Published:Updated:

தொடர் விபத்துகள்... வசீகரிக்கும் பெண் உருவங்கள்- பேய் அச்சத்தில் ‘பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலை’ #Video

தொடர் விபத்துகள்... வசீகரிக்கும் பெண் உருவங்கள்- பேய் அச்சத்தில் ‘பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலை’ #Video
தொடர் விபத்துகள்... வசீகரிக்கும் பெண் உருவங்கள்- பேய் அச்சத்தில் ‘பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலை’ #Video

தொடர் விபத்துகள்... வசீகரிக்கும் பெண் உருவங்கள்- பேய் அச்சத்தில் ‘பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலை’ #Video

டவுளை நம்பும் பக்தர்கள்தான் பேய், பிசாசு எனும் விஷயங்களையும் நம்புகிறார்கள் என்பது முரணான உண்மை. கடவுளைக் கண்டேன் என்பதைக்கூட நம்பாதவர்கள், பேயைக்கண்டேன் என்று சொன்னால் சட்டென நம்பி விடுவார்கள். பேய் பற்றிய வதந்திகளுக்கு மட்டும் ஏகப்பட்ட சிறகுகள் முளைத்து விடும். உயர உயரப் பறந்து கண் காதெல்லாம் வைத்து மேலும் மேலும் திகில் கலந்து பரவிக்கொண்டே போகும். உண்மையில் பேய் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் வெறும் தனி நபர்களின் அனுபவங்களாகவும், செவி வழிச்செய்திகளாகவும் மட்டுமே இருந்து வருகின்றன. பேய் இருக்கிறதா இல்லையா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கட்டுரை அதற்கானது அல்ல... தமிழகத்தின் ஒரு நெடுஞ்சாலைப் பகுதியைப் பீடித்து நிற்கும் பேய் பயம்தான் இந்தக் கட்டுரையின் மையம். திடீர், திடீர் விபத்துகள்... திடீரென எழும்பும் ஒலி, சலசலவென்ற மணிச்சத்தம் என இரவுகளில் அந்தச் சாலையில் பயணிக்கும் டிரைவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். 

தருமபுரி மாவட்டத்தில், பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பகுதி  'தொப்பூர் கணவாய்'. இது சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர் என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது. சேலத்தை தருமபுரி மாவட்டத்துடன் இணைக்கும் முக்கிய சாலை இதுதான். இங்கு மூன்று கிலோமீட்டர் நீளத்துக்கு  இரு பக்கங்களிலும் மலைகளும் காடுகளும் அடர்ந்து காணப்படுகின்றன. மேலும் குரங்கு, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி, மயில், முயல் போன்ற விலங்குகள் உலவும் வனப்பகுதியாகவும் உள்ளது. இந்த இடம்தான் பேய்கள் உலவும் பகுதியாக சுட்டிக்காட்டப்படுகிறது. 

தமிழகத்தில் அதிக விபத்துகள் நடைபெரும் பகுதி என்பது மட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் ஆறு லாரிகள் மோதிக்கொண்ட துயரமும் இந்தத் தொப்பூர் கணவாய் பகுதியில்தான் நடைபெற்றது. மாந்திரீகர்களும், பூசாரிகளும் பூஜை செய்ய அஞ்சி நடுங்கும் இடம்; எத்தனையோ பூஜை, பரிகாரம், யாகங்கள் நடத்தியும் மர்மங்கள் விலகாத இடம் என்றெல்லாம் இந்தத் தொப்பூர் கணவாய் பற்றி கதைகள் சொல்லப்படுகின்றன. இந்தக் கணவாயைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் இந்தச் சாலையில் பயணிப்பதே இல்லை. 

தொப்பூரைச் சேர்ந்த சீனிவாசன் சிலிர்ப்போடு தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “இந்தப் பகுதியை நினைச்சாலே குலைநடுங்குது. நானே பல நேரங்கள்ல அனுபவிச்சிருக்கேன். என்னதான் நடக்குதுன்னு பார்ப்பமேன்னு ஒருநாள் ராத்திரி லாரியை எடுத்துக்கிட்டு வந்தேன். திடீர்ன்னு ஏதோ ஒரு சக்தி என்னைக் கட்டுப்படுத்தின மாதிரி இருந்துச்சு. லாரி என் கன்ட்ரோலை மீறி அது விருப்பத்துக்கு போக ஆரம்பிச்சுடுச்சு. எவ்வளவோ மாநிலங்களுக்குப் போயிருக்கேன். மலை, பாதாளம்ன்னு பல பகுதிகளைப் பாத்திருக்கேன். ஆனா, இதுமாதிரி ஓர் அனுபவம் எனக்குக் கிடைச்சதே இல்லை. பித்துப் பிடிச்சுத் தெளிஞ்ச மாதிரி ஆயிடுச்சு. அன்னைக்கே சாக வேண்டியவன்... ஏதோ தெய்வ சக்தி என்னைக் காப்பாத்திடுச்சு... " 

சீனிவாசனைப் போலவே பலரும் பதற்றத்தோடு பேசுகிறார்கள். 

பல நேரங்களில், திடீரென ஒரு ஒளியைப் போல பெண்ணுருவம் ஒன்று வாகனத்துக்கு எதிரே வந்து நிற்பதாகவும், அந்தக் காட்சியை உள்வாங்கும் முன்பே வாகனம் கன்ட்ரோலை இழந்து தறிகெட்டு ஓடத் தொடங்கி விடுவதாகவும் ஒரு லாரி டிரைவர் சொல்கிறார். 

ஒரு பேருந்து ஓட்டுநர், ஒரு பெண்ணுருவம் திடீரெனத் தோன்றி அழுவதாகவும், அதைப் பார்த்து வண்டியைப் பள்ளத்தில் இறக்கி விட்டதாகவும் அச்சம் விலகாமல் பேசுகிறார். இப்படி, வசீகரமான ஒரு பெண் உருவம், காற்றில் மிதந்து போகும் பெண் என்று ஆளாளுக்கு ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார்கள். 

தொப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் சொல்கிற கதை மேலும் கிலியை உருவாக்குகிறது. 'பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கணவாய் பகுதியில் கோவில் ஒன்று இருந்தது. அதைச் சுற்றி மலைவாழ் மக்கள் வாழ்ந்தார்கள். ஒருமுறை, ஏதோ ஒரு காரணத்துக்காக பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் கோயில் முன்பாக தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களுடைய ஆன்மாதான் தற்போதைய  விபத்துகளுக்குக் காரணம் என்கிறார் அவர். 

தொப்பூர் மூலிகைப் பண்ணை அருகே இளம்பெண் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது, லாரி ஓட்டுநர்கள் சிலரால் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதாகவும், அந்தப் பெண்ணே ஆவியாக வந்து ஆண்களைப் பழி  வாங்குவதாகவும், எத்தனையோ பரிகார பூஜைகள் செய்தும் அந்த ஆவியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதாலேயே சில ஆண்டுகளுக்கு முன் தொப்பூர் கணவாயில் சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலை உருவாக்கியதாகவும் சில இளைஞர்கள் சொல்கிறார்கள். இன்றும் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல் தொப்பூர் கணவாயில் கோர விபத்துகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  

'இந்தக் கணவாய் பகுதியில் தடுப்புச் சுவர்கள் இல்லை. சிக்னல்களும் இல்லை. சென்டர் மீடியன்கள் உயரமாக இல்லாததால் அவை இருப்பதே தெரிவதில்லை. இங்கு நடக்கும் பெரும்பாலான விபத்துகள், எதிர்திசையில் வரும் வாகனங்களின் மீது மோதுவதாலேயே நடக்கின்றன. முதலில் சென்டர் மீடியன்களை உயரமாக்க வேண்டும். இந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்து கிடக்கின்றன. அவற்றைப் பழுது பார்த்து பொருத்தினாலே என்ன நடக்கிறது என்று கண்டறிந்து விட முடியும். ஆவி, பிசாசு என்பதெல்லாம் சமூக விரோதிகள் கிளப்பிவிடும் வதந்தி. இந்தப் பகுதியில் ஏதோ தவறு நடக்கிறது. அதை மறைக்க, அல்லது ஆள் நடமாட்டத்தைத் தடுக்க இதுமாதிரி வதந்திகளைப் பரப்புகிறார்கள். எனவே காவல்துறை ரோந்துப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்கிறார்கள் இங்குள்ள சில இளைஞர்கள். 

அதுவும் சரிதான்!

அடுத்த கட்டுரைக்கு