Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திர பாதம் (சந்திரன்) இணைந்த வேளை தனுசு ராசியிலோ மீன ராசியிலோ இடம்பெற்றிருக்கும் தறுவாயில், செவ்வாயின் த்ரிம்சாம்சகத்தில் உதித்தவள் கணவனுடன் இணைந்து செயல்படுபவளாகவும், குழந்தைச் செல்வத்தை ஈன்றெடுப்பவளாகவும், ஒழுக்கத்துடன் விளங்குபவளாகவும் தென்படுவாள்.

அவள் தாம்பத்தியம் செழிக்க கணவனுக்கு ஒத்துழைப்பாள். குழந்தைகளைப் பெறும் தகுதி பெற்றிருப்பாள். ஒழுக்கத்தின் இணைப்பில் வாழ்வை சுவைத்து மகிழ்வாள் என்கிறது ஜோதிடம். இந்த மூன்றும் திருமண முறிவைத் தோற்றுவிக்காது. ஆஸ்திக்கு ஓர் ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் பெறுவதுடன், கணவனின் அன்பு அரவணைப்பையும், ஒழுக்கம் வாயிலாக மற்றவர்களின் தன்னிச்சையான ஒத்துழைப்பையும் பெற்று மாதரசியாகத் திகழ்வாள் என்று பொருள்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணமும் மணமுறிவும்...

இயல்பில் மாறுபட்ட இருவரின் இணைப்பில் தோன்றிய இன்பம்தான் தாம்பத்தியத்தின் சாரம். பெண்மை சுதந்திரம் குறிக்கோளாக மாறும்போது, இணைந்து வாழும் எண்ணம் மறைந்துவிடும். குழந்தையை ஈன்றெடுக்கும் தகுதி இழக்கப்படும்போதும் விரிசல் தோன்றும். ஒழுக்கம் தென்படாதபோது, சட்டத்துக்கு மதிப்பளிக்க மனமில்லாத சுதந்திரம், கசப்பான உணர்வுக்குக் காரணமாகிறது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியே திருமண முறிவில் முற்றுப் பெறும்.  

கொள்கைப்பிடிப்பு இல்லாத திருமண முறிவை ஏற்காத அன்றைய நாட்களில்... தம்பதியரிடம் ஏற்படும் கருத்து மாறுபாடுகளும் கசப்பான உணர்வுகளும் காலப்போக்கில் மறு சிந்தனையில் தேய்ந்து மறைந்து, இன்பமயமான தாம்பத்தியத்தை எட்ட வாய்ப்பு கிடைத்தது. ஆக, சிந்தனை வளம் பெறாத தம்பதிகளில் தோன்றும் கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல், விடுதலை அளிப்பது உயர்வான முடிவல்ல. அவர்களுக்கு குறிக்கோளை உணர்த்தி, கருத்து வேறுபாட்டை அகற்றி, கசப்பு உணர்வின் விபரீத விளைவுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிகாட்ட முயற்சிக்காமல், அவர்கள் தாங்களாகவே மறுபரிசீலனை செய்வதற்கு ஆறு மாதங்களோ ஒரு வருடமோ கால அவகாசம் அளிப்பது, அனுபவத்தில் நல்ல பலனை அளிக்கவில்லை. மாறாக இந்த கால அவகாசமானது அவர்களுடைய கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் வளர்வதற்குப் பயன்படுகிறதே தவிர, அவர்கள் மனம் மறு பரிசீலனையில் இறங்க முற்படுவதில்லை. அதுவும் தவிர, ஒரு வருஷம் சென்றதும் விவாகரத்து கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுத்துவிடுவதால், மனம் பரிசீலனையில் திரும்பாது. ஒரு கோணத்தில் இந்த நடைமுறை விவாகரத்துக்கு மறைமுகமாக ஒத்துழைக்கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது எனலாம்.

விவாகரத்து தீர்வாகுமா?

விரிவடைந்த விவாகரத்து தற்காலச் சூழலில் ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. சீர்திருத்தம் செய்ய இயலாத அளவுக்கு பூதாகரமாக உருவெடுத்துள்ளது. விவாகரத்தான தம்பதிகளுக்கு உகந்த வரனைத் தேர்ந்தெடுக்க உதவும் உதவிக்கரங்கள் ஏராளமாகத் தென்படுகின்றன. குறிக்கோளை ஏற்காத மனம், எத்தனை திருமணங்களில் இணைந்தாலும் விடுதலை பெற்று வெளிவரத் துணிந்துவிடும். மனம் சார்ந்த விஷயங்களுக்கு சட்ட பரிகாரங்கள் பயன் அளிப்பதில்லை. இந்த உண்மையை அறிந்த சீர்திருத்தவாதிகள்தான் விவாகரத்தை வரவேற்றார்கள். மக்களுக்கு உதவ வேண்டிய உதவும் கரங்கள் சிக்கலை ஏற்க வைப்பது தகாது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

எந்த நியமத்துக்கும் ஒரு நல்லதும் ஒரு கெட்டதும் இருக்கும். ஒரு பக்கம் விடுதலை அளிக்கும்போது, ஒரு பக்கம் வினையும் இருக்கும். ஆனால், அந்த வினை பல பக்கவிளைவுகளுக்குக் காரணமாகி, பூதாகரமாக வளர்ந்து பிரச்னைகளுக்குத் தீர்வை எட்ட முடியாமல் தவிக்கக்கூடாது. இதயப் பரிவர்த்தனம் தீர்வாக இருக்கும் பிரச்னைகளில், சட்டதிட்டத்தை சுட்டிக்காட்டி திசை திருப்புவது தீர்வாகாது. இந்த கட்டத்தில், பழைய சிந்தனையானாலும் ஜோதிடத்தின் பரிந்துரைகள் மனமாற்றத்தை ஏற்படுத்தி தீர்வை எட்டுவதை அறிந்து, அதை ஏற்க மனம் துணியவேண்டும். ஜோதிடத் தகவல்கள் அத்தனையும் மறைமுகமாக மனப்போக்கின் தரத்தை வரையறுக்கும்.

தீர்வு தரும் ஜோதிட சிந்தனை

பிறந்தவேளை, நட்சத்திரத்தின் தொடர்பு, செவ்வாயின் த்ரிம்சாம்சகம் ஆகிய மூன்றும் இணைந்து, அந்த வேளையில் தோன்றியவளின் மனப்போக்கை வரையறுக்கின்றன. கணவனோடு இணையும் தன்மை, குழந்தையில் ஆர்வம், பலபேரோடு இணைந்து வாழும் பாங்கு ஆகிய அத்தனையும் மன ஓட்டத்தின் விளைவு.ரிஷிகளின் சிந்தனையில் வெளிவந்த தகவல், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும். தற்காலச் சிந்தனையின் கண்ணோட்டத்தில் அவற்றை சோதித்துப் பார்த்தால் எதுவும் விளங்காது. உப்பு சப்பு இல்லாதது வெற்றுவேட்டு என்று ஒதுக்கிவிடுவோம். சுயநலத்தில் ஊறிய இன்றைய சிந்தனைகள் பாரபட்சமற்ற ஆராய்ச்சியில் இறங்காது. தங்கள் சிந்தனைக்கு ஒத்துவரும் தகவல்களையே ஏற்கும்; மற்றவற்றைத் துறக்கும். ஆக, உண்மையை எட்டாமல் முடங்கிவிடும்.

சமுதாய அங்கீகாரம் பெற்ற சுயநலவாதிகள், தங்கள் விருப்பப்படி விளக்கம் அளித்து உண்மையைப் புரிந்துகொள்ளாதவாறு இரும்புத்திரையை எழுப்பிவிடுவார்கள். கிணற்றுத் தவளைக்கு கிணறுதான் உலகம்! மனப் போக்கின் ஆழஅகலத்தை, எண்ணிலடங்கா மாறுபாட்டை, அதன் விசித்திரமான போக்கை விஞ்ஞானத்தால் அறிந்துவிடலாம் என்பது பகற்கனவு. காலத்தால் மாறி வரும் சிந்தனை மாற்றத்தை ஏற்கும் சஞ்சலமான மனம், உண்மையை அறிந்துகொள்ள இயலாமல் தவிக்கும். அந்தத் தவிப்பைத் தவிர்க்க, ஜோதிட சிந்தனை பயனுள்ளதாக இருக்கும்.

முற்பிறவியின் கர்மவினையின் தொடர்பை அறிந்து கிரகங்களின் அமைப்பில் தோன்றும் மனப்போக்கை ஜோதிடம் சுட்டிக் காட்டும். அது, மனித வாழ்வின் அடித்தளமாக அமைவதாலும், முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு தீயவற்றை விலக்க, நல்லவற்றை ஏற்க ஒத்துழைப்பதாலும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழ்கிறது.

செவ்வாய் த்ரிம்சாம்சகம்

தனுசு ஒற்றைப்படை ராசி. மீனம் இரட்டைப் படை ராசி. ஒற்றைப்படை ராசியில் முதல் ஐந்து பாகைகளும், இரட்டைப் படை ராசியில் கடைசி ஐந்து பாகைகளும் செவ்வாயின் த்ரிம்சாம்சகம். மூலத்தின் முதல் பாதமும் ரேவதியின் கடைசி பாதமும் இணைந்திருக்கும்.

ராசி முழுவதும் குருவின் ஆதிக்கம் இருக்கும். ஹோரையில் சூரியனின் பங்கு இருக்கும். த்ரேக்காணத்தில் குருவும் செவ்வாயும் முறையே இருப்பார்கள். குரு, சூரியன், சந்திரன், செவ்வாய் -  இந்த நால்வரின் விகிதாசார இணைப்பில், அதாவது தட்பவெட்பங்களின் கலவையில், அதில் தோன்றியவளின் இயல்பு உருவாகியிருக்கிறது. பிறக்கும் வேளையில் அமைத்த இந்த கிரகங்களின் சேர்க்கை, அவளுடைய மன இயல்பின் தரத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலத்தின் தாக்கமோ, பிறரின் பரிந்துரையோ அவளது இயல்பை மாற்றி அமைக்காது. அவளது முற்பிறவி கர்மவினைதான் இந்த நான்கு கிரகங்களின் விகிதாசாரக் கலவையில் பிறக்க வைத்தது.

ஆன்மாவும் மனமும்

உலகம் பிறந்த நாளில் இருந்து நாத்திக வாதம் உண்டு. ஒரு நாளும் அது வென்றதில்லை. குழப்பத்தை விளைவிப்பதோடு அதன் பணி முடிந்துவிடும். உடலில் ஒன்றியிருக்கும் ஆன்மாவைப் பற்றிய சிந்தனை முளைத்ததும், நாத்திகவாதம் படுத்துவிடும். சூரியனை உலகின் ஆன்மாவாகவும், சந்திரனை மனமாகவும் சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம். சூரிய  சந்திரர்களுக்கு ஒளியும் உயிரோட்டமும் பரம்பொருளின் இணைப்பில் கிடைத்த பகுதியாகும். உடலை இயக்கும் ஆன்மாவும் மனமும் காலத்தோடு இணைந்து இருக்கும் சூரிய -  சந்திரர்களின் பங்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களுடைய வெட்பதட்பங்களின் வாயிலாக கர்மவினையின் பயனை நம்மில் இணைத்துவிடும்.

இருப்பது இரண்டு. அவை எண்ணிலடங்காத மனமாற்றத்தை தோன்றவைத்து, இன்பதுன்பங்களைச் சுவைக்கவைக்கின்றன. 'பரம்பொருள் முதலில் நீரைப் படைத்தார். அதில் வீர்யத்தை சேர்த்தார். அதிலிருந்து உலகம் தோன்றியது’ என்று புராணம் விளக்கும் (அபஏவ ஸஸர்ஜாதென தாஸு வீர்யமபாஸ்ருஜத் ததண்டமபவத்).நீர் - தட்பம்; வீர்யம் வெட்பம். இவற்றின் சேர்க்கையில் ஏற்பட்ட மாறுதல் உலகமாக உருவெடுத்தது என்ற சிருஷ்டி தத்துவம், ஜோதிடத்துக்கு ஆதாரம்.

சரவணப் பொய்கையில் நெற்றிக்கண் நெருப்பு இணைந்ததும் முருகன் தோன்றினான் என்கிறது புராணம். மனம் வாயிலாக கர்ம வினையின் செயல்பாடு வெளிவர வேண்டும். கர்மவினையின் தரத்தை இறுதிசெய்ய காலத்தின் வரைபடத்தில் அமர்ந்த கிரகங்கள் ஒத்துழைக்கின்றன. நகர்ந்துகொண்டிருக்கும் கிரகங்கள், வெட்பதட்பங்களின் தாக்கத்தில் நேராகவும் எதிரிடையாகவும் செயல்பட்டு, கர்மவினையை நடைமுறைப்படுத்துகின்றன.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

செவ்வாய்... வில்லனா?

தெளிவு பெற்ற மனம் கர்மவினை யின் சுமையைத் தாங்கிக் கொள்ளும்; தளராது, அல்லது கர்மவினையை செயல்படவிடாமல் தடுத்துவிடும். இங்குதான் தர்மசாஸ்திரம் சொல்லும் பரிகாரம் வெற்றியை எட்டவைக்கிறது. பரிகாரம் மனவலிமையை ஏற்படுத்தி, சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் செய்துவிடும். மனம் காரணம் என்பதால், ஜோதிடத்தில் மனோவியல் இணைந் திருப்பது கண்கூடு. இப்படியிருக்க, எல்லோருடைய தாம்பத்தியத்தையும் சீரழிக்கும் வில்லனாக செவ்வாயைச் சுட்டிக்காட்டும் புது சிந்தனை யாளர்களின் கணிப்பு சுரத்து இல்லாதது என்பது புலனாகிறது.

'கணவனுடன் இணைந்து வாழ்ந்து, மழலையைப் பெற்று, சமுதாயத் துடன் நெருங்கி வாழ்ந்து மகிழ்பவள் செவ்வாயின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள்’ என்ற வராஹமிஹிரரின் தகவல், புரட்சிகரமான புது சிந்தனை யின் விஞ்ஞான விளக்கங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை திடப்படுத்துகிறது. இன்றைய சூழலில் தகுதியில்லாதவரும் ஜோதிடராகத் திகழ்கிறார். அப்பாவி மக்களும் அவரை ஆராதித்து வரவேற்கிறார்கள். உயர்ந்த ஜோதிடம் உருக்குலைந்து காணப்படுகிறது. மனத்தெளிவை ஏற்படுத்த வேண்டிய ஜோதிடம், மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகிறது!

ராசியிலும், ஹோரையிலும், த்ரேக்காணத்திலும், சதுர்த்தாம்சம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம் - இவற்றில் இணைந்த தட்பவெப்பக் கிரகங்களின் தாக்கத்தைப் பின்னுக்குத் தள்ளி, த்ரிம்சாம்சகத்தில் இணைந்த செவ்வாய், அதில் பிறந்தவளை பெருமைக்கு உரியவளாக மாற்றியமைக் கிறது. இனப்பெருக்கத்துக்குக் காரணமாவது, கணவனோடு இணைந்து தன்னை முழுமையாக்கிக் கொள்வது, ஊரோடு ஒத்து வாழ்வது -  சங்கடங்களைச் சந்திக்காமல் இருப்பது போன்றவை நீண்ட தாம்பத்தியத்துக்கு வழிவகுக்கும்.

ஜோதிடம் என்ற பெயர் வந்தது ஏன்?

ஆகாச பூதத்தில் அடங்கியுள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றைத் தடயமாக வைத்து, காலத்தையும் காலத்தில் இணைந்த மனித மன சிந்தனையையும் கண்டறியும் முறையை ஜோதிடம் அறிமுகம் செய்தது. சூரியனுடைய நகர்வு காலமாக மாறியது. அதனுடன் இணைந்த மற்ற ஒளிப் பிழம்புகளும் விசித்திரமான காலத்தை உருவாக்கின. காலத்தோடு இணைந்த மனித மனம், ஒளிப் பிழம்புகளின் சேர்க்கையில் சிந்தனை வளம் பெற்று செயல்படும்.  அந்த செயல்பாட்டின் வரை படத்தை, காலத்தின் வரைபடம் சுட்டிக் காட்டும். குறைந்த தடயங்களை வைத்து முக்காலத்திலும் நிகழும் அதிசயங்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. இப்படி, ஒளிப் பிழம்பு அறிமுகம் செய்வதால், அதற்கு 'ஜ்யோதிடம்’ என்ற பெயர் வந்தது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

வேத காலத்தில் நவகிரக கூட்டுவழிபாடுதான் அறிமு கமானது. தர்மசாஸ்திரமும் கூட்டு வழிபாட்டை கையாண்டது (ஆதித்யாதி நவக்ரஹ ப்ரீத்யர்த்தம்...). 'கிரஹ ப்ரீதி’ என்ற சொல் 9 கிரகங்களின் கூட்டுப் பிரார்த் தனையைக் குறிக்கும். 'நவக்ரஹ மகம், நவக்ரஹ யாகம்’ என்ற தலைப்பில், கூட்டு வழிபாடு சிறப்பு என்கிறது. தினமும் மூன்று வேளையும் நீரை அள்ளி அளித்து கூட்டு வழிபாட்டை நடைமுறைப்படுத்துவார்கள். பிற்பாடு வந்த ஆகமம், ஆலயம், தலபுராணங்கள் நவகிரகங்களை தனித்தனியே வழிபடும் முறையைப் பரிந்துரைத்தன. அது விரிவடைந்து, ஆலய மூர்த்தத்தில் கிரகங்களின் இணைப்பை உறுதி செய்து, தனி வழிபாட்டுக்கு சிறப்பளித்து, ஆலய வழிபாட்டை கிரக வழிபாடாக ஏற்க வைத்தது.

வெப்பமும் தட்பமும்

நவகிரகங்களைச் சுட்டிக்காட்டும் வேத ஒலி, அவர்களின் அதிதேவதை, ப்ரத்யதி தேவதைகளின் தரத்தையும் கிரகத்தின் தன்மைக்கு ஊக்கம் அளிப்பதாக விளக்கம் அளித்தது. சூரியன் வெப்பக்கிரகம். அதன் அதிதேவதை அக்னி. அதுவும் வெப்பம். ப்ரத்யதி தேவதை பசுபதி. நெற்றிக்கண் உடைய பசுபதியும் வெப்பம். வேதம் ருத்ரனை அக்னி என்று சொல்லும் (ருத்ரோவா எஷயதக்னி:). சந்திரன் தட்பக் கிரகம். அதன் அதி தேவதை நீர். அதுவும் தட்பம் (அப்ஸுமே ஸாமோ அப்ரவீத்).

அதன் ப்ரத்யதிதேவதை கௌரீ. அவளும் தட்பம் - 'கௌரீ மிமாய ஸலிலானி’. ஸலிலம் என்றால் நீர். இப்படி, ஒன்பது கிரகங்களின் தகுதியை ஊக்குவிக்கும் விதமாக அதிதேவதை -  ப்ரத்யதிதேவதை அமைந்திருக்கும். வெப்பக் கிரகத்துக்கு வெப்பம் சேர்க்கும் வகையிலும், தட்பக் கிரகத்துக்கு தட்பம் சேர்க்கும் வகையிலும் அதிதேவதை, ப்ரத்யதி தேவதைகள் அமைந்திருப்பதைக் கவனிக்கவேண்டும். ஆக, ஆகாயம் இருக்கும் இடமெல்லாம் கிரகங்களின் பரவல் இருக்கும்போது, குறிப்பிட்ட கோயிலிலும், இடத்திலும் நவகிரகங்களை ஒதுக்கி விளக்குவது, பொருத்தமாக இல்லை.

சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism