Election bannerElection banner
Published:Updated:

வேலிருக்க பயமேன்..!

வேல் தரிசனம்..!வி.ராம்ஜி

‘பழநி தைப்பூசத் திருவிழாவா... திருச்செந்தூர் சூரசம்ஹாரமா...’ என்று வியக்கும் அளவுக்கு முருக பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது, அறுபடைவீடு முருகன் திருக்கோயில்.

வாசகர்களின் நலன் கருதியும், உலக மேன்மைக்காகவும் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அறுபடைவீடு முருகன் கோயிலில், கடந்த 23.11.14 அன்று வேல்மாறல் பாராயண பூஜை நடத்தியது சக்திவிகடன்.

23-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பூஜை என்று அறிவித்திருந்தோம். ஆனால் ஆச்சர்யம்..! காலை 7 மணிக்கே  வாசகர்கள் பலரும் வந்துவிட்டார்கள். நேரம் நெருங்க நெருங்க, சுமார் 9 மணி அளவிலேயே மண்டபம் நிறைந்து, வாசலிலும் பக்கவாட்டுப் பகுதிகளிலுமாக வாசகர்கள் நிறைந்திருந்தார்கள்.

வேலிருக்க பயமேன்..!

சக்திவிகடன் வாசகர்களின் நலனுக்கென நடைபெற்ற இந்த வேல் மாறல் பாராயண பூஜைக்காகவென்றே, ஆலயத்தின் உற்ஸவர் முருகப்பெருமானை மண்டப மேடையில் கொண்டு வந்து, அழகுற அலங்கரித்து வைத்திருந்தார்கள். தவிர, பிரமாண்ட வேல் ஒன்றும் வைக்கப்பட்டது. '‘ஞான பூரண சக்திவேல் என்பது இந்த வேலின் பெயர். ஞானமலையில் பிரதிஷ்டை செய்வதற்காக இது இப்போதுதான் தயார் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சக்திவிகடன் வாசகர்கள் முன்னிலையில் இந்தப் புதிய வேலுக்கு பூஜைகள் நடப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு” என்று தனது பேச்சினிடையே குறிப்பிட்டார் எழுத்தாளரும், வேல்மாறல் பாராயண பூஜையை நடத்தித் தந்தவருமான வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். இதில் நெக்குருகிப் போனார்கள் வாசகர்கள்.

பூஜையில், சிறப்பு விருந்தினராக ஓவியர் பத்மவாசன் வந்து கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு!

வேல்மாறல் பாராயண பூஜை குறித்து விரிவாகச் சொல்லி, தன் குழுவினருடன் பூஜையைத் துவக்கினார் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். பின்பு, வேல் வகுப்புப் பாடல்களை குழுவினர் ராகத்தோடு பாட, வந்திருந்த பக்தர்களும் அதை கோரஸாகத் திருப்பிச் சொல்லி, லயித்துப் பாடினார்கள். ஒரு செல்போன் சிணுங்கல் இல்லை; அடுத்தவருடனான சலசலப்பு இல்லை; யாரும் இடையில் எழுந்து செல்லவில்லை. சிறுவர்- சிறுமியர்கூட, சக்திவிகடனுடன் இணைப்பாகத் தந்திருந்த வேல்மாறல் பாராயணப் பாடல்களை வைத்துக் கொண்டு, ஆத்மார்த்தமாகப் பாடியது அனைவரையும் நெகிழ வைப்பதாக இருந்தது.

‘‘இந்த விழாவில் ஒரு முருக பக்தனாகக் கலந்துகொள்வதற்குத்தான் நான் வந்தேன். வந்த இடத்தில், சிறப்பு விருந்தினராக என்னை கெளரவித்திருக்கிறது சக்திவிகடன்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்ட ஓவியர் பத்மவாசன், வேல் மாறல் பாராயண பூஜையின் மகத்துவம் பற்றி விரிவாகப் பேசினார்.

“முருகப்பெருமானைத் துதிக்க வேண்டும் என்றால், எல்லோரும் பொதுவாக என்ன செய்கிறோம்? கந்த சஷ்டி கவசம் பாடுகிறோம். ‘காக்க காக்க கனகவேல் காக்க’ என்று நாம் நன்றாக இருப்பதற்காக சுயநலமாக வேண்டிக் கொள்கிறோம். ஆனால், ‘உலகத்தார் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு, முருகக் கடவுளே... நீதான் வந்து அருள்புரியவேண்டும்’ என்று பிறருக்காகப் பிரார்த்தனை செய்வதுதான் வேல்மாறல் பூஜை.

வேலிருக்க பயமேன்..!

அருணகிரிநாதரைப் படியுங்கள். அவரின் ஒவ்வொரு பாடலையும் மனதாரப் பாடி, கந்தபிரானை வணங்குங்கள். நாமும் நல்லாயிருப்போம். நம் தேசமும் செழிப்பாக இருக்கும்’’ என்று ஓவியர் பத்மவாசன் சொன்னபோது, வாசகர்கள் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி, ஆமோதித்தார்கள்.

வாசகர்கள் அனைவருக்கும் ஓவியர் பத்மவாசன் வரைந்த, மயிலம் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் அழகிய வண்ணப்படம் வழங்கப்பட்டது.

அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் ஆலயத்தின் திரிசுதந்திரர் வினோத் சுப்பய்யர் நமது வாசகர்களுக்காக சிறப்பு பூஜை செய்து  பிரசாதம் அனுப்பி வைத்து உதவினார்.

அறுபடை முருகன் கோயில் நிர்வாகிகள் அலமேலு அருணாசலம், பார்வதி நாச்சியப்பன் மற்றும் டிரஸ்டி சுந்தரம் ஆகியோரும் இந்த பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், இந்த பூஜை சிறப்புற நடந்தேறுவதற்கான சகல உதவிகளையும் செய்து ஒத்துழைத்தார்கள்.

‘‘மக்களுக்கு இதுபோன்ற நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்கிற சக்திவிகடனுக்கு வாசகர்களுடன் நாங்களும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்’’ என்று தனது பேச்சினிடையே நெகிழ்ந்து சொன்னார் சுந்தரம்.

மயிலம் முருகப்பெருமான் புகைப்படம்,  செந்திலாண்டவர் பிரசாதம் ஆகியவற்றுடன் காஞ்சி மகான் படமும், அண்ணாமலையாரின் படமும் வழங்கப்பட்டது.

கோயில் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர் ஓவியர் பத்மவாசன் மற்றும் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் ஆகியோருக்கு பி.என்.பரசுராமன் சக்திவிகடன் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
 
இந்த பூஜைக்கு நாகர்கோவில், திருநெல்வேலி, காரைக்குடி, தஞ்சாவூர், சேலம் எனப் பல ஊர்களில் இருந்தும் வாசகர்கள் வந்து கலந்துகொண்டார்கள். அதேபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் பெயர், ராசி, நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு, தங்களது வேண்டுதலையும் கூப்பனில் அனுப்பி வைத்திருந்தார்கள். அனைவரின் பெயர்களும் படிக்கப்பட்டு, அவர்களுக்காகச் சங்கல்பம் செய்யப்பட்டது. முகம் அறியாத அந்த வாசக அன்பர்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டார்கள், வந்திருந்த வாசகர்கள்.

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் மற்றும் குழுவினர் விமரிசையாக நடத்திய பூஜை, அதில் வாசகர்கள் தாங்களே கலந்துகொண்டு பாராயணம் செய்ததால் அங்கே எழுந்த ஆன்மிக அதிர்வலைகள்... என வாசகர்களின் மனம் மிக நிறைவில் ஆழ்ந்ததை அவர்களின் பிரகாசமான முகமும் கண்களுமே வெளிப்படுத்தின.

வேலிருக்க பயமேன்..!

உமா சங்கர் கேட்டரிங் சர்வீஸ் நடத்திவரும் வேங்கட சுப்ரமணியன், வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் தன் சொந்தச் செலவில் இனிக்க இனிக்க சர்க்கரைப் பொங்கலும், மணக்க மணக்க சாம்பார் சாதமும் வழங்கினார்.

“தொடர்ந்து ஒவ்வொரு மாசமும் இந்த பூஜையை தமிழ்நாடு பூராவும் நடத்துங்க” என்று ஆர்வத்தோடு ஒரு பக்தரும், ‘‘அடுத்து தஞ்சாவூர்ல இந்த பூஜையை நடத்தலாமே..?’’ என்று உரிமையோடு ஒரு வாசகியும், ‘‘எங்க அவினாசிக்கு வந்து நடத்தக் கூடாதா?’’ என்று ஏக்கத்தோடு ஒரு அன்பரும், ‘‘நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டிமக்கள் இருக்கிற காரைக்குடி பக்கம் இந்த பூஜையை நடத்துங்களேன்’’ என்று வேறு ஒருவரும் என, பலரும் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

‘யாமிருக்க பயமேன்?’ என்று புன்னகைக்கிறான் அப்பன் முருகன். நமது வாழ்க்கைப் பயணத்துக்கும் பக்கத்துணையாக இருந்து நம் எல்லோரையும் காத்தருள்வான் வேலவன் என்பதில் சந்தேகமே இல்லை.

வேலுண்டு, வினையில்லை! வேலிருக்க பயமேன்!

- படங்கள்: ஆ.முத்துக்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு