Published:Updated:

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

‘எல்லாம் சாயி செயல்!’இ.லோகேஸ்வரி

மீபத்தில் சென்னை, மாம்பலம் - ஷோபனா கல்யாண மண்டபத்தில் ஒரு கண்காட்சி நிகழ்ந்தது. ஏராளமான சாயிபக்தர்கள் கலந்துகொண்ட அந்தக் கண்காட்சிக்கு நாமும் சென்றிருந்தோம்.  ஷீர்டி சாயிபாபா கோயிலைப் போன்ற அமைப்பிலேயே அலங் கரிக்கப்பட்டிருந்த மண்டபம் முழுக்க, ஸ்ரீசாயியின் அபூர்வ படத் தொகுப்புகள் நம்மைச் சிலிர்க்கவைத்தன.

பக்தர்களுடன் ஸ்ரீசாயி உரையாடும் காட்சி, ஸ்ரீசாயி ஊர்வலம், ஸ்ரீசாயிபாபா சமைக்கும் காட்சி, ஸ்ரீசாயியின் தீப்புண்ணுக்குத் தொழு நோயாளியான அடியவர் ஒருவர் சிகிச்சை செய்யும் காட்சி... என அபூர்வ படத்தொகுப்புகளுடன் பிரமாண்டமாகத் திகழ்ந்தது அந்தக் கண்காட்சி. குறிப்பாக, ஸ்ரீசாயிநாதர் சமாதியில் இருந்து எழுந்து வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போன்ற திருவுருவ தரிசனம் மிக தத்ரூபம்!

ஐந்து நாள் கண்காட்சி, ஒவ்வொரு தினமும் அன்னதானம் எனச் சிறப்புற இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார் என்று விசாரித்தால், சுனந்தா என்ற பெண்மணியைச் சுட்டிக் காட்டினார்கள் சாயி பக்தர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

அத்துடன், ஸ்ரீசாயிபாபாவின் மீது சுனந்தா கொண்டிருக்கும் பக்தி குறித்தும், பாபாவின் பெயரால் அவர் செய்துவரும் தொண்டுகள் குறித்தும் அந்த அன்பர்கள் சொன்ன தகவல்கள் நம்மை நெகிழவைக்க, அவரையே நேரில் சந்தித்தோம்.

''ஸ்ரீசாயி சத்சரிதம்... இந்த புத்தகம்தான் எனது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது என்று சொல்லலாம்...''  ஒரு சிறு முன்னோட்டத்துடன், தனக்குக் கிடைத்த அந்த அற்புத அனுபவத்தை விவரித்தார் சுனந்தா.

''ஒன்பது ஆண்டுகளுக்கு முன், எங்க குடும்பம் மிகக் கஷ்டமான சூழலில் இருந்தது. அப்போது குடும்ப நண்பர் ஒருவர் இந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து, 'இதைப் படி. இனி எல்லாமே நல்லதா நடக்கும்’ என்று கூறிச் சென்றார். நானும் ஒரு யுகாதி தினத்தில் படிக்க ஆரம்பித்தேன். அவர் சொன்னது போலவே நல்ல நல்ல மாற்றங்கள் புலப்பட்டன.

ஒரு நாள் இரவு கனவில்... இல்லையில்லை, அதைக் கனவு என்று சொல்லமுடியாது. விழிப்பும் விழிப்பற்றதுமான ஒரு நிலை! என் எதிரில் ஒருவர்... சாயி சரித பாராயணம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கிறேன். 'இந்தப் புத்தகத்தைப் பாராயணம் செய்யும் போது உடைத்த கடலையும் சர்க்கரையும் சமர்ப்பித்தால் என் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, இனி எல்லாமே நல்லதா நடக்குமா?’ என்று நான் கேட்க, எதிரில் இருப்பவரும் 'ஆமாம்’ என்று ஆமோதிக்கிறார். அவ்வளவுதான்... மேனியெங்கும் ஒரு சிலிர்ப்பு! சட்டென்று சுயநினைவுக்கு வந்துவிட்டேன்.

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

மறுநாள், நண்பர் ஒருவரிடம் இந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்து கொண்டேன். 'கடவுளை வழிபடும்போது ஏதேனும் நைவேத் தியம் படைக்கவேண்டும். சாயி சரிதத்தைப் படிப்பதும் ஒரு வழிபாடுதான். நீ சொன்னது போலவே கடலையும் சர்க்கரையும் சமர்ப்பித்து வழிபடு. இதையேதான் பாபாவும் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்’ என்று அறிவுறுத்தினார் அந்த நண்பர். அன்று முதல்

தினமும் சத்சரிதம் படிக்கும்போதெல்லாம் 'உடைத்த கடலையும் சர்க்கரையும்’ வைத்து வழிபட்டு வந்தேன். ராம நவமி அன்று நிறைவு செய்தேன்'' என்றவர், சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

''சிறிது நாட்கள் கழித்து வேறொரு நண்பர், தான் ஷீர்டி செல்வதாகக் கூறி, என்னையும் உடன் வருமாறு அழைத்தார். நான் என் மகளை தனியே விட்டுவிட்டு வரமுடியாது என்று மறுத்தேன். உடனே அவர், 'நீ வா. இனி எல்லாமே நல்லதா நடக்கும்’ என்றார். இதைக் கேட்டதும் சிலிர்த்துப் போட்டது உடம்பு. நான் அன்று கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்ததாக உணர்ந்தேன். மறு பேச்சு இல்லாமல் ஷீர்டிக்குப் புறப்பட்டேன். அங்கு எனக்குக் கிடைத்த ஸ்ரீசாயிநாதரின் தரிசனத்தையும், எனது காணிக்கையை ஏற்று அவர் அருள்செய்த அற்புதத்தையும் மறக்கவே முடியாது!'' என்று  நெகிழ்கிறார் சுனந்தா.

அதன் பிறகு ஸ்ரீசாயி பக்தியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சுனந்தாவுக்கு, பாபாவின் பெயரால் இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் பணிகள் செய்யவேண்டும் என்ற எண்ணம் எழ... ஸ்ரீசாயி சம்பத், ஸ்ரீஷீர்டி சாயிநிவாஸ் எனும் அமைப்புகள் உருவாயின.

''2009ம் வருஷம் குரு பௌர்ணமி தினத்தில் அம்மாஅப்பா ஆசியுடன் ஸ்ரீசாயி சம்பத் அறக்கட்டளையை ஆரம்பித்தோம்.

முதற்கட்டமாக சென்னையில் உள்ள பல குடிசைப் பகுதிகளைத் தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய வசதிகள், சுகாதாரம், குடிநீர் வசதி ஆகியவற்றுடன் அங்குள்ள குழந்தைகள் படிப்பதற்கான உதவிகளையும் செய்தோம்'' என்கிறார் சுனந்தா.

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே...

சாயி பக்தர்களுடன் இணைந்து இவர் நடத்தி வரும் இந்த அமைப்பின் மூலம், ஒவ்வொரு வருடமும் கண் பரிசோதனை முகாம், ரத்த தானம், மருத்துவ முகாம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். அத்துடன், ஏழைப்பெண்களின் திருமணத்துக்கும் உதவி செய்வதுடன், அவர்களின் திருமணத்தையும் இந்த அமைப்பினரே முன்னின்று நடத்தியும் வைக்கிறார்களாம்.

''இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கோயில், கல்யாண மண்டபம் என்றில்லாமல், அவர்களின் திருமணத்தை முதியோர் இல்லங்களிலும், அனாதை ஆசிரமங்களிலும் நடத்துவோம். இத னால் அங்குள்ளவர்களுக்கும் விருந்தளிக்க இயலும். அவர்களும் புதுமணத் தம்பதியரை மனதார வாழ்த்துவார்கள், இல்லையா?''   எனச் சொல்லும் சுனந்தா, சென்னை - சாலிகிராமத்தில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில், மாலை வேளையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களுக்குத் தொடர்ந்து உணவளிப்பது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

இதுமட்டுமின்றி, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக, 'ஸ்ரீஹயக்ரீவர்’ 'ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி’ ஹோமங்களையும், மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளையும் அறக் கட்டளை அமைப்புகள் மூலம் நடத்துகிறார்களாம். அதேபோல், மாணவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியையும் கற்பிக்கிறார்கள். அறக்கட்டளை இன்றி தனிப்பட்ட முறையில் தினமும் ஸ்ரீசாயியின் மகிமைகளை நண்பர்களிடம் எடுத்துச் சொல்வது, அவரது லீலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது என்று தொடர்கிறது இவரது திருப்பணி.

''மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள். நானும், சக மனிதர்களுக்குச் செய்யும் பணி அந்த பாபாவையே சென்றடையும் என்ற நோக்கிலேயே எனது இந்த ஜென்மத்துக் கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன்'' என்று கூறும் சுனந்தா, விரைவில் மலேசியாவுக்குப் பறக்கப் போகிறார்.

அங்குள்ள அன்பர்கள் ஸ்ரீசாயி பாபாவுக்காக நிகழ்த்தும் பிரமாண்ட விழாவில் பங்கேற்க இவரையும் அழைத்திருக்கின்றனர். முதலில் பார்வையாளராக வரும்படி அழைத்தவர்கள், பின்னர் இவரது பணிகளை அறிந்து பிரமித்து, இவரைக் கெளரவிக்கும் வகையில் சிறப்பு விருந்தினராக வந்து கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்களாம்.

இதுகுறித்துப் பாராட்டினால், அவசரமாக மறுத்து, ''எல்லாம் பாபாவின் செயல். அவரது கட்டளை..!'' என்று புன்னகைக்கும்  சுனந்தாவுக்கு ஓர் ஆசை! 'விரைவில், ஸ்ரீஷீர்டி சாயி அறக்கட்டளை மூலம் பாபாவுக்கு அழகான கோயில் கட்டவேண்டும்’ என்பதே அது.

பாபாவின் விருப்பத்தை இவர் நிறைவேற்றி வருகையில், இவரது விருப்பத்தை மட்டும் அந்தச் சாயிநாதர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவாரா என்ன?

நிச்சயம் ஸ்ரீசாயி தேடி வந்து கோயில் கொள்வார்... சுனந்தா விரும்பும் இடத்திலும், அவர் மூலம் நம் மனத்திலும்!

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்