Published:Updated:

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம்- நாளை கோலாகல தொடக்கம்!

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம்- நாளை கோலாகல தொடக்கம்!

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம்- நாளை கோலாகல தொடக்கம்!

Published:Updated:

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம்- நாளை கோலாகல தொடக்கம்!

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம்- நாளை கோலாகல தொடக்கம்!

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம்- நாளை கோலாகல தொடக்கம்!

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மஹாபுஷ்கர திருவிழா கொண்டாடவுள்ளனர்.  இந்த நாளில் காவிரியில் ஒருமுறை நீராடினால் புனித நதிகள் அனைத்திலும் நீராடிய பலன்கிடைக்கும் என்கிறார்கள்.  லட்சகணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடுவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துவருகிறது.  


புஷ்கரம் என்றால் என்ன? 

ஒருசமயம் படைத்தல் கடவுளான பிரம்மதேவர்  தன்கையில் தாமரை மலர் ஒன்றை ஏந்திக்கொண்டு வான வழியாக சென்று கொண்டிருந்தார். வஜ்ரநாமா என்ற அரக்கன் தேவர்களை அழிப்பதற்காகப் பெருவேள்வி நடத்திக்கொண்டிருந்தது பிரம்ம
தேவரின் கண்ணில்பட்டது. அப்போது பிரம்மதேவர் தன் கையில் வைத்திருந்த தாமரை மலரை வேள்விக் குண்டத்தில் விழச் செய்தார்.

தாமரை மலர் வேள்வியில் விழுந்து வெடித்துச்சிதற அதில் வஜ்ரநாமா இறந்தான். அந்த இடம்தான் புஷ்கரம் என்கிறது பத்மபுராணம்.

தற்போது இந்த இடம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆஜ்மீருக்கு அருகில் உள்ளது. இந்த இடத்தில் பிரம்மதேவர் வேள்வி ஒன்றை நடத்த அந்த வேள்வியிலிருந்து சரஸ்வதி சுப்ரபா என்ற பெயருடன் நதிஉருவம், பெண்உருவம் கொண்ட புஷ்கரகங்கை உருவானது என்கிறது மகாபாரதம்.  இந்த புஷ்கரகங்கை புனிதநீர் எப்போதும் பிரம்மன் கையிலுள்ள கமண்டலத்தில் இருக்கும். இந்நிலையில், நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் பிரம்மனை நோக்கிக் கடும்தவம் செய்தார். குருபகவானின் தவம் கண்டு மகிழ்ந்த பிரம்மதேவன், குருபகவான் வேண்டுகோளின்படி புஷ்கரகங்கையைக் குருவுக்கு அளிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் புஷ்கரகங்கை பிரம்மதேவரை விட்டு பிரிந்துசெல்ல விரும்பவில்லை. எனவே, மூவரிடையே ஒரு சமாதான உடன்பாடு உருவானது.  அதன்படி, மேஷ ராசி தொடங்கி, 12 ராசிகளிலும் குரு இருக்கும்போது ஒவ்வொரு புண்ணிய நதியிலும் புஷ்கர தீர்த்தவாரிகள் நடத்திட ஏற்பாடானது.  அந்தவகையில் தற்போது குருபகவான் துலா ராசியில் பெயர்ச்சியாகி இருப்பதால் துல ராசிக்கு உரிய நதியான காவிரியில் புஷ்கர எழுந்தருள்வதால் புஷ்கர திருவிழா கொண்டாடப்படுகிறது.  

'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்பது பழமொழி. அதாவது, ஆயிரம் புண்ணிய ஸ்தலங்கள் இருந்தாலும் மாயூரத்திற்கு இணையாகாது என்பது பொருள். அபயம் என்று வருபவர்களை காப்பவள் மயிலாடுதுறை அபயாம்பிகை.  அதேபோல், இவ்வூர் காவிரி துலாக்கட்டத்தில் காசிக்கு இணையான காசிவிஸ்வநாதர் வீற்றிருந்து அருள்பாலிப்பதால் கங்கை முதல் அனைத்து நதிகளும் தங்கள் பாவம் போக்க ஐப்பசி மாதத்தில் ஸ்நானம் செய்து தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

ஆனால், கடந்தசில ஆண்டுகளாக துலாக்கட்ட காவிரியில் தண்ணீர் இருப்பதில்லை. இங்கு புனிதநீராட வரும் பக்தர்கள் ஏமாந்து செல்வதை தவிர்க்க காவிரி புஷ்கர கமிட்டியினர் காவிரியில் நிரந்தரமாக தொட்டிஅமைத்து அதில் போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பியிருக்கிறார்கள்.  இந்த தண்ணீரை அடிக்கடி வெளியேற்றவும், புதிய நீர்நிரப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.2 கோடியை சிட்டி யூனியன் வங்கி ரூ.50 லட்சம், மயிலாடுதுறை எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.1.50 லட்சம் தந்திருக்கிறார்கள்.  

அதேநேரத்தில் புஷ்கர விழாவிற்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி புஷ்கர கமிட்டி துணைத்தலைவர் ஜெகவீரபாண்டியன் பிரதமர், கர்நாடக முதல்வர் மற்றும் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதே கருத்தை வலியுறுத்தி பா.ஜ.க. தேசியக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான ராஜேந்திரனும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.  

புஷ்கரம் குறித்து புதுவை ஓங்கார ஆசிரம மடாதிபதி சுவாமி ஓங்காராநந்தாவிடம் பேசியபோது, ''இந்தியாவில் ஓடும் எல்லா நதிகளுக்கும் தாயானவள் காவிரி.  காவிரிநதி குடகுமலையில் தோன்றி, பூம்புகார் கடலில் கலந்தாலும், மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்கு மட்டும்தான் வெகுசிறப்பான மகிமை உண்டு.  இந்த இடத்தில் மஹாபுஷ்கரம் கொண்டாடப்படுவதால், விவசாயம் செழிக்கும், தீயசக்திகள் விலகி ஓடும் இந்நாளில் காவிரியில் நீராடி வேண்டுவோர் வேண்டுதல் பலிக்கும், கடன்தொல்லை நீங்கும்.  எந்தவீட்டிலும் அழுகுரல் ஓசை இருக்காது. நம்வாழ்வில் கிடைத்த அரிதான இந்த வாய்ப்பை அனைவரும் பின்பற்றி புஷ்கரநாளில் காவிரியில் நீராடி எல்லாம் நலன்களையும், வளங்களையும் பெற்றிடவேண்டும்'' என்றார்.  

இதற்கிடையில் துலாக்கட்ட காவிரியில் 12 கிணறுகள் கண்டெடுக்கப்பட்டு, அதில் 12 நதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. போர்வெல் மூலம் துலாக்கட்டத்தில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் நீர்நிரப்பி சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் ஆராதனை செய்து வழிபாடு செய்தார்.  அவரிடம் பேசுகையில், ''மூன்று இரவு தங்கி கங்கையில் நீராடவேண்டும், ஐந்து இரவுகள் தங்கி யமுனையில் நீராடவேண்டும்.  ஆனால் ஒருமுறை தங்கி காவிரியில் நீராடினாலே போதும் பாவங்கள் நீங்கும்.  12 கிணறுகளில், 12 நதிகளுக்குரிய புனிதநீரும் காவிரியில் கலப்பதால் 12 ராசிக்காரர்களும் இதில் நீராடி பலனடையலாம்'' என்றார். 

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம் பேசுகையில், ''காவிரிபுஷ்கர விழாவுக்காக நாகை மாவட்டத்திற்கு வரும் 12-ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பக்தர்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி, உடைமாற்றும் அறைகள்போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துத்தர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.  

இறுதியாக புஷ்கரகமிட்டி துணைத் தலைவரும், மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெகவீரபாண்டியனிடம் பேசியபோது, ''மிகவும் புனிதமான புஷ்கர விழாவில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட துறவியர்கள் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்வதுடன், பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கவும் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இங்குவந்து புனிதநீராடி சிறப்புசெய்ய இருப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.

இவ்விழாவை தடுக்க சிலர் முயற்சியும், சூழ்ச்சியும் செய்தனர், தடைகளையெல்லாம் தாண்டி சீரும் சிறப்புமாக இந்தவிழா இனிதே நடைபெறும்.  மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காவிரியில் நீராடி வாழ்வில் வளம்பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்'' என்று முடித்தார்.