மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

நதியில்நீராடி... நாதனைப் பணிந்து...எஸ்.கண்ணன்கோபாலன்

வாழ்க்கையில் வாய்ப்பு என்பது ஒருமுறைதான் வரும். அந்த வாய்ப்பைத் தவறவிட்டால், திரும்பவும் அந்த வாய்ப்பு வருமா, வந்தால் எப்போது வரும் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், நம்முடைய பாவங்களை எல்லாம் அகற்றிக்கொண்டு, புண்ணியத்தைத் தேடிக்கொள்ள, ஒருமுறைக்குப் பலமுறை வாய்ப்பு தரும் சமயம் நம்முடைய இந்து சமயம்தான்.

அப்படியொரு அரிய  வாய்ப்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் வைபவம்தான், இதோ இப்போது நாம் தரிசிக்கப்போகும் 'துலா ஸ்நான உற்ஸவம்’ எனப்படும் கடைமுழுக்கு விழா!

'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்று பிரசித்தி பெற்ற மயிலாடுதுறையில், 'கங்கையினும் புனிதமாய காவிரி’ என்று பெரியாழ்வாரால் பாடப்பெற்ற காவிரி நதியில்தான் இந்த வைபவம் நடைபெறுகிறது. 16.11.14 அன்று நடைபெற்ற அந்த புனித வைபவத்தைக் காண ஒரு நாள் முன்னதாகவே நாம் அங்கே சென்றுவிட்டோம்.

 ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

இந்த வைபவம், அருள்மிகு அபயாம்பிகை சமேத அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தை மையமாகக் கொண்டே நடைபெறுகிறது என்பதால், அன்று மாலை 7 மணிக்குக் கோயிலுக்குச் சென்றோம்.  திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் இருக்கும் இந்தக் கோயிலில் நடைபெறும் 'துலா ஸ்நான வைபவம்’ குறித்து, ஆதீனத்தில் துணைக் கண்காணிப்பாளராக இருக்கும் கணேஷ் என்பவரிடம் விவரம் கேட்டோம்.

''துலா ஸ்நான உற்ஸவம் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் அற்புதமான திருவிழா! ஐப்பசி மாதம் முதல்நாள் தொடங்கும் இந்தத் திருவிழாவில், முதல் பத்து தினங்கள் சந்திரசேகரப் பெருமான் காவிரி தீர்த்த கட்டத்துக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டு, தீர்த்தம் கொடுப்பது வழக்கம். அடுத்த பத்து தினங்கள் காலையும் மாலையும் சுவாமி வீதி உலா நடைபெறும். கடைசி பத்து நாள் விநாயகர், வள்ளிதேவயானை சமேத முருகர், மயூரநாதர், அபயாம்பிகை, சண்டிகேசர் என்று பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும். ஒவ்வொரு நாளுமே காவிரி தீர்த்த கட்டத்துக்கு எழுந்தருளி, தீர்த்தம் கொடுப்பது நடைபெறும். இந்த வைபவத்தின் நிறைவு நாளான, நாளை(16-11-14) நடைபெறும் 'கடைமுழுக்கு வைபவம்’தான் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் பெருந்திருவிழா ஆகும்'' என்றார்.

 ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

மறுநாள் காலை 7 மணிக்கே மயூரநாதர் கோயிலுக்கு நாம் சென்றிருந்தபோது, மயூரநாதர் கோயில் மற்றும் மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் பஞ்ச மூர்த்திகளுக்கு அலங்காரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் சுவாமி புறப்பாடு நடைபெற இருப்பதாகவும், கோயில் மாட வீதிகளை வலம் வந்து, மயிலாடுதுறை நகர வீதிகளின் வழியாக, குறுக்குத்துறையில் உள்ள தீர்த்தக் கட்டத்துக்கு பகல் 1-30 மணிக்கு வந்து சேருவதாகவும் தெரிந்துகொண்டோம். சுவாமி அங்கே வருவதற்குள், நாம் துலா ஸ்நானம் நடைபெற இருக்கும் இடத்துக்குச் சென்று, அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாமே என்று நினைத்தபடி குறுக்குத் துறை இருக்கும் இடத்துக்குச் சென்றோம்.

நாம் செல்லும் வழியில், குறுக்குத்துறைக்குச் சென்று துலா ஸ்நானம் செய்துவிட்டு, மனதின் மலர்ச்சி முகத்தில் பிரதிபலிக்க வந்துகொண்டிருந்த திரளான மக்களைக் காணமுடிந்தது. அவர்களில் பலர் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் என்பதை அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.  

குறுக்குத்துறையை அடைந்ததும், அங்கே நாம் கண்ட காட்சி பரவசமூட்டுவதாக இருந்தது. தன்னில் நீராட வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சற்றும் பயம்கொள்ளாதபடி, மார்பளவு ஆழத்தில் ஆர்ப்பாட்ட ஆரவாரம் இல்லாமல், மெள்ளத் தவழ்ந்து சென்றுகொண்டிருந்தாள் காவிரி. அங்கிருந்த படித்துறைகளில் ஆண்களும் பெண்களுமாக காவிரியில் புனித நீராடிக்கொண்டு இருந்ததைக் காண முடிந்தது.

 ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

நதியின் நடுப்பகுதியில், ஏழெட்டு சிறுவர்கள் மார்பளவு நீரில் வட்டமிட்டு நிற்க, அவர்களின் தோள்களில் நாலைந்து சிறுவர்கள் ஏறி நின்று, காவிரியில் குதித்துக்கொண்டிருந்தனர். மற்றொரு புறத்திலோ சின்னஞ்சிறுவர்கள் உயரமான இடத்தில் இருந்து காவிரியில் குதித்துக் கும்மாளம் போட்டனர். ஆசை ஆசையாகத் தன் மடியில் வந்து விழும் குழந்தைகளைப் பாசத்துடன் ஏந்திக்கொள்ளும் தாயைப் போலவே, தன்னில் குதித்துக் கும்மாளமிடும் அந்தச் சின்னஞ்சிறு பிள்ளைகளின் கொண்டாட்டத்தையும் பூரிப்புடன் ரசித்தபடி சென்றுகொண்டிருந்தாள் காவிரி.

'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்று மயிலாடுதுறை பிரசித்தி பெற என்ன காரணம்? இந்தக் கேள்வி நம் மனதில் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டே இருந்தது. அங்கே சந்தித்த சுவாமிநாத சிவாசார்யாரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டோம். இவர் மயிலாடுதுறையில், வேத சிவாகம பாடசாலையின் ஸ்தாபகராகவும், அதன் முதல்வராகவும் இருக்கிறார்.

''மயிலாடுதுறை பிரசித்தி பெற்றுத் திகழ்வதற்குக் காரணம், இந்தத் தலத்தைச் சுற்றிலும் சிவபெருமான் ஐந்து வள்ளல்களாக, ஐந்து இடங்களில் கோயில்கொண்டு இருக்கிறார். மயூரநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனைத்தையும் அருளும் வள்ளலாகவும், வள்ளலார் கோயிலில் ஞானத்தை வழங்கும் வள்ளலாகவும், காவிரியில் எங்கே ஸ்நானம் செய்யவேண்டும் என்று காட்டியதால், விள நகரில் துறை காட்டும் வள்ளலாகவும், மூவலூரில் வழிகாட்டும் வள்ளலாகவும், பெருஞ்சேரியில் பொருள் தரும் வள்ளலாகவும்... இப்படி மயிலாடுதுறையைச் சுற்றிலும் சிவனார் கோயில் கொண்டு இருப்பதால்தான் 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்று பிரசித்தி பெற்று விளங்குகிறது மயிலாடுதுறை'' என்ற சுவாமிநாத சிவாச்சார்யார் தொடர்ந்து, ''கங்கை, யமுனை போன்ற நதிகளில் நீராடி, மக்கள் தங்களது பாவங்களைப் போக்கிக் கொள்கிறார்கள். மக்கள் தங்களிடம் இறக்கி வைத்த பாவங்களையெல்லாம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள காவிரி தீர்த்தத்தில்தான் கங்கை, யமுனை போன்ற நதிகள் போக்கிக் கொள்கின்றன. மாயூரம் பிரசித்தி பெற்றுத் திகழ்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்'' என்றார்.

 ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

நேரம் செல்லச் செல்ல, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவதால், எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாமல் இருக்க, நாகை மாவட்ட காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அவர்களுக்கு உதவியாக என்.சி.சி., செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களும் சீருடையுடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சுமார் 11:30 மணியளவில், காவிரியின் வடகரையில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர். நாம் காலையில் மயூரநாதர் ஆலயத்தில் தரிசித்த பஞ்ச மூர்த்திகளைப்போல் இவர்கள் தோன்றவில்லையே என்று தோன்ற, அங்கிருந்த சிவாசார்யார் ஒருவரிடம் விளக்கம் கேட்டோம். கல்யாணசுந்தர சிவாசார்யார் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், ''நீங்கள் இங்கே தரிசிப்பது விசுவநாதர் கோயிலின் பஞ்ச மூர்த்திகள். இன்னும் சற்று நேரத்தில் இங்கே வள்ளலார் கோயில் சுவாமியும் எழுந்தருளுவார். அதேபோல், அந்தத் தென்கரையில் மயூரநாதர், ஐயாறப்பர், காசி விசுவநாதர் கோயில்களில் இருந்தும் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவர். அதன் பிறகுதான் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்'' என்றார்.

 ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!
 ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஐந்து சிவாலயங்களில் இருந்து சிவபெருமான் எழுந்தருளும் இந்தப் புனிதமான வைபவத்தில், பெருமாள் கோயிலில் இருந்தும் சுவாமி எழுந்தருளினால் சிறப்பாக இருக்குமே என்ற பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதுபோல், சற்று நேரத்திலேயே சந்திரன் வழிபட்ட திருஇந்தளூர் திருத்தலத்தில் இருந்து ஸ்ரீபரிமள ரங்கநாயகி சமேதராக ஸ்ரீபரிமள ரங்கநாதர் வடகரையில் எழுந்தருளிவிட்டார். 'மயூரநாதரைப் போலவே பெருமாளும் தினமும் அங்கே எழுந்தருளுவாரா?’ என்று, பெருமாளுடன் வந்த, ஸ்தல தீர்த்தக்காரர் என்ற முறையில் கோயில் கைங்கர்யத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் வரதாச்சாரிய சுவாமிகளிடம் கேட்டோம்.

''ஐப்பசி முதல்நாள், அமாவாசை மற்றும் கடைசி பத்து நாள் மட்டும்தான் பெருமாள் இங்கே எழுந்தருளுவார். மற்ற நாள்களில் சேனைமுதலியார் என்பவர்தான் தீர்த்த கட்டத்துக்கு எழுந்தருளுவார்'' என்றார். தொடர்ந்து, ஸ்ரீபரிமள ரங்கநாதர் சதுர்புஜ வீரசயனத் திருக்கோலத்தில் கோயில் கொண்டதன் பின்னணி பற்றியும் கூறினார்...

''ஏகாதசி விரதத்தை தவறாமல் அனுஷ்டிக்கும் அம்பரீஷன், ஒருமுறை துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்தது. ஏகாதசி விரத மகிமையால், துர்வாசமுனிவரிடம் இருந்து மன்னனைக் காப்பாற்றிய பகவான் ஸ்ரீநாராயணன், மன்னனின் பிரார்த்தனையின்படி, மன்னனுக்கும் துர்வாச முனிவருக்கும் நான்கு திருக்கரங்களுடன் வீர சயனக் கோலத்தில் காட்சி தந்தார் பெருமாள்.''

 ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

மணி இப்போது 12க்கு மேல் ஆகிவிட்டது. காவிரியின் தென்கரையில் எழுந்தருள இருக்கும் மயூரநாதரையும், ஐயாறப்பரையும், காசி விசுவநாதரையும் தரிசிக்க, பக்தர்கள் கூட்டத்தில் கலந்து தட்டுத் தடுமாறி ஒருவழியாக தென்கரைக்கு வந்து சேரவும், ஐயாறப்பர் கோயிலின் பஞ்சமூர்த்திகளும் அங்கே எழுந்தருளவும் சரியாக இருந்தது. தொடர்ந்து, காசி விசுவநாதரும் அங்கே எழுந்தருள, மயூரநாதர் கோயிலின் பஞ்ச மூர்த்திகள் இன்னும் வந்து சேரவில்லை. 1:30 மணிக்கு மேல் ஆகும் என்று அங்கே இருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். இந்த துலா ஸ்நான வைபவம் குறித்து ஐயாறப்பர் ஆலயத்தில் இருந்து வந்த சிவகுமார் சிவாசார்யாரிடம் விவரம் கேட்டோம்.

''மக்கள் தன்னிடம் விட்டுச் செல்லும் பாவங்களை நீக்கிக்கொள்ள, இறைவனின் ஆலோசனையின்படி, கங்கையானவள் இங்கே வந்து காவிரியில் நீராடி, தன்னில் சேர்ந்துவிட்ட பாவங்களை நீக்கிக்கொண்டதாக ஐதீகம். இந்த மாதம் முழுவதும் இந்த இடத்தில் ஸ்நானம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தருவதாகும். மாதம் முழுவதும் முடியாவிட்டாலும்கூட, ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுழுக்கு நாளில் நீராடினாலும்கூட புண்ணியத்தைத் தரும்.

முன்காலத்தில் முடவன் ஒருவன், கடைமுழுக்கு அன்று காவிரியில் துலா ஸ்நானம் செய்து, மயூரநாதரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருமுறை, அப்படி வரும்போது ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது. மிகவும் வருத்தம் கொண்டவனாக காவிரிக்கரையிலேயே படுத்து உறங்கியவனின் கனவில் தோன்றிய இறைவன், மறுநாள் அதாவது கார்த்திகை மாதம் முதல் நாளன்று காவிரியில் ஸ்நானம் செய்யும்படி ஆணையிட, அதன்படியே அந்த முடவன் மறுநாள் ஸ்நானம் செய்து இறைவனின் அருளைப் பெற்றான். அதுவே 'முடவன் முழுக்கு’ என்றானது. அன்று நீராடினால்கூட, புண்ணியம் பெறலாம்'' என்றார்.

 ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அப்போது கையில் கட்டுடன் காணப்பட்ட ஒரு பெண்மணி, வலியையும் பொருட்படுத்தாமல், ஐயாறப்பரை தரிசித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

சாந்தி சுப்ரமணியம் என்றும், சக்தி விகடனின் வாசகி என்றும்  தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டவர், 'என்னுடைய பிறந்த ஊரே மயிலாடுதுறைதான். கல்யாணம் ஆனதில் இருந்து 30 வருடமாக சென்னையில் இருந்தாலும்கூட, இந்த துலா ஸ்நான வைபவத்துக்கு மட்டும் தவறாமல் வந்துவிடுவேன்'' என்று பரவசப் பூரிப்புடன் சொன்னார். அந்தப்  பரவசம் நம்மையும் தொற்றிக்கொள்ளவே செய்தது.  

சரியாக 1:30 மணிக்கு, அபயாம்பிகை சமேத மயூரநாதர் அங்கே எழுந்தருளினார். தொடர்ந்து, தீர்த்தவாரியும் தீர்த்தம் கொடுத்தலும் நடைபெற்றது. கோயில்களில் இருந்து எழுந்தருளச் செய்யப்பெற்ற அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றதும், அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் துலா ஸ்நானம் செய்து, அங்கே எழுந்தருளியிருந்த தெய்வங்களை வணங்கி பிரசாதம் பெற்றுக்கொண்டு, தங்களின் ஜென்மாந்திர பாவங்கள் அத்தனையும் நீங்கிய மகிழ்ச்சியோடு, முகத்தில் பரவசம் பிரதிபலிக்கச் சென்றனர். அவர்களின் அந்தப் பரவசமானது நம்மையும் தொற்றிக்கொள்ளவே செய்தது.

கங்கையில் சேர்ந்துவிட்ட பாவங்களையே போக்கும் அளவுக்குப் புனிதம் கொண்ட காவிரியில் நீராடி, அவளின் கருணைக்குப் பாத்திரமாகி...

அபயம் என்று வருபவர்க்கெல்லாம் அபயம் அளித்துக் காப்பாற்றும் அன்னை அபயாம்பிகை சமேதராக அருளாட்சி புரியும் மயூரநாதரின் அருள்திறனும், பாவங்களில் இருந்து விடுபட ஒருமுறைக்குப் பலமுறை வாய்ப்பு அருளும் அந்த இறைவனின் தனிப்பெருங்கருணையும் நம்மைச் சிலிர்க்கச் செய்ய, அவன் தாள் பணிந்து, நலம் பல பெற்ற மகிழ்வுடனும், மிகவும் அரியதொரு வைபவத்தை தரிசித்த மனநிறைவுடனும் அங்கிருந்து கிளம்புகிறோம்.

படங்கள்: க.சதீஷ்குமார்