் சான்று. நடைமுறையில் மகிழ்ச்சியோடு வாழ்ந்த குடும்பப் பரம்பரைகள் அத்தனையும் ஜாதகத்தின் துணையில் வெற்றி கண்டவை. இன்றும், பொருத்தம் பார்த்து இணைந்த தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். தவறான விளக்கம் அளித்த ஜோதிடர்களின் திரிசமனை சாஸ்திரத்தின் தோல்விக்குக் காரணமாக்கக் கூடாது. ஜாதகம் வாழவைக்க வந்தது; வழுக்கி விழவைப்பதற்காக வரவில்லை. ஆறாவது அறிவைப் பயன்படுத்தினால், அதன் தரம் தெளிவாக விளங்கும்.

கேள்வி - பதில்

மூன்றாவது கோணம்:

பரம்பரைப் பெருமையை வைத்துக்கொண்டு, ஜாதகத்தை ஏற்க வைப்பது தகாது. பாட்டனார் தோண்டிய கிணறு. அதில் தண்ணீர் உப்பாக - உபயோகப்படுத்தும் தகுதியில்லாத நிலையில்   இருந்தாலும் 'பாட்டனின் சொத்து; அதில் கிடைப்பதையே பயன்படுத்தவேண்டும்’ என்று பயன்படுத்துகிறோமா? இல்லையே!

? எனில், பழம்பெருமை வாய்ந்த எல்லா விஷயங்களையும் தூக்கிப் பரணில் போட்டுவிடச் சொல்கிறீர்களா?

அப்படியில்லை. புதிய தலைமுறையினரின் சிந்தனை மாறுபட்டு இருப்பதால், அவர்களுக்குப் பொருந்தும் வகையில் செயல்படுவது சிறப்பு என்று சொல்லவருகிறோம்.

இன்றைக்குத் திருமணத்தின் குறிக்கோள் மாறிவிட்டது. குலம், கோத்திரம், உட்பிரிவு, இனம், பங்காளிகள், ஊர், தேசம், உறவுமுறை ஆகியவற்றை அடித்தளமாக ஏற்ற திருமணங்கள் இன்று இல்லை. 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற கோட்பாட்டைச் சிறப்பிக்கும் வகையில் திருமணம் அரங்கேறவில்லை.

கூட்டுக்குடும்பம் மறைந்து இருவர் மட்டுமே சேர்ந்து வாழும் நிலையை ஏற்றிருக்கும் புது சிந்தனையாளர்களுக்கு, ஜாதகப் பொருத்தம் தேவையற்றது. பணம், சம்பிரதாயம், அன்பு ஆகியவற்றையெல்லாம் அலட்சியப்படுத்தும் சிந்தனைகளுக்கு ஜாதகப் பரிந்துரை வீண். மனித இயல்பில் இருந்து நழுவினால் விலங்கின இயல்பு தலைதூக்கும். இன்றைய சமுதாயம் பண்பான திருமணத்தை விரும்பாது. விருப்பத்தையும் சுயநலத்தையும் அடையவே திருமணத்தை ஏற்கும். எனவே, இருவரது மனப்போக்கையும் நேரடியாக ஆராய்ந்து, மனோவியல் தகவல்களைத் தடயமாகக் கையாண்டு செயல்படுவதே சிறந்த நடைமுறை. ஜாதகத்தைவிட அதில் நம்பிக்கை வைக்கலாம்.

? அப்படியெனில் ஜாதகம், ஜோதிட சாஸ்திரம் எல்லாம் பயனற்றவையா?

ஜாதகத்தை மன ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில் பயன்படுத்து வது சிறப்பு என்று சொல்ல வருகிறோம். அப்படிப் பயன்படுத்தும் ஜோதிடர்களை விரல்விட்டு எண்ண லாம். இன்றைய சிந்தனையில் மாறிய ஜோதிட வல்லுநர்கள், ஆராய்ச்சித் திறமை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். ஆணையும் பெண்ணையும் பார்க்காமலேயே, நட்சத்திரத்தை வைத்து சேரும், சேராது என்று முடிவைச் சொல்லி விடுவார்கள். தொலைபேசியிலேயே இரண்டு நட்சத்திரங்களையும் கேட்டுவிட்டு, ஜாதகத்தை யும் திருமணம் செய்துகொள்ளப் போகும் அன்பர்களைப் பற்றியும் எதுவும் தெரியாமல், திருமணத்தில் இணையலாம், இணையக்கூடாது என்று முடிவெடுப்பார்கள். இந்த விளையாட்டு மக்களில் பல விபரீதங்களை ஏற்படுத்துகிறது.

நம்பமுடியாத ஜோதிட விளக்கங்களை ஏற்று இணைந்து, அதன் பிறகு விவாகரத்து பெற்றுத் துயரத்தைத் தழுவியவர்கள் உண்டு. மக்களின் சிந்தனை மாற்றம், ஜோதிடரின் சிந்தனை மாற்றத்தால் சரியான மன இயல்பைச் சுட்டிக்காட்ட இயலவில்லை. ஜாதகமும் அவர்களின் மனப்போக்கைச் சுட்டிக்காட்டாது. ஆக, மனோவியல் தகவல்களைக் கையாண்டு இருவரது மன இயல்பை வரையறுப்பதே நம்பிக்கைக்கு உகந்தது. ஒழுக்கம், அன்பு, பண்பு, நடைமுறை இவற்றோடு இணைந்து வாழும் சிந்தனை உடைய சமுதாயத்துக்கு ஜாதகம் ஒத்துழைப்பு அளித்திருக்கலாம். லோகாயத வாழ்க்கையில் மூழ்கிவிட்ட இன்றைய சிந்த னைக்கு ஜாதகம் பயன்படாது.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை:

காலமாற்றம் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும். சிந்தனையின் தரத்தை உணர்ந்து, ஒருவனை வாழவைக்க, சிந்தனைக்கு உகந்த தடயங்களை ஏற்கவேண்டும்.

அன்றைய நாளில், சமுதாயக் கட்டுப்பாடும் பண்பும் கலந்த சிந்தனைகளுக்கு ஜாதகம் வழிகாட்டியது. இன்று சூழல் முற்றிலும் மாறி விட்டது. அவர்கள் அறியாதபடி, அவர்களது சிந்தனை வளத்தை ஆராய்வதற்கு, தற்காலத்துக்கு உகந்த மனோவியல்  தகவல் உதவும். நட்சத்திரமோ ஜாதகமோ அவர்களை ஈர்க்க உதவாது. இருவரையும் நேர்காணலில் சந்திக்க வைத்து அவர்களின் உரையாடலை மனோவியலுடன் இணைத்து, ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்ல பலனைத் தரும். பழம்பெரும் ஜாதகம், அதை அலர்ஜியாக வெளியே தள்ளிவிடும். காலத்தை ஒட்டி வெற்றி பெறுவதற்கு ஜோதிடர்கள் மனோவியல் தகுதியைப் பெற    வேண்டும்.

பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.