Published:Updated:

அல்லல் நீக்கும் ஆதி பிருஹத் சனீஸ்வரர்!

விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் கோயில்

அல்லல் நீக்கும் ஆதி பிருஹத் சனீஸ்வரர்!

ஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது விளங்குளம் கிராமம். பட்டுக்கோட்டை- ராமேஸ்வரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், பேராவூரணியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் இருந்தபடி அருளும் பொருளும் அள்ளித் தந்து அருள்பாலிக்கிறார் ஆதி பிருஹத் சனீஸ்வரர். முதலாம் மாறவர்ம பராக்கிரம பாண்டிய மன்னன் இவரை வழிபட்டதாகச் சொல்கிறது தல வரலாறு. தவிர, கோயிலுக்கு உட்பட்ட நிலங்கள் அனைத்துக்கும் வரிவிலக்கு அளித்துள்ளார் மன்னன்.

புராதன- புராணப் பெருமைகள் கொண்ட இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீஅபிவிருத்தி நாயகி. சனிபகவான் தனக்கு ஏற்பட்ட சாபத்தால், விளா மரங்கள் கொண்ட வனப்பகுதிக்கு வந்தார். அப்போது, மரத்தின் வேரில் கால் இடற, அருகில் இருந்த பள்ளம் ஒன்றில் விழுந்தார். அங்கிருந்து ஊற்றெனக் கிளம்பிய ‘பூச ஞான வாவி’ எனும் தீர்த்தத்தால் சாபம் நீங்கப் பெற்றார். அந்தத் தலமே, விளங்குளம் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சனி பகவானுக்கு சாப விமோசனம் அளித்த சிவனார், ‘மந்தா, ஜேஷ்டா எனும் இருவரை மணந்துகொண்டு, இங்கு தம்பதி சமேதராகக் காட்சி தருவாய்’ என அருளினார். அதன்படியே சனீஸ்வர பகவான் இங்கு திருக்காட்சி தருகிறார் என்பது விசேஷம்!

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, நாகர், நர்த்தன கணபதி, மகாலட்சுமி ஆகியோரும் இங்கு தரிசனம் தருகின்றனர். இங்கே உள்ள சனீஸ்வரர், மிகுந்த வரப்பிரசாதி. இவரை தரிசித்து வணங்கினால், சகல தோஷங்களும் நீங்கப் பெற்று, சனீஸ்வரரின் பேரருளைப் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்!

அல்லல் நீக்கும் ஆதி பிருஹத் சனீஸ்வரர்!

அதேபோல், அட்சய திருதியை நாளில், சனீஸ்வரரையும் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரரையும் வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். மூலவர் சிவனாருக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள்  பதித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு, சனீஸ்வரருக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பு செய்வித்து, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள்.

அல்லல் நீக்கும் ஆதி பிருஹத் சனீஸ்வரர்!

ஆதி பிருஹத் சனீஸ்வர பகவானின் நட்சத்திரம் பூசம். எனவே, சனிப்பெயர்ச்சி நாள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாள்கள் மற்றும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு சந்தனக்காப்பு செய்து, எள் சாதம், எள்ளுருண்டை, எள் சேர்ந்த தட்டை, முறுக்கு போன்றவற்றை நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கினால், சனிப் பார்வையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

சனீஸ்வரரால் வெளிப்பட்ட பூச ஞான வாவி தீர்த்தத்தில் நீராடி, பழைய ஆடையை விட்டுவிட்டு, புத்தாடை அணிந்து கொண்டு சனி பகவானை வழிபட்டால், அவரின் வக்கிரப் பார்வையில் இருந்து விடுபடலாம். மேலும், சனி பகவான் தம்பதி சமேதராகக் காட்சி தரும் தலம் இது என்பதால், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், திருமணத் தடைகளும் தோஷங்களும் விலகி, சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்!

  - ஜெ.ராஜேஷ்கண்ணன்,  படங்கள்: ம.பார்த்திபன்