ஸ்ரீசாயிநாதரின் நாமாவளிகளில் காலாய நம: கால காலாய நம: என இரண்டு நாமாவளிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில், 'கால’ என்ற ஒரு வார்த்தைதான் வித்தியாசம். ஆனால், அந்த ஒரு வார்த்தையில்தான் எத்தனை அர்த்தங்கள்... எத்தனை தத்துவங்கள்! சாயிநாதரின் வாழ்வும் சரி, வாக்கும் சரி... மறைபொருள் கொண்டதாகவே திகழ்கின்றன. அதை உணர்த்துவதுபோலவே அமைந்திருக் கின்றன அவருடைய நாமாவளிகளும். 

'காலாய’ என்றால், காலனைப் போன்றவர் என்று பொருள். 'கால காலாய’ என்றால், காலனுக்கும் காலனைப் போன்றவர் என்று பொருள். சாயிநாதரேகாலனைப் போன்றவர் என்றால், அவர் எப்படி காலனுக்குக் காலனாக இருக்க முடியும்? மேலோட்டமாகப் பார்க்கும்போது, இதில் உள்ள தத்துவம் நமக்குப் புரியாதுதான். ஆனால்,ஸ்ரீசாயிநாதரின் அருளால், அவருடைய லீலைகளைப் படித்து, நம்முடைய சிந்தனையை உள்முகமாகத் திருப்பும்போது, அவருடைய ஒவ்வொரு நாமாவளியிலும் பொதிந்து கிடக்கும் தத்துவங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'காலாய’ என்னும் சொல், காலத்தையும் குறிக்கும். காலம் அறிந்து செயல் படுவதால்தானே யமதர்மனுக்கு 'காலன்’ என்ற பெயரே ஏற்பட்டது?! ஆக, சாயிநாதர் காலனாகவும் இருக்கிறார்; காலமாகவும் இருக்கிறார்; காலனுக்குக் காலனாகவும் இருக்கிறார்; காலத்தை இயற்கையைத் தன் வசப்படுத்துபவராகவும் திகழ்கிறார். இந்த ஒவ்வொரு நிலையிலும் அவர் நிகழ்த்தியிருக்கும் லீலைகளைப் பார்ப்போம்.

காலனாகத் திகழ்கிறார் பாபா என்றால், 'உயிர்களைக் கவர்பவர்' என்று பொருள் இல்லை; தம்மிடம் சரண் அடைபவர்களின் உயிர்களைத் தன்வசப்படுத்திக் கொள்பவர் என்பதே உண்மை. அப்படி நம்மைத் தன்வசப் படுத்திக்கொள்ளும் காலனாகத் திகழும் பாபா, நம் மனதில் உள்ள அசுர குணங்களை அகற்றி, நம்மைப் புனிதம் நிறைந்தவர்களாகச் செய்கிறார். காலன் நம்முடைய உயிர்களைக் கவர்பவன் என்றால், காலனாகத் திகழும் சாயிநாதர் நம்மிடம் உள்ள தீய குணங்களைக் கவர்ந்துவிடுகிறார்.

தம்மிடம் பூரண நம்பிக்கையுடன் பக்தி செலுத்துபவர்களை எப்படிப்பட்ட ஆபத்தில் இருந்தும் காப்பாற்றும் அருளாளர் அவர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மட்டுமல்ல, இறந்துவிட்டவர்களையும்கூட அவர் உயிர்த்து எழச் செய்திருக்கிறார்.

அப்படி ஓர் அற்புத நிகழ்ச்சி...

பாபாவின் பக்தரான ஜோஷி தேவ்காங்கரின் மகளான மலன்பாய், கடுமையான காசநோயால்

ஸ்ரீசாயி பிரசாதம் - 6

துன்புற்றுக் கொண்டிருந்தாள். எத்தனையோ மருத்துவம் செய்தும் பலனில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவளை, பாபாவிடம் அழைத்து வந்தனர். அவர்களிடம், ''கவலை வேண்டாம்.அவளுக்கு ஒன்றும் நேராது. அவளை வாடாவுக்கு (பக்தர்கள் தங்கும் இடம்) அழைத்துச் சென்று, ஒரு கம்பளியின்மேல் படுக்க வையுங்கள். தண்ணீரை மட்டுமே குடிக்கக் கொடுங்கள்'' என்று கூறினார் பாபா. பாபாவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு, அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால், ஒரு வாரத்துக்குப் பின்பு, மலன்பாய் இறந்துவிட்டாள். பாபாவின் வார்த்தைகள் பொய்யாகிப் போனதால், அந்தப் பெண்ணின் உறவினர்கள் எல்லோருக்கும் வருத்தத்துடன் ஏமாற்றமும் ஏற்பட்டது. பொழுது விடிந்ததும், வேதனையும் துயரமுமாக, மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை அவர்கள் கவனிக்கத் தொடங்கினர். அன்றைக்குப் பார்த்து, காலை 8 மணிக்குமேல் ஆகியும் பாபா சாவடியில் இருந்து திரும்பவில்லை. சாவடிக்கு வெளியில் நின்றுகொண்டு, தன் கையில் இருந்த தடியால் தரையை அடித்துக் கொண்டும், கடுமையான சொற்களால் திட்டிக்கொண்டும் இருந்தார். பாபாவின் இந்தப் போக்குக்கான காரணம் அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை. அவரிடம் நெருங்கவும் அச்சம் கொண்டனர்.

அதேநேரம், வாடாவில் இறந்து விட்ட மலன்பாய் மூச்சு விட்டபடி, மெள்ளக் கண் விழித்தாள். அப்போது தான்   சாவடியில் இருந்து புறப்பட்ட பாபா, தடியைத் தரையில் தட்டிக் கொண்டும் கடுமையாகத் திட்டிக் கொண்டும், வாடா வழியாக துவாரகா மாயிக்குத் திரும்பினார்.

கண் விழித்த மலன்பாய், இரவு தனக்கு நேர்ந்த அனுபவத்தை விவரித் தாள்... ''நான் கறுத்த மனிதன் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டேன். பயந்து போன நான் பாபாவிடம், 'என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினேன். உடனே, கையில் தடியுடன் வந்த பாபா, அந்த மனிதனின் பிடியில் இருந்து என்னைக் காப்பாற்றி, சாவடிக்குத் தூக்கிச் சென்றார். அப்போதே நான் பாபாவினால் காப்பாற்றப்பட்டதாக உணர்ந் தேன்'' என்றாள். தொடர்ந்து, அதுவரை சாவடிப் பக்கமே சென்றிராத அவள், சாவடியின் அமைப் பைப் பற்றியும் துல்லியமாகக் கூறினாள்.

காலனால் கவர்ந்து செல்லப்பட்ட மலன்பாயைக்காப்பாற்றிய பாபாவின் இந்த லீலையானது, பாபா 'காலனுக்குக் காலனாக இருப்பவர்’ என்ற பொருள் தரும் 'கால காலாய நம:’ என்ற நாமாவளிக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறதுதானே!  

இறந்துவிட்ட ஒருவளை உயிருடன் எழச் செய்த பாபாவின் இந்த லீலையானது, 'இது எப்படிச் சாத்தியமாகும்?’ என்று பலரையும் சந்தேகிக் கச் செய்யும். ஆனால், மகான்கள் நினைத்தால் சாத்தியம் இல்லாததையும் சாத்தியமாகச் செய்ய முடியும் என்பதே சத்திய சாசுவதமான உண்மை!

இந்த நிகழ்ச்சியின் பின்னணியில், மற்றுமொரு ஆழ்ந்த தத்துவமும் பொதிந்து இருக்கிறது. அதுபற்றி, இந்த இரண்டு நாமாவளிகளுக்கும் பொருந்தும் விதத்தில் பாபா நிகழ்த்தி இருக்கும் லீலைகளைத் தெரிந்துகொண்ட பிறகு பார்ப்போம்.

காலத்தை இயற்கையை வசப்படுத்துபவராக வும் பாபா பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். அத்தகைய அதிசய நிகழ்ச்சி இது...

ஒருநாள், மாலை நேரம். அதுவரை நிர்மலமாகக் காணப்பட்ட வானத்தில், எங்கிருந்துதான் வந்தது என்று சொல்லமுடியாதபடி கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. சற்றைக்கெல்லாம் பேய்க்காற்றுடன் பெருமழையும் கொட்டத் தொடங்கியது. புயலும் மழையும், இடியும் மின்னலும் ஷீர்டி மக்களை மட்டுமின்றி ஆடு மாடு போன்ற அனைத்து ஜீவன்களையும் அச்சுறுத் தின. ஊரெங்கும் வெள்ளம். பொழுது விடிந்தால் ஷீர்டி கிராமமே இருக்காது என்ற நிலை. மக்கள் துவாரகாமாயிக்கு வந்து, பாபாவிடம் முறையிட்டுக் கதறினர்.

கருணையே வடிவான பாபா  அவர்களிடம் இரக்கம் கொண்டவராக வெளியில் வந்தார். வானத்தைப் பார்த்துக் கடுமையான வசைமொழிகளை இடியென கர்ஜித்தார். அவருடைய அந்த முழக்கத்தைக் கேட்டு அங்கிருந்த  கிராம மக்கள் பெருத்த அச்சம் கொண்டார்கள். பாபா அதைப் பொருட்படுத்தாமல், வசை மொழிகளை தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்தார். அவர் வசை பாடப்பாட, புயல் காற்றும் பேய் மழையும் மெள்ள மெள்ளக் குறைந்துகொண்டே வந்தன. முன்னிரவு நெருங்க நெருங்க, கருமேகங்கள் விலகி, விண்மீன்கள் கண் சிமிட்டின. வெண்ணிலவும் எட்டிப் பார்த்தது. கிராம மக்கள் பாபாவை நன்றியுடன் நமஸ்கரித்து,தங்கள் மாடுகன்றுகளுடன் வீடு திரும்பினர்.

இப்படியாக, காலத்தை வசப்படுத்திய பாபாவின் மகிமையும்கூட, ஒருநாள் இரவெல்லாம் பெய்த மழையின் காரணமாகவே ஷீர்டி கிராம மக்களுக்குத் தெரிய வந்தது. அந்தச் சம்பவம்...

-பிரசாதம் பெருகும்          

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism