மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

அறப்பணிகள்...பொதுநலமா? சுயநலமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

?ஆன்மிகமோ அதற்கு எதிர்த் தரப்போ... இன்றைக்கு பொதுத் தொண்டு என்ற பெயரில் சுய கருத்துகளே மக்களிடம் திணிக்கப்படுகின்றன. மக்கள் நலன் என்பதைவிடவும் சுயநலமே மேலோங்கி இருக்கிறது. ஆக, தத்துவங்களில் எதை ஏற்பது என்ற குழப்பத்தில் தவிக்கிறான் சாமானியன். ஆன்மிக அமைப்புகள் அல்லது சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? தனி மனிதனை மேம்படுத்த என்ன வழி?

- கே.பாலசுப்ரமணியன், திருச்செங்கோடு

முதல் கோணம்...

லோகாயத வாழ்க்கையில் இருப்பவன் ஆன்மிகத்தை எட்டிப் பார்ப்பான். ஆன்மிக வாழ்க்கையில் இருப்பவன் லோகாயதத்தை ஏற்பான். முற்றும் துறந்த துறவி சமூக சேவையை ஏற்பார். ஆடம்பர வாழ்வில் திளைத்தவன், ஆன்மிக சேவையில் தன்னை இணைத்துக்கொள்வான். ஆடம்பர வாழ்க்கை அலுப்புத் தட்டும்போது, ஒரு மாறுதலுக்காக ஆன்மிகத்தை அரவணைப்பார்கள். அதேபோல், ஆன்மிகத்தில் சோர்வு ஏற்படும்போது, ஒரு மாறுதலுக்காக லோகாயதத்தில் இணைவர். இப்படித் தடுமாற்றம் அடைந்த இரண்டு சமூகமும் மாறுபட்ட சிந்தனையாளர்களை தன் வசம் ஈர்த்துக்கொள்ளும். இந்தத் தடு மாற்றமும் அவர்களின் சமூக அங்கீகாரத்துக்குப் பயன்படும்படி மாறிவிடும்.

கேள்வி - பதில்

? லோகாயத வாழ்வில் சலிப்பு அடைந்தவன் ஆன்மிகத்தை நாடுவான்; சரி. துறவிகள் மீண்டும் லெளகீகத்துக்கு மாறுவார்களா, என்ன?

துறவியின் லட்சியம் திசைதிருப்பப்படும் போது, பொது அறத்தில் ஈடுபடத் துணிந்து, தனது பெருமைக்கு ஊக்கம் அளிப்பதில் முற்றுப்பெறுவார்கள். ஆடம்பர வாழ்வில் கால் ஊன்றியவன், ஆன்மிகத்தை ஊன்றுகோலாக வைத்து, தனது பெருமையின் விரிவாக்கத்தில் இணைவான். எல்லாம் துறந்த துறவி, சமூக சேவையில் இறங்கி, விட்டுப்போன பற்றுதலை ஒட்ட வைத்துக்கொள்வார் என்று சொல்ல வருகிறோம். அதுபோல், லோகாயத வாழ்வில் பலபேருடனான பற்றுதலில் விளைந்த அனுபவம் திகட்டிப்போன சூழலில், பற்றற்ற ஆன்மிகத்தை வரவேற்பார்கள்.

ஆக, இரு தரப்பும் சிந்தையில் தெளிவு பெற்று ஒன்றைத் துறந்து மற்றதை ஏற்க வில்லை. ஆன்மிகவாதி ஆன்மிகம் கசக்கும் போதும், லோகாயதத்தில் இருப்பவன் அதில் ஆர்வம் குறையும்போதும் வந்த
இடத்துக்கே திரும்பிவிடுவார்கள். கொள்கைப் பிடிப்பு இல்லாத இருவரும் சமுதாய அந்தஸ்தை எட்டுவதற்கு, சூழலுக்கு உகந்த வகையில் செயல்படுவார்கள். அப்பட்டமான சுயநலவாதிகளாக இருக்கும் நிலையில், லோகாயதத்தில் ஈட்டிய பொருளை கொடை வழங்க மனம் வராது. அதேபோல், ஆன்மிகவாதிக்கும் மக்களின் அஞ்ஞானத்தை அகற்றி, அவர்களின் வழிகாட்டியாக மாற இயலாது. பொதுவாக செல்வந்தனுக்கு இந்த உலகமும், ஆன்மிக வாதிக்கு மறு உலகமும் ஆனந்தமயமாகும். ஆனால், இரு துறைகளிலும் தடுமாற்றம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த இரண்டு உலகங்களும் இருக்காது. இவர்கள், லோகாயதத்தில் சிறப்புற்றிருந்தாலும், ஈட்டிய செல்வத்தை அனுபவிக்க நேரம் இருக்காது. ஆன்மிகத்தில் இருந்தாலும், சமூகப்பற்றுடன் வாழ நினைப்பதால், மறு உலகம் இருக்காது. அக்கரைக்கு இக்கரைப் பச்சை!

? ஆன்மிகவாதிகள்- லோகாயதத்தில் நிலை பெற்றவர்கள் இரு தரப்பையும் எப்படிச் சமமாக பாவிக்கிறீர்கள் என்று புரியவில்லையே?

துறவிக்கும் ஸமாதி மண்டபம் உண்டு. அவர்களது திருவுருவத்துக்கு அபிஷேக-ஆராதனைகள், நித்ய பூஜைகள் உண்டு. ஸமாதியில் பஜனை, தியானம், வழிபாடு, அன்னதானம் எல்லாம் உண்டு. லோகாயத வாழ்க்கையில் உயிர் நீத்தவருக்கும் மணி மண்டபம், பிறந்த நாள், இறந்த நாள், பஜனை, கொண்டாட்டம், பட்டி மன்றம், அன்னதானம், அவரது திருவுருவத்துக்கு மாலை மரியாதைகள், அவர் நினைவாக  நிதியுதவி அத்தனையும் உண்டு. இருதரப்பிலும் அறக்கட்டளைகள், அவற்றின் மூலம் சமூக சேவை, பொதுநலத் தொண்டு... இப்படி நிரந்தர ஸ்தாபனங்கள் செழிப்புற்று விளங்கும்.
அவர்களது வாழ்க்கை வரலாறு, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், அவர்களால் பயன்பட்ட மக்கள்- சமூகங்களின் பெருமைகள் யாவும் பல்வேறு மொழிகளில் - நூல்களில் விரிவாக்கம் பெற்று, சமுதாயத்துக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விஷயங்களாகப் பெருமை பெற்று விடும். காலப்போக்கில் இவர்கள் அதிசய மனிதர்களாக, தெய்வமாக, ஆபத்பாந்தவராக, அனாதரக்ஷனாக சித்திரிக்கப்பட்டு... பத்து அவதாரங்கள் எடுத்த பரந்தாமனையும், சிக்கலில் மாட்டிக்கொண்டவரைச் சடுதியில் விடுவித்து காக்கும் பரமேஸ்வரனையும் மறந்து, இவர்களை வழிபடுவதை பிறவிப் பயனாக ஏற்கும் அளவுக்கு மக்கள் சிந்தனை மாறிவிடும்.  பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்று அறக்கட்டளையைச் செழிப்பாக்கி தனி மனித வழிபாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்கள். இரு பிரிவினரும் தங்களது பெருமையை வளர்த்துக்கொள்ள அப்பாவி மக்களைச் சரணடைவார்கள்.

? தனி மனித துதி அதிகரிக்கும் என்கிறீர்கள். சரி! அப்படியே வைத்துக்கொண்டாலும், சமூகத்துக்கு பலன் அளித்தால், ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு?

மக்கள் மாறுபட்ட சிந்தனைகளை ஏற்ப வர்களில் (பின்னருசீர்ஹிலோக:) லோகாயதத்தில் இணைபவர்களும் உண்டு; ஆன்மிகத்தில் இணைபவர்களும் இருப்பார்கள். ‘உண்டு’ என்றால் ‘இல்லை’ என்ற வாதமும் முளைக்கும்; லோகாயதம் என்றால் ஆன்மிகமும் தோன்றும். எதிரிடையான சிந்தனைகள் என்பவை என்றென்றும் உண்டு. எல்லா சிந்தனைகளையும் ஏற்க வைப்பதும், எதிர்க்க வைப்பதும் அவரவர் சுயநலத்தின் பங்காக அமையும். அலசி ஆராய்ந்து, சீர்தூக்கி எடைபோட்டு ஒரு கருத்தை ஏற்பதும், துறப்பதும் இன்றைய சூழலில் அரிது. ஆசைகளின் உந்துதலில் ஆராய்ச்சிக்கு இடம் அளிக்காமல் கருத்தை ஏற்பதும் துறப்பதும் நிகழ்ந்துவிடும்.

சுயசிந்தனையில் முன்னேற நினைக்கும் மக்களை திசைதிருப்பி, இருபிரிவினரும் தங்கள் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்து விடுகிறார்கள். ஆறாவது அறிவு செயல்பட்டால், உண்மைக் கருத்தை அடையாளம் கண்டு மகிழ லாம். ஆட்டு மந்தை போல் பிறரது கருத்தைப் பின்பற்றி இன்னலில் சிக்கித் தவிப்பது தவறு. புத்தன் சுய சிந்தனையில் தத்துவ விளக்கம் பெற்றார். ஆதிசங்கரர் சுய சிந்தனையில் தத்துவ விளக்கம் பெற்று, உண்மையை உலகுக்கு அறிமுகம் செய்தார். இப்படி, சுயசிந்தனை வளம் பெற்றால், உண்மையை அறிந்து மகிழலாம்.

கேள்வி - பதில்

? எவரையும் பின்பற்ற வேண்டாம் எனும்போது, தனி மனிதன் தெளிவு பெறுவது எங்ஙனம்?

பிறக்கும்போது சுதந்திரமாக வாழும் உரிமை பெற்ற மனிதன், பிறர் சிந்தனைக்கு அடிமையாவது தவறு. ஸனாதனத்தின் கோட்பாடுகள் திறந்த புத்தகமாகத் தென்படும்போது, பிறரது சிந்தனைகளை ஆராயாமல் ஆட்கொள்வது தகாது. ஆறாவது அறிவு பெற்றவன், எந்தச் சிந்தனை சிறப்பு என்று சுயமாக ஆராய வேண்டும். சுணக்கமுற்று, பிறரது சிந்தனையில் இணைவதால், நாம் சொன்ன இரு பிரிவினருக்கும் வாழ வழி பிறக்குமே தவிர, நமக்கு அதனால் பலன் இல்லை. மக்களுக்குக் கல்வி அறிவைப் புகட்டி, சுய சிந்தனையை ஊக்குவித்து, சொந்தக் காலில் நின்று வாழ்க்கை வளத்தைச் சுவைத்து மகிழப் பரிந்துரைக்க வேண்டும். பண்டைய முனிவர்கள், ரிஷிகள், அரசர்கள் அனைவரும்  சுய சிந்தனையில் முன்னேறியவர்கள். மக்களுக்கு சித்தனை வளம், மன வளம் வளர ஒத்துழைத்தால் போதும்; அவர்கள் தானாகவே தங்களை உயர்த்திக்கொள்வார்கள்.

இரண்டாவது கோணம்

ங்களின் கணிப்பும் கருத்துகளும் தவறு. லோகாயதமும் வேண்டும்; ஆன்மிகமும் வேண்டும். ஒன்று மற்றொன்றை முழுமையாக்கும். பார்வைக்கு எதிரிடையாகத் தோன்றினாலும், இரண்டும் இணைந்தால்தான் முழுமையை எட்ட இயலும்.

? பொத்தாம் பொதுவாகக் கூறினால் எப்படி? தகுந்த சான்றுடன் உங்கள் கருத்தை முன்வைக்கலாமே?

ஆதிசங்கரரின் குரு கோவிந்த பசுவத்பாதர் (கோவிந்த பிஷு), ‘ரஸஹ்ருதயம்’ என்ற ஆயுர்வேத நூலை அளித்தவர். ஜீவன் முக்தனாகத் திகழ (லோகாயத வாழ்வில் இருப்பவன், அப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையிலேயே எல்லாத் துயரங்களில் இருந்தும் விடுதலை பெற்று ஆனந்தத்தில் திளைத்தல்) உடலையும் உள்ளத்தையும் பாங்கான வளர்ச்சியில் செழிப்பாக்க முயற்சிக்க வேண்டும். அதாவது, லோகாயதம் ஆன்மிகத்தின் அஸ்திவாரம்.

சிந்தனை வளம் மனத்தெளிவில் உயர்வை எட்டும். உடல் சுகாதாரம் சிந்தனை வளத்துக்கு ஒத்துழைக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். ஆன்மிகத்தை எட்ட ஆரோக்கியம் வேண்டும். ஆக, இரண்டும் எதிரிடையானவை அல்ல. வெப்பமும் தட்பமும் இணைந்தால்தான் உலகம், வாழ்க்கை, சிந்தனை அத்தனையும் உருவாகும். இரண்டுமே என்றைக்கும் சிரஞ் ஜீவியாக இருக்கும் தத்துவங்கள் ஆகும்.

உலகம் இயங்க லோகாயதம் வேண்டும்; அமைதியைப் பெற ஆன்மிகம் வேண்டும். ஒன்று உடல் சார்ந்தது; மற்றது மனம் சார்ந்தது. இரண்டும் இணைந்தால் (உடல், மனம்) மட்டுமே இயக்கம் இருக்கும். அந்த வகையில், இரு தரப்பினரும் இரு பகுதிகளையும் நிறைவு செய்கிறார்கள். பொதுத் தொண்டில் இறங்கியவர்கள், தங்களது பணி தொடர்ந்து நடைபெற ஏதுவாக, தங்களது வாழ்க்கையைச் செம்மையாக்கி செல்வத்தைப் பெற்றுக் கொள்வது எப்படித் தவறாகும்? அவர்கள், தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்படுகிறார்கள் என்ற கோணலான சிந்தனை, பொறாமையின் வெளிப்பாடு என்றே சொல்லவேண்டும். மக்களாட்சியில்- அமைச் சர்கள் வரிப் பணத்தில் தங்களின் ஆடம்பர வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்ல இயலுமா?

? பணக்காரன் பொதுத் தொண்டில் ஈடுபடலாம். அதற்காக, தான் சார்ந்திருக்கும் பொது அறத்தை பணம் ஈட்டும் வழியாகப் பயன்படுத்துவது தவறு இல்லையா?

எல்லோரையும் அப்படிச் சந்தேகிக்கக்கூடாது. ஒருவர் பொதுத்தொண்டில் இறங்கும் நிலையில், அதற்குத் தகுந்தாற்போன்று அவர்களுக்குப் பாதுகாப்பும் பொருளாதாரமும் வேண்டுமே! தங்களின் தொண்டு தொடர்ந்து நடைபெற, அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவு செய்வது கடமையாகும். ஆகவே, மக்களின் செல்வத்தில் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சிறப் பித்துக் கொள்கிறார்கள் என்று நினைப்பது முற்றிலும் தவறு.

காட்டில் வாழும் விலங்கினங்களில் ஒன்றுக் கொன்று பகை உண்டு. கீரி- பாம்பு, மான்- சிங்கம் என்று பகை உண்டு என்றாலும், எல்லா விலங்கினமும் காட்டில் ஒன்றாகவே வாழ்க்கையை நடத்தும். இரண்டும் கலந்த விலங்கினங்கள் காட்டை பாதுகாக்கின்றன. காடு அவர்களைப் பாதுகாக்கிறது. இப்படி, ஒன்று மற்றொன்றுக்கு நிறைவாகச் செயல்படுகிறது. அப்படித்தான் லோகாயதமும், ஆன்மிகமும்.

 ஏழ்மையை ஒட்டு மொத்தமாக அகற்றிவிட முடியாது. ஏழையும் பணக்காரனும் என்றென்றும் இருப்பார்கள். உலகம் அழியும்வரை இந்த நிலை தொடரும். செல்வந்தரின் செல்வத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தால், ஏழை செல்வந்தராவான்; செல்வந்தன் ஏழையாவான். அப்போதும் ஏழ்மை அழியாது; இடம் மாறும். அவ்வளவுதான்! ஒடுக்கப்பட்டவனை முன்னேற்றும் நோக்கில், முன்னேறியவனை ஒடுக்கும் நிலையில், முன்னேறியவன் ஒடுக்கப்பட் டவனாக மாறுவான். நிலைமை இடம் மாறி இருக்குமே தவிர, ஒடுக்குதலை ஒழிக்க இயலாது. ஆக, லோகாயதம், ஆன்மிகம் இரண்டிலும் களங்கம் கற்பிப்பது தவறு. தொண்டில் இறங்கத் தகுதியில்லாதவர்கள், அவர்களின் பெருமையில் பொறாமை கொண்டு குறை காணும் போக்கு ஏற்கத்தக்கது அல்ல. தன்னால் எட்ட முடியாத ஒன்றை, மற்றவர்கள் எட்டிப்பிடிப்பதைக் காணும் மனம் வேறு வழியின்றி அதைக் குறை கூறும். இந்த நிலை மாற வேண்டும்.

மூன்றாவது கோணம்

ங்களது சிந்தனை ஒருதலைப்பட்சமானது.மக்கள் வளம் பெற்று மகிழ, நிரந்தரத் தீர்வை அளிக்கவேண்டும். மாறாக, இரு தரப்பும் தத்தமது சிந்தனையில் மக்களை ஈர்த்து, திசைதிருப்புவது தவறாகும். இரண்டிலும் இருக்கும் வேறுபாட்டைப் பகையாக மாற்றி, இரண்டில் ஒன்றை ஏற்கவைத்து மக்களைத் தவறான வழியில் செல்லவைப்பது, தொண்டு ஆகாது.

‘உடல்தான் ஆன்மா; உடல் அழிந்தால் ஆன்மாவும் அழிந்துவிடும். ஆகையால், லோகா யதம்தான் இருப்பது. ஆன்மிகம் இல்லாத ஒன்று’ என்று விவரித்து ஒருவர் ஆன்மிகத்தைத் துறக்க வைக்கிறார். ‘உடல் அழிந்துவிடும்; ஆன்மா அழியாது. ஆத்மாவை அறிந்தால் ஆனந் தம் உண்டு. உடம்பு, உலகம் அத்தனையும் தோன்றியும் மறைந்தும் காணப்படும். அதோடு துன்பமும் தொடரும். துயரம் தொடாத இன்பம் வேண்டுமானால் ஆன்மிகத்தை ஏற்கவேண்டும்’ என்று லோகாயத்தைத் துறக்க வைப்பார் மற்றொருவர். இப்படி, சொல் வளத்தால் இரண்டில் ஒன்றை ஏற்க வைக்கிறார்கள். மக்களும் அரைகுறையாகவே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்.

? சரி! இதற்கு நீங்கள் சொல்லும் தீர்வுதான் என்ன?

மக்களின் சிந்தனை வளத்தைப் பெருக்கி, இரு தத்துவங்களையும் அவர்களே ஆராயும் திறமையை உண்டு பண்ணி, இரண்டில் ஒன்றை ஏற்பதையும் துறப்பதையும் அவர்களது முடிவுக்கே விட்டுவிடவேண்டும். அதை விடுத்து, அவர்களின் சிந்தனையில் குறுக்கிட்டு, தங்களுடைய சிந்தனையை அவர்களிடம் இணைக்கும் முயற்சி நல்லதொரு வழிகாட்டுதலாக இருக்காது. வேதம் வேதாந்தம், மீமாம்சை, ஸாங்கயம், யோகம், ந்யாயம், வைசேஷிகம் ஆகிய அத்தனையும் மாறுபட்ட சிந்தனையின் தகவல்கள். இந்த விஷயங்களைக் கண்டு சொன்னவர்கள் எவரும் மக்களைத் தங்களின் சிந்தனைக்கு வசப்படுத்த முயற்சிக்கவில்லை. மக்கள் சிந்தனைக்குத் தகவலை அளித்தார்கள். ஆறறிவு பெற்றவர்கள், தங்களது சுய சிந்தனையில் அவற்றை ஆராய்ந்து கடைப்பிடித்தார்கள்.

உலகில் பிறந்தவன் பரிணாம வளர்ச்சியடைய லோகாயதம் ஒத்துழைக்கும். மனவளர்ச்சி ஏற்பட்டு சிந்திக்கும் திறன் வளரும்போது, அவன் ஆன்மிகத்தையும் பெற்றுவிடுவான். இப்படி இரண்டையும் பாங்காக அளித்து, அவர்களை நேர்வழியில் திருப்பிவிடாமல், இருசாராரும் தங்களின் சிந்தனையில் மனிதனை முடக்கிவைப்பது எப்படித் தொண்டாகும்?

? எனில், தொண்டு என்கிற போர்வையில் இருசாராரும் சுய விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள் எனச் சொல்ல வருகிறீர்களா?

பெரும்பாலும் அப்படித்தான். லோகாயதமும் ஆன்மிகமும் ஒன்றை ஒன்று மோதி, ஒருநாளும் வெற்றி பெறவில்லை. வேதம் ஆன்மிகத்தை உயர்வாகச் சொன்னது. பிற்பாடு வந்த பௌத்தம் லோகாயதத்தை உயர்வாகச் சித்திரித்தது. அதற்கும் பின்னர் வந்த சிந்தனைகளும் வெற்றி பெறாமலே வளர்ந்துகொண்டிருக்கின்றன. அறம் உயர்ந்தது என்றாலும், அது அதர்மத்தை எதிர்த்து வெற்றி பெறவில்லை. ‘அறம் வாட்டமுற்று அதர்மம் தலைதூக்கும்போது, நான் தோன்றி அறத்தை விடுவிக்கிறேன்’ என்ற வாக்குறுதி, அறம்-அதர்மம் இரண்டில் எதுவொன்றும் நிரந்தரமான வெற்றியைப் பெறுவது இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு.

அதர்மத்தைத் தெரிந்துகொண்டால் மட்டுமே தர்மத்தின் உருவம் விளங்கும். காலமாற்றத்தில் அந்த இரண்டும் இயல்பில் மாறுபடும். அவை மறையாது; இடம் மாறும். ஒருவனுக்கு ஒருத்தி எனும் கோட்பாடு, ஒருகாலத்தில் அறத்தின் அட்டவணையில் இருந்தது. இன்று விருப்பத்துக்கு இணங்க ஒன்றைத் துறந்து, மற்றொன்றை ஏற்கலாம் என்ற விதி அறத்தின் அட்டவணையில் இடம்பிடித்துவிட்டது.

பிறக்கும்போதே அறிமுகமான லோகாயதம், பரிணாம வளர்ச்சியில் சிந்தனை வளம் பெற்றவு டன் ஆன்மிகத்தை ஏற்கிறது. சிந்தனை வளம் பெறாதவன் லோகாயதத்தை கெட்டியாகப் பிடித் துக்கொள்கிறான். மக்களின் சிந்தனை வளத்தைப் பெருக்க தொண்டு செய்ய வேண்டும். தங்களது சிந்தனையில் அவர்களை இணைத்து தங்கள் வாழ்க்கையை செழிப்பாக்குவது தொண்டு ஆகாது. தற்போதைய சூழலில் ஆன்மிகம்- லோகாயதம் இரண்டிலும் பெரும்பாலும் உள்நோக்கம் இருப்பது தெரிகிறது.

கேள்வி - பதில்

? புராணகால முனிவர்களும் சுயலாபத்துடன்தான் செயல்பட்டார்களா, என்ன?

புராண கால ரிஷிகள், முனிவர்கள் எவரும் வலியவந்து பொதுத் தொண்டில் இறங்கவில்லை. அவர்களது சிந்தனைகள் மக்களை சிந்தனை செய்ய ஊக்குவித்தன. மக்களும் சுய சிந்தனையில் தங்களை முழுமையாக்கிக் கொண்டார்கள். ரிஷிகளும் முனிவர்களும் தங்களது வாழ்க்கையைச் சிறப்பாக்குவதற்காக தொண்டில் இறங்கவில்லை. ராமன் காட்டில் வாழும் நாளில், எந்த முனிவரும் ராமனை நாடி, தங்கள் சிந்தனையை அவனோடு பகிர்ந்துகொள்ள முனையவில்லை. அவர்கள் எல்லோரும் தம்மை அணுகும் நபர்களுக்குத் தத்துவ விளக்கம் அளித்தார்கள். அவரவர் சுயசிந்தனையில் அதை எட்டவைத்தார்கள். அதுவே உண்மையான தொண்டு.

சுதந்திர மனிதனை, ஒருவர் தமது சிந்தனைக்கு அடிமையாக்குவது சுயநலம்தான். ஆகையால், பொது நலனில் அக்கறை இருப்பவர்கள், தான் பெற்ற சிந்தனை வளத்தை மக்களும் பெற வேண்டும் எனும் நோக்கில், மக்கள் எல்லோரும் சிந்தனை வளம் பெறும் வகையில் தொண்டு செய்ய வேண்டும். எனவே, லோகாயதமும் ஆன்மிகமும் தங்களது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

நல்ல தகவல்களை அல்லது தத்துவங்களை மற்றவர்களுக்கு அளிக்கலாம். ஆனால், அதை ஏற்பதும் துறப்பதும் மக்களைப் பொறுத்தது. அந்த உரிமையை அவர்களிடம் விட்டுவிடவேண்டும். மக்களுக்குத் தகவல்களை- தத்துவங்களை ஆராயும் சிந்தனை வளத்தை ஊட்ட வேண்டும். உள்ளதை உள்ளபடி தெரிந்துகொள்ளும் திறமையை ஊட்ட வேண்டும். அதுவரை அவர்களது தொண்டு செயல்பட்டால் போதும். அதை விடுத்து, தங்கள் சிந்தனைக்குக் கூட்டம் சேர்க்கும் முயற்சியில், மற்ற சிந்தனைகளை ஓரம் கட்டி, தனது சிந்தனையை மிகைப்படுத்தி விளக்கம் அளிக்கும்பட்சத்தில்... ஆன்மிகவாதியோ, லோகாயத நபரோ... அவர்களைத் தொண்டு செய்பவராக ஏற்க முடியாது.

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தங்களின் மன வளத்தை வளர்க்க உதவ வேண்டும். அதை விடுத்து, மற்றான் சிந்தனையில் அவர்களது வளர்ச்சியை எட்டவைக்கும் முயற்சி தவறானது. இன்றைக்கு இருக்கும் அத்தனை சமுதாய இன்னல்களுக்கும் மனிதவள– சிந்தனை வளத்தின் குறைபாடும் ஒரு காரணம். மொத்தத்தில், இன்றைக்கு மனிதனை மனிதனாக்கும் தொண்டுதான் தேவை. இலவசமாகத் தரப்படும் மற்றவர்களின் சிந்தனை பலன் அளிக்காது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார்  சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:  'கேள்வி பதில்',  சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.