Published:Updated:

சக்தி சங்கமம்

வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் ஸ்ரீநிவாசன்இந்து மதம் கடல்... இதில் கற்றது கையளவுதான்..!

நூற்றாண்டைக் கடந்து நிற்கும் அல்லயன்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் ஸ்ரீநிவாசனை சக்தி சங்கமம் நிகழ்ச்சிக்காக, வாசகர்கள் கவிதா, திவ்யா, ஆனந்த், மணி, ஸ்ரீஜா, கோதை பரத், ரவிச்சந்திரன் ஆகியோர் அவரைச் சந்தித்தனர்.

“இந்த நிறுவனத்தைத் துவக்கிய உங்கள் தாத்தா பற்றிச் சொல்லுங்களேன்” என்று கேட்டார் கவிதா.

சக்தி சங்கமம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘என் தாத்தா குப்புசாமி ஐயர். தஞ்சாவூர்தான் பூர்வீகம். ஒரு பக்கம் ஆன்மிகம், இன்னொரு பக்கம் தேசியம்னு பற்று கொண்டவர். நாலு முழ வேஷ்டியோடு தஞ்சாவூர்லேர்ந்து சென்னைக்கு வந்தவர், ஆரம்பத்துல பேனா, பென்சில், நோட்புக்னு விற்பனை செஞ்சார். இப்ப மாதிரி சைனா பொருட்கள் அதிகம் விற்பனைக்கு வராத அந்தக் காலத்துல, சைனாவிலேருந்து இந்தப் பொருட்களையெல்லாம் இறக்குமதி செஞ்சார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா புத்தகங்கள் பக்கமும் வந்தார். சுதந்திரப் போராட்டத்தைத் தூண்டுற மாதிரியும், ஆன்மிக போதனைகளை எளிமையா சொல்ற மாதிரியும் நிறைய புத்தகங்களை வெளியிட்டார். அவரோட கடவுள் பக்திதான், அவர் ஆரம்பிச்சு வெச்ச பதிப்பகத்தை இன்னும் வழிநடத்திட்டிருக்குன்னு சொல்லணும். தாத்தாவுக்கு அப்புறம் அப்பாவும், பெரியப்பாக்களும். அதன் பிறகு, இப்ப நான். இப்படி ஒரு சங்கிலியா இந்த நிறுவனம் வந்துட்டிருக்கு. தாத்தாபோல, அப்பாபோல நானும் ஆன்மிகத்துல தீவிரமா இருக்கேங்கறதுல, பெரிய ஆச்சர்யம் இல்லை.''

சக்தி சங்கமம்

“தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து உங்களுக்குள் ஆன்மிகத் தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார்?” என்று வாசகி திவ்யா கேள்வி எழுப்பினார்.

‘‘கி.வா.ஜகந்நாதன் ஐயாவைத்தான் சொல்லுவேன். அவரோட எழுத்தும் கருத்தும் சிலேடைப் பேச்சும் சாமானியரையும் சட்டுன்னு ஈர்க்கும். பழைமைக்கும் புதுமைக்கும் பாலமா இருந்தவர் அவர். கந்தபுராணத்தைப் பத்திச் சொல்லும்போது, தடதடன்னு பல உதாரணங்கள் சொல்லிக்கிட்டே போவார். ‘புள்ளி வைத்துப் போட்டால் கோலம்; புள்ளி வைக்காமல் போட்டால் அலங்கோலம்; நேராக நடந்தால் நடை; கோணலாக நடந்தால் அது நடனம். இந்தக் கோணலிலும் ஒரு மாணல் வேண்டும். இந்த மாணலுக்குத்தான் ரிதம் என்று பெயர்...’னு சுவைபட விவரிப்பார் கி.வா.ஜ. இன்னிக்கு இருக்கிற சொற்பொழிவாளர்களுக்கும், உபன்யாசகர்களுக்கும், ஆன்மிகத் தேடல் கொண்ட அன்பர்களுக்கும் கி.வா.ஜ.வோட எழுத்துக்கள் வெல்லக்கட்டி. ஆன்மிகத்தின் மேல நாட்டமும் கடவுள் மேல பக்தியும் எனக்குள்ளே அதிகரிச்சதுக்கு கி.வா.ஜ-தான் காரணம். திருமுருகாற்றுப்படைக்கு ரொம்ப எளிமையா, ‘வழிகாட்டி’ன்னு அர்த்தம் கொடுத்திருப்பார் அவர். சொல்லப்போனா அவரோட எழுத்துகள்தான் எனக்கு வழிகாட்டி!''

சக்தி சங்கமம்

‘‘உங்களுடைய வழிபாட்டு முறை என்ன?’’ என்று வாசகர் மணி கேட்டார்.

‘‘வழிபாடு, பூஜைங்கறதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். அவ்வளவு நேர்த்தியா பண்றதில்லை நான். ஆனா, பூஜையறையில கண் மூடி உட்கார்ந்து, கொஞ்ச நேரம் அமைதியா இருக்கிறது ஒரு மலர்ச்சியைக் கொடுக்கும். இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கேன். மகா பெரியவா மேல மிகப் பெரிய பக்தி உண்டு. இந்த வாழ்க்கை முன்னோர்களோட ஆசீர்வாதம்; கடவுளோட பெருங்கருணை!''

“கோயிலுக்குச் செல்வதுண்டா?’’ என்று வாசகி் கோதை பரத்  கேள்வி எழுப்பினார். `அட... நானும் இதைத்தான் கேக்க நினைச்சேன்' என்றார் வாசகி ஸ்ரீஜா.

‘‘மயிலாப்பூர்ல இருக்கிற என்கிட்ட இந்தக் கேள்வியைக் கேக்கறீங்களே! மனசுல ஏதாவது சந்தோஷம்னாலும் சரி, வருத்தம்னாலும் சரி... நேரா கற்பகாம்பாள் சந்நிதிக்குப் போய், ‘ஒரே குழப்பமா இருக்கு. நீதான் சரிபண்ணித் தரணும், தாயே!’னு வேண்டிப்பேன். மனசு நிம்மதியாயிடும். கற்பகாம்பாள், எனக்கும் என் குடும்பத்துக்கும் இஷ்ட தெய்வம்; குலதெய்வம்!’’

சக்தி சங்கமம்
சக்தி சங்கமம்

“மகான்கள் பற்றிச் சொல்லுங்களேன்..?” என்று வாசகர் ரவிச்சந்திரன் கேட்டார்.

‘‘ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் சுவாமி விவேகானந்தரும் மிகப்பெரிய தீர்க்கதரிசிகள். அவங்களோட அருளுரைகளும் பொன்மொழிகளும், காலத்துக்கும் வழிநடத்தும் சக்தி கொண்டவை. மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துக்கும் அடிக்கடி போவதுண்டு. அங்கே, சுவாமி கமலாத்மானந்தரோடு மனம் விட்டுப் பேசுவேன்.

சக்தி சங்கமம்

வாழ்க்கைல, நல்ல விஷயங்கள் வரம் மாதிரி நமக்குக் கிடைச்சுட்டேதான் இருக்கும். அதை நாமதான் சரியானபடி பயன்படுத்திக்கணும். மகான்களோட அருளுரைகள், பெரிய அறிஞர்களோட தத்துவங்கள்,  எழுத்தாளர்களோட கருத்துகள்னு நல்ல விஷயங்கள் நிறையவே இருக்கு. நம்ம இந்து மதத்துல இல்லாத தத்துவங்களோ, வாழ்க்கை நெறிமுறைகளோ வேறெதிலும் இல்லை. அவற்றைப் படிச்சாலே கர்வம், அகம்பாவம் எதுவும் இல்லாம ஆனந்தமா வாழ்ந்துடலாம். இந்துமதம்கிறது மிகப்பெரிய சமுத்திரம். அந்தக் கடல்ல மிதக்கும் ஒரு சிறு துரும்பு நான். இன்னும் கத்துக்கணும். இன்னும் இன்னும் தெரிஞ்சுக்கணும்’’ என்று முடித்தார் ஸ்ரீநிவாசன்.

‘உண்மைதான். கற்றது கையளவு, கல்லாதது உலகளவுன்னு ஔவையாரே சொல்லியிருக்காங்களே..?’ என்று வாசகர் ஆனந்த் சொல்ல... சக வாசகர்களும் அதை ரசித்துச் சிரித்து ஆமோதித்தனர்.

தொகுப்பு: வி.ராம்ஜி

படங்கள்: தி.குமரகுருபரன்