Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

உத்தமனின் கோயில்!வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

கலகல கடைசிப் பக்கம்

உத்தமனின் கோயில்!வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

Published:Updated:

ங்கள் பக்கத்து வீட்டு அங்கிளுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். பாலீஷ் போட்ட குத்துவிளக்கு மாதிரி பளபளவென்று இருப்பார். வீட்டில் இருக்கும்போதுகூட, தும்பைப் பூ வெள்ளை வேஷ்டி, சட்டையில் ஜொலிப்பார்.

எல்லாவற்றையும்விட, அங்கிள் தன் உடலை தினந்தோறும் பராமரிக்கும் விதம் என்னை அதிசயிக்க வைக்கும்; பொறாமையாகவும் இருக்கும். எங்கேயாவது வெளியே சென்றுவிட்டு வந்தால், பாத்ரூமுக்குள் புகுந்து, சுமார் 17 நிமிடங்களுக்குத் தன் இரண்டு கால்களையும் பரபரவெனத் தேய்த்துக் கழுவிவிட்டுக் கொள்வார். உள்ளங்கால்களை, விரல் இடுக்குகளை எனப் பார்த்துப் பார்த்துச் சுத்தம் செய்வார். மாதத்துக்கு குறைந்தபட்சம் மூன்று சோப்புக் கட்டிகளாவது கரைந்துபோகும். பின்பு, இரண்டு கைகளையும் சோப்பு போட்டுக் கழுவிக்கொள்வார். அதற்கென்றே விதம் விதமாக ஹேண்ட்வாஷ் லிக்விட்கள் வாங்கி வைத்திருக்கிறார். கைகள் சுத்தமானதும், முகம். கடைசியில் டர்க்கி டவலால் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஈரம் போகத் துடைத்துவிட்டுத்தான் வெளியே வருவார்.

கலகல கடைசிப் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கை, கால் கழுவுவதற்கே இத்தனை பிரயத்தனம் என்றால், அவர் குளிப்பது பற்றி யோசித்துப் பாருங்கள்.

தினமும் குளிக்கச் செல்வதற்கு முன், ஹாலில் குத்துக்காலிட்டுத் தரையில் உட்கார்ந்துகொள்வார். அங்கிள் பக்கத்தில் தேங்காய் எண்ணெய் பாட்டில் (பெரியது) இருக்கும். அதிலிருந்து இடது கை உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக்கொண்டு, கை, கால், மார்பு என ஒரு இடமும் மிச்சம் இல்லாமல் தனக்குத்தானே ஆயில் மஸாஜ் செய்துகொள்வார். மாதம்தோறும் வீட்டு மளிகை சாமான் லிஸ்டில் மாமாவுக்கென்று கூடுதலாக மூன்று பாட்டில் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும்!

அழியப்போகும் உடல்மீது இந்த அளவு கவனம் செலுத்தத்தான் வேண்டுமா என்று அவரிடமே ஒரு நாள் கேட்டுவிட்டேன். 'புழுவே!’ என்பது மாதிரி என்னைப் பார்த்தார். ஷெல்ஃபிலிருந்து திருமூலர் புத்தகத்தை எடுத்தார். பக்கங்களைப் புரட்டி, என்னிடம் நீட்டி, 'படி’ என்றார். படித்தேன்.

'உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே!’

''புரியறதா? 'உடம்பின் அருமை தெரிவதற்கு முன்பு, அதனைக் கேவலமான ஒரு பொருளாக எண்ணியிருந்தேன். ஆகச் சிறந்தவனாகிய இறைவன் என் உடம்புக்குள்ளே கோயில்கொண்டு வீற்றிருக்கிறான் என்பதை உணர்ந்ததிலிருந்து, என் உடம்பைக் கண்ணும் கருத்துமாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்’ அப்படிங்கிறார் திருமூலர். இதைப் படித்ததில் இருந்து, நானும் என் உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வதென்று முடிவு செய்துவிட்டேன். நீயும் அப்படியே சுத்தபத்தமாக இருக்க முயற்சி பண்ணு! உனக்கும் நல்லது!'' என்றார்.

'அவசியம்' என்றேன், எக்ஸ்ட்ரா தேங்காய் எண்ணெய்க்கும், சோப்புக்கும், ஹேண்ட்வாஷ் லிக்விட்டுக்கும் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதலாக எவ்வளவு ஒதுக்கவேண்டியிருக்கும் என்று மனசுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism