Published:Updated:

திருவரங்கம் அழகிய மணவாளப் பெருமாள், ‘நம்பெருமாள்’ ஆன கதை!

திருவரங்கம் அழகிய மணவாளப் பெருமாள், ‘நம்பெருமாள்’ ஆன கதை!
திருவரங்கம் அழகிய மணவாளப் பெருமாள், ‘நம்பெருமாள்’ ஆன கதை!

மிழகத்தின் புராதனமான ஆலயங்களுக்கு அந்நியர்களின் படையெடுப்புகளின்போது எண்ணற்ற சோதனைகள் ஏற்பட்டது வரலாற்று உண்மை. தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றின் நிலைக்களனாகத் திகழும் ஆலயங்களை அழித்துவிட்டால், தமிழர்களின் தொன்மை வரலாற்றையே மறைத்துவிட முடியும் என்பதால், படையெடுத்து வந்த அத்தனை அந்நியர்களின் முதல் நோக்கம்,கோயில்களைச் சிதைத்து அழிப்பதாகவே இருந்தது. 

அப்படி அந்நியர்களின் படையெடுப்புகளின்போது சிதம்பரம், ஶ்ரீரங்கம், மதுரை போன்ற எண்ணற்ற பல ஆலயங்கள் அந்நியர்களின் படையெடுப்புகளின்போது பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிட்டது.

திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதரின் உற்சவ மூர்த்தம் அழகிய மணவாளப் பெருமாள் என்பதாகும். தற்போது இவரையே 'நம்பெருமாள்' என்று அழைக்கிறோம். அழகிய மணவாளப் பெருமாள் எப்போது நம்பெருமாள் என்னும் திருப்பெயர் ஏற்றார் என்பதன் பின்னணியில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் அமைந்திருக்கிறது.

அந்தச் சம்பவம்...

1321-ம் ஆண்டு டில்லியை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர் கியாசுதீன் துக்ளக் என்பவரின் மகன் உலூக்கான் யுவராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்டார். அதை ஒட்டி தென்னிந்தியாவின் மீது படையெடுக்க ஆயத்தம் செய்தார். இவரே பின்னர் மன்னரானதும் முகமதுபின் துக்ளக் என்ற பெயரோடு ஆட்சி செய்தார். உலூக்கான் பெரும் படையோடு தமிழகத்தை நோக்கி வருகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டதும்,முதலில் பதற்றம் அடைந்தவர்கள் ஆலய வழிபாடுகளில் நம்பிக்கையும், புராதனமான ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டுமே என்ற உயர்ந்த எண்ணம்தான் அவர்களின் பதற்றத்துக்குக் காரணம். 

அப்படித்தான் உலூக்கான் படையெடுத்து வருவதைக் கேள்விப்பட்டதுமே திருவரங்கத்தைச் சேர்ந்தவர்கள் திடுக்கிட்டனர். எங்கே கோயில்சொத்துக்கள் கொள்ளை போய்விடுமோ, தெய்வ மூர்த்தங்கள் பின்னப்படுமோ என்றெல்லாம் அஞ்சியவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அப்போது பிள்ளை லோகாச்சாரியார் என்ற வைணவ அடியார் ஒருவர் மூலவர் ரங்கநாதப் பெருமாளையும், தாயார் ரங்கநாயகியையும் மறைத்துச் சுவர் எழுப்பினார்.

பின்னர் சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டு, உற்சவ மூர்த்தியான அழகிய மணவாள நாதனை பாதுகாக்க வேண்டி, சுமந்து கொண்டு ஊர் ஊராக பயணம் சென்றார். எங்கே ஒரே இடத்தில் தங்கினால் பெருமாள் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரிந்து விடுமோ என்று பயந்து அழகர் கோயில், முந்திரி மலை பள்ளத்தாக்கு, கோழிக்கோடு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருப்பதி, செஞ்சி, அழகியமணவாள கிராமம் என பல இடங்களில் பெருமானை மறைத்து வைத்து பாதுகாத்தார். எல்லா இடங்களிலும் தன்னால் இயன்ற பூஜைகளை செய்து வழிபட்டார். 118 வயதில் பிள்ளை லோகாச்சாரியார் செய்த தியாகங்கள் மெய்சிலிர்க்க செய்பவை. பெருமாளை காக்கும் முயற்சியில் மதுரை கொடிக்குளம் அருகே எதிரிகள் முற்றுகையிட்டபோது மலைக்குகை உச்சியை அடைந்த பெரியவர், தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் மறைந்தும் போனார். அவரது சீடர்களால் ஸ்ரீரங்கம் உற்சவ மூர்த்தியான அழகிய மணவாள நாதப் பெருமாள் கவனமாக பாதுகாக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகள் ஆம், உங்களால் நம்ப முடியாது 48 ஆண்டுகள் கழித்து இனி எதிரிகள் தொல்லை இல்லை என்ற நிலையில்  மீண்டும் திருவரங்கம் வந்தார் பெருமாள். 

பல குழப்பங்களுக்கு இடையே வந்த இந்த உற்சவ பெருமாளை அங்கிருந்த எல்லோரும் மறந்தே இருந்தார்கள். பிள்ளை லோகாச்சாரியார் சீடர்கள் கொண்டு வந்த சிலை உண்மையானதா என்று கூட நம்ப தயங்கினார்கள். இதற்கு என்ன செய்வது என்று எல்லோரும் தயங்கிய வேளையில் அங்கிருந்த பெரியவர்களை கேட்டனர். அவர்களும் அந்த சிலை விஷயத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. காரணம் பலர் அறியவா பெருமாள் தேசாந்திரம் போனார்?அதனால் சிலை பற்றிய குழப்பம் நீடித்தது. அப்போது தொண்ணூறு வயதைக் கடந்த சலவைத் தொழிலாளி அங்கே வந்தார்.. அங்கு உருவாகி இருந்த குழப்பத்தை தன்னால் தீர்க்க முடியும் என்று கூறினார். சிறுவயது முதலே பெருமாளின் உடைகளை துவைப்பவன் நான். அதனால் உற்சவ மூர்த்தி அழகிய மணவாளநாதப் பெருமாள் சிலையில் கஸ்தூரி மணம் அதிகமாக இருக்கும் என்பது நான் அறிந்த விஷயம். அது சிறு வயதில் இருந்தே எனக்கு பிடித்தமான வாசம் என்றார். அதனால் அவருக்கு திருமஞ்சனம் செய்து ஈரமான உடையை என்னிடம் கொடுங்கள். நான் இது உண்மையான சிலையா என்று சொல்கிறேன் என்றார். அவ்வாறே உடையும் தரப்பட்டது. வாங்கிய உடையை பக்தியோடு கண்ணில் ஒற்றிக்கொண்டு துணியைப் பிழிந்து அந்த நீரை பருகினார். கஸ்தூரி மணத்தோடு பெருமானின் அருளையும் கொண்டிருந்த அந்த திவ்ய தீர்த்தம் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டையில் இறங்கியது, தன்னை மறந்து  “இதோ நம் பெருமாள்!” என்று கூவினார் அந்த சலவைத் தொழிலாளி.

அவரைத்தொடர்ந்து மக்கள் கூட்டமும் விண்ணதிர முழங்கியது 'நம்பெருமாள்’ என்று. அன்று முதல் திருவரங்க உற்சவப்பெருமாள் 'நம்பெருமாள்' என்று மாறினார். 

அடுத்த கட்டுரைக்கு