Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 19

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

கத்குரு ஆதிசங்கரரின் அவதார தலமான காலடி எங்கே  உள்ளது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியாத காலகட்டத்தில், ஸ்ரீசச்சிதானந்த சிவ அபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள், அந்த முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். எப்படியாவது அந்த முயற்சியில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு இருந்தது. ஸ்வாமிகளின் குருபக்தியானது அதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அத்தகைய ஒரு வாய்ப்புதான், ஸ்வாமிகளை சர் கே.சேஷாத்திரி ஐயர் தரிசிக்க நேர்ந்ததும்கூட!

பாலக்காட்டைச் சேர்ந்தவரான சேஷாத்திரி ஐயர், ஸ்வாமிகளை தரிசிக்க வந்தபோது, தம்முடைய விருப்பத்தை அவரிடம் வெளியிட்ட ஸ்வாமிகள், அதற்கு அவரால் எந்த வகையிலாவது உதவ முடியுமா என்றும் கேட்டார். ஸ்வாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த சேஷாத்திரி ஐயர், “ஸ்வாமிகளின் ஆக்ஞையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தது நான் செய்த பாக்கியம். எப்படியும் தங்களுடைய சங்கல்பத்தை நிறைவேற்ற, என்னால் ஆன முயற்சிகளைச் செய்கிறேன்” என்று பவ்வியமாகக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, ஸ்வாமிகளிடம் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட சேஷாத்திரி ஐயர், திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களுடைய உதவியால், ஸ்ரீஆதி சங்கர பகவத்பாதரின் ஜன்ம பூமியான காலடி க்ஷேத்திரத்தை கண்டுபிடித்து, உரிய அடையாளங்களாலும் ஆவணங்களாலும் அதை உறுதிப்படுத்திக்கொண்டார். இதுபற்றிய விவரங்களை சற்றும் தாமதப்படுத்தாமல், உடனே சிருங்கேரிக்கு வந்து, ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
துங்கா நதி தீரத்தில்... - 19

உடனடியாக காலடி க்ஷேத்திரத்துக்கு வரும் விருப்பமும் ஆர்வமும் ஸ்வாமிகளுக்கு இருந்தாலும், அதற்கான அவகாசம் இல்லாத படியால், மிகுந்த பாண்டியத்தியமும், வாக்கு வன்மையும், எல்லாவற்றுக்கும் மேலாகத் தம்மிடத்தில் விசேஷ பக்தியும் கொண்டிருந்த நடுக்காவேரி பிரம்மஸ்ரீ ஸ்ரீநிவாச சாஸ்திரிகளை அழைத்து, காலடி க்ஷேத்திரத்துக்குச் செல்லும்படி ஆக்ஞை பிறப்பித்தார்.

ஆசார்ய ஸ்வாமிகளின் அவதார தினமாகிய வைகாசி மாத வளர்பிறை பஞ்சமி தினத்தில், சுற்றுப்புறங்களில் உள்ள ஸ்ரீமடத்து சிஷ்யர்களைச் சேர்த்துக்கொண்டு, பூர்ணா நதி தீரத்தில் ஜகத்குரு ஆசார்யருக்கு விசேஷ பூஜை, உபந்நியாசம், பிராம்மண ப்ரீதி போன்றவற்றை நடத்துவதுடன், ஜன்மோற்ஸவம் நடத்துமாறும் கூறினார். அதேபோலவே, ஸ்ரீநிவாச சாஸ்திரிகளும் சிரத்தையுடன் செய்துவரலானார். இப்படியாகப் பல வருஷங்கள் நடைபெற்று வந்தன.

இதற்கிடையில் கே.சேஷாத்திரி ஐயர், ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் இருவரும் இறைவனடி சேர்ந்து விட்டனர். ஆனாலும், ஸ்வாமிகள் தம்முடைய முயற்சியை விட்டுவிடவில்லை.

ஸ்வாமிகளின் பரிபூரண அன்புக்குப் பாத்திரராக இருந்தவரும், மைசூர் சமஸ்தானத்தின் மந்திராலோசனை சபையில் இடம்பெற்றிருந் தவருமான வி.பி.மாதவராவ், திருவனந்தபுரம் மஹாராஜாவினால் அழைக்கப்பெற்று, அவரு டைய சமஸ்தானத்தில் திவானாக இருந்தார்.

துங்கா நதி தீரத்தில்... - 19

இதை நினைவுகூர்ந்த ஸ்வாமிகள், தம்மிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த மைசூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ராமச்சந்திர ஐயரையும், ஸ்ரீமடத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீகண்ட சாஸ்திரிகளையும் திருவனந்தபுரத்துக்கு அனுப்பிவைத்தார். அவர்களும் திருவனந்தபுரம் சமஸ்தானத்துக்குச் சென்று, மஹாராஜாவையும் திவானையும் சந்தித்து, தாங்கள் வந்த விஷயத்தைத் தெரிவித்தனர். அப்போது, நம்முடைய தேசம் அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்தபடியால், அவர்களால் ஸ்வாமிகளின் எண்ணத்தை நிறைவேற்ற முடியவில்லை.

ஆனால், ஸ்வாமிகளின் எண்ணத்தில் இருந்த உறுதியும், அவர் கொண்டிருந்த குருபக்தியும், அவருடைய எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தன.

ஆம்... அப்போது நம் நாட்டில் பிரிட்டிஷ் ராஜ பிரதிநிதியாக இருந்த கர்ஸன் பிரபு, ஒரு சட்டம் கொண்டு வந்தார். அதன்படி, நம் தேசத்தில் உள்ள புராதனமான சிற்பங்கள் மற்றும் புனித ஸ்தலங்களை அந்தந்த சமஸ்தானமே பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம்.

துங்கா நதி தீரத்தில்... - 19

அதனால், ஜகத்குரு ஆதிசங்கரரின் ஜன்ம பூமியும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் பாதுகாப்பில் வந்துவிட்டன. அப்படி தம்முடைய சமஸ்தானத்துக்கு உட்பட்டுவிட்ட ஆசார்யரின் ஜன்ம பூமியை, ஸ்வாமிகளுக்கே வழங்கிவிட்டார் மஹாராஜா. அத்துடன் இல்லாமல், அந்தத் தலத்தைச் சுத்தப்படுத்தி, அங்கே ஜகத்குருவுக்கு ஆலயம் அமைப்பதற்காக அன்றைய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் பணமும் கொடுத்தார். இந்த விஷயங்கள் எல்லாம் சிருங்கேரியில் இருந்த ஸ்வாமிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப் பட்டன.

மிகுந்த சந்தோஷம் அடைந்த ஸ்வாமிகள், காலடிக்கு விஜயம் செய்யத் திருவுள்ளம் கொண் டார். அதற்குத் தம்முடைய குருநாதரிடமும் ஸ்ரீசாரதையிடமும் உத்தரவு கேட்டதில், சாதகமான பதிலே கிடைத்தது. அதன்படி, 18.1.1907 அன்று காலடிக்குப் பயணமாக முடிவு செய்த ஸ்வாமிகள், அதற்கு முன்னதாக ராமச்சந்திர ஐயரிடம், காலடியில் ஆலயம் நிர்மாணிக்கும் பொறுப்பை ஒப்படைத்து, யந்த்ரம் மற்றும் விபூதி பிரசாதங்களை காலடிக்கு அனுப்பிவைத்தார்கள்.

தாம் பயணத்துக்குக் குறிப்பிட்டிருந்த நாளில், நரஸிம்ம வனத்தில் இருந்து புறப்பட்டு, வடகரையில் அமைந்திருந்த தம்முடைய குருநாதரின் அதிஷ்டானத்துக்கு வந்து உத்தரவு பெற்றுக்கொண்டு, பின்பு ஸ்ரீசாரதாம்பாள் ஆலயத்துக்கு வந்து அம்பிகையை வழிபட்டார்.

அங்கிருந்து புறப்படுவதற்கு ஸ்வாமிகளுக்குத் தயக்கம் ஏற்பட்டது. காரணம், அப்போதுதான் சாரதாம்பாள் ஆலயத்தைக் கற்கோயிலாக மாற்றத் திருவுள்ளம் கொண்டிருந்தார் அவர். பின்னர் ஒருவழியாக மனதைத் தேற்றிக்கொண்டவராக அஸ்திவாரக் கல்லை எடுத்து பூஜித்து, தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஸ்தபதிகளிடம் பிரசாதங்களுடன் கொடுத்து ஆசிர்வதித்து, திருப்பணிகளைத் தொடங்கும்படி உத்தரவு கொடுத்துவிட்டுக் காலடிக்குப் புறப்பட்டார்.

ஸ்ரீஜகத்குருவின் மூர்த்தத்தையும் ஸ்ரீசந்திர மெளலீசுவர மூர்த்தியையும் தங்கப் பல்லக்கில் வைத்துவிட்டு, தாம் நடைப்பயணமாகவே காலடிக்குப் புறப்பட்டார். ஆனாலும், அவரால் அப்படி உடனே புறப்பட்டுவிட முடியவில்லை.

என்ன காரணம்..?

- தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி,

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்