Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

னுசு அல்லது மீன ராசியில் லக்னம் அல்லது சந்திரன் இணைந்த வேளையில், சனியின் த்ரிம்சாம்சகத்தில் தோன்றியவள், முழுமையான மகிழ்ச்சியின் உணர்வை எட்டமாட்டாள். அவளது அணுகுமுறையில் நம்பகத்தன்மை இருக்காது. கன்னிப் பருவத்திலேயே தாய்மையை ஏற்பவள். எந்த சூழலிலும் தனது சுதந்திரத்தை இழக்கத் துணியமாட்டாள்.

முற்பிறவி வினையின் பரிணாமத்துக்கு ஏற்ப அவளது சிந்தனை வளம் செயல்படும். ஆடம்பரப் பொருள்கள் அளவு கடந்து இருந்தும், அவற்றை அனுபவிக்கும் சூழல் இல்லாமல் போய்விடும். ‘ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் நாய் நக்கித்தான் பருக வேண்டும்’ என்றொரு சொல்வழக்கு உண்டு. நீரை உறிஞ்சிப் பருகும் மற்ற விலங்கினங்களில் நாய்க்கு இடம் இல்லை. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே’ என்ற ஏக்கமும் இந்தப் பெண்ணிடத்தில் காணப்படும். அத்துடன் மற்றவர்களுக்கு எட்டிய இன்பம் தனக்கு எட்டவில்லையே என்ற எண்ணம், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, மனதில் வடுவை உண்டுபண்ணலாம். அதே நேரம், உணர்வை உணராத மனம் பற்றுதலில் இருந்து விடுபட்டு, மனத்தெளிவையும் ஏற்படுத்தலாம்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

கபடமான அணுகுமுறை...

தனது விருப்பம், சுதந்திரம் பறிபோகாமல் காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி இருப்பதால், அணுகுமுறையில் கபடம் இருக்கும். பிறரது மனப்போக்கை உறுதி செய்ய கபடமான அணுகுமுறை ஒத்துழைக்கும். உரையாடலில் சம்பந்தம் இல்லாத பல விஷயங்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு, தருணம் பார்த்து விருப்பத்தை முன்வைப்பவர்கள் ஏராளம் உண்டு. உரையாடலில் நெருக்கத்தை எட்டிய மனம், அவளது விருப்பத்தை ஆராயாமலேயே அளித்துவிடும். இதுவும் ஒருவகையில் கபடமான அணுகுமுறைதான். விலைமாதின் அணுகுமுறை சந்தர்ப்பத்தை ஒட்டி மாறி மாறித் தென்படும். விலைமாதைச் சந்திக்கும் செல்வந்தன், தன்னையும் அறியாமல் அளவுக்கு அதிகமான செல்வத்தை அகமகிழ்ந்து அளித்துவிடுவான். கபடமான அணுகுமுறை சிலநேரம் கவலை அளிப்பதும் உண்டு. சேதாரம், செய்கூலி, வரி அத்தனையும் இனாம்; அத்துடன் அழகான தோல் பையும் இனாமாகக் கிடைக்கும் என்று சொன்னாலும், கடைக்காரனின் உபசாரத்தை முழுமையாகச் சுவைக்காது, பொருளை வாங்காமல் போகிறவர்களும் உண்டு!

குந்தியும் கர்ணனும்!

திருமணத்தில் இணைந்து, படிப்படியாக இன்பத்தைப் பரிமாறிக்கொண்டு, நாகரிகமான முறையில் இன்பத்தின் எல்லையை எட்டி குழந்தையை ஏற்பது உண்டு. ஆசையை அடக்க முடியாமல், திருமணத்தில் இணைவதற்கு முன்பே குழந்தையை ஈன்று எடுத்துவிடுவாள். மகாபாரதத்தில் குந்தி அப்படித்தான் இருந்தாள். தற்போதும், சிறு வயதிலேயே- திருமணத்தில் இணையாமல் குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்கள் நிறைய உண்டு. அந்தக் குழந்தைகளுக்கு அங்கீகாரம் அளித்து, சமுதாயத்தில் அங்கமாக ஏற்றுப் பெருமைப்படுத்தும் புதிய சிந்தனை உருவாகியிருக்கிறது. இது, அதன் பெருக்கத்துக்கு ஊக்கம் அளிப்பதாக மாறிவிடும். சமுதாயச் சுமை இறக்கி வைக்கப்பட்டதாக சீர்திருத்தவாதிகள் சொல்வார்கள். துரியோதனன், கர்ணனுக்கு அங்கீகாரம் அளித்துப் பெருமைப்படுத்தினான். திருமணம் ஆகாமல் சிறு வயதில் ஈன்றெடுத்த குழந்தை வியாசர். அவருக்கும் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைத்தது. மருத்துவமனையில் அனாதையாக விடப்படும் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு சமுதாயத்தில் இணைந்துவிடு கின்றன. சமுதாயத்தில் இருந்து மறைக்கப்பட வேண்டியதாகக் கருதப்பட்ட குழந்தைகள், சமுதாயத்துடன் இணைந்து பரிமளிக்கின்றன.

ஆக, ஜோதிடம் சுட்டிக்காட்டும் தகவல்கள்... என்னதான் அதற்கு எதிரிடையாகச் செயல் பட்டாலும், எச்சரிக்கையாக இருந்தாலும் எதிர்த்துச் செயல்பட்டவர்களை ஏமாற்றம் அடையச் செய்து வென்றுவிடும். பண்டைய நாளில் கர்ணனும் வியாசரும் மட்டும் அதில் அடங்கினார்கள். இன்று எண்ணிக்கையில் அதிகமாகத் தென்படுகிறார்கள்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

சுதந்திரத்தைப் பறிகொடுக்காதவள்...

அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்த நாட்டிலும், சுதந்திரத்தை அடகு வைப்பவர்கள் ஏராளம். ஆசைகளால் அத்தனையையும் மறந்து அடிமையாகிவிடுவார்கள். ஆனால், தனுசு அல்லது மீன ராசியில் லக்னம் அல்லது சந்திரன் இணைந்த வேளையில், சனி த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளை, ‘எந்த சூழலிலும் சுதந்திரத்தைப் பறிகொடுக்காதவள்’ என்கிறார் வராஹமிஹிரர். இந்த சுதந்திர வேட்கையானது விவாகரத்து போன்ற பக்க விளைவுகளைப் பெருக்கி, சமுதாய தூய்மையை இழக்கவைக்கிறது.

அளவு அதிகமானால் அமிர்தமும் விஷமாக மாறிவிடும். அசைக்க முடியாத சுதந்திரம் இறுக்கமான பண்பை அசைத்து உருக்குலைத்து, சமுதாயத்தின் தூய்மையை அழித்துவிடும். தனியொருவரின் சுதந்திர வேட்கையானது சமுதாயக் கட்டுக்கோப்பை அசைத்துவிடுகிறது. இப்படியிருக்க, ஜாதகத்தில் தென்படும் மாறாத இயல்பை ஆராயாமல், வெறும் சொல்வளத்தால் பாமரர்களை ஈர்க்கும் வகையில் தவறான தகவலை அளித்து, இணை சேர்க்கும் எண்ணம் ஜோதிட மேதைகளிடம் இருக்கக்கூடாது.

இன்றைய நிலைமை எப்படி?

இன்றைய நாளில், விளம்பரம்தான் ஜோதிடனை அடையாளம் காட்டுகிறது. அவர்கள், பொதுமக்களின் ஆதரவில் பொருளாதார நிறைவை எட்டி, வாழ்க்கையில் தன்னிறைவு பெறுகிறார்கள். இப்படி, தமக்கு வாழ்வளித்த பொதுமக்களுக்கு நல்ல வழிகாட்டியாக மாறி சேவை செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஜோதிட மேதைகளுக்கு இருக்கவேண்டும்.

தாங்கள் சொல்லும் ஜோதிடம் பொய்த்துப் போகும்போது, மக்களை ஈர்ப்பதற்காக வாஸ்து, எண்கணிதம், கைரேகை, பெயரியல், ஆன்மிகம், பரிகாரம், பூஜை-புனஸ்காரங்கள், வழிபாடு இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து வெற்றி பெறும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்.

பிறப்புரிமையை இழக்கும்போது, அதை ஈட்டித் தருவதற்கு ஜோதிடம் ஒத்துழைக்கும். ஆனால், தகுதி இல்லாத ஒருவனுக்கு, அவன் அடையமுடியாததையும் அடையவைக்கும் ஆசானாக ஜோதிடம் செயல்படாது.

சொல்லப்போனால், இன்றைய ஜோதிட மேதைகள் ஒருவருக்கு ஒருவர் தங்களின் ஜோதிட அறிவைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். ஏன் இப்படி? விடை இல்லாத கேள்வி இது.

இந்த நிலைமை ஜோதிடத்தின் பெருமையாக மாறிவிட்டது. பொருத்தம் பார்க்கும் படலம் சமுதாயத்தில் இருந்து மறையவேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டு, உண்மையான தேடலில் அவர்களின் சிந்தனை திரும்பும். அது, அவர்களை மன நிம்மதி அடையச் செய்யும். ஒளியில் விழுந்து உயிர்துறக்கும் விட்டில் பூச்சிகளாக நாம் மாறக்கூடாது. ஒளிப் பிழம்பின் ஒத்துழைப்பில் சாதனை படைக்கும் குடிமகனாக மாறவேண்டும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

சாம்பார் ருசியும்... கிரக பலன்களும்!

தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளிலும் முழுமையாகப் பரவி இருப்பான் குரு.  அவன் தட்பக் கிரகம். முதல் ஐந்து பாகைக்கு மேல் அடுத்த ஐந்து பாகைகள் வரை  (தனுசு ராசியில்) சனியின் த்ரிம்சாம் சகம் இருக்கும். மற்றொரு ராசியில் (மீனம்) கடைசி ஐந்து பாகைகளுக்கு முந்தைய ஐந்து பாகைகள் சனி த்ரிம்சாம்சகம் இருக்கும். ஒன்றில் முதல் த்ரேக்காணம், மற்றதில் கடைசி த்ரேக்காணம் பரவியிருக்கும்.

ஹோரையில் சூரியனின் ஆதிக்கம் இருக்கும். முதல் த்ரேக்காணத்தில் குருவும், மூன்றாம் த்ரேக்காணத்தில் சூரியனும் இணைந்திருப்பர். அதோடு சதுர்த்தாம்சம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம் போன்ற ராசியின் உட்பிரிவுகளில் மற்றக் கிரகங்களின் தொடர்பு இருக்கும். சாம்பாரில் புளியும், உப்பும், காய்கறிகளும் மூலப்பொருளாக இணைந்தாலும் நீரின் தட்பம், நெருப்பின் வெப்பம், காரம், பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய், உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகிய அத்தனையும் இணையும்போதுதான் சுவையை எட்டமுடிகிறது. நீரிலும், நெருப்பிலும் ஏற்றக்குறைச்சல் இருந்தால், சுவை உருவாகாது. அதில் அடங்கிய பொருள் களின் சாரத்தை தன்னில் இணைத்துக் கொள்கிறது நீர். பொருளில் இருந்து சாரத்தைப் பிரிக்க வெப்பம் (நெருப்பு) உதவுகிறது. அதேபோல் இதில் வெட்பதட்பங்கள் சாரத்தை சுவையாக்கித் தர ஒத்துழைக் கின்றன. வெப்பத்தின் தாக்கத்தில் போதுமான கொதிநிலை ஏற்படவில்லை என்றாலோ, நீர் போதுமான அளவு இல்லை என்றாலோ, ஒட்டு மொத்தமாக ருசி மாறிவிடும்.

‘‘சாம்பாரில் ‘நீர் ஸ்வாது’ தென்படுகிறது; இன்னும் நான்கு கொதிகள் கொதித்த பிறகு இறக்கியிருக்க வேண்டும்’’ என்று சொல்லும் சாப்பாட்டுப் பிரியர்கள் அந்த நாளில் இருந்தார்கள். ‘‘அடிபிடித்த வாசனை அடிக்கிறது. போதுமான நீர் இருக்கவில்லை’’ என்று மதிப்பீடு செய்பவர்களும் இருந்தார்கள். சாம்பாரில் பல பொருட்கள் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இணைந்திருக்கும். அதேபோன்று ராசியில் அத்தனை கிரகங் களும் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இணைந்திருக்கும். அதெல்லாம் சேர்ந்து, சனி த்ரிம்சாம்சகத்துக்குப் பெருமை அளித்து, அதன் கண்ணோட்டத்தில் விளையும்  பலனை இறுதியாக்குகின்றன.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

கிரகங்கள் தன்னிச்சையாக பலன் தருமா?

செவ்வாய், சனி, குரு, புதன், சுக்கிரன் ஆகிய ஐந்தும் த்ரிம்சாம்சகத்தில் இணைந்து, மற்ற கிரகங்களின் ஒத்துழைப்பில், பிறந்தவளின் இயல்பை இறுதியாக்கும். தனிப்பட்ட முறையில் இந்த ஐந்தும் இயல்பில் மாறுபட்டாலும், மற்றவற்றின் சேர்ப்பில், பிறந்தவளின் கர்மவினையின் பரிணாமத்துக்கு உகந்த இயல்பை அறிமுகம் செய்யும். இதிலிருந்து ஒரு கிரகம் தன்னிச்சையாக- சுதந்திரமாக பலன் அளிக்கும் தகுதியை ஜோதிட சாஸ்திரம் அளிக்கவில்லை என்பதை அறியலாம்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

இப்படியிருக்க, சனிப் பெயர்ச்சியில் அத்தனை பேருக்கும் கெடுதலும், குருப்பெயர்ச்சியில் அத்தனை பேருக்கும் நன்மையும் இருக்கும் என்கிற கணிப்பு தவறு. சனி 12, 1, 2, 4, 7, 10 ஆகியவற்றில் தென்படும்போது கெடுதலைச் சுட்டிக் காட்டுவதிலும், 2, 5, 7, 9, 11-ல் குரு இருக்கும் நிலையில் நல்லதைச் சுட்டிக்காட்டுவதிலும் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.

தீமைகளில் இருந்து பரிகாரத்தின் மூலம் அத்தனை பேரையும் விடுவிக்கலாம் என்பதும் ஜோதிடம் ஏற்காத ஒன்று. முற்பிறவி கர்ம வினையின் பலன்களை வரையறுக்கும் தசா காலங்களையும், பிறக்கும் வரைபடத்தில் (ஜாதகம்) கிரகங்கள் தென்படும் இடத்தையும், அதனால் உண்டான சாதக பாதக பலன்களையும் அறவே ஒதுக்கிவிட்டனர். தற்போது தென்படும் கிரகங்களை ராசியில் பார்த்து எண்ணிக்கையின் அடிப்படையில் பலனை இறுதி செய்வது நல்ல நடைமுறை அல்ல. காலத்தின் வரைபடத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் தகுதியை ஆராயாமல், சந்திர சாரப்படி அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்து ஜாதக பலன் சொல்வது தவறான நடைமுறை.

காலத்தின் வரைபடம்!

சூரியனின் கிரணங்கள் அண்ட சராசரங்களிலும் பரவி, அதன் தாக்கத்தில் அத்தனை உயிரினங்களிலும் அதற்கு உகந்த முறையில் மாறுபாட்டை (பரிணாமத்தை) ஏற்படுத்திக் கொண்டிருப்பது கண்கூடு. சூரியனிடம் இருந்து வெப்பக் கிரணத்தை ஏற்று, தனது தட்பத்தில் கலந்து அதன் தாக்கத்தில் அத்தனை பொருள்களிலும் மாற்றத்தை ஏற்க வைக்கிறான் சந்திரன். இந்த இருவரது சேர்க்கையில் மற்ற கிரகங்களும் மனித இனத்தின் மனதில் மாறுபட்ட இயல்பை ஏற்படுத்துகின்றன. அதில் த்ரிம்சாம்சகத்தின் தாக்கம் வலுப்பெறும்போது, அலாதியான இயல்பு அவளிடம் தென்படுகிறது. இன்பத்தைச் சுவைப்பதில் குறை, அணுகுமுறையில் கபடம், சிறு பருவத்திலேயே தாய்மையை ஏற்றல், சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கும் மனமின்மை இந்த நான்கும் அவளது இயல்பு. இது, துயரத்தை ஏற்பதாகவும் மாறலாம்; மகிழ்ச்சியை உணருவதாகவும் மாறலாம். அதை வரையறுப்பது, அவளது கர்மவினை. அதை நடைமுறைப்படுத்துவது தசைகள். அதன் தரத்தை நிர்ணயிப்பது, காலத்தின் வரைபடம்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஹிரண்யகசிபு, ராவணன், விபீஷணன், கும்பகர்ணன், பஸ்மா சுரன், ஹிரண்யாட்சன், பிரகலாதன், த்ருவன், முசுகுந்தன் அத்தனை பேருக்கும் பாரபட்சம் இல்லாமல் விரும்பிய வரத்தை அளித்தார் கடவுள். அவர்களில், அவரவர் இயல்புக்கு உகந்தபடி வரத்தை துர்உபயோகப் படுத்தியவர்களும் உண்டு. நாட்டையும் கலக்கி, தங்களையும் அழித்துக் கொண்டவர்களும் உண்டு. வரத்தை நேர்வழியில் பயன்படுத்தி, தங்களையும் உயர்த்திக் கொண்டு, நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர்களும் உண்டு.

இயல்பை அழிக்க, அதுவும் கர்ம வினையின் தூண்டுதலில் உருப் பெற்ற மாற்றத்தை முறியடிக்க வெளித் தாக்குதலோ, ஒத்துழைப்போ எந்தவிதத்திலும் உதவியளிக்காது. கடவுள் பார்வைபட்டால் மோட்சம் என்றும், அருட்பார்வை கிடைக்காதவர்களுக்கு நரகம் என்றும் விளக்கம் அளிப்பவர்கள், கடவுளின் பெருமையை வரையறுக் கிறார்களே தவிர, பார்வை பட்டவர்களின் உயர்வு - தாழ்வை வரையறுக்கவில்லை. ஜோதிடம் என்ற பொக்கிஷத்தைக் காப்பாற்றவும் வேண்டும்; கையாளவும் வேண்டும்.

- சிந்திப்போம்... 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு